குறும்படங்கள் சினிமா தமிழ் சினிமா

மறக்கப்பட்டவன் விட்ட குத்து … (நாக் அவுட் முதல் தொடர் 2)

பரபரப்பான நகரத்தின் சாலையொன்று. மனிதர்களும் வாகனங்களும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சாலையோரத்தில் ஒரு மூதாட்டி பயறு, கிழங்கு, மீன் போன்ற உணவுப்பொருட்களை விற்பனைக்காக கடைவிரிக்கிறாள். அவற்றின் மீது நாட்டம்கொண்டு ஈக்கள் அவற்றின்மீது மொய்த்துக்கிடக்கின்றன. அந்த கடைக்கு சற்று தள்ளி ஒரு மரத்தின் அருகே கிடத்தப்பட்டிருக்கிறது அந்த மனிதனின் சடலம். அதன் உடலெங்கும் ஈக்கள் மொய்த்துக்கிடக்கின்றன.

அய்யா… தர்மம் பண்ணுங்கய்யா… அனாதை பொணம்…தர்மம் பண்ணுங்கய்யா.. என ஒருவன் அந்த பிணத்தைக்காட்டி போவோர் வருவோரிடம் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறான். யாரோ பாக்சராம்… ரெண்டு நாளா இங்கதான் கிடக்குது…என்று சொல்லிவிட்டு, பொணம்..பொணம்னு என் வியாபாரத்தை ஏன் கெடுக்கிறாய்..போய்யா அப்பால… என அந்த கடைக்காரக் கிழவி அவனைத் திட்டுகிறாள். த… கிழப்பொணமே… கம்முனு கிட… என கிழவியை அதட்டிவிட்டு அவன் வசூலை மும்முரமாக தொடர்கிறான்.

அடுத்த காட்சியில் ஒரு குதிரைவண்டியில் அந்தப் பிணத்தை ஏற்றிக்கொண்டு செல்கிறான். அவனும் வண்டியோட்டியும் ஆளுக்கொரு பாட்டில் சாராயத்தை குடித்தபடியே வருகின் றனர். அந்தவண்டி சுடுகாட்டை அடைந்ததும் அங்கிருக்கும் வெட்டியானிடம் மீதி சாராயத் தையும், மிச்சமிருக்கும் காசையும், அந்த சடலத்தையும் ஒப்படைக்கின்றான். சாராயத்தை குடித்துவிட்டு அந்த சடலத்திற்கான சவக்குழியை “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்ற பாட்டை உளறியபடியே வெட்டுகிறான்.

சவக்குழிக்காக காத்திருக்கும் சடலத்தின் மீதிருந்து ஒரு பிளாஷ்பேக். சஞ்சீவி…பாக்ஸிங் கத்துக்கறியா… ஆமாம்ப்பா… சரி..குத்து… ஒன்..டூ..ஒன்..டூ என பாக்ஸிங் பயிற்சி எடுக்கிறான் சஞ்சீவி. தேசிய குத்துச்சண்டையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக சாம்பியன் பட்டத்தை வெல்கிறான். கோப்பைகளையும் பதக்கங்களையும் வென்று குவித்தவன்தான் இங்கே அனாதைப் பிணமாகக்கிடக்கிறான்.

சவக்குழிக்குள் சஞ்சீவியின் சடலத்தை தள்ள முயலும்போது அவனது உடலில் கட்டியிருக்கும் பட்டு வேட்டியின் சரிகை மின்னுகிறது. அதை பார்க்கும் வெட்டியான், வேட்டியை உருவிக்கொண்டு சடலத்தை குழிக்குள் தள்ளிவிடுகிறான். அப்போது பிணத்தின் இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண்கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் பதக்கத்தை கண்டு அதையும் உருவி எடுத்துக்கொள்கிறான். அது 1924 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை போட்டியில் வென்றபோது வழங்கப்பட்ட தங்கப்பதக்கம். சவக்குழியை மண்ணைத்தள்ளி மூடிவிட்டு அதன்மீது “உலகக் குத்துச்சண்டை வீரர் சஞ்சீவி இங்கு உறங்குகிறார் என ஒரு பலகையை நட்டுவைக்கிறான்.

