பிற

சிறுவர் நூல்கள் – சில பரிந்துரைகள் 1

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக சிறுவர் நூல்களும் அதிகமாக வெளிவந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளும் நானும் வாசித்த நூல்களில் இருந்து சிலவற்றைப் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன்.

 1. மாயக்கண்ணாடி – உதயசங்கர் (வானம் பதிப்பகம்)
 2. பேய் பிசாசு இருக்கா? – உதயசங்கர் (வானம் பதிப்பகம்)
 3. டாம் மாமாவின் குடிசை – பி.ஏ.வாரியார், தமிழில் அம்பிகா நடராஜன் (புக்ஸ் ஃபார் சில்ட்ரன்)
 4. பெனி எனும் சிறுவன் – யூமா வாசுகி (புக்ஸ் ஃபார் சில்ட்ரன்)
 5. ஜிமாவின் கைபேசி – கொ.மா.கொ.இளங்கோ(புக்ஸ் ஃபார் சில்ட்ரன்)
 6. மாகடிகாரம் – விழியன் (புக்ஸ் ஃபார் சில்ட்ரன்)
 1. மாயக்கண்ணாடி:

நீ என்னவாகப் போகிறாய் என்று குழந்தைகளைக் கேட்டுப்பாருங்கள். பெரும்பாலான குழந்தைகள், ஆசிரியராக வேண்டுமென்றோ போலீசாக வேண்டுமென்று கூறுவார்கள். அதற்கு மிக முக்கியமான, இந்த சமூகத்தில் அதிக அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் இருவரைத்தான் குழந்தைகள் நினைக்கிறார்கள். உலகின் அனைவரும் சமமென்றும் அனைவருக்கும் இங்கு சமமாக வாழ உரிமை உண்டு என்று சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக, அவரவர்க்கு இயன்ற வகையில் அடுத்தவர் மீது ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்த முயல்கிறோம். அதனைப் பார்த்து வளர்கிர குழந்தைகள், தனக்கு ஏதோவொரு வகையில் என்றாவது அதிகாரம் கிடைக்காதா என்கிற எண்ணத்தைத் தான் வளத்துக்கொள்வார்கள். அதிகாரத்தின் மீதான ஆசையை குழந்தைகளின் மனத்தில் வளரவிடாமல் தடுக்கிற கருத்தை விதைக்கும் அற்புதமான கதைகளைக் கொண்ட நூல் தான் “மாயக்கண்ணாடி”. எல்லா கதைகளும் “ஒரு ஊரில் ஒரு இராஜா இருந்தாராம்” என்று துவங்கும் இராஜாக்களைப் பற்றிய கதைகள் என்றாலும், வலிந்து திணிக்காமல் குழந்தைகளின் ஆழ்மனதில் அதிகாரம் செலுத்துவது என்பதை அனைத்துக் கதைகளும் விதைத்துவிட்டுச் செல்லும் என்று உறுதியாகக் கூறமுடியும்.

 1. பேய் பிசாசு இருக்கா?

“உங்க கல்யாண போட்டோவில் நான் ஏன் இல்லை?” என்று கேள்விக்குப் பிறகு, பெற்றோரிடம் அதிகமாகக் கேட்கப்படும் கேள்வி இதுதான் – “பேய் பிசாசு இருக்கா?”

“ஆமாம் இருக்கு. நீ சொன்ன பேச்சைக் கேட்கலன்னா, அது உன்ன புடிச்சிகிட்டு போயிடும்” என்று சொல்லும் பெற்றோரும் இருக்கிறார்கள். அதேபோல, “அதெல்லாம் இல்ல, சுத்தப் பொய்” என்று சொல்லும் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆனால், நாம் எந்த பதிலைச் சொன்னாலும், இந்த சமூகம் அக்குழந்தைகளிடம் தொடர்ந்து பேய் குறித்த கதையாடல்களை பல்வேறு விதங்களில் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது. அதனால், பேய் பிசாசு இருக்கா இல்லையா என்பதற்கான அறிவியல்பூர்வமான உண்மைகளையும் விவரங்களையும் குழந்தைகளின் வயதுக்கேற்ப சொல்லித்தருவது தான் அவர்களின் பயத்தை உண்மையிலேயே போக்கவும், பகுத்தறிந்து எதையும் கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்கவும் உதவும். அந்த வகையில், பேய் பிசாசுகளை பற்றி இந்த சமூகத்தில் என்னென்ன கதைகளும் கருத்துகளும் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தையும் தர்க்க ரீதியாக அணுகி குழந்தைகளுக்கு புரிய வைக்கிறது இந்நூல்.

