அரசியல்

கொசஸ்தலை ஆறு & பள்ளிக்கரணை சதுப்பு நிலம் . . . . . . . தீர்வென்ன?

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப மனித வாழ்வோடு அதிக தொடர்பு கொண்டது ஆறுகள். மனிதனின் நாகரிக வளர்ச்சியானது ஆற்றோரங்களில் தான் தொடங்கின. இயற்கை கொடுத்த அருங்கொடைகளில் ஆறுகளும் அடங்கும்.  ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை மற்றும் பல வகையான தொழிற்சாலைகள் தண்ணீரையையே நம்பியுள்ளது.

இவ்வாறு, பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆறுகளை அரசு முறையாக பராமரிக்காமல் அதில் தொழிற்சாலை கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுகின்றனர்.   ஆறுகள் மனிதனுக்கு வழங்கும் நன்மைகள் பல, அதோடு அளவுக்கு மீறி இயற்கையைச் சுரண்டி, இயற்கையைச் சீண்டுவதால் ஏற்படும் பின்விளைவுகளை  மறக்கமுடியாத  பாடங்களாக ஆறுகள் நமக்கு புகட்டியுள்ளன.   அப்படி புகட்டிய பாடங்களில் ஒன்று  தான் 2015 –ல் ஏற்பட்ட பெருவெள்ளம்.  நீரோட்டப்  பகுதிகளை  ஆக்கிரமித்து வீடுகள், பெரிய பெரிய பலமாடிக் குடியிருப்புகள்   மற்றும் பன்னாட்டுப்  பெருநிறுவனங்கள் மற்றும் பெரிய  தொழிற்சாலைகள் முதலானவை கட்டப்பட்டுள்ளன.  இயற்கையான நீர்வழி தடங்கள் அனைத்தையும் மாற்றி அமைத்து அதன் போக்கை  மறித்தால் என்ன ஆகும் என்பதை ஒரு  பாடமாக  தந்தது.

மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் உடமைகளையும் வீடுகளையும்  இழந்து தவித்தனர். படிக்கும் மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், பள்ளி சீருடைகள் முதலானவற்றை  இழந்து பரிதவித்தனர். அரசு வெள்ளப் பாதிப்புகளை உணர்ந்து, தற்காலிக சிறு நிவாரணங்கள் அளிப்பதற்கே முன்று, நான்கு நாட்கள் ஆனது.  ஆனால் அதற்கு முன்பே பல தன்னார்வத்  தொண்டு அமைப்புகள் நீரில் இறங்கி மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்தனர். வெள்ளபாதிப்புக்கு பிறகு ஆக்கிரமிப்புகள்  அகற்றப்படும் என அரசு வெறும் கண் துடைப்பிற்காக கரையோரங்களில் இருந்த அப்பாவி மக்களை மட்டுமே அவசர அவரமாக அகற்றி செம்மஞ்சேரி, கண்ணகிநகர் மற்றும் பெரும்பாக்கம் போன்ற இடங்களில் கொண்டு தங்க வைத்ததோடு, அரசங்கத்தின் வேலை முடிந்துவிட்டது. ஆனால்  அங்கு  நீரோட்ட பகுதியில் இருக்கும் கார்ப்பரேட் தொழிச்சாலைகளையோ அடுக்குமாடி குடியிருப்புகளையோ அரசு பெரிதாக ஏதும்  கண்டுகொள்ளவில்லை. SRM  பல்கலைக் கழகம், ரமச்சந்திரா மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து, அதன் மேல் கட்டப்பட்டவையாகும். ஆனால் இந்த இடங்களானது அரசு அனுமதியோடு தான் இன்றும் இயங்கி வருகிறது.

