அரசியல் வரலாறு

காஷ்மீர் – வரலாறும், வாழ்க்கையும்…

காஷ்மீர் பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் பிரதேசம். கலவரம், போராட்டம், வன்முறை, அடக்குமுறை, தீவிரவாதம் என பல்வேறு பிரச்சனைகளால் அது பூலோக நரகமாக மாறியது எவ்வாறு? அங்கு நிரந்தரப்பதட்டம் நிலவ காரணம் என்ன?ஏன் அதற்கு மட்டும் விசேஷ அந்தஸ்து ?

காஷ்மீர் இந்தியப்பகுதி என இந்தியாவும், பாகிஸ்தானுக்கு சொந்தம் என அந்நாடும் கூறி வருவதை அடிக்கடி நாம் ஊடகங்களில் காண்கிறோம்.

“எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாம் எங்களுக்கு வேண்டியதெல்லாம் பரிபூரண சுதந்திரம்,நிம்மதியான வாழ்க்கை,நிலையான அமைதி மட்டும் தான்”

என்று கதறும் காஷ்மீர் மக்களின் குரலை மட்டும் எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை என்பது தான் வேதனை. உண்மை தான் இவர்களின் ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை .

அந்நியசக்திகள் ஊடுருவல் என்று அடிக்கடி செய்திகளில் படிக்கிறோம், யார் அந்நியர்கள் இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீரில் இந்திய பாகிஸ்தானிய எல்லையை பிரிக்கும் கோட்டிற்கு வெளியே உள்ளவர்கள் அந்நியர்கள், பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்திய பகுதியில் உள்ளவர்கள் அந்நியர்கள். ஆனால் காஷ்மீர் மக்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் இருவருமே அந்நியர்கள் தான்.

இந்த பிரச்சனையை இந்திய அரசு கௌரவம் என்கிற போர்வையில் ஒரு வல்லாதிக்க மனோபாவத்துடன் அணுகுகிறது, பாகிஸ்தான் மதம் என்கிற போர்வையில் ஒரு குறுகிய சூழ்ச்சி அரசியல் மனோபாவத்துடன் அணுகுகிறது. இந்த இரு அரசுகளுக்குமே காஷ்மீர் மக்களின் வாழ்க்கை, அமைதி, நிம்மதி எல்லாம் பற்றி சிறிதும் கவலைகள் இன்றி போகிறது.65 ஆண்டுகளாக தீர்க்க முடியாத இந்த பிரச்சனையின் ஆணிவேரை சிறிது வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ள முயல்வோம்.

இந்திய விடுதலைக்கு முந்தைய காஷ்மீரின் வரலாறு:

கி .பி 1586 வாக்கில் அக்பரின் முகலாய பேரரசு காஷ்மீரை கைப்பற்றியது. பின்னர் சிறிது காலம் ஆப்கானியர்களும் ஆண்டனர். பின் ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னன் காஷ்மீரை கைப்பற்றினான். இந்த சமயத்தில் டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப் சிங் என்பவன் ரஞ்சித் சிங்கிடமிருந்து தன் விசுவாசத்தின் பரிசாக ஜம்முவை பெற்று சிறு சமஸ்தானமாகக் கொண்டு ஆண்டு வந்தான். அந்த சமயத்தில் அப்போதைய தாதாவான பிரிட்டிஷ், சீக்கியர்கள் மீது படையெடுத்து வென்றது. அப்போரில் குலாப் சிங் பிரிட்டிஷ்க்கு ஆதரவாக செயல்பட்டு ரஞ்சித் சிங்கிற்கு துரோகம் செய்தான். இத்துரோகத்தை மெச்சிய பிரிட்டிஷ் ரூ 75 லட்சம் பெற்றுக்கொண்டு குலாப் சிங்கிற்கு காஷ்மீரை தாரை வார்த்தது.

அப்போது குலாப் சிங் – பிரிட்டிஷ் அரசுக்கு இடையே அமிர்தசரஸ் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன் முக்கிய சாரம் என்னவெனில்,(1) ‘காஷ்மீரின் பாதுகாப்பு மட்டும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் பிறகு இந்திய பிரிவினை வரை டோக்ரா மன்னர்களின் ஆட்சியே நடைபெற்றது. பிரிவினை சமயத்தில் காஷ்மீரை ஆண்டது ஹரி சிங் என்னும் மன்னன்.

இந்திய விடுதலைக்குப் பிந்தைய காஷ்மீரின் வரலாறு:

1947 சுதந்திரத்திற்கு பிறகு ஒவ்வொரு சமஸ்தானங்களாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போதும் ,நிஜாம் ஆண்ட ஹைதராபாத்தும், ஹரி சிங் ஆண்ட காஷ்மீரும் இந்தியாவுடன் இணையாமல் சுதந்திர சமஸ்தானங்களாக அறிவித்தனர்.

