குறும்படங்கள் மாற்று‍ சினிமா

“லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம் . . . . . . . !

எங்களை தற்கொலைக்கு தள்ளாதீங்க,

வாயில சிறுநீர் ஊத்தாதிங்க…

நாங்களும் மனுசங்க தான்!

ஒரு பால் ஈர்ப்பும் உரிமைக்குரலும்!

“லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம்.

நீலம் பண்பாட்டு மையம் சமூக மாற்றத்திற்கான தளத்திலும் மனித மாண்பை மீட்டெடுப்பதிலும் தொடர்ந்து தன் பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது. பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சியை தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையத்திற்காக நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாலினி ஜீவரத்னம் இயக்கியுள்ள ஆவணப்படம், “லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்”. ஒரு பாலின ஈர்ப்பைப்பற்றி இவ்வளவு தெளிவாக தமிழில் வேறு எதுவும் ஆவணப்படம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. “லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஒரு பால் ஈர்ப்பைப்பற்றி மிக அழுத்தமாக விவரிக்கிறது.

“சேர்க்கை” என்ற வார்த்தையை பயன்படுத்துவது அறமல்ல என்கிறார், இந்த ஆவணப்படத்தின் இயக்குநரான மாலினி. ஏனெனில் ஒருபால் ஈர்ப்பு, சேர்க்கை அல்லது செக்ஸ் என்பதாக மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது, பரப்பப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல, ஈர்ப்பு என்பது வெறும் செக்ஸ் மட்டும் அல்ல, அதைத்தாண்டிய ஒரு புரிதலும் உறவும் உளவியலும் அதற்குள்ளே இருக்கிறது. இருபால் ஈர்ப்பைப்போலவே ஒருபால் ஈர்ப்புக்குள்ளும் நட்பு, அன்பு, பாசம், பகிர்தல், அனைத்தும் இருக்கிறது என்கிறார், மாலினி.

பெற்றோர்கள் தான் இந்த ஆவணப்படத்தை முக்கியமாக பார்க்கவேண்டும் என்று மாலினி மற்றும் ஆர்வலர்கள் விரும்பிய நிலையில், இளைஞர்கள், பெண்கள், குடும்பங்கள் என திரையரங்கில் இருக்கைகளில் இருந்தவர்களை விட அதிகமானவர்கள் நின்றுகொண்டும் கீழே அமர்ந்தும் பார்த்தனர். இயக்குநர் மாலினி, மாலினியின் கூடவே ஒரு மாதமாக இருந்து இந்த படத்திற்காக உதவிய குமரேசன் அண்ணனுடன் நான், மூவருமாக தரையில் அமர்ந்தே படத்தைப் பார்த்தோம் என்பதில் மகிழ்ச்சி.

திரையரங்கத்திற்கு வெளியே அனைவரும் கன்னங்களில் வண்ணம் பூசிக்கொண்டார்கள். ஹோலிப்பண்டிகை போல எங்கும் வண்ணமயமாய் இருந்தது.

இந்தியாவில் ஒரு பால் ஈர்ப்பின் வரலாறு, கதைகள், சட்டங்கள், போராட்டங்கள், பலதரப்பட்ட பொதுமக்கள் மனநிலை என மிக விபரமாக ஒருபால் ஈர்ப்பு பற்றி படம் எளிமையாக நேர்மையாக தெளிவாக பார்ப்பவர்களுக்குப் புரிய வைத்தது. படத்தில் இடையில் இடம் பெற்ற பாப்பாத்தி-கருப்பாயி கதை… நிஜமாகவே நெகிழ வைத்தது.

ஆவணப்படம் திரையிடுவதற்கு முன்பாக குட்டிரேவதியின் வரிகளில் உருவான “லெஸ்பியன் ஆன்ந்தம்” ஒலிபரப்பப்பட்டது. அதன் பின் கேஸ்ட்லெஸ் கலைக்குழுவினர் இந்த திரையிடலுக்காக பிரத்யேகமாக உருவாக்கிய இரண்டு பாடல்களை மேடையில் பாடினர்.

அறிவரசு வரிகளில் உருவான “பெண்களைத்தான் கும்பிடுறான் தெய்வமா”, “கலகலப்பா ஒரு கலகம்” பாடல்களை இசைவாணி, பாலச்சந்தர், அறிவு பாட… வரிக்கு வரி கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் அரங்கத்தில் இருந்தவர்கள்

///

பெண்களத்தான் கும்பிடுறான் தெய்வமா
அவ காதலிச்சா கொன்னுடுறான் நியாயமா..?
மத்தவங்க..வச்சதுதான் சட்டமா
அத பெத்தபுள்ள கேக்கலன்னா குத்தமா..

தப்பில்ல தப்பில்ல டா தங்கச்சி..
இனி தைரியமா காதலி நான் உன் கட்சி…

/////

“தப்பில்ல தப்பில்லடா தங்கச்சி, இனி தைரியமா காதலி நான் உன் காட்சி” என்ற வரிகளை கொண்டாடினர் வந்திருந்தவர்கள். ஜஸ்டின் பிரபாகரனின் இசை உணர்வுப்பூர்வமாக ஆவணப்படத்துடன் கலந்திருந்தது சிறப்பு.

