சமூகம்

கூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்??

சாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது பழங்குடியின பெண், 13 காட்டுமிராண்டிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பொதுச் சமூகத்தின் மனசாட்சியை எந்த விதத்திலும் உலுக்கி விடாத, மெழுகுவர்த்தி ஏந்தி வீதியில் ஊர்வலம் செல்ல அவசியமில்லாத, ”அத்தன பேரையும் தூக்குல போடணுங்க, அப்போதான் இந்த மாதிரி தப்பு செய்யறவங்களுக்கெல்லாம் ஒரு பாடமா இருக்கும்” என்று மத்தியதர வர்க்க மனசாட்சி இன்னும் எந்த எதிர்வினையும் ஆற்றியிருக்காத இந்த சம்பவத்திற்கு ஆணாதிக்கம் மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறையும் காரணமாக அமைந்திருக்கிறது.

அந்த பழங்குடியின பெண் வேறொரு உயர் சாதியை சேர்ந்த ஆணை காதலித்ததோடு, அடிக்கடி அவரை சந்தித்து பேசி வந்திருக்கிறார். காதல் எனும் ”மனித சமூகத்திற்கு விரோதமான?!” மாபெரும் குற்றத்தை செய்ததற்கு “கங்காரு” பஞ்சாயத்து கூடி 50000 ருபாய் அபராதம் செலுத்துமாறு அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரவிடுகிறது. அதை செலுத்த தவறினால், அந்தப் பெண் கூட்டு வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுவாள் என்றும் எச்சரிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின குடும்பத்தால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று உறுதியாக தெரிந்த பின்பே தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் இதிலிருந்து தெரிகிறது.

எதிர்பார்த்தபடியே அந்தக் குடும்பத்தினர் அபராதத்தை செலுத்தத் தவறியதை அடுத்து 13 காட்டுமிராண்டிகள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்த கொடூரத்தை வெளியில் சொல்லும்பட்சத்தில் கொல்லப்படுவீர்கள் என்றும் அவர்கள் அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.

சமூகத்தில் காதலென்பது தனிமனித உரிமை என்ற புரிதலுடைய நாகரீக(!) சமூகம் நடப்பிலிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சாதியமும், பெண்ணடிமைத்தனத்தனமும் நம்மை அவ்வளவு எளிதில் மனிதர்களாக்கிவிடாது என்பதையே நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

முந்தைய சில கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்களை திரும்பிப் பார்ப்போம் …

தில்லி:

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் வீடு செல்ல நண்பருடன் பேருந்தில் ஏறிய மருத்துவக்கல்லூரி மாணவி ”நிர்பயா” 6 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். உள்நாட்டில் சிகிச்சை பலனளிக்காததால் வெளிநாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த செய்தி கேட்டு இந்தியாவே பதறித் துடித்த வேளையில் – அவள் அணிந்திருந்த உடை, நண்பரோடு சினிமாவுக்கு சென்றது, வல்லுறவுக் குற்றவாளிகளை அண்ணா என்று அழைத்திருக்கலாம் – என்பவற்றைப் போன்ற வாதங்களை முன்வைக்க பிற்போக்குவாதிகளும், ஆன்மீக அவலங்களும் தவறாமல் செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டெல்லி வீதிகளில் மெழுகுவர்த்தியுடன் கூடிய பல்வேறு தரப்பினர், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் பெண் இறந்து விட்டாள் என்று வருத்தம் தெரிவித்தார். அரசு தரப்பில் நீதிபதி வர்மா கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கும், சிறுவன் ஒருவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கின்ற வேளையில் இரும்பு கம்பியை ஒன்றை எடுத்து அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விட்டு சிறுகுடலை வெளியே எடுத்தார்கள் என்கிற செய்தி கேள்விப்படுகிற வேளையிலேயே உடல் பதறுகிறது. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எவரும் கொண்டிருக்க முடியாது

தமிழ் நாடு:

1992 ஜூன் மாதம் 20-ம் தேதி தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கிற சித்தேரி வனப்பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராமத்தில் நுழைந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சந்தன மரம் கடத்தியதாக ஊர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டி ஒட்டு மொத்த கிராமத்தையும் வாழத் தகுதியற்றதாக மாற்றி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

அந்த வன்முறையின் நடந்து கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் சிலர் திருமணமாகாத 18 இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களை ஒரு லாரியில் ஏற்றி, ஏரிக்கரைக்கு கொண்டுச் சென்று அங்கிருந்த புதர் மறைவுகளில் கூட்டம் கூட்டமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள். மேலும் அப்பெண்களை அழைத்துச் சென்று அரூரில் ஒரு வாரம் வைத்திருந்தார்கள். அங்கும் தொடர்ந்தது பாலியல் வன்முறை. சிறைகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களில் பலர் குற்றுயிரும், குலையுயிருமாக ஆகியிருந்தார்கள்.