      ஆறு கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆறு, கூவம்  ஆறு ஆகியவை சென்னை நகரப்பகுதியில் ஓடிக் கொண்டு இருக்கும், மூன்று முக்கிய ஆறுகளாகும்.  ஒரு காலத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆறுகளில் மீன்பிடி தொழிலும் படகு போக்குவரத்தும் நடைப்பெற்றது. பாலாற்றிலிருந்து வெளியேறும் உபரி நீர், காவேரிப்பக்கம் ஏரி வழியாக, ஏரி உபரி நீராக  வெளியேறும். இந்த நீர் கொசஸ்தலை ஆறாக உருவெடுத்து சென்னையின் வட பகுதியிலுள்ள எண்ணூர் முகத்துவாரத்தை அடைந்து கடலில் கலக்கிறது. இதன் நீரோட்டப் பாதையில்,  உபரி நீர், கேசவரம் அணைக்கட்டுக்குச் செல்லும் போது உருவாவது தான் கூவம் ஆறு.  முகத்துவார அகலம் 120 மீட்டர் கொசஸ்தலையின் நீர்ப் பிடிப்பு பகுதி 3,757 சதுர கி.மீ மொத்த நிளம் 136 கி.மீ சென்னைக்குள்  மட்டும் 16 கி.மீ ஓடுகிறது ஆற்றுப்படுக்கையின் அகலம் 150 -250 மீட்டர், ஆற்றின் அதிக பட்ச கொள்ளளவு வினாடிக்கு 1,25,000 கன அடி தண்ணீர் சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடி.

இதில் வெள்ளம் வந்தால் வெளியேறுவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட்து தான் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய். இது எண்ணூரில் தொடங்கி கூவம் ஆற்றின்  பேசின் பாலம் வழியாக கூவம் வடக்குப் பகுதி வரை 58 கி.மீ நீளம் கொண்டது. அதன் அதிகபட்ச கொள்ளவு வினாடிக்கு 10,500  கன அடி வெள்ளக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் இதன் வழியாக ஓடி கூவத்தில் கலக்கிறது. அடுத்தாக இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் ஓட்டேரி அருகில் தொடங்கும் மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் (7.2 கி.மீ) வழியாக ஓடி மயிலாப்பூர்-காந்தி நகர்-மத்திய கைலாஷ் அருகில் அடையாறு ஆற்றில் கலக்கிறது.

ஆனால் இந்த மூன்று முக்கிய ஆறுகளும் முறையாக பராமரிக்கப்படாததால் இன்று மழைக்காலங்களில் வெள்ளத்தையும், கோடைக்காலங்களில் வறட்சியும் சென்னை மக்கள் அனுபவித்து வருகின்றனர். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் நம்  கண் முன்னே இன்று கொசஸ்தலை ஆறு அதன் சிறப்பியல்பை இழந்து வருகிறது.

இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜா  பேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளை நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி வழியாக சென்று எண்ணூருக்கு அருகில் வங்கக்கடலில் கலக்கிறது.  2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஓடிய வெள்ளம் வினாடிக்கு 9,000 கன அடியாகும்.

ஆனால், அரசே இந்த ஆற்றை ஆக்கிரமிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிற்சாலைகள் ஆற்றின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. ஆனால், இது அங்கிகரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு என்றோ அங்கிகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு என்றோ வெள்ளத்துக்கு  தெரியுமா? அதோடு கொசஸ்தலை ஆற்றில் சரமாரியாக அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலக்கப்படுவது இன்னொரு பெரும் பிரச்சனை ஆகும்.  இதனால் ஆறு முற்றிலுமாக சாம்பல் சமாதியாக மாறவிருக்கும் பேராபத்து உள்ளது. இந்த பகுதி முழுக்க சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது.  இந்த சேற்றில் இறங்கிதான் இப்பகுதி மக்கள் வேலைக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ செல்ல முடியும்.                     பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த சேற்றில் இறங்கித்தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.  இது இந்த மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதோடு அவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவும் உள்ளதால், இங்கு வெள்ளம் வந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு இருக்கும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் மட்டுமல்லாது, மொத்த சென்னை நகரமுமே பாதிப்புக்குள்ளாகும் என்ற ஆபத்தின் அறிகுறியை அரசு இன்னும்கூட உணர்ந்தது போல் தெரியவில்லை..