 1. டாம் மாமாவின் குடிசை:

குழந்தைகளுக்கு பேன்டசிக் கதைகளைச் சொல்லி அவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு இச்சூமூகத்தின் உண்மை வரலாற்றையும் நடப்புகளையும் கூட சொல்லித்தர வேண்டும். அதைச் செய்யத் தவறிட்டோமென்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னரும், சமூகப்பிரச்சனைகளை அலசி  அதன் சரி தவறுகளைக் கண்டறிவதில் திணருவார்கள். உதாரணத்திற்கு இந்தியாவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயராலே இங்கே நடத்தப்பட்ட ஆதிக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. சாதிய ஒடுக்குமுறையால் அடிமைகளாகவே பிறந்து, வாழ்க்கை முழுக்க அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாகவே இறந்துபோது பலநூறு கோடி மக்களின் துயரத்தை நாம் அடுத்தடுத்த சந்ததியினருக்கு சொல்லிக்கொடுக்காமலே விட்டுவிட்டோம். அதனால் தான், அவ்வாறு சாதிய ஒடுக்குமுறையினால் தவிக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு வழங்கப்படும் இடப்பங்கீட்டைக் கூட எதிர்க்கிற மனநிலை இன்றைய இளைஞர்கள் பலரிடமும் காணப்படுகிறது. “தீண்டாமை ஒரு பாவச்செயல்” என்று பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் எழுதியிருக்கிறோம், ஆனால் அந்த தீண்டாமை என்றால் என்ன, அது எவ்வாறு/ஏன்/யாருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது/படுகிறது என்று ஒருபோதும் நாம் சொல்லித்தருவதே இல்லை. அவற்றை சரியான வகையிலும் அளவிலும் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவதன் மூலமே, அவர்களை சாதி மறுப்பாளர்களாகவும் சாதி ஒழிப்பாளர்களாகவும் வளர்த்தெடுக்க முடியும். இல்லையென்றால் வெறுமனே சாதி மறைப்பாளர்களாகத்தான் வளர்வார்கள்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதை உலகுக்கு பெரியளவில் கொண்டுசேர்த்த நூல் தான் “அன்கிள் டாம்ஸ் கேபின்”. வெள்ளையின மக்களின் வீடுகளில் பரம்பரை பரம்பரையாக அவர்களின் சொத்தின் ஒரு பகுதியாகவே இருந்துவந்த கருப்பின மக்களின் துயரத்தை வெள்ளையின மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களையும் இனப்பாகுபாட்டிற்கு எதிரானவர்களாகவும் மாற்றிய நூல் அது.  குழந்தைகளுக்கு ஏற்றவாறு சுருக்கப்பட்ட வடிவம் தான் “டாம் மாமாவின் குடிசை”. நிறத்தின் பேராலோ, அல்லது வேறு எந்த மாறுபாட்டின் காரணத்தினாலோ நமக்கு அருகிலேயே வாழும் சகமனிதர்களை அடிக்கியாளக்கூடாது என்பதை எளிமையாக கதைவடிவில் சுவாரசியம் குறையாமல் பேசுகிறது. மொழிபெயர்ப்பு நூலா இது என்று நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் அம்பிகா நடராஜன் அவர்கள்.

 1. பெனி எனும் சிறுவன்:

குழந்தைகளுடன் போதுமான அளவிற்கான நேரத்தை செலவிட முடியாமல் போனால், அக்குழந்தைகள் அந்தந்த வயதில் பெற வேண்டிய முதிர்ச்சியினையும் அறிவையும் பெறமுடியாமல் போகலாம். அளவுக்கதிகமாக அடம்பிடிப்பது, சமூகத்தோடு ஒன்றாமல் தனிமனிதர்களாகவே வாழவிரும்புவதும், சுயநல எண்ணங்களை வளர்துக்கொள்வது என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்பதும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் மிகமிக முக்கியம். அதிகமாக செல்லம் கொடுக்கப்பட்டும், பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப்படாமலும் வளர்கிற பெனி என்கிற சிறுவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இக்கதை. இது “Beni walks on his own” என்கிற அல்பேனிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்நூலையும் இதுபோன்ற பல்வேறு மிகமுக்கியமான நூல்களையும் மொழிபெயர்த்த யூமா வாசுகி அவர்களுக்கு தமிழ்ச்சமூகம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். பசங்க ஒன்று இரண்டு எனப் படமெடுத்த இயக்குநர் பாண்டிராஜ் இக்கதையைப் படித்தாரென்றால், பசங்க-3 என்று இக்கதையை வைத்து படமெடுக்காமல் விடமாட்டார்.

