நூலக மேலாண்மையில் கட்டற்ற மென்பொருள்

கோகா (KOHA) கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள் 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கோரேவேனியா (Horowhenua Library Trust) நூலக அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டைத் துவங்கியது. இந்த அறக்கட்டளையால் ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி இம்மென்பொருள் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டது.

இதனுடைய நிரலை (Source Code) பயன்படுத்திக் கொள்ள, கற்றுக் கொள்ள, பகிர்ந்து கொள்ள மற்றும் மேம்படுத்துவதற்கும் உண்டான சுதந்திரங்களுடன் வெளியிட்டப்பட்டது. உலகம் முழுவதும் இம்மென்பொருள் ஏராளமான நூலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோகா மென்பொருள் தற்பொழுது இருக்கும் தனியுரிமை மென்பொருளை விட ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இவற்றை நிறுவிப் பயன்படுத்துவது மிகவும் எளிது.

பொது நூலகங்களுக்கான பயன்பாடுகள்

கோகா என்னும் கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள் (Open Source Software) கொண்டு இலவசமாக தமிழகத்திலுள்ள பொது நூலகங்களின் அனைத்து செயல்பாடுகளையும் எளிதில் கணினிமயமாக்க முடியும். மேலும், ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்தோடு அந்தந்த மாவட்டத்திலுள்ள கிளை நூலகங்களை இணைக்க முடியும்.

இவ்வாறு இணைக்கப்பட்ட நூலகங்களை மேகக் கணினி (Cloud Computing) தொழில்நுட்பத்தில் இணைப்பதன் மூலம் தமிழக நூலகங்களின் ஐக்கிய நூல் விபரநிரலை (Union Catalog) இணயத்தில் எளிதில் கொண்டுவர முடியும்.  வாசகர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே தமிழக்த்தில் உள்ள அனைத்து நூலகங்களின் புத்தக இருப்பு விபரங்களை  இணையம் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இணைய வசதியில்லாத வாசகர்கள் தங்களுடைய அருகாமை நூலகத்திலுள்ள கணினி மூலமாக  தெரிந்து கொள்ள முடியும்.மேலும், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்வதற்கு மற்றும் வேறொரு வாசகர் இரவலாக பெற்றுச் சென்றுள்ளாரா என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்து மாவட்ட மற்றும் கிளை நூலகங்களை இணையத்தின் வழியாக இணைப்பதால், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் தங்களுடைய நூலகத்தில் இல்லாதபட்சத்தில், வேறு நூலகங்களிலிருந்தும் தங்களுடைய நூலகர் மூலமாக வாசகர்கள் இரவலாக பெற்றுக் கொள்ள முடியும். கோகா மென்பொருளில் புதிதாக கொள்முதல் செய்த புத்தக விபரங்களை மிக எளிதாகப் பட்டியலிடலாம். உதாரணமாக, நாம் வாங்கியுள்ள புத்தகம் ஏற்கனவே வேறொரு நூலகத்தில் பட்டியலிடப்பட்டிருந்தால்  அப்புத்தக விபரங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்து  பட்டியலிட முடியும். தற்போது பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் மாநில அளவில் செய்யப்படுவதால் இந்தப் புத்தகங்கள் குறித்த விவரங்களை ஒரே இடத்திலிருந்து மிக எளிதாக பட்டியலிட முடியும்.

இம்மென்பொருள் கன்னிமாரா உள்ளிட்ட சில நூலகங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வசதி தமிழகத்திலுள்ள அனைத்துப் பொது நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.மேலும், இம்மென்பொருள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அனைத்து நூலகர்களுக்கும் பயிற்சியளிப்பதன் மூலமாக இம்மென்பொருளை பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும்.இம்மென்பொருளை பயன்படுத்தும் விதம், அதனுடைய செயல்பாடுகள் குறித்த விளக்கக் குறிப்பேடு இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.

இந்தியாவில் பயன்பாடு:

மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் இதனுடைய பயன்பாடு குறைந்த அளவே உள்ளது. அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலுள்ள நூலகங்களில் இம்மென்பொருளைப் பயன்படுத்த தயங்குகின்றன.  இம்மென்பொருளை இயக்குவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உதவி செய்வதற்கு யாரைத் தொடர்பு கொள்வது என்ற ஐயப்பாடு காரணமாக பயன்படுத்தத் தயங்குகின்றனர்.