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்:

ஆறுகளை போலவே பல சதுப்பு நிலங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, நம் கண்முன்னே அழிந்து உருக்குலைந்து கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக்கரணை  சதுப்பு நிலம் உள்ளது. பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நன்னீர் சதுப்பு நிலம் என்று வகைபடுத்தப்பட்ட ஒன்றாகும். பள்ளிக்கரனை ஈரநிலத்தின் புவியியல் தோற்றம் சென்னையின் தென்பகுதியான மத்திய கைலாசம் முதல் மேடவாக்கத்தின் தெற்குப்பகுதி  வரை 5000 ஹெட்டேர் பரப்பளவுக்கு விரிந்து பரந்து, பள்ளிக்கரணை ஏரியையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இந்த சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவை விடக் குறைந்துள்ளது.  இது  முதலில் இருந்து அளவுக்கு பத்தில் ஒரு பகுதி தான்  என்பது வருத்தத்திற்கு உரியது. இங்குள்ள நன்னீர் ஏரி, அபூர்வ பறவைகள் வந்து செல்லும் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. வெளியூர் பறவைகள் பருவகாலங்களில் வந்து செல்லும், கொக்கு, நாரைப் போன்ற 50 க்கும் மேற்பட்ட  உள்ளூர் பறவைகள் வாழுவதற்கு ஏற்ற சூழல் இருக்கிறது என்பதோடு, இப்பறவைகளுக்கு  இந்த ஏரி ஒரு முக்கியமான வழித்தடம் ஆகும். இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில் தான் பல்லூயிர்களின் பெருக்கம் அதிகமாக காணப்படும்.

இந்த ஏரி அதிகாரம் படைத்த சுயநலவாதிகளின் ஆக்கிரமிப்புகளால் ஒரு பக்கமும், மாநகராட்சி நிர்வாகம், நகரின்  குப்பைகளை கொட்டும் குப்பைமேடாக மாற்றுவதன்  மூலமாக இன்னொரு பக்கமும் முற்றிலும் பாழாக்கி வருகிறார்கள்.  சமுக ஆர்வலர்களின் பல போராட்டத்திற்கு  பிறகு தான் 2007–ல் அரசு இதனை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப்பகுதி என அறிவித்தது. ஆனாலும் கூட மாநகராட்சி குப்பைகளை லாரி லாரியாக கொட்டுவதன் மூலம், பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி சாலைக்கு வடபகுதியில் உள்ள ஏரிப்பகுதியை முற்றிலுமாக அழிக்கும் வேலையை செய்து வருகிறது. அதோடு பல நேரங்களில் குப்பைகளை கொளுத்துவதால் பயங்கரமாக புகைமூட்டம் ஏற்பட்டு சாலைபோக்குவரத்தை நிறுத்தும் நிலை கூட கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை ஏற்பட்ட தீயினால் ஏராளமான  பறவைக் குஞ்சுகளும், முட்டைகளும்  தீயில் கருகி அழிந்தன என்ற வேதனையான செய்தியும் உள்ளன.

பொதுவாக சதுப்பு நிலப்பகுதி என்பது தனிப்பட்ட ஒரு நிலப்பகுதி அல்ல. கடல், ஆறு மற்றும் ஏரிகளுடன் தொடர்புடைய முக்கியமான பகுதியாகும், ஓர் ஏரியின் உபரி நீரோ அல்லது ஆற்றின் உபரி நீரோ நீண்ட காலமாக ஒரே இடத்தில் சேர்வதால் உருவாகும் நிலப்பகுதி தான் சதுப்பு நிலம். இந்த நிலமானது மழைக்கால நீரை உள்ளிழுத்து தக்க வைத்து, கோடை காலத்தில் நீரை உமிழ்ந்து நிலத்தை ஈரப்பதத்துடன் பராமரிக்கும் தன்மையோடு இருக்கும். இது நிலத்தடி நீரின் ஆதாரமும் ஆகும்.