வீட்டில் ஒரே குழந்தை, வேலைக்குப் போகும் பெற்றோர், நகர வாழ்க்கை என வாழும் பெனி, பள்ளி விடுமுறைக்கு தன்னுடைய மாமாவுடன் கிராமத்திற்கு போகிறான். அங்கு தான் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டிப் போடப்படுகிறது. தமிழக கிராமியப் படங்களில் வருவதுபோல சாதிப்பெருமை பேசிக்கொண்டோ அல்லது அப்பாவி மனிதர்கள் வாழும் பகுதிகளாகவோ இந்நாவலில் வரும் கிராமம் இருக்காது. அதற்கு மாறாக ஒரு பொதுவுடமை கிராமமாகத் திகழும். கிராமத்தின் அனைத்து நிலங்களையும் அனைவரும் பொதுச்சொத்தாகக் கருதி, அதில் அனைவரும் உழைப்பைச் செலுத்தி, அதில் வரும் வருமானத்தை சமமாகப் பங்கிட்டு வாழும் கிராமம் அது. தன்னுடைய விடுமுறைக் காலத்தில் அக்கிராமத்தில் அவன் கற்றுக்கொள்ளும் அனைத்தும் அவனுக்கு மிகப்பெரிய பாடங்களாக அமைகின்றன. இந்நூலை பெற்றோராகிய நீங்களும் உங்களுடைய குழந்தைகளுடன் இணைந்து படித்துப்பாருங்கள். பின்னர் இந்த உலகை அழகாகப் பார்க்கத்தோன்றும், சகமனிதர்களின் மீது அன்புசெலுத்துத் தோன்றும், நம்மால் இயன்ற மாற்றங்களை செய்யத்தோன்றும்.

 1. ஜிமாவின் கைபேசி:

“இப்ப உள்ள குழந்தைங்க எல்லாம் எவ்வளவு புத்திசாலியா இருக்காங்க… பயங்கர ஆச்சரியமா இருக்கு… நானெல்லாம் கல்லூரி படிக்கும்போதுகூட ஃபோனை பார்த்ததில்ல. ஆனா என் பொண்ணைப் பாருங்க, என்னோட ஸ்மார்ட் போனில் என்னமா பூந்து விளையாடுறா. என்னென்னவோ ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் பண்றா. புதுபுதுசா கேம்ஸ் எல்லாம் விளையாடுறா. எனக்கு கூட அதெல்லாம் தெரியாது”

இப்படிப் பெருமை பேசும் பெற்றோரை சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது. இது உண்மைதானா? ஆன்டிராய்ட், டேபிலும் விளையாடும் குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று நாம் பெருமைகொள்ளமுடியுமா?

இன்றைக்கு நம்முடைய குழந்தைகளின் கைகளில் தவழும் ஸ்மார்ட் போன், டேப்லட் போன்ற பொருட்கள் அனைத்தும் அவர்களை பயனர்களாக மாற்றியிருக்கின்றவே தவிர, படைப்பாற்றல் கொண்டவர்களாக உருவாக்கவில்லை. குழந்தைகளின் கற்பனைத்திறனை சிறகடித்துப் பறக்கவிடுவதற்கு பதிலாக, ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன. குழந்தைகளால் மிகப்பெரிய சந்தையொன்று இங்கே இருக்கிறது. அதனால் அவர்களைப் பயனர்களாக மட்டுமே வைத்திருக்கும் தேவை வியாபார உலகிற்கு இருக்கிறது. அப்படியான வலையில் நாமும் சிக்கிக்கொண்டு அதனைநினைத்து பெருமிதப்படும் வரிகள் தான் முதல் பத்தியில் நீங்கள் படித்தவை….

இந்நூலின் கதையில், ஜிமா என்கிற சிறுமிக்கு அற்புதமான செல்போன் ஒன்று கிடைக்கிறது. அந்த போன் அவளுக்கு பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதுடன், அச்சிறுமியையும் அவளுடைய தோழிகளையும் புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடிக்கவும் உதவுகிறது. ஃபேன்டசியாகத்துவங்கினாலும் இறுதியில் அந்த செல்போன் இல்லாமலேயே அக்குழந்தைகளை படைப்பாளிகளாக மாற்றுவதுபோல கதை பயனிக்கிறது. இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் (அல்லது எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறவையும்) குழந்தைகளுக்கு நிச்சயமாக கண்கள் விரிக்கும் ஆச்சர்யங்களாக இருக்கும்.

 1. மாகடிகாரம்:

எழுத்தாளர் விழியன் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. பொதுவாக நண்பர்களுக்கு வீட்டுக்குச் சென்றால், சாக்லேட் பழங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு போகாமல், அவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறுவர் நூல்களை வாங்கிச்செல்வது வழக்கம். அதில் பெரும்பாலும் விழியனின் பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை, டாலும் ழீயும், கிச்சா பச்சா, வளையல்கள் அடித்த லூட்டி போன்ற நூல்கள் தான் இருக்கும். பேன்டசியையும் நடப்புலகத்தையும் இணைத்துக் கதை சொல்வதில் விழியன் வல்லவர்.

மாகடிகாரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தால் தான் எவ்விதப் பிரச்சனையுமின்றி இவ்வுலகமும் இயங்கும் என்றும், அக்கடிகாரம் நின்றுவிட்டால் உலகம் அழிவைச் சந்திக்க நேரிடலாம் என்கிற நம்பிக்கையுடன் கதை துவங்குகிறது. தீமன் என்கிற சிறுவன் அக்கடிகாரத்தை நிற்கவிடாமல் காப்பாற்றுவானா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. நம்முடைய நம்பிக்கைகளையும் மூடநம்பிக்கைகளையும் சுயபரிசோதனை செய்யவைத்துவிடுகிறது இந்நூல்.

(தொடரும்…)

-இ.பா.சிந்தன்

 

Related Posts