ஹைதராபாத்தில் நில ஜமிந்தார்கள் ,ரஜாக்கர்களின் சுரண்டலை எதிர்த்து கம்யுனிஸ்டுகளின் தலைமையில் எழுந்த விவசாயிகள் எழுச்சியை சமாளிக்க முடியாமல் நிஜாம் இந்தியாவுடன் இணைய சம்மதித்தான்.
புரட்சியாளர்கள் கையில் ஹைதராபாத் போய் விட்டால் தாம் சுரண்டிசேர்த்த சொத்துக்கள் பறிபோய் விடும் என்கிற அச்சத்தில் ஜமீன்தார்கள் இந்த இணைப்பை ஆதரித்தனர்.
இதற்கிடையில் பிரிட்டிஷ் வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டன் எவ்வளவோ வலியுறுத்தி சொல்லியும் ஹரிசிங் தெளிவாகச் சொன்னார்,

“காஷ்மீர் எங்கள் பரம்பரை சொத்து இதை இந்தியாவுக்கோ,பாகிஸ்தானுக்கோ விட்டு தர முடியாது”

இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு தர்ம சங்கடமாய் போனது. பாகிஸ்தானோ இதை அவமானமாகக் கருதியது. ஏதாவது ஒரு வழியில் குறுக்கு வழியிலேனும் காஷ்மீரை அபகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. அதன்படி பாகிஸ்தானில் உள்ள ‘பதான்கள்’ எனும் பழங்குடியினரை காஷ்மீருக்குள் ஏவி விட்டு கலவரத்தை தூண்டுவது, அதை கட்டுப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளே நுழைந்து முழு காஷ்மீரையும் அபகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த உதவிக்குக் கைமாறாக அந்த பதான்கள் காஷ்மீரை கொள்ளையடித்துக்கொள்ள அனுமதித்தனர்.
இதற்கான செலவுகளை பாகிஸ்தானின் ரகசிய நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஹரிசிங்கின் படை வீரர்கள் சிலரை மூளை சலவை செய்து ஹரி சிங்கிற்கு எதிராக கலகம் செய்யவும் ஏற்பாடானது.முக்கிய வேலையாக இந்த ஊடுருவல் சம்பவம் இந்தியாவுக்கு தெரியாதவாறு அனைத்து தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு சைரப் கான் எனும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தலைமை தாங்கினான். காஷ்மீர் இஸ்லாமிய மக்களின் ஆதரவை பெறுவதற்கு இந்த திட்டத்திற்கு ஜிஹாத் (புனித போர்) என்று பெயரிடப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு தொலைபேசி இணைப்பு மட்டும் உயிருடன் இருந்து இந்த ஊடுருவலை இந்தியா அறிந்துகொள்ள உதவியது. தகவல் கிடைத்ததும் இந்தியா சுறுசுறுப்பானது. வி.பி.மேனன் தலைமையில் ஒரு குழு காஷ்மீர் சென்று ஹரி சிங்கை சந்தித்தது “காஷ்மீருக்கு ஆபத்து நீங்கள் இந்தியாவுடன் இணைய சம்மதித்தால் இந்தியா உங்களுக்கு உதவும்”. ஹரி சிங்குக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.

இந்தியாவுடன் இணைக்கப்பட்டபின்:

1947 அக்டோபர் 26 அன்று இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் சாரம் என்னவெனில்,

  1. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகியன மட்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்,
  2. ஊடுருவல்காரர்களை விரட்டிய பின் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்,
  3. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்தியாவுடனான இந்த இணைப்பு இறுதியாகும்.

இதனடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை நேரு வானொலியில் நவம்பர் 2 அன்று அறிவித்தார். இதன் பிறகு இந்தியாவின் ராணுவம் பதான்களையும் பாகிஸ்தான் ராணுவத்தையும் விரட்டி அடித்தது. அப்போது ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தம் வந்தது. எந்தெந்த படைகள் எங்கெங்கு நிலை பெற்றுள்ளதோ அது வரை அந்த நாட்டிற்கு சொந்தம் என்கிற அடிப்படையில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வரையப்பட்டது. காஷ்மீர் இரண்டாக பிளக்கப்பட்டது. ஒரு நிரந்தர பதட்டம் அங்கு நிலவ ஆரம்பித்தது.