சதுப்பு நிலம் என்றால் எதற்கும் உதவாத வீணான நிலப்பரப்பு  என்று அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும்  கருதுவதால் தான் அவைகளைப் பாதுகாக்காமல் உதாசீனப்படுத்தி அழித்து வருகிறார்கள்.

     இந்தியாவிலே இரண்டாவது சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது தற்போது இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட முதன்மை சதுப்பு நிலமாக மாறி இருக்கிறது.

கடலின் அருகில் அமைந்திருப்பதால், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்திற்கு வரும் கடல் நீரை தடுத்து நல்ல நீருடன் அது கலந்து விடாமல் தடுத்து,நல்ல  நீரைத் சேமிக்கும் தன்மையும் சதுப்பு நிலத்துக்கு மட்டுமே உண்டு. அத்தகைய விலை மதிப்பில்லாத சதுப்பு நிலமானது சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் என முச்சே விட முடியாமல் திணறுகிறது. நன்னீரைக் குடித்து தாகம் தீர்த்த பறவை கூட்டங்கள் இன்று கழிவு நீரைக்  குடித்து மடிக்கின்றன. இது நாளை மனிதர்களாகிய நமக்கும் நேரலாம்.

இனி என்ன செய்ய வேண்டும்.?

சென்னைக்கு வரும் ஆறுகளில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு தண்ணீரை கொண்டு வரும், துணைத் தண்ணீர் வழித்தடமாக இருக்கும் பகுதி வரை தூர்வார வேண்டும். அதே போல சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் கார்ப்பரேட் தொழிற்சாலைகளும், உயர்ந்த கட்டிடங்களையும், குப்பை மேடுகளையும் அகற்ற வேண்டும். அதோடு  அப்பகுதியில் மருந்துவ கழிவுகள் உள்ளிட்ட நச்சுப் பொருட்களையும் இதர கழிவுகளையும்  கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு சரியான கழிவு மேலாண்மைத் திட்டத்தை நவீன உத்திகளுடன் உருவாக்க வேண்டும்.

சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக  அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வுச் செய்து முறையாக வடிகால்களை அமைக்கலாம்.

மேலும் நிலத்தடி கால்வாய்கள் மூலம் வாலாஜா அணைக்கட்டு, கோவிந்தவாடி கால்வாய், காவேரிப்பாக்கம் ஏரி, கேசவரம் அணைக்கட்டு வழியாக பாலாற்றை அடையாறு ஆற்றுடனும் இணைக்கலாம். இன்னொரு பக்கம் கோவிந்தவாடி கால்வாய், கம்பக்கல் வாய்க்கால், ஸ்ரீபெரும்புதூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி வழியாக பாலாற்றை அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம். ஆரணி ஆற்றை கொசஸ்தலை ஆறு, பூண்டி கண்டலேறு, பூண்டி கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்துடன் இணைக்கலாம். கூவத்தை கொரட்டூர் அணைக்கட்டு, பங்காரு கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம்.

இதன் மூலம் சென்னையின் வெள்ள அபாயத்தை முற்றிலும் தடுக்கலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவையான தண்ணீர் தேவையையும் முழுமையாக பூர்த்தி செய்ய இயலும்.

ஆறுகளை முறையாக  தூர்வாரி, வடிகால்களை எல்லா இடங்களில் அமைக்க வேண்டும். அரசு மழைத் தண்ணிர் செல்வதற்கான வழிகளை அமைத்து தர வேண்டும்.2015 பெரு வெள்ளதிற்கு பிறகு இதனைத்  தொடங்கிருந்தாலேயே  இன்று எப்போது வெள்ளம் வருமோ என்று அச்சத்தின் பிடியில் இருக்கும் மக்களின் வேதனைகளை போக்கிருக்கலாம்.

மக்களுக்கு தேவைப்படுவது முழுமையாக நிம்மதியைத் தரும் பாதுகாப்புணர்வே தவிர, இழப்புக்குப் பிறகு தரப்படும்  நிவாரணத் தொகை அல்ல.

– வசந்தி பாரதி.

Related Posts