மொத்தம் 18 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். 18 பெண்களில் 3 பெண்களுக்கு மட்டுமே அப்போது திருமணம் ஆகியிருந்தது. மீதமுள்ள பதினைந்து பெண்களும் 13 முதல் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் பலர் வயதுக்குக் கூட வராத சிறுமிகள்.

‘‘அன்னிக்கு சனிக்கிழமை ஸ்கூல் லீவு. ஸ்கூல் மட்டும் இருந்திருந்தா நான் ஸ்கூலுக்குப் போயிருப்பேன். எனக்கு இப்படி வலிக்கிற அளவுக்கு எதுவும் நடந்திருக்காது.’’ சம்பவத்தின் போது எட்டாம் வகுப்பு படித்து வந்த பதின்மூன்று வயதான செல்வி, நீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தை இப்படித்தான் தொடங்கினாள்.

”உங்கள் போலீசாரின் லத்திக்கு மட்டும் விந்தைப் பீச்சுகிற சக்தி இருந்தால் நாங்கள் எத்தனையோ முறை கர்ப்பம் தரித்திருந்திருப்போம்” என்று வேறோர் பெண் நீதிமன்றத்தில் சொன்னதைக் கேட்ட போது உயிரே உறைந்து போனது.

கூட்டாக வன்புணர்ச்சியில் ஈடுபட்டு மனித தன்மையற்ற செயல்களில் ஈடுபட்ட காவல் மற்றும் வனத்துறையினருக்கு தண்டனை வாங்கி கொடுக்க ஜனநாயக அமைப்புகள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

கயர்லாஞ்சி:

2006, செப்டம்பர் 29 அன்று தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆதிக்க சாதியினரின் மீது புகார் அளித்த ”மாபெரும் குற்றத்தை” செய்ததற்காய் மகாராஷ்டிரா மாநிலம், பண்டார மாவட்டம், மொகாலி தாலுகாவில் அமைந்துள்ள ‘கயர்லாஞ்சி’. என்னும் கிராமத்தை சேர்ந்த பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் பஞ்சாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். தாய், மகள் மற்றும் இரண்டு மகன்கள் என அனைவரும் நிர்வாணப்படுத்தப்பட்டு மகனை தாயுடனும் அண்ணனை தங்கையுடனும் உடலுறவு கொள்ளுமாறு நிர்பந்தம் செய்தனர் ஆதிக்க சாதியினர். அவர்கள் மறுக்கவே அவர்களுடைய ஆணுறுப்பை வெட்டி எறிந்தனர். பின்னர் தாய் மகள் இருவரும் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த பெண்களின் பிறப்புறுப்பில் மாட்டு வண்டியின் நுகத்தடியில் மாட்ட பயன்படும் கூரிய கட்டையை நுழைத்து அடித்தே கொன்றிருக்கிறார்கள். இறந்த பின் அந்த பெண்களுடன் உடலுறவு கொண்டிருக்கிறான் அந்த கூட்டத்தின் தலைவன்.

‘‘இவ்வழக்கில் சாதிக்குப் பங்கிருப்பதாகக் கூறமுடியாது. குற்றவாளிகள் அனைவரும் சாதாரண கிராமத்து மனிதர்கள். அவர்கள் ஏற்கெனவே எந்தவொரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. போட்மாங்கே குடும்பத்தினரால் தாங்கள் ஏற்கெனவே ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே இக்குற்றங்களைச் செய்துள்ளனர். மேலும் இதுவொன்றும் அரிதினும் அரிதான வழக்கல்ல”.

நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்கும் இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை 25 வருட தண்டனையாக மாற்றிய உயர்நீதி மன்றம் உதிர்த்த முத்துக்கள் இவை.

