அறிவியல்

கோடையில் ஏன் தாகமெடுக்கிறது?

நண்பர்களே..! நமக்கு ஏன் மழைக் காலத்தை விட கோடையில் அதிகம் தாகம் எடுக்கிறது..?

ஏன் அதிக நீர் தேவைப்படுகிறது.. என்பது  தெரியுமா?

வியர்ப்பதால்.. என சொல்லுவீர்கள்..!

ஆனால் எல்லோருக்கும் வியர்க்கிறதா? பொதுவாகதாகத் இதைத் தூண்டுவதின் முதல் காரணி யார் என்று அறிந்தால் நீங்கள்  அசந்துவிடுவீர்கள். வேறு யார்? சிறுநீரகம்தான்.. என்று சொன்னால் நீங்கள் நம்பவும் மாட்டீர்கள்..!

இது  என்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள் என்று எண்ணுகிறீர்களா..? உங்களின் நீர் மேலாண்மையை செய்வது சிறுநீரகம்தான் என்பது 916 தங்கம் போல உண்மையப்பா.!

நீரும் உடலும்:

பொதுவாக நம் உடலிலிருந்து சிறுநீர், வியர்வை, கண்ணீர் மற்றும் மலத்தின் வழியாக நீரும், உப்புக்களும் வெளியேறுகின்றன. கோடைகாலத்தில் சிலருக்கு  வியர்க்காமலேயே கூட உடலிலிருந்து நீர் ஆவியாகி விடுகிறது. கோடையின் போதும், நீங்கள் குறைவாக நீர் அருந்திய போதும், குறைவான மற்றும் அடர்த்தியான சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேற்றப்படும் நேர இடைவெளியும் அதிகம். இது ஏன் ?

நமது..நீர்.. மேலாளர்..!

சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு. இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் (Electrolite) வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது நம் உடலில் உள்ள கை முஷ்டி அளவே உள்ள சிறுநீரகம். உங்கள் உடம்பின் நீர்மேலாண்மையாளர் /மேலாளர் சிறுநீரகம் மட்டும்தான். இதுமட்டும் கொஞ்சம் தகராறு செய்தால்போதும். அவ்வளவுதான்.  நமக்கெல்லாம் படாரோதனைதாம்பா. ஒண்ணுமில்லே.உடம்பிலே உயிர் மட்டும்தங்காது. அவ்வளவுதான்.

குட்டியூண்டு..உறுப்பின்.. மகத்தான பணி:

Kidney Structureசிறுநீரகம், நம்மார்புக் கூட்டில் வயிற்றுக்குக் கீழே கல்லீரல், மண்ணீரல், கணையத்துக்கு அருகில், முதுகெலும்பை ஒட்டி அவரை விதை அமைப்பில்  ஜோடியாக, ஒவ்வொருவருக்கும் அவரது கை முஷ்டியின் அளவுக்கு கனகம்பீரமாய் அமர்ந்துள்ளது.(இதயத்தின் அளவும் அதேதான்). பொதுவாக அனைத்து பாலூட்டிகளிலும் சிறுநீரகம்  கரும் சிவப்பு நிறத்துடன்தான் இருக்கும். இது நம் உடலின் எடையில் ௦.5% தான். ஆனால் இதயக் கிணற்றிலிருந்து இறைக்கும் இரத்தத்தில் 5ல் ஒருபங்கு சிறுநீரகத்துக்கே உடனடியாக வந்து சேருகிறது. நம் சிறுநீரகம் என்பது 10 செ.மீ நீளம், 6 செ.மீ அகலம், 4 செ.மீ கனமும் உள்ள ஒரு சதைக் கொத்து. இதில் இரத்தமும் நரம்பும் மட்டுமே உள்ளன. இதில் எலும்பின் வாசனையே கிடையாது. இதன் எடை 100. கிராம். நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும் கூட, நாம்உயிர்வாழ ஒரே ஒரு சீறுநீரகம் மட்டும் கூட போதும். மற்றது ஸ்பேர்தான். ஆனால் இது ஸ்டிரைக் செய்தால், அவ்வளவுதான், நாம் அம்பேல்தான்!. சித்திரகுப்தன் கணக்கை முடித்துவிடுவான் என்றுசொல்லலாம்.

