அரசியல்

குடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி இல்லையா தமிழ்?

குடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி சமஸ்கிருதம், அதுவே தெய்வ மொழி என ஒரு தரப்பு வாதிடும் நிலையில், ‘வடமொழிக்கு மட்டுமே சக்தி இருக்கிறது. அதனால் அது மட்டுமே ஆலயங்களில் அர்ச்சனை மொழியாகத் திகழ வேண்டும். தமிழ் எல்லாம் பக்திக்கு உரிய மொழியே தவிர, அதற்கு வடமொழி போன்ற சக்தி இல்லை. இதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இருக்கிறது.’ என்கிற ‘சத்குரு’ ஜக்கி வாசுதேவ் அவர்களின் காணொளிப் பதிவை கேள்வி எழுப்பி, இது பிராமணியம் அல்லாமல் வேறென்ன என்று கேள்வி எழுப்பியிருந்தேன். அந்த விஞ்ஞானப்பூர்வமான ஆதாரத்தைத் தருமாறும் கோரியிருந்தேன்.

வடமொழியையே முற்றாகப் பிராமணியம் என்று மட்டையடி அடிப்பதாக நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். வடமொழி சப்தத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. அதை உச்சரிக்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. அதன் மொழியியல் பண்புகள் குறித்தும் பேசலாமே என்றும் கருத்துரைத்து இருந்தார். வடமொழி மட்டுமல்லாமல் எழுத்திற்கு வருவதற்கு முன்பு பல்வேறு மொழிகளும் ஓசைக்கும், சந்தத்திற்கும் முக்கியத்துவம் தந்தன. அவ்வாறு தான் எழுத்து வழக்கம் இல்லாத காலத்தில் காலங்களைக் கடந்து மக்களின் நினைவோடையில் தங்களுடைய மொழியினை, அதில் தாங்கள் புரியும் ஆக்கங்களைக் காத்தார்கள். வடமொழி அற்புதமான மொழி என்பதிலோ, அதன் செவ்விலக்கிய வளங்கள், அற்புதமான ஆக்கங்கள், மொழியியல் சிறப்புகள் குறித்தோ நமக்கு மாற்றுக்கருத்தில்லை. வெறும் பக்தி இலக்கியங்கள், வேதங்கள் மட்டுமே சமஸ்கிருதத்தின் முகமல்ல என்றும் நன்றாக அறிவேன்.

இங்கே சிக்கல் வடமொழியைக் கொண்டு புரியப்படும் அரசியல் குறித்து மட்டுமே. தமிழிலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை, கோயில்களில் என்ன மொழியில் அர்ச்சனை செய்தால் என்ன. உன்னுடைய மொழியில் மனதிற்குள் வழிபாட்டு விட்டு போயேன் என்று கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். வடமொழியில் கோயில்களில் அர்ச்சனை புரிந்தால் என்ன, மக்கள் நம்பிக்கொண்டு தானே இருக்கிறார்கள், உங்களுக்கு என்ன அய்யா வந்தது என்றும் கேட்கிறார்கள்.

வடமொழி எங்களுக்கு ஒரு இறை அனுபவம் தருகிறது, ஆகவே, அதைப் பயன்படுத்துகிறோம் என்றால் புரிகிறது. பிரபந்தமும், திருவாசகமும், திருப்புகழும் அனுபவம் தருகிறது, ஆகவே, அதையும் இசையுங்கள் என்று இந்தப் பெருநிலத்தின் பெரும்பான்மை மக்கள் கேட்கிறார்கள். அதைச் செய்வதில் என்ன சிக்கல்? வடமொழி வேண்டாம் என்று பெரும்பான்மை சொல்வதில்லை. எங்களுக்குப் புரியும் மொழியில் நாங்கள் நம்பும் இறைவனோடு உறவு கொள்ள உதவுங்கள் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது. தமிழில் அர்ச்சனை நடத்த வேண்டுமா என்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான பக்தர்கள் தமிழில் அர்ச்சனை நடத்த வேண்டும் என்றே வாக்களித்தார்கள்.

அப்படியே அவர்கள் நம்புவதாக வைத்துக்கொண்டாலும், ஒரு மொழி மட்டுமே இறை மொழியாக, உயர்ந்த மொழியாக நிறுவப்படுவது ஏமாற்று வேலையில்லையா? கர்மா, சாதி என்கிற பெயரில் ஆதிக்கத்தை, ஏற்றத்தாழ்வை, தீண்டாமையை, ஒடுக்குமுறையைக் காலங்காலமாகக் காட்டிக்காத்த காலத்திலும் பெரும்பான்மை அதனை நம்பத்தானே செய்தது? அதனால் அவை சரியென்று ஆகிவிடுமா என்ன?

சமஸ்கிருதம் கணினியில் ‘artificial intelligence’ க்கு மிகச்சிறந்த மொழி, நாசா நிறுவியுள்ளது. உண்மையான இந்தியனாக, இந்துவாக, தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்றொரு வதந்தி வெகுகாலமாக உள்ளது. இதற்கு ஓரிரு இந்து தளங்களைத் தவிர்த்து அறிவியல் ரீதியான ஆதாரங்கள், ஆய்வுக்கட்டுரைகளைக் கேட்டால் ஓடிவிடுகிறார்கள். அப்படி ஒரு கருத்து எண்பதுகளில் முன்வைக்கப்பட்டது, ஆனால், அதை இன்னமும் நிறுவவில்லை என்பதே உண்மை என்பதைச் சற்றே தேடிப்பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ‘கோயில்களில் வடமொழியில் மந்திரங்களை ஓதுவதால் ஒரு சக்தி ஏற்படுகிறது ப்ரோ, அறிவியல்பூர்வமான ஆதாரம் இருக்கிறது. அந்தச் சக்தி வேறு எந்த மொழிக்கும் இல்லை’ என்கிற போதுதான், எங்கே தம்பி ஆதாரம் என்று கேட்கிறோம். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆனது. அந்த ஆதாரத்தைத் தாங்கே சாமியாரே என்று கேட்டால், அது வந்து என்று இழுக்கிறார்கள். நீங்கள் நம்புகிற ஆதிக்க அரசியலை, அதனைப் போலி-அறிவியல் ஆதாரங்களின் மூலம் காப்பாற்ற முனைகிற ஏமாற்று அரசியலை தான் கேள்வி கேட்கிறோம். அதனைப் பிராமணியம் என்றுதான் அழைக்க முடியும். முற்றும்!

  • பூ.கொ.சரவணன்.

Related Posts