அரசியல்

சமூகநீதி காத்த கலைஞர் . . . . . . . . . !

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு. கருணாநிதி காலமானார். கருணாநிதியின் மறைவு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் மறைவாக மட்டுமே சுருக்கி விடமுடியாதது. அந்த பெயர் தனக்குள் அரைநூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறது.

திருவாரூர் வீதிகளில் 14 வயதில் சமூக நீதிக்காக ஒலிக்கத் தொடங்கிய கருணாநிதியின் குரல், அவரது இறுதிமூச்சு வரை தொடர்ந்து ஒலித்தது. கருணாநிதியின் மீது ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை சுமந்து கொண்டிருந்தவர்களை கூட, கலங்கி நிற்கச் செய்துள்ளது அவரோடு நீங்கள் எத்தனை முரண்பாடு கொண்டிருந்தாலும், தமிழகத்துக்கு, சமூக நீதிக்கு அவர் ஆற்றிய பங்கை நீங்கள் மறுத்து விடவே முடியாது.

அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்போதைய மாநிலச் செயலாளர் தோழர். என்.வரதராஜன் தலைமையில் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த கோரிக்கை கடும் சலசலப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது. தலித் இயக்கங்களும், தலித் அரசியல் கட்சிகளும் உள்ஒதுக்கீடு முற்றிலுமாக நிராகரித்து குரல் உயர்த்திக் கொண்டிருந்தன. அருந்ததிய இயக்கங்களோடு இணைந்து அரசியல் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே கோரிக்கையை வீதிக்கு இழுத்து வந்தது. கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து அருந்ததிய மக்களுக்கு 3 விழுக்காடு வழங்கி உத்தரவிட்டார் கலைஞர். அப்போதிருந்த சூழலில், மார்க்சிஸ்ட்டுகளை தவிர வேறு எவரும் இந்த கோரிக்கைக்காக அத்தனை வலுவாக குரல் கொடுத்திருக்க முடியாது. அதேநேரத்தில் கருணாநிதியைத் தவிர வேறு யார் முதலமைச்சராக இருந்திருந்தாலும், உள்ஒதுக்கீடு சாத்தியமாகியிருக்காது.

உத்தபுரத்தில் எழுந்து நின்ற தீண்டாமைச் சுவருக்கு எதிராக, மார்க்சிஸ்ட்டுகள் களம் கண்ட போது, இந்த விவகாரம் சட்டமன்றத்தில் எழுந்தது. மார்க்சிஸ்ட்டுகள் அரசியல் லாபத்துக்காக உத்தபுரத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார் ஒரு திமுக எம்எல்ஏ. குறுக்கிட்டார் கலைஞர். அப்போது அவர் முதலமைச்சர். மார்க்சிஸ்ட்டுகள், தங்களின் பொருளாதார நலனுக்காக போராடினால் தான் தவறே தவிர, அரசியல் நலனுக்காக போராடுவது தவறில்லை என்றார். பின் அப்போது சிபிஎம்மின் பொதுச் செயலாளராக இருந்த தோழர். பிரகாஷ் காரத், தீண்டாமைச் சுவரை பார்த்து காறி உமிழ்வதற்கு முன்பாக, சுவற்றின் ஒருபகுதியை உடைத்தெறிந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

இன்னும், திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தது, உடல் ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்தியது, மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது, சுதந்திரத் தினத்தன்று மாநிலத் தலைநகரங்களில் கொடியேற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு பெற்று தந்தது, குடிசை மாற்று வாரியம் அமைத்தது என நீண்டு கொண்டே இருக்கும் கருணாநிதியின் சமூக நீதிக்கான முன்னெடுப்புகளின் பட்டியல். இவை அனைத்தும் சித்தாந்த புரிதல் கொண்ட கருணாநிதி தவிர்த்து வேறெவரேனும் முதலமைச்சராக இருந்திருந்தால் சாத்தியமாயிருக்குமா என்பது கேள்விக்குரியது.

எனினும் 1999 ஆம் ஆண்டு கருணாநிதி, பாரதிய ஜனதா கட்சியுடன் கொண்ட கூட்டணி, திராவிட இயக்கத்துக்கான கறையாக மாறிப்போனது என்றால் அது மிகையல்ல. அதனை அவர் தவிர்த்திருக்க வேண்டும். இப்படியான தீர்த்துக் கொள்ளவே முடியாத முரண்பாடுகள் அவரோடு நீடிக்கின்றன. எனினும் அவர் மிக முக்கியமானவர்.

50 ஆண்டுகால தமிழக அரசியலின் அச்சாணியாக விளங்கினார். அது மட்டுமின்றி கதை, கட்டுரை, கவிதை, திரைப்பட வசனம் என தான் தடம் பதித்த அத்தனை துறைகளிலும் சாதனை படைத்தவராகவே அவர் விளங்கினார். இனி இப்படி ஒருவர் தமிழக அரசியலில், ஆளுமைமிக்க தலைவராக உருவெடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அப்படியான ஒருவரை காலம் வார்த்தெடுக்கும். வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது தானே அறிவியல். பார்க்கலாம்… காலம் காத்திருக்கிறது..

– அகிலன்.

Related Posts