குட்டிரேவதி எழுத்தில் தொடக்கத்தில் ஒலித்த ஆன்ந்தம் பெயர் மட்டுமே போதுமானது, உங்களை யோசிக்க வைக்க, ஆம். “லெஸ்பியன் ஆன்ந்தம்”. குட்டிரேவதி தன் பாடலால் பலம் சேர்த்தால், தமயந்தி மிக அற்புதமான வசனக்கவிதையால் பலம் சேர்த்திருக்கிறார்.

இயக்குநர் மாலினி ஜீவரத்னம்… இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஃபிலிம் மேக்கிங்கின் மீது கொண்ட ஆர்வத்தினால் லயோலா கல்லூரியில் தனது சினிமா படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக மெட்ராஸ் படத்தில் பணியாற்றியுள்ளார். அதை தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமனுடன் அருவி திரைபடத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் முதல் லெஸ்பியன் ஆன்ந்தம் பாடலை வெளியிட்டுள்ளதோடு தமிழின் முதல் ஓர்பால் ஈர்ப்பு பெண்களுக்கான  ஆவணப்படமான  “லேடிஸ் அண்ட் ஜென்டில் வுமன்” ஆவணபடத்தையும் இயக்கியுள்ளார். இந்தியா அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து, நார்வே என  7 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி திரையிடப்பட்டு 3 சர்வதேச திரைப்பட விழாக்களில்  மற்ற நாட்டு படங்களுடன் போட்டியிட்டு சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை பெற்றிருக்கிறது, “லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம்.   சுவிஸ்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற 33வது உலக பெண்கள் சந்திப்பு நிகழ்வில் படம் திரையிடப்பட்டு பெண்களுக்கான உரிமையில் அவர்களின் பாலீர்ப்பு சாரந்த உரிமையும் முக்கியமானது அங்கீகரிக்கபட்டது.

தன் வாழ்வில் கடந்து வந்த தற்கொலைகளும் … தனக்குள் ஏற்பட்ட தற்கொலை உணர்வும் தன்னை யாரென தனக்கு உணர்த்தியதாக சொல்லும் மாலினி, தன்னுடைய பால் ஈர்ப்பினால் சமூகத்தில் தனக்கும், ஓர் பால் ஈர்ப்பு மக்களுக்கும் ஏற்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக படைப்பின் வழி நின்று போராட எண்ணியதன் விளைவாகவே இந்த ஆவணப்படத்தை உருவாக்கினேன் என்கிறார்.

LESBIAN ANTHEM : https://www.youtube.com/watch?v=FZZT2XUFtfQ

LADIES AND GENTLE WOMEN | TEASER: https://www.youtube.com/watch?v=SWamHIAJEvc

மாலினியின் வார்த்தைகளில் இந்த ஆவணப்படத்தைப்பற்றி மிகச்சுருக்கமாக சொல்வதெனில், ” நாங்களும் உங்கள மாதிரியான சக மனுசங்க தான்,  எங்கள  ஒடுக்காதிங்க அடிமைப்படுத்தாதீங்க,  ஆணவக் கொலை செய்யாதீங்க,  கல்லால அடிக்காதீங்க, வாயில சிறுநீரை  ஊத்தாதீங்க,  தற்கொலைக்கு தள்ளாதீங்க” …  தனி மனித உரிமை எந்த வடிவத்தில் மீறப்பட்டாலும் அது தடுக்கப்படவேண்டியது மட்டுமல்ல, தொடர்ந்து நிகழாமல் தடுக்க ஒட்டு மொத்த சமூகமும் முன்வரவேண்டும் என்பதும் தான். “லேடிஸ் அண்ட் ஜென்டில் வுமன்” ஆவணப்படம் நிச்சயம் முன்வரவைக்கும் என்று தோன்றுகிறது.

திரையிடல் முடிந்து அனைவரும் கலையும் நொடியில் ஒரு இளைஞன்  மைக்கில் நான்   “ஒரு கே … இத சொல்றதுக்கு இனி எனக்கு எந்த கூச்சமும் இல்ல” நான் பெருமைப்படுறேன்னு  உணர்ச்சியில்  நடுங்கிய குரலுடன் உரக்கப்  பேசிய வார்த்தைகள் … அத்தனை  பேரையும் ஒரு நிமிடம்  திருப்பி பார்க்க வைத்தது. இதுவரை தற்கொலைக்கு தூண்டப்பட்ட ஆணவக்கொலைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் அந்த  குரலை சமூகம்  திரும்பி பார்த்த நொடி அந்த இளைஞன்  கூனிக்குறுகி போய் …

“பயமா இருக்கு கா பயமா இருக்கு, எல்லாரும் என்ன பாக்குறாங்க பயமா இருக்கு என்று முகம் பொத்திக்கொண்டு அழுத சத்தம்  நம்மை  ஒரு குற்ற உணர்வுடன் திரை அரங்கை விட்டு நம்மை வெளியேற்றுகிறது…  நமக்கே தெரியாமல் நாம் கொலை செய்யும் ஒவ்வொரு உயிரின் அழுகை சத்தமாகவும்  அவன் குரல் இருந்தது. 

லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன்  மாற்றத்தை மெல்ல  நிகழ்த்துகிறது …. நீலம் தன் நிறத்தின் மொழியை பகிர்கிறது ..

– முருகன் மந்திரம்

Related Posts