பிற

போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . !

இன்று காலை முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளி கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தனது 100-வது வயதில் மரணமடைந்திருக்கிறார்.

தத்துவங்களும் மக்கள் மீதான அன்பும் மூளைக்குள் நுழைந்துவிட்டால், மிகப்பெரிய தியாகங்களைக் கூட சர்வசாதாரணமாக செய்யும் துணிச்சல் பெற்றுவிடுலாம் என்பதற்கு தோழர் கோடேஸ்வரம்மா அவர்களது வாழ்க்கையும் உதாரணம்.

4-5 வயதிலேயே திருமணமும் ஆகி, விதவையும் ஆகியவர். பின்னர் பள்ளிக்கூட காலகட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நாட்டம் கொண்டவராக மாறினார். ஒருநாள் சுதந்திரப் போராட்டத்திற்கு காந்தியடிகளின் அறைகூவலின் பேரில் சாலையில் நிதிவசூல் செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்ததும், சிறுமியாக இருந்த அவர் தன் கழுத்தில் காதில் மாட்டியிருந்த நகைகள் அனைத்தையும் கழட்டிக் கொடுத்தார்.

ஒருகட்டத்தில் காங்கிரஸ் மீதான பற்று கம்யூனிசத்தின் மீது திரும்பியது அவருக்கு. 16-17 வயதுகளில் சோசலிசத் தத்துவம் அவரை ஈர்த்து, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இணைய வைத்தது. தோழர் கோடேஸ்வரம்மா அற்புதமாகப் பாடுவார். அதனால் கட்சிப் பிரச்சாரங்களில் தொடர்ந்து பாடினார். வீடுவீடாக கட்சியின் துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கச் செல்லும்போதெல்லாம், அவரை விதவை என்றுசொல்லி பல வீடுகளில் வெறுப்பை வீசினர். ஆனால் சோசலிச ரஷ்யாவின் புரட்சியில் பெண்களின் பங்கு, அவரை மனம் தளராமல் நடைபோட வைத்தது.

கொண்டபல்லி சீத்தாராமய்யா என்கிற கம்யூனிஸ்ட் தோழருடன் 18 வயதில் திருமணம் நடந்தது அவருக்கு. 1930 களில் எல்லாம் விதவை மறுமணம் என்பது அவ்வளவு எளிதாக நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலகட்டமாக இருந்தது. விதவை மறுமணத்தை இரண்டு ஊர்க்காரர்களும் கடுமையாக எதிர்த்தபோதும், இருவரும் தைரியமாக மணமுடித்துக்கொண்டனர். மறுமணம் செய்துகொண்ட காரணத்தால், திருமணத்திற்குப் பின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கே செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் தோழர் கோடேஸ்வரம்மா.

கணவரும் தோழருமான சீத்தாரைய்யாவுடன் இணைந்து கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். பெரும்பாலும் ஆளுக்கொரு ஊர்களில் கட்சிப்பணி செய்ய வேண்டியிருந்தது.

தெலுங்கானாவில் வீரம்செறிந்த போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், அதற்கு முழுமையாக தன்னை அர்பணித்துக்கொண்டவர். தலைமறைவு வாழ்க்கையை இருவருமே மேற்கொள்ள வேண்டியிருந்தது. அடிக்கடி தங்குமிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதும், குடும்பம் குழந்தை குட்டிகள் எங்கே யாரிடம் இருப்பார்கள் என்றுகூட கவனிக்கமுடியாத சூழலும், செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பயமுமின்றி கொண்டுசெல்வதும், மிகநெருக்கமான பலரை இழக்கவேண்டி வருவதும் தலைமறைவு வாழ்க்கையின் அங்கமாக இருந்தது. அதன் அத்தனை துன்பங்களையும் தான் கொண்ட கொள்கைக்காக ஏற்றுக்கொண்டார்.