காலங்கள் மாறுகின்றன. சஞ்சீவியை புதைத்த இடத்தில் ஆடுமாடுகளும் மனிதர்களும் சிறு நீர் கழிக்கின்றனர். அந்த இடம் புதர் மண்டி கவனிப்பாரற்றுக்கிடக்கிறது. ஆனால் அந்த இடத்திற்கு சற்று தள்ளி சஞ்சீவிக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்படுகிறது. அதை சுற்றுலா பயணிகள் வந்து பார்த்துச்செல்கின்றனர். மாபெரும் சாதனையாளரின் மணிமண்டபம் இது என சஞ்சீவியின் புகழை பயணிகளுக்கு ஒருவன் விளக்குகிறான். பாழடைந்து கிடக்கும் சஞ்சீவியின் உண்மையான சமாதியிலிருந்து குத்துச்சண்டைக்கான உறைகளை அணிந்த கையொன்று எழுந்து ஒரு குத்துவிடுகிறது. அந்த குத்து கொஞ்சம்கொஞ்சமாக பெரிதாகி, திரைமுழுவதும் ஆக்கிரமித்து பார்வையாளனின் முகத்தில் குத்துவது போல உறைந்து நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.

நாக் – அவுட் என்கிற வார்த்தை விளையாட்டுத்துறை சார்ந்த ஒரு சொல்லாகும். கிரிக்கெட்டில் நாக் அவுட் சுற்று என்றும் உண்டு. இதற்கு வெளியேற்றுவது என அர்த்தம். வென்றவன் தோற்றவனை வெளியேற்றுவது என பொருள்படும் இச்சொல், சஞ்சீவியின் வாழ்க்கையில் வேறு அர்த்தம் கொள்கிறது. மிகவும் வெற்றிகரமான உலகச்சாம்பியனான சஞ்சீவியே இந்த உலகிலிருந்து “ நாக் அவுட் “ செய்யப்படுவதுதான் இங்கு துயரமானது. தேசத்திற்காக பெருமைகளை சேர்த்துத்தந்த அவனுக்கு இந்த தேசம் என்ன தந்தது என்பதைத்தான் இந்த 16 நிமிடக்குறும்படம் கேள்வியாய் நம்முன் வைக்கிறது.

சஞ்சீவி என்பது இங்கு ஒரு உதாரணம்தான். இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீரர்களும், கலைஞர்களும், பல துறை சார்ந்த ஆளுமைகளும், தேசவிடுதலைக்காக போராடியவர்களும் இந்த சமூகத்தால் மறக்கடிக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் சஞ்சீவி, ஒரு சடலமாக ஈ மொய்த்துக்கிடந்து நமக்கு சொல்லிச்செல்கிறான்.

இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டர்களில் ஒருவரான பீ.லெனின் இயக்கிய இந்த குறும்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு முன்னர் தமிழில் குறும்பட, ஆவணப்பட முயற்சிகள் நடந்திருந்தபோதும் “ நாக்-அவுட் “ ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. தமிழில் குறும்பட முயற்சிகள் வெற்றிபெறமுடியும் என்கிற நம்பிக்கையை மாற்று சினிமா முயற்சியில் இருந்தவர்களிடையே இந்தப்படம் விதைத்தது. அந்தவகையில் இந்தப்படத்தை தமிழின் முதல் வெற்றிகரமான குறும்படம் எனக்கொண்டாடலாம்.

ஒரு பின் கதை : இந்தப்படத்தை வெளியிட்டபின்னர் நக்கீரன் இதழில் லெனின் சார் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் இந்தப்படத்தை உருவாக்கிவிட்டேன். அதை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என கூறியிருந்தார். அதைப்படித்த நானும் இன்னும் சில திருவண்ணாமலை தோழர்களும் அவரை ஏவிஎம் ஸ்டுடியோவில் சந்தித்து படத்தை நாங்கள் ஊரூராக கொண்டு போகிறோம் சார்… என உற்சாகமாக கூறினோம். அப்படியா…ஒரு நிமிடம் இருங்கள்… என சொன்ன லெனின் சார், உள்ளே சென்று அந்த படப்பெட்டியை கொண்டுவந்து எந்த தயக்கமும் இல்லாமல் எங்களிடம் தூக்கிக் கொடுத்தார். அதோடு திருவண்ணாமலையில் நடந்த முதல் திரையிடலிலும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தனது அடுத்தப்படத்திற்கான நிதியை முழுவதும் மக்களிட மிருந்து திரட்டியே படம் எடுக்கப்போகிறேன் என அறிவித்தார்…அப்போதே ஏராளமான நிதி குவிந்தது……………………………………………………………………………………………………………………………தொடரும்……………….

 

Related Posts