இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காவியத்தலைவன் – நாடகக்கலையின் வேர்களை நோக்கிய பயணம் !

– ஞானபாரதி

“நடனம்,இசை, நாடகம், பட்டி மன்றம், சினிமா என எல்லா கலை வடிவங்களும் கலைத் தாயின் பிள்ளைகள். ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் ஒருவரை ஒருவர் மணந்தால் (incest) அவர்களின் பிள்ளைகள் ஊனமாகத்தான் பிறப்பார்கள். அப்படி இயல், இசை நாடகமும் இங்கே சினிமாவால் ஊனமாக்கப்படுகிறது ” என்றார் கமல் ஹாசன். அப்படி எல்லா கலை வடிவத்திலும் சினிமா என்னும் கலையை புகுத்தி அனைத்து கலைகளும் ஊனமாக்கப் பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாடகம் என்னும் மூத்த கலையை, நாடகக் கலைஞர்களின் நுட்பமான உணர்வுகளை , உயிரோடு நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் வசந்தபாலன். இன்று சவலைப் பிள்ளையாய் கிடக்கும் இந்த கலையைப் பற்றி அறியத் தவறிய கலையின் வேர்களை பற்றி நமக்கு நினைவூட்டிய வசந்த பாலனுக்கு நன்றிகள்.

சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார்.

சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாக நினைத்துப் பொறாமை கொள்கிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தை ராஜாபார்ட்டாக உயர்த்துகிறார் நாசர். இதனால் ப்ரித்விராஜின் பொறாமை அதிகரிக்கிறது. ஜமீன்தாரின் மகளைக் காதலிப்பதால் கெட்ட பெயர் எடுக்கும் சித்தார்த்தை நாசர் தண்டிக்கிறார். நாசரின் மறைவுக்குப் பிறகு ப்ரித்விராஜ் சித்தார்த்தை விரட்டி அடிக்கிறார்.

சித்தார்த் வெளியேற்றப்பட்ட பிறகு ப்ரித்வியால் தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிந்ததா? வெளியேற்றப்பட்ட சித்தார்த் என்ன ஆனார்? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா? வேதிகா யாரைக் காதலிக்கிறார்? இருவரில் யார் காவியத் தலைவன் என்பதுதான் மீதிக்கதை.

கதைக் களம் 1940 க்கு முன்பு அமைக்கப் பட்டதால் நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த கிட்டப்பாவையும் கேபி சுந்தராம்பாளையும் ( இருவரும் நாடகங்களில் நடித்துக் கொண்டுருக்கும்போதே 1927 ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். கிட்டப்பா 1933 ல் மரணம் அடைந்த பின் சுந்தராம்பாள் தனியாகவே நடிப்பைத் தொடர்ந்தார்) இந்த கதாப் பாத்திரங்கள் நினைவு படுத்துகின்றன.

ஒரு கலைஞனின் அகந்தை, பொறாமை, அங்கீகாரத்திற்கான ஏக்கம், கோவம், இயலாமை, காழ்ப்புணர்ச்சி, ஆர்வம், பெருமிதம், பெருந்தன்மை என உணர்ச்சி குவியலை “கோமதி’யும் ‘காளி’யும் மாறி மாறி நமக்கு காட்டியிருக்கிரார்கள்.