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் நேரு வாக்கெடுப்பு நடத்தாமல் காலங்கடத்தினார். இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்தத்தின் சரத்துகளை மீற ஆரம்பித்தது, வாக்கெடுப்பும் நடத்தவில்லை. 1956 நவம்பர் 17 ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்டது

ஆனால் 1957 ஜனவரி 27 அன்று ஐ.நா சபை “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தை எந்த வகையிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒருமித்த கருத்தாக கருத முடியாது” என்ற அறிவித்தது. அதாவது இந்த இணைப்பை ஐ,நா சபை அங்கீகரிக்க வில்லை.

இங்கு ஒரு விசயத்தை நாம் யோசிக்க வேண்டும், ஊடுருவல் சமையத்தில் பதான்களும், பாகிஸ்தானிய ராணுவமும் கட்டவிழ்த்த கொலை, கொள்ளை, தீவைப்பு, பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றால் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் மீது இயல்பாகவே ஒரு வெறுப்பு அலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் ஒரு வேளை காஷ்மீர் மக்கள் இந்திய இணைப்பை ஆதரித்திருக்கக்கூடும். அந்த வாய்ப்பையும் நேரு தவற விட்டார்.
1957 லிருந்து 1972 வரையிலும் நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் இந்தியா எல்லா தகிடு தத்தங்களும் செய்து தனக்கு சாதகமான பொம்மை முதல்வரை அங்கு ஏற்படுத்தியது. 1977 தேர்தலில் ஷேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சி அமைத்தது.

ஷேக் அப்துல்லா முதல்வரானதும் காஷ்மீரில் குறிப்பிடத்தக்க சில சீர்திருத்தங்களை செய்தார்.அதில் முக்கியமானது நிலச் சீர்திருத்தம் .இதன் படி உச்ச பட்ச வரம்பிற்கு மேல் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் அப்துல்லாவின் செல்வாக்கு அப்பகுதியில் பெருகியது. இருந்தாலும் அப்போதைய ஜமீன்தார்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களாக இருந்ததால் அப்துல்லாவின் மதசார்பற்ற இந்த சோஷலிச மறுபகிர்மானம் துரதிர்ஷ்டவசமாக மதச்சாயம் பூசப்பட்டது. இந்த வேலைகளை பிரஜா பரிசத் என்கிற இந்துத்துவா அமைப்பு ஆத்ம சுத்தியுடன் செய்தது.

1987 தேர்தலில் ஷேக் அப்துல்லா மறைவுக்கு பின்னர் அவரது மகன் பரூக் அப்துல்லா தலைமையில் தே. மா.கட்சி மீண்டும் வெற்றி பெற்றது .ஆனால் பரூக் சுதந்திர காஷ்மீர் கொள்கை உடையவராக இருந்ததால் அப்போதைய பிரதமர் இந்திரா தே.மா கட்சியில் பிளவை ஏற்ப்படுத்தினார். 13 உறுப்பினர்களுடன் வெளியேறிய பாருக்கின் மைத்துனர் குலாம் முகம்மது காங்கிரசின் 26 உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு ஆட்சியை கோரினார் .ஆனால் அப்போதைய ஆளுநர் பி.கே.நேரு இதை அனுமதிக்கவில்லை. விடுவாரா இந்திரா? 1984 இல் பி.கே.நேருவை நீக்கிவிட்டு தீவிர இந்துத்துவா கொள்கையுடைய ஜக்மோகனை ஆளுனராக்கினார். ஜக்மோகன் வந்த கையேடு பரூக்கை நீக்கிவிட்டு குலாமை முதல்வராக்கினார். பிறகு ஆறு மாதத்தில் குலாமையும் நீக்கி விட்டு ஆளுநர் ஆட்சியை பிரகடனம் செய்தார்.

அது முதல் ஜக்மோகன் காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்தும் எல்லா வேலைகளையும் ஆத்ம சுத்தியுடன் செய்தார். ஜக்மோகன் ஆட்சியில் நடைபெற்ற மற்றுமொரு முக்கிய நடவடிக்கை பண்டிட்டுகள் வெளியேற்றம். அதாவது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி அவர்களை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார். இந்த வேலைகளை திட்டமிட்டு மிகுந்த வஞ்சகத்துடன் காய்களை நகர்த்தி செய்து முடித்தார். அதாவது இப்படி சொல்வதன் மூலம் காஷ்மீரில் பண்டிட்டுகளின் மேல் தாக்குதல் நடைபெறவே இல்லை என்று நாம் கூற வரவில்லை. ஒப்பீட்டளவில் ஆங்காங்கே நடைபெற்ற இந்த மோதல்களை பூதாகரமாக ஊதிப் பெரிதாகியதில் ஜக்மோகனும் ஊடகங்களும் பெரும்பங்காற்றின. புது டில்லியில் முக்கிய வணிகப் பகுதியில் கடைகள், வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, உதவித்தொகை எல்லாம் வழங்கப்படும் என கூறி பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை ஊக்குவித்தார்.

