இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !…

தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் வேஷத்திற்கு பின்னணி பாடகனாக அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.

எந்த ஆர்மோனியப் பெட்டியை தொட்டாலே அடி விழும் என்று பயந்தானோ அந்த சிறுவன் வளர்ந்ததும், இந்த உலகின் தலை சிறந்த இசைக்கோர்வையாகிய, சிம்ஃபனி எனப்படுகிற பல்வேறு இசைக்கோர்வைகளை வெளிக் கொணர்ந்த லண்டன் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா உள்ளே நுழைகிறார். ஆளும், உடையும், சற்றே சுமாரான தோற்றமும், அங்கே வாத்தியக் கருவிகள் இசைப்போரை சற்றே ஏளனமாக பார்க்க வைக்க, ஒரு சிறிய புன்சிரிப்போடு கைகளை அசைக்கிறார், அசந்து போன வாத்தியக் கருவிகள் இசைப்போர் தங்கள் கையிலிருந்ததை அப்படியே கீழே வைத்து விட்டு எழுந்து நின்று கை தட்ட தொடங்குகிறார்கள். கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

இங்கிலாந்து மட்டுமே இசையின் பூர்வீகம், மேலை நாடுகளிலிருந்து மட்டுமே சிம்ஃபனி கம்போஸர்கள் சாத்தியம் என்று கர்வம் கொண்டிருந்தோருக்கு, தெற்கு ஆசியாவின், இந்தியாவில், தமிழ்நாட்டின் பண்ணைபுரத்திலிருந்து இசையால் பதில் சொல்லி திரும்புகிறார். இன்று வரை இசைத்துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசைத்தவர் தெற்காசியாவில் அவரைத் தவிர்த்து வேறு யாருமில்லை.

அந்த அண்ணன், பஸ் போகாத ஊருக்கு கூட பாட்ட கொண்டு போய் சேர்த்த எங்கள் பாவலர் வரதராஜன்.

அண்ணனின் அடிக்கு பயந்து ஆர்மோனித்தை தொட பயந்த சிறுவன்தான் இன்று இசைக் கருவிகளை தன் வசப்படுத்தி, இசையை மழையென பொழிய வைத்து, இசையால் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த ”எங்கள் ராஜா”.

ஆம் அவர் என்றும் எங்கள் ராஜாதான். இசையால் என்ன செய்து விட முடியும் என்று நினைத்திருந்தோருக்கு, இசையால் எல்லாம் செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியவர். காதலைச் சொல்ல, கோபத்தை வெளிப்படுத்த, அமைதியாய் இருக்க, ஆர்ப்பாட்டாமாய் ஆட, சோகப்பட, சொக்க வைக்க என அத்தனையும் இசையால் எமக்களித்தார் ராஜா.

ஓர் அதிகாலைப் பொழுது, ஆள் அரவமற்ற ஒரு சாலை, மெல்லிய பனி மூட்டம், லேசான குளிர், ஒரு பேருந்து பயணம் மற்றும் இளையராஜாவின் இசை என்று கற்பனை செய்து கொண்டு இதில் இளையராஜாவின் இசையை மட்டும் கழித்து விட்டுப் பாருங்கள் அது உயிரற்ற வெறும் பயணமாக மட்டுமே இருக்கும்.

1970களின் மத்தியில் இனி தமிழில் இசைக்க யாருமில்லை என்று தமிழகத்தின் ரசிகர்கள் அனைவரும் ஹிந்தி பாடல்களை ரசிக்க தொடங்கினார்கள், அந்த நேரத்தில் வெளி வந்தது அன்னக்கிளி திரைப்படைத்தின் இசைப் பேழை. அன்றைக்கு திரும்பிய ரசிகர்கள்தான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக வடக்குப் பக்கம் திரும்பி பார்க்க விடாமல் இசையால் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார் ராஜா.

சரி ஏதோ கொஞ்சம் கிராமத்து பக்கமென்பதால் கிராமியப் பாடல்கள் கை வரும் ஆனால் வெஸ்டர்ன் எல்லாம் தேறாதுப்பா என்றோருக்கு, ப்ரியாவில் பதிலளித்தார். வெஸ்டர்ன் கூட கத்துக்கலாம் கர்நாடக சங்கீதம்னா சும்மாவாப்பா என்றோருக்கு சிந்து பைரவியில் பதிலளித்தார்.

புதுப்புது முயற்சிகள் ஒவ்வொரு பாடலிலும் செய்து கொண்டேயிருப்பது இவரை இன்னும் புத்துயிர்ப்பாக வைத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு நிஜம், ஒரு நிழல் ஆனால் இரண்டும் சேர்ந்து பாட வேண்டும் எனும் போது, தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்திராத கால கட்டத்திலேயே “என் கண்மணி இளமாங்கனி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே…” என்றொரு பாடல் வழங்கினார். இதில் என் கண்மணி உனைப் பார்த்த்தும் சிரிக்கின்றதே என்பதை முதலில் பதிவு செய்து, பின் இளமாங்கணி சிரிக்கின்றதே என்பதை இரண்டாவதாக பதிவு செய்து இரண்டையும் ஒரே ட்ராக்கில் இணைக்கும் வேலையை செய்து முடித்தார்.

ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச), அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதில்லாமல் பாடல் அமைக்க முடியாது என்றிருந்ததை உடைத்து. சிந்து பைரவியில் “கலை வாணியே உனைத்தானே அழைத்தேன்” என்றொரு பாடலை ஆரோகணத்தில் மட்டுமே செய்து முடிக்க இசைஞானியின்றி வேறு யாரால் சாத்தியம்?!!.

மிகச்சவாலாக கருதப்பட்ட, வர்ணம் எனும் கர்நாடக இசையை மிக லாவகமாக ”நின்னுக்கோரி வர்ணம்” பாடலில் பயன்படுத்தி பாமரனையும் முணு முணுக்க வைத்தது, என இப்படி ஒன்றிரண்டு அல்ல ராஜாவின் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு புதுமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

அவர் முதலில் பாடிய பாடலான “வாடி என் கப்பக்கிழங்கே” பாடலை எருமை மாடு கத்துவது போல் இருக்கிறது என்று சொன்ன அன்றைய தமிழகத்தின் தலை சிறந்த பாடகருக்கு “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” என்று பாடலாலே பதிலளித்தவர்.

வெறும் பாடல்கள் மட்டுமே இசையென கருதிக் கொண்டிருப்போருக்கு, பின்னணி இசையிலும் இளையராஜா எனும் மாமேதை தன் முத்திரையை பதித்து வந்து கொண்டிருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நூறாவது நாள் சேஸிங்க் காட்சியில் உறைய வைக்கவும், மெளன ராகத்தின் காதல் காட்சிகளில் உருக வைக்கவும், வைதேகி காத்திருந்தாள் சோக காட்சிகளில் அழ வைக்கவும், கரகாட்டக்காரன் ”சொப்பனசுந்தரி கார யாரு வச்சிருந்தா?” காமெடியில் சிரிக்க வைக்கவும், இன்னும் வார்த்தைகளில் வெளிக்கொணர்ந்திட முடியாத எத்தனையோ உணர்வுகள் இவரின் கை அசைப்பிற்கு வாத்தியக்கருவிகளிலிருந்து வெளி வந்து, பல்வேறு படங்களுக்கான பின்னணி இசையை “முன்னணி இசையாக” மாற்றி காட்சிகளை நம் மனதில் ஒட்ட வைத்திருக்கிறது.

வேறோர் புகழ் பெற்ற வயலினிஸ்டை கொண்டு ”ஹே ராம்” படத்திற்கான பாடல்களை பதிவிட்டு, பாடல் காட்சிகளையும் ஒளிப்பதிவு செய்த பின் அந்த கூட்டணி முறிந்து போக, அந்த படத்திற்கான காட்சிகளை அப்படியே வைத்து புதிய இசையை அதனுடன் ஒன்ற வைத்தவர் ராஜா. மெட்டுக்கு பாட்டெழுதலாம், பாட்டிற்கு மெட்டமைக்கலாம், காட்சிகளுக்கு இசையமைத்த்து என்பது அப்பப்பா அபாரம். நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என்றொரு பாடலில், கமல் பியானோ வாசிப்பது போன்றொரு காட்சி க்ளோஸ் அப்-பில் காட்டப்படும். அதையாவது மாற்றி விடவா என கமல் கேட்க, எதற்கு தேவையில்லாத செலவு என அதன் அடுத்த கட்டைகளை பயன்படுத்தி இசையமைத்தாராம் ராஜா.

ஒரு கண் தெரியாத கதாநாயகி, கதாநாயகனிடம் வண்ணம் என்றால் எப்படி இருக்குமென்று கேட்க பின்னணியில் கோரஸ் ஒலிக்கத் தொடங்குகிறது “தான தம் தம் தான தம் தம் தான தம் தம் தென்றல் வந்து தீண்டும் போது” என்கிற பாடலும், அதன் பின்னணி இசைக்கோர்வைகளை விடவும் ஒரு சிறந்த பாடலை, பார்வையற்றவர்களை இசையால் உணர வைத்ததைப் போல உதாரணம் சொல்லி விட இயலுமா நம்மால்.

கொட்டாங்குச்சியின் டொக் டொக் சத்தமும், விரல்களின் சொடக்கு சத்தமும், ஜாக்கிங்க் செல்லும் ஷீ கால்களின் சத்தமும், காதிற்கினிய இசையாக மாற்ற ராஜாவால் மட்டுமே சாத்தியமில்லையா.

என்றேனும் தனித்து விடப்பட்ட நள்ளிரவு வேளையில், ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே தூங்கிப்போகலாம் என்று முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சியில் தோற்று பல இரவுகள் சிவராத்திரியாக மாறிப்போக வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் உறங்கச் செய்யவும், உறங்க விடாமல் செய்யவும் என்பது ராஜாவால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், உலகின் தலை சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் 9 வது இடம் பிடித்தவரும், இசைத் துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசையை இசைத்த ஒரே தெற்காசியாவை சேர்ந்தவரும் என இசையை வசப்படுத்திய ஆளுமையுமானவரும் என்றுமே இளையராஜா தான்.

இளையராஜா இன்றி இந்த உலகை கற்பனை செய்து பார்ப்பதே வண்ணங்களின்றி வெறுமையாக பார்ப்பது போல் உள்ளது.

… இந்த உலகின் மிக அழகான விஷயம் என்பது அமைதி. அடுத்து இசை. அதுவும் ரஜாவின் இசை.

Related Posts