இந்த அச்சத்தைப் போக்குவதற்காகவே உலகம் முழுவதும் இம்மென்பொருளைப் பயன்படுத்தும் ஏராளமான தன்னார்வலர்கள் உள்ளனர். கோகா மென்பொருள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஏராளமான தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட தன்னார்வலர்கள் இந்தியாவிலும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர் கோகா இ-மெயில் குழுமத்தில் 24 மணி நேரமும் நம்முடைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவர்கள் பதிலளிக்கின்றனர். கட்டற்ற மென்பொருளின் மிகப்பெரிய பலமே, அதனுடைய தன்னார்வலர்கள்தான். பல தன்னார்வலர்கள் இம்மென்பொருளை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். அவ்வாறு மேம்படுத்தப்படும் மென்பொருள் உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு கோகா பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாகவே அளிக்கின்றனர். இதனால், மேம்படுத்தப்பட்ட மென்பொருளை உடனடியாக நாம் பயன்படுத்த முடியும். .

மேலும், இம்மென்பொருளின் அனைத்துவிதமான, உள் மற்றும் வெளி கட்டமைப்புகள் அனைத்தையும் தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும்.  அதுவே கட்டற்ற மென்பொருளின் சிறப்பம்சமாகும். தனியுரிமை மென்பொருளில் இவ்வசதியைப் பெறுவதற்கு கூடுதலாக சில லட்சங்களை செலவிட வேண்டும். தனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்தும் போது அனைத்து செயல்பாட்டிற்கும் நாம் அதை உருவாக்கிய நிறுவனத்தையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கோகா போன்ற கட்டற்ற மென்பொருளில் அதுபோன்ற பிரச்சனை வரும்போது நாமே அதை சரிசெய்து கொள்ளவும் அல்லது தன்னார்வலர்களின் உதவியுடன் விரைவாக சரி செய்துகொள்ளவும் முடியும்.

மேலும், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய அறிவுசார் ஒருங்கிணைப்பு மையம்(National Knowledge Network) தற்போது இந்தியா முழுவதும் உள்ள மத்திய,மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இணைக்கும் விதமாக அதிவிரைவு இணைய இணைப்பு வசதிகளை செய்து வருகிறது. இவ்வசதியை அனைத்து  சமுதாய நூலகங்களுக்கும் ஏற்படுத்தி ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்போது நூலகப் பயன்பாடு அதிகரிக்கும்.  அது ஒரு அறிவார்ந்த தமிழ் சமூக உருவாக்கதிருக்கு வழிவகை செய்யும்.

தற்போது பெரும்பாலான மத்திய-மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழங்கள் தனியுரிமை மென்பொருளையே (Proprietary Software)பயன்படுத்துகின்றன. இதற்கான செலவு மிக அதிகம். மேலும், ஆண்டு பராமரிப்பு மற்றும் மேம்படுத்திக் கொள்வதற்கும் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. நூலகங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியிலிருந்துதான் இவற்றை செலவிட வேண்டியுள்ளது. இதனால் புத்தகம் கொள்முதல் செய்வதற்கு குறைந்த அளவே பணம் செலவிட வேண்டியுள்ளது. தற்போது தனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்தும் நூலகங்கள் தங்களுடைய தரவுதளத்தை மிக எளிதாக கோகா மென்பொருளுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

கோகா போன்ற கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவதால் மென்பொருளுக்கான செலவு குறைந்து, அந்தப் பணத்தை ஏராளமான புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கும், நூலக மேம்பாட்டுக்கும் செலவிட முடியும்.

கோகா மென்பொருள் தற்போது லைவ் சீடியாக (Live CD) இணையத்தில் உள்ளது. இதை தரவிறக்கம்  செய்து எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைப் பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம்.

இம்மென்பொருள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சீனம், பிரெஞ்சு, ஜெர்மன், டர்கீஷ் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழிலும் இம்முயற்சி தொடங்கப்பட வேண்டும். இது முழுமையடையும் போது தமிழில் முழுமையான நூலக மேலாண்மை மென்பொருள் நமக்கு இலவசமாக கிடைக்கும். இது அரசின் பொது நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.