அரசியல்

நவம்பர் 16 – கர்த்தார் சிங் தூக்கிடப்பட்ட நாள்!

கத்தார் சிங் தூக்கிடப்பட்ட நாள் 1915 நவம்பர் 16:

வாழ்க்கை வரலாறு‍

கர்த்தார் சிங் 1896-ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள் பிறந்தார். பகத் சிங் இவரைத் தன் வழிகாட்டியாக குறிப்பிடுகிறார். கதர் கட்சியை உருவாக்கியவர்களில் முதன்மையானவர்.

Kartar_Singh_Sarabha

கர்த்தார் சிங்

கர்த்தார் சிங் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தில் சரபா என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சர்தார் மங்கள் சிங். அவரது தாயார் சாஹிப் கபூர். அவரின் இளவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாத்தாவின் அரவணைப்பில் சொந்த கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் லூதியானாவில் மெட்ரிகுலேஷன் படித்தார். பின்னர் ஒரிசாவில் உள்ள அவரது சித்தப்பா வீட்டில் இருந்து பத்தாவது முடித்துக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் அமெரிக்காவில் வேலை பார்க்கச் சென்றார்.

ஜனவரி 1912-ல் சான்ஃபிரான்சிஸ்கோ துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டது. அமெரிக்க அதிகாரிகள் மற்ற நாட்டவரைவிட இந்தியர்களைக் கடுமையாக சோதனையிட்டனர். கர்த்தார் சிங் இது பற்றி மற்றவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் “இந்தியர்கள் அடிமை நாட்டு குடிமக்கள் என்பதால் மோசமாக நடத்தப்படுகின்றனர்” என்றனர். இது கர்த்தார் சிங்கை கடுமையாகப் பாதித்தது. அந்த காலகட்டத்தில் (1914) இந்தியர்கள் வெளி நாட்டில் தொழிலாளியாகவோ பிரித்தானிய அரசின் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்குப் போராடும் இராணுவ வீரர்களாகவோ தான் இருந்தார்கள். கர்த்தார் சிங் பெர்க்ளேயில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்புக்காக சேர்ந்தார். பழத்தோட்டத்தில் பழம் சேகரிக்கும் வேலையும் செய்தார். அப்போதிருந்தே கர்த்தார் சிங் மற்றவர்களுடன் சேர்ந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்தார்.

கதர் கட்சியும் கதர் செய்தித்தாளும்

Ghadar_Flag

கதர் கட்சியின் கொடி

கர்த்தார் சிங் 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சோஹன்சிங், ஹர்தயாள் ஆகியோருடன் சேர்ந்து கதர் கட்சியை உருவாக்கினார். அதன் தாரக மந்திரம் “இந்திய சுதந்திரத்திற்காக அனைத்தையும் பணயம் வைப்போம்” என்பதாகும். 1913-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று “கதர்” என்ற செய்தித்தாள் வெளியானது. பஞ்சாபி, ஹிந்தி, உருது, பெங்காலி, குஜராத்தி, புஷ்டோ மொழிகளில் வெளியானது. ஹர்தயாள் எழுத்து வேலையும் கர்த்தார் சிங் அச்சு வேலையும் செய்தனர். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு அனுப்பப்பட்டது. குறைந்த காலத்தில் இது எல்லோருடைய ஆதரவையும் பெற்றது. கர்த்தார் சிங்கின் வீரம் பகத் சிங்கைக் கவர்ந்தது. அவர் கர்த்தார் சிங்கைத் தனது குருவாக ஏற்றார்.

கிர்பால் சிங்கின் துரோகம்

கதர் கட்சியின் செயல்பாடுகளை கிர்பால் சிங் என்ற போலீஸ்காரர் அரசிடம் காட்டிக் கொடுத்துவிட்டார். பெரும்பாலான கதர்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கர்த்தார் சிங், ஹர்னாம் சிங், ஜகத் சிங் ஆகியோர் ஆப்கானிஸ்தானத்திற்குத் தப்பிச் செல்லும்படி கூறப்பட்டனர். அவரது தோழர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது தாம் மட்டும் தப்பிச் செல்ல விருப்பமில்லாமல் திரும்பிவிட்டனர். அரசிடம் மாட்டிக் கொண்டனர். வழக்கு விசாரணையின் போது அவரது திறமைகள் நீதிபதியைக் கவர்ந்தது. அவர் இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. தனது செயலுக்குப் பெருமைப்பட்டார். எனவே அவர் ஆபத்தானவராகக் கருதப்பட்டு 1915-ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. அவருடன் கதர்கட்சியைச் சேர்ந்த 24 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

அவரது‍ தூக்கு‍ தண்டனையின் போது‍ 19 வயது. அவரது தூக்குத் தண்டனையின் போது கர்த்தார் சிங் பாடிய கவிதை;

தேசத்தொண்டு‍ சிரமமானது,
சொல்வது‍ எளிது,
ஒருவன் அந்தப் பாதையில் நடக்கும் போது‍
லட்சக்கணக்கான பேராபத்துக்களை சந்திக்க வேண்டும்.

போற்றுவோம் தியாகத்தை!

Related Posts