பண்டிட்டுகளை வெளியேற்றியதன் மூலம் காஷ்மீர் தேசிய இன மக்களின் போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறி மதச்சாயம் பூசி அம்மக்களை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் வெற்றி பெற்றார்.

இந்திய ஜனநாயகத்திலும் தேர்தல்களிலும் ஏற்கனவே நம்பிக்கை இழந்திருந்த காஷ்மீர் இளைஞர்கள் பலரை சில பிரிவினைவாத சக்திகள் மூளைச்சலவை செய்து தீவிரவாத குழுக்களில் இணைத்தனர், தினம் தினம் .

பல தீவிரவாத செயல்களையும் அரங்கேற்றினர். இந்த தீவிர வாத குழுக்களை ஒடுக்குவதற்கு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (armed force special power act ). அதாவது இந்த சட்டத்தின் மூலம் யார் ஒருவரையும் கேள்விகள் இன்றி ராணுவமோ போலீசோ கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ அதிகாரம் அளிக்கப்பட்டது. இன்று வரையிலும் இந்த சட்டம் அமலில் இருந்து அம்மக்களின் இயல்பு வாழ்கையை, இறையாண்மையை, சுதந்திரத்தை, சமூகப் பாதுகாப்பை கேள்விக்குறியாகவே வைத்திருக்கிறது.

உலகிலேயே ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம்’ என்ற ஒரு அமைப்பு இருப்பதும், செயல்படுவதும் காஷ்மீரில் மட்டும் தான், இதிலிருந்தே அந்த சட்டத்தை அதிகார வர்க்கம் எந்த அளவிற்கு முறைகேடாக பயன்படுத்தி இருப்பர் என்று சாமானியனுக்கு கூட புரிந்து விடும். இந்த பாசிசத்தை ஒத்த அடக்குமுறை சட்டத்தை சாமானிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தும்போது விரக்தி அடைந்த மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை இந்திய அரசின் ஊடகங்களும், இங்குள்ள இந்துத்துவா கும்பலும் தீவிரவாதம் என்று மிகத்திறமையாக பொய்களை கட்டவிழ்க்கின்றனர்.

காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சில குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதி உதவி ஆயுத உதவி போன்று பல உதவிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்துவருகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை காஷ்மீரை தவிர்த்து ஒரு அரசியலே அங்கு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு பாகிஸ்தான் செய்வது தவறா சரியா என்று கேட்பது பொருத்தமற்றது. நாம் பேச வருவது அம்மக்களின் சமூக பாதுகாப்பு, தனித்தன்மை, தொடர்ந்து மறுக்கப்படும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே.

எது தீர்வாக இருக்கமுடியும்?

  1. மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் அதிகார மமதையிலும் வல்லாதிக்க மனோபாவத்திலும் அரசு செயல்படும் வரையில் இப்பிரச்சனைகளுக்கு  நிரந்தர தீர்வு என்பது சாத்தியமே  இல்லை
  2. இந்துத்துவா சக்திகள் சொல்வது போல் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து  செய்வது என்பது எந்த வகையிலும் இதன் தீவிரத்தை தணிக்க பயன்படாது, மாறாக அதிகப்படுத்தவே செய்யும். இந்துத்துவ சக்திகளின் நோக்கமும் அதுதான்
  3. சமீபத்தில் சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறவது (அல்லது குறைப்பது) பற்றி துவங்கிய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை அரசு உணர வேண்டும்
  4. அரசுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்கான நடைமுறைகளை துவங்குவதன் மூலமே பாகிஸ்தானால் கொம்பு சீவி விடப்படும் தீவிரவாத குழுக்களையும், இந்துத்துவ கும்பலையும்  தனிமைப்படுத்தி  அம்மக்களுக்கான நீதியை  வழங்க முடியும்
  5. அடக்குமுறையை ஏவும் போது வஞ்சிக்கப்பட்ட மக்கள் மனதில் பிரிவினை வாதிகள் விஷம் தூவுவதற்கு நாம்  தான் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம் என்கிற எதார்த்தமான உண்மையை எந்த வறட்டு கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் இன்றி அரசு உணர வேண்டும்
  6. ராணுவத்தையும் துப்பாக்கிகளையும் மட்டுமே கொண்டு எந்த ஒரு தேசிய இனத்தையும் நிரந்தரமாக அடக்கி வைத்துவிட முடியாது என்பதற்கு வரலாறு நமக்கு நிறைய உதாரணங்களைத் தந்திருக்கின்றன

-ஹீரா சம்சுதீன்

 

Related Posts