ராஜஸ்தான்:

அதே போல் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து தொடர்ந்து போராடினார் இராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி தேவி. திட்டமிட்டு அவரை பழிவாங்க நினைத்த ஆதிக்கசாதி இந்துக்கள் பன்வாரி தேவியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்ச்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதே போல் நடைபெற்ற ஏராளமான சம்பவங்களை நாம் பட்டியலிட முடியும். இவை எல்லாவற்றிற்கும் பின்னணியாக ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் அமைந்திருக்கிறது.

உயர் சாதி பெண் + தலித் ஆண் என்றாலும், தலித் பெண் + உயர் சாதி ஆண் என்றாலும் பெருமளவில் உடலளவிலும், மனரீதியாகவும் வன்முறைகளை எதிர்கொள்வது என்பது பெண்களாகவே உள்ளார்கள். படிநிலையில் கட்டமைக்கப்பட்ட சாதிய சமூகத்தில் கீழ்நிலையான தலித்துகளும் பெண்களும் ஒன்றெனவே ”மனு (அ)நீதி” வரையறுத்துக்கூறுகிறது. ஆகவே இரத்தமும் சதையுமாக சக மனுசியாக நேசிக்கப்பட வேண்டியவள் ஒரு பண்ட மாற்றுப்பொருளாக பாவிக்கும் வழக்கத்தை இயல்பாக மனு உருவாக்கி வைத்த கோட்பாடுகள் உருவாக்கி விட்டது.

ஆதிக்க சிந்தனை என்பது சகல தளங்களிலும் நிறைந்திருக்கும் இந்த சமூக சூழலில் பெண்ணை மதிக்கின்ற போக்கை, சக மனுஷியாக அங்கீகரிக்கின்ற மனப்பாங்கை சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்க்கின்ற கல்வி முறையும், மேம்பட்ட சமூகத்தை கட்டமைக்க தேவையான பண்பையும் வளர்த்தெடுக்காமல் இங்கே குற்றங்களை சட்டத்தைக் கொண்டு மட்டுமே தீர்க்க முடியாது.

பெண்களை ஃபிகர்களாக பார்க்கின்ற மனநிலையிலேயே ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். ”கெடுத்தவனுக்கே கட்டி வைக்கிறதுதான முறை” என்கிற சினிமாத்தனமான வாதங்களும் – பெண்ணின் உடலை வியாபார பொருளாக்கி கல்லா கட்டும் திரைப்படங்கள், ஆண் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு கூட பெண்ணை விளம்பர மாடலாக ஆக்கியிருக்கும் விளம்பரங்கள் என நம்மைச் சுற்றியிருக்கும் ஓராயிரம் காரணங்களை – சகஜமாக கடந்துவிட்டு, வல்லுறவு சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் உச்சுக் கொட்டிவிட்டு, தண்டனைகளை அவரவர் விருப்பத் தேர்வுகளாக பரிந்துரைத்து விட்டு சென்று கொண்டிருக்கிறது சமூகம்.

பாலியல் ரீதியாகவும், படிநிலைக் கொடூரத்தாலும் இப்படி சக மனுஷியையும், மனுஷனையும் பிய்த்துத் தின்று கொண்டிருக்கும் பிணங்களை, சாதாரணமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தினசரி கடந்துசெல்லும் மனிதர்களின், வார்த்தைகளில் தெறிக்கும் வன்மத்தைக் கூட அனுமதிக்காமல், அதை அப்பொழுதே எதிர்க்கும் மனப்போக்கு ஏற்படவேண்டும்.

இனி, உயிரும் உணர்வையும் கொண்ட பெண்ணை வெற்று சதையாக மட்டுமே பாவிக்கும், சாதித்திமிரும், மடப்பற்றும் கொண்ட மனநோயாளிகளை, அவர்களின் வழியிலேயே சென்று ஒதுக்க வேண்டும். கடுமையான நிராகரிப்பும், எதிர்ப்பும் அந்த காட்டுமிராண்டிகளை மாற்றியே தீர வேண்டும். மேலும் இனி எந்த மனிதனையும் இந்த மனநோய் தாக்காமல் வளர்த்தெடுப்பது, ஒவ்வொருவரின் கடமையாகும்.

உங்கள் பரிதாபங்களை வெளிப்படுத்தும் உச்சுக்கொட்டல்களும், கணநேர கோபங்களும் இங்கு எதையும் சாத்தியப்படுத்தாது.

அந்த “அவைகள்” மட்டுமல்ல, அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் நாமும் கூட குற்றவாளிகள்தான்.

Related Posts