1940 க்கு முந்தைய காலத்தை ஒட்டிய கதையாக இருந்தாலும், ரஹ்மானின் இசை 1970 காலத்திற்கான இசையாகவே கேட்கிறது. பயன்படுத்திய இசை கருவிகளும் அ ப்படித்தான். பத்தாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட கூத்துக் கலை ஹார்மோனியம், தோலக் , ஜால்ரா போன்ற எளிய இசைக் கருவிகளைக் கொண்டுதான் அத்தனை ஆண்டுகள் நடந்தேறியது. ஹார்மோனியமும் தோலக்கும் கூத்துகலையின் ஒரு குறியீடாகவே இருந்தது. இந்த இரண்டு வாத்தியத்தை கண்ணில் காட்டாமலேயே நாடகத்தை பற்றிய படம் முழுமை பெறாமல் இருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் அவசர கதியில் உள்ள இந்த நூற்றாண்டின் பார்வையாளர்களை அமரவைக்க இதை இப்படிதான் செய்ய வேண்டியிருக்கிறது எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை முன்னிலைப் படுத்தி காட்சியமைப்புகள், நாடகத்தின் பரிணாம வளர்ச்சி, காலத்திற்கேற்ப கலைகளை மாற்ற வேண்டிய தேவை, நாடகக் கலையின் வீழ்ச்சி, அதன் குறியீடாக மனிதர்களின் வீழ்ச்சி என நுட்பமான பல விஷயங்கள் படத்தின் திரைக்கதையில் பலம் சேர்க்கிறது. பாரம்பரியத்தில் புதுமையை சேர்க்கலாமா ? வேண்டாமா ? என்கிற வாதத்தை கோமதி மற்றும் காளி மூலம் அவிழ்த்து விட்டு அதற்கான முடிவை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார் இயக்குனர். ஆங்காங்கே வரும் தேவையில்லாத கற்பனைகள், பிரம்மாண்ட செட் காட்சி அமைப்புகள் கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. நாடக வரலாற்றை பற்று படம் எடுத்தாலும் அதில் சினிமாத் தனம் தேவைப் படத்தானே செய்கிறது?!. நாடக நடிப்பின் ஆழத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நடிப்பை பற்றி வசனங்களில் வரும் வீரியம் ஏனோ காட்சி அமைப்புகளில் தொலைந்த மாதிரி இருக்கிறது. அத்தனை ஆண்டுகளாய் புராண நாடகம் போட்டுகொண்டிருந்த காளிக்கு, திடீரென சிறையில் யாரோ சுதேசி நாடகத்தை போடச் சொன்னதும் உடனே சுதந்திர தாகம் வருவது எடிட்டிங் கோளாறா அல்லது திரைக்கதையில் பிழையா என்று தெரியவில்லை.

“ரஹ்மான்” மற்றும் “ஜெய மோகன்” ஆகியோரை பிராண்டுகளாக வணிக நோக்கத்தில் பயன்படுத்தியிருக்கிறார் வசந்த பாலன். அதே அளவு பிராண்டு வேல்யூ உள்ள மற்றும் நாடகத் துறையிலேயே இருந்த இளைய ராஜாவை, வசந்த பாலன் ஏன் தேர்வு செய்ய வில்லை? நாடகத் துறையில் கொஞ்சமும் பரீட்சயம் இல்லாத ஜெய மோகனை விட, நாடகத் துறையில் அனுபவம் உள்ள வேறு யாராவது வசனம் எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் பொறுத்தமாகவே இருந்திருக்கும்.

முன்பே சொன்ன மாதிரி நாடக வரலாற்றை வசந்த பாலனே எடுத்தாலும் அதில் சினிமாத்தனம், வணிகம், டூயட் போன்றவைகள் அவசியமாகி விட்டது காலத்தின் சோதனை .

நாடகக் கலையின் வேர்களை நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தில் வசந்த பாலனின் “காவியத் தலைவன்” முதல் அடி. இந்த பயணம் இன்னும் தொடர்ந்தால் பத்தாயிரம் ஆண்டுகள் தொன்மையுடைய நாடகக் கலை பற்றிய வரலாற்றை இந்தத் தமிழ் சமூகம் தெரிந்து கொள்ளும். சின்ன சின்ன குறைகளைத் தாண்டி “காவியத்தலைவன்” நம்மை ரசிக்கவே வைக்கிறது. படம் எடுக்க தேர்வு செய்த கதைக்களம், நடிகர்கள், நாடகக் கலை மீதுள்ள அக்கறை, கலைஞனின் உண்மையான உணர்ச்சிகளைக் காட்டிய புரிதல் – என வசந்த பாலனின் இந்த முயற்சி நிச்சயமாக பாராட்டுகளுக்கு உரியது. நாடகக் கலையை சினிமாவின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் வசந்த பாலன் வெற்றி கண்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள் வசந்த பாலன்.! எங்கள் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய நாடக உலகை கண் முன் நிறுத்தியதற்கு நன்றிகள் பல.

Related Posts