(1. Renal pyramid 2. Interlobular artery 3. Renal artery 4. Renal vein 5. Renal hilum 6. Renal pelvis 7. Ureter 8. Minor calyx 9. Renal capsule 10. Inferior renal capsule 11. Superior renal capsule 12. Interlobular vein 13. Nephron 14. Minor calyx 15. Major calyx 16. Renal papilla 17. Renal column)

நெப்ரான்களின்.. நீளம்.. சென்னை டு வாலாஜா பேட்டையப்பா..!

ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு உள்ளேயும், சுமார்  1,00,000-1,250,000 நெப்ரான்கள் உள்ளன. இவைகள் தான் சிறுநீர் வடிகட்டிகள். ஆனால் ஒவ்வொரு நெப்ரானும் தனித்தனியாய் இயங்கி சிறுநீரை வடிகட்டுகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைத்து செயல்படாது. இவை ஒவ்வொன்றின் உள்ளேயும்  ஏராளமான  இரத்த தந்துகி முடிச்சுக்கள் உள்ளன. ஒரு நெப்ரானின் அளவு 50 மி.மீ மட்டுமே..! இவைகளின் மொத்த பரப்பு சுமார் 5- 8 ச.மீ. நம்உடலின்மொத்த பரப்பைவிட 4-5 மடங்குஅதிகம். ஆனால் இந்த நெப்ரான்களில் உள்ள நூல்  போன்ற குழாய்களை ஒன்றாக இணைத்து  நீட்டினால் அதன் நீளம் எவ்வளவு தெரியுமா? அடேயப்பா.. அவற்றின் மொத்த நீளம் எனபது சுமார் 70-100 கி.மீ தூரம் வரை போகும். அதாம்ப்பா.. நம்ம சென்னையிலிருந்து காஞ்சீபுரம் /வாலாஜா பேட்டை வரை என்று வைத்து கொள்ளுங்களேன். என்னாண்ணே சும்மா டுமீல் விடுறீங்க என்றுசொல்கிறீர்களா .. அப்படி ஏதும் இல்லையப்பா .. அதுதான் உண்மை.

உடலின் கழிவு நீக்கி.. சல்லடை..!

Nephronநெப்ரான் (Nephron) என்பதுஒரு கிரேக்க வார்த்தை. இதுதான் சிறுநீரகத்தின் அடிப்படை அலகு. இதற்குள் குளோமமெருல்லஸ் (Glomerulus) என்ற இரத்த  தந்துகிகளின் முடிச்சுகள் உள்ளன. சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத்திலிருந்து உடலின் கழிவுப் பொருள், உப்பு, குளுகோஸ், அமினோ அமிலம், கொழுப்பு, நீர், ஹார்மோன்கள், நச்சுப் பொருட்கள் மற்றும் நீங்கள் உட்கொண்ட மருந்துகளின் மிச்சசொச்சங்கள் போன்ற அனைத்தையும் வடிகட்டிப் பிரித்து எடுப்பதுதான் சிறுநீரகத்தின் தலையாய பணி. இதன் வேலையே. இதுதான். (1. Glomerulus, 2. Efferent arteriole, 3. Bowman’s capsule, 4. Proximal convoluted tubule, 5. Cortical collecting duct, 6. Distal convoluted tubule, 7. Loop of Henle, 8. Duct of Bellini, 9. Peritubular capillaries, 10. Arcuate vein, 11. Arcuate artery, 12. Afferent arteriole, 13. Juxtaglomerular apparatus.)

பகாசுர.. நீர்.. இறைப்பான்.!

சிறுநீரகத்தின் செயல்பாடு என்பது மிகவும் ஆச்சரியமானது. இங்கே ஒரு நிடத்துக்கு சுமார் 1 லிட்டர் இரத்தம் வருகிறது. 5  நிமிடத்துக்குள் உடலின் அவ்வளவு இரத்தமும்.. அதான்ப்பா உடலின் ஒட்டுமொத்த 5-6 லிட்டர் இரத்தமும் இங்கே வந்து வடிகட்டப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு இதயத்திற்கு மீண்டும்  அனுப்பப்படுகிறது. மிக மிக ஆச்சரியமான விஷயம்தானே..! ஒரு நாளில் மட்டும் இந்த நெப்ரான்கள் சுமார் 180 லிட்டர் திரவத்தை உடலிலிருந்து வடிகட்டுகின்றன. ஆனால் சிறுநீராக வருவது சுமார் 1 -1.5 லிட்டர் மட்டுமே. மீதமுள்ள 178.5 லிட்டர் நீரும்/திரவமும் மீண்டும் உடலுக்குள் உட்கிரக்கிக்கப்படுகிறது. அதாவது 99% நீர் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் உட்கிரகிக்கப்படுகின்றன. ஒரு நிமிடத்தில் 3 மி.லி சிறுநீர் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.

