சினிமா தமிழ் சினிமா

காலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை?

கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது.

ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் பா.இரஞ்சித் எதிர்ப்பென்பது அவரின் அரசியல் அணுகுமுறை மீதான முரண்பாடுக்கப்பால் ஏதோ ஒரு வெறுப்பரசியலாக மாறி வருகிறது.

தவறானவர்கள் சினிமாவில் வளர்ந்து அல்லது சினிமாவைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று நமக்கெல்லாம் இப்போது ஒரு புதிய கவலையும் ‘அக்கறையும்’ வந்திருக்கிறது. இந்த அக்கறை என்பது பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ்தேசிய எதிர்ப்புணர்வுக்கு எதிர்ப்பு, அடையாள அரசியல் எதிர்ப்பு என்கிற அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படுவதாக அவதானிக்கிறேன்.

மகிழ்ச்சி!

காலம் காலமாக அதிக்க சாதிகளின் பெருமைகள், ஆண்ட பரம்பரைக் கதைகள், அவர்களின் பார்வையில் ஜமீந்தார் கதைகள் அதனால் துன்புறும் ‘ஏழைகளின்’ பாடுகள் என்று பல சினிமாக்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் தலித் எழுச்சி என்பது ஏற்பட்டபின் தமிழில் கலை இலக்கிய படைப்புகளில் அச்சு வடிவில் படைப்பாக ஏற்பட்ட வீச்சைப்போல் திரைப்படம் என்னும் ஊடகத்தில் தலித் மக்களின் வாழ்வியல், போராட்டங்கள், அரசியல் பற்றி எல்லாம் பெருவீச்சில் படைப்பாக்கப்படவில்லை. அதை ஜனரஞ்சகமாக, குறிப்பாக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் படைத்தவர் இரஞ்சித் என்று சொல்வது மிகையாகிவிடாது. அதன் தாக்கம், அதன் பலன் அதையெல்லாம் விமர்சிக்கலாம், தவறில்லை! ஆனால் அது அந்த எல்லையைக் கடந்து வெறுப்பரசியலாக மாறுவது வருத்தத்தை அளிக்கிறது. ஏனென்றால் இந்த விமர்சனங்களும் / எதிர்ப்பும் ஒரு Selective Nature இல் இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் படமாக்கி, ஏதோ ஒரு வகையில் ஒரு போராட்ட உணர்வை ஏற்படுத்த விழையும் ஒரு படைப்பாளியிடம்  இவ்வளவு அரசியல் தூய்மை எதிர்பார்க்கும் நாம் இதுவரை பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்தி புகழ் பெற்று அரசியல் பேசும் அல்லது சமூக அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர்கள், இயக்குனர்களை எந்தளவுக்கு கேள்வி கேட்டிருக்கிறோம்? எதிர்த்திருக்கிறோம்?

அத்தகைய நடிகர்கள், இயக்குனர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் – அதாவது ஆட்சியதிகாரத்திற்கு போட்டி போடுகிறார்களோ இல்லையோ – அவர்கள் அரசியல்தானே பேசுகிறார்கள். அரசியலின்றி பொதுப்பிரச்சினை என்று ஏதுமில்லை, அல்லவா? மேலும் பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல் என்பது அரசியலற்ற பிரச்சினையா? பெண்களைக் கேவலமாக, பிற்போக்குத்தனமாக சித்தரிக்கும் படங்களை புறக்கணிப்போம் என்று இதுவரை இவ்வளவு தீவிரமாக நாம் பிரச்சாரம் செய்திருக்கிறோமா?

ஒரு பெண் தன் மார்புகளை இறுகப்பிடிக்கும் மேல் சட்டை அணிந்தால், ஒரு ஆண் அவள் மார்பை பிசையத்தான் போவான் என்னும் கருத்தை வெளிப்படுத்திய இயக்குனரை அவரின் ‘தமிழ்ப் பற்றுக்காக’ மன்னித்துவிடுவோம்.