அரசியல் போராட்ட தலைமறைவு வாழ்க்கையில், ஆண்களைவிடவும் ஒப்பிடமுடியாத அளவிற்கான சவால்களையும் நெருக்கடிகளையும் பெண்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் எந்தளவுக்கு நாம் ஆவணப்படுத்தியிருக்கிறோம் என்பது இன்றும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இன்றைக்கும் பெண்ணுரிமைக்காக குரல்கொடுக்கும் இயக்கங்கள் கூட, ஒரு நிகழ்ச்சியையோ பொதுக்கூட்டத்தையோ, தெருமுனைக் கூட்டத்தையோ ஏற்பாடு செய்கிறபோது, அக்கூட்டத்தில் பங்கெடுக்கும் பெண் தோழர்களுக்கு மிகஅவசியமாகவும் அடிப்படையாகவும் இருக்கவேண்டிய கழிவறை வசதியைக்கூட உறுதிசெய்வதில்லை. ஆணாதிக்கத் திமிருடன் வேண்டுமென்றே இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்யவில்லையெனிலும், பெண்களின் பிரச்சனைகளை கூடுதல் சிரத்தையோடு கவனத்தில் கொள்ள இன்னும் பழகாமலேயே இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கொண்டபல்லி கோடேஸ்வரம்மா அவர்களின் தலைமறைவு வாழ்க்கையின்போது அவர் வயிற்றில் உருவாகியிருந்த கருவை கலைக்க முடிவெடுத்தார். ஆனால் பங்கர் போன்ற மறைவிடத்தில் ஒளிந்து வாழுகிற போது, கருக்கலைப்பு செய்வதற்கான வசதிகள் கூட இல்லாத சூழலில் உயிரைப்பணயம் வைத்து கருக்கலைப்பு செய்துகொண்டார். தலைமறைவு வாழ்க்கையின்போது கருக்கலைப்பே இத்தனை கடினமாக இருக்குமென்றால், பிள்ளை பெற்று வளர்ப்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதென்பதாலேயே அப்படியான முடிவினை எடுத்தார். “ஆளற்ற பாலம்” என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் இதனை விரிவாகப் பேசியிருக்கிறார். ஆண்களுக்கு இல்லாத பல நடைமுறைப் பிரச்சனைகளை பெண் தோழர்கள் எவ்வாற மனஉறுதியோடு கையாண்டார்கள் என்பதை அந்நூலில் வாசிக்கிறபோதே நம் கண்கள் தானாகவே ஈரமாகிவிடுவதை நம்மால் தடுக்கவேமுடியாது.

தலைமறைவு வாழ்க்கை முடிந்தபின்னர், தேர்தல் அரசியல், வெகுஜன அரசியல் என கட்சி எடுத்த காலத்திற்கேற்ற முடிவுகளுடனும் தன்னை இணைத்துக்கொண்டு சமூகமாற்றத்திற்காக கடுமையாக உழைத்தார் அவர். அரசியல் வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் ஒருசேர பிரச்சனை வந்துசேர்ந்தது. சில முரண்பாடுகளின் காரணமாக அவரது கணவரைவிட்டுப் பிரியவேண்டிவந்தது. அதே வேளையில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் சிபிஐ என்றும் சிபிஎம் என்றாக இரண்டாகப் பிரிந்தது.  தனக்கு நெருக்கமான தோழர்கள் இருபக்கமும் பிரிந்து கிடப்பதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வறுமையும் வாட்டியது அவரை. 35 வயதிலும் பள்ளிப்படிப்பை மீண்டும் துவங்கி முடித்தார். அதன்பின்னர் காக்கிநாடா பாலிடெக்னிக்கிலும் வேலைக்கு சேர்ந்தார். வேலை, இருகுழந்தைகளை வளர்ப்பது, கட்சிப்பணி என அனைத்தையும் ஒன்றாக செய்துவந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்ததை விரும்பாதவராக இருந்தபோதும், ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழலிலும், 1960-70 களில் துவங்கி, சிபிஐ மற்றும் சிபிஎம் என இருகட்சிகளுக்கும் மாதந்தோறும் 10 ரூபாய் (லெவி போன்று) கொடுத்துவந்தார் தோழர் கோடேஸ்வரம்மா.

மனைவியை விட்டுப் பிரிந்து 36 ஆண்டுகள் ஆனபின்னர், அவரை சந்திக்க விரும்பினார் தோழர்  சீத்தாராமைய்யா.

“அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்..”

என்று அவரின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னார்கள்.

அதற்கு தோழர் கோடேஸ்வரம்மா, “எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா?”

என்று நண்பர்களிடம் திருப்பிக் கேட்டாராம். பிரிந்துசெல்வதாக இருந்தாலும் மீண்டும் இணைவதாக இருந்தாலும் ஆண் மட்டுமே முடிவு செய்வதைப் புறக்கணிப்பதாக இருந்தது அவரது பதில். சில காலம் கடந்தபின்னர் அவருக்கும் பார்க்க விருப்பம் வந்தபோதுதான் அவர்களது சநதிப்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்மீது திணிக்கப்பட்ட எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையின் வழிகாட்டுதலின்படி வாழ்க்கைமுழுவதும் போராடினார் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா.

முற்போக்கு முகாமிலும்கூட ஆண் போராளிகளின் மறைவுக்குக் கிடைக்கும் அதேகவனம், பெண் போராளிகளுக்குக் கிடைப்பதில்லையோ என்கிற சிறிய வேதனை எனக்கு இருக்கத்தான் செய்கிறது.

போய்வாருங்கள் தோழர்…

நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் எழுத்தும் பேச்சும் கொள்கைப்பிடிப்பும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றன.

– இ.பா.சிந்தன்.

Related Posts