  • ஒரு 24 மணிநேரத்தில் உங்களின் சிறுநீரகம் செய்யும் பணி என்பது மகத்தானது..
  • 1,300 கிராம் உப்பை (NaCl) வெளியேற்றுகிறது;
  • 400 கிராம் சோடியம் பை கார்பனேட்டை (NaHCO3) வெளியேற்றுகிறது;
  • பின்னர் 180 கிராம் குளுகோசு‍ம் வெளியேற்றப்படுகிறது.
  • ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் வரும் 180 லிட்டர் திரவத்தில் இவை அனைத்தும் அடங்கியுள்ளன.

நீ.. என்னென்ன.. செய்தாலும்.. உயிர்.. காக்கவே..!

சிறுநீரகம் 24 மணிநேரத்தில் 1,300௦௦ கிராம்  சோடியம் குளோரைடு என்ற சாதாரண உப்பு, 400 கிராம்  சோடியம் பை கார்பனேட், 180 கிராம் குளுகோஸ் மற்றும் பிறவேதிப் பொருள்களை வடிகட்டுகிறது. வடிகட்டும் திரவத்திலுள்ள சோடியத்தை எஞ்சியோடென்சின் II என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இங்கு வடிகட்டும் திரவத்திலிருந்து 97% சோடியம் நீக்கப்படுகிறது. கடைசியில் உள்ள 3% தான் உடலின் நீர்த்தேவையை சமன்படுத்துகிறது. நெப்ரானின் சேய்மைக் குழாயிலுள்ள மற்றும் சேகரிக்கும் குழாயிலுள்ள சோடியத்தின் அளவு என்பது ஆல்டோஸ்டீரான் (Aldosterone) என்ற ஹார்மோனால் சரிசெய்யப்படுகிறது. இந்த 3% உப்பின் அளவு  மட்டுமே உங்களின் இரத்த அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. சிறுநீரிலுள்ள உப்பு இரத்தத்திலுள்ள உப்பைவிட 4 மடங்கு அதிகம். இரத்த pH  7.3 – 7.8, சிறுநீரின் pH அளவு 4 .5 -6 .5 நமக்கு ஒரு நாளைய உப்புத் தேவை என்பது 3 கி மட்டுமே. ஆனால் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதும் இல்லை, அதனை சட்டை செய்வதும் இல்லை. நம் இஷ்டப்படி உப்பை அள்ளி  உணவில் போட்டே சாப்பிடுகிறோம். துளி உப்பு குறைந்தால் நமக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே. சிலர் வீட்டில் உப்பு குறைந்தால், தட்டுபறக்கும். கோபத்தின் உக்கிரத்தில். பொதுவாக நாம் அனைவரும் தேவைக்கு அதிகமாகவே உப்பு எடுத்துக் கொள்கிறோம். அதுவும் இந்தியர்கள் கேட்கவே வேண்டாம். ஓவ்வொரு இந்தியரும் தினம்  10 -12 கிராம் உப்பை  முழுங்குகிறோம். உடலின் செல்களுக்குள் உப்பு, அயனிகளின் இறைப்பானாக செயல்படுகிறது.  உப்பு அதிகப்படியான நீரை வெளியேற்றும் அற்புத உபசரிப்பாளனாகவும், நீர்சமனம் சரியாக இருக்கவும் உப்பே பணி செய்கிறது. சோடியம்/பொட்டாசியம் இறைப்பான் என்பதுஉடலின் உயிர்  ஆதாரத்தில் ஒன்றாகும். உடலிலிருந்து 2 பொட்டாசியம் மூலக்கூறுகள் உள்ளே செலுத்தப்பட்டால் 3 சோடியம் மூலக்கூறுகள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது இயற்கை விதி. இது நம் உடலின் முடிவற்ற சுழற்சி ஆகும்.

Related Posts