பெரியாரைப் பேசுவார், தமிழ் உணர்வில் அவரை மிஞ்ச ஆளில்லை! தமிழர்க்குப் பிரச்சினை என்றால் கோபாவேசத்துடன் பொங்கி எழுவார்! ஆனால் அவரின் படங்களில் பெண்கள்… ம்ம்… அதுபற்றி என்ன… அதுதான் அவர் தமிழ் உணர்வாளராயிற்றே! போராட்டங்களுக்கு தவறாமல் ஆதரவு தெரிவித்துவிடுகிறார். ஆஜராகிவிடுகிறார். போதாதா!

ஆம்பிளை என்று மார் தட்டிக்கொள்ளும் தலைப்பை வைத்தாலும், ஒருபக்கம் பொம்பளன்னா எப்படி இருக்கணும்னு தெரியுமா என்று போதனைகள் செய்துகொண்டு ஐட்டம் சாங், பார்ட்டி சாங் இப்படியாக ஏதோ ஒரு ‘தர்க்கத்துடன்’ பெண்களின் உடலுக்கு அரை இஞ்ச் துணி மட்டும் கொடுத்து ஆடவைத்து நம்மை மகிழ்விப்பதால் அவர்களை, அவர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டியதில்லை! பிட்டு படம்டி என்று பாடினால் என்ன; விடலைகளின் பாலுணர்வை தன் மூலனதனமாக்கினால் என்ன தமிழன்டா என்று மீசையை முறுக்குறார். அதற்கு நாம் நம் கைகளைக் கொடுத்து உதவுவோம்.

திருநங்கைகளை நையாண்டி செய்து பாடச்சொல்லி அதிகாரம் செய்து இரட்டை அர்த்தப் பாடல்களை கொண்டாட்டமாக்கி  ஆட்டம் போடும் கதாநாயகர்களை வடிவமைக்கும் இயக்குனர் இன்று முக்கியமான கருத்துசொல்லி! பேச்சில் தமிழர் உணர்வை வெளிப்படுத்திவிட்டால் போதும் அவர்களே உண்மையான போராளிகள்! அவர்களின் படங்கள் கொண்டாடப்படவேண்டியவை.

இதுபோன்ற இயக்குனர்களுக்கு தலைவராக அவதாரமெடுத்திருக்கும் இயக்குனர் இமையமோ “கொல்லுங்க எசமான் கொல்லுங்க… இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்” என்றும் ஆதிக்க சாதிக்காரன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை வப்பாட்டியாய் வைத்திருப்பதை மகிமைப்படுத்த மற்றொரு பெண்ணையே பெண்ணுக்கு எதிரியாக்கியவர்; வைப்பாட்டி வைத்திருப்பதை நியாயப்படுத்த மற்றொரு பெண்ணை ஒழுக்கங்கெட்டவளாக்கியதோடு, அதுபற்றிய குற்றவுணர்வற்ற திமிர் பிடித்த ‘வில்லியாக’ சித்தரித்து அத்தகைய கேடுகெட்டப் பெண்ணுக்கு வாழ்க்கை அளிக்கும் பெருந்தன்மை மிக்கவனாக ஆணை ‘புனிதப்படுத்தியவர்’. பெண் என்பவள் தனக்கான துணையைத் தேடிக்கொண்டால் அவள் சீரழிந்துதான் போவாள், அவளை யார் விரும்புகிறார்களோ அவர்களையே அவள் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய ‘தத்துவ முத்துகளைப் படைத்தவர்’. பெண்களை எப்படி சித்தரித்தாலும் தமிழரின் ‘வீர மரபைக்’ காக்க மைக்கைப் பிடித்துவிட்டார் இல்லையா அது போதும்!

இதுபோல் எத்தனையோ இயக்குனர்கள்! எந்தவித ஆளுமைத் திறனுமற்ற வகையில் பெண்களை சித்தரித்து, அவளை வெறும் வணிகச் சரக்காய்  மாற்றி படமெடுக்கும் இயக்குனர்களை எல்லாம் மன்னித்துவிடுவோம். பிற்போக்குத் தனமான கருத்துகளை உடைய படங்களை,  பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டும் படைப்புகளை, படைப்பாளிகளை விமர்சிப்பதே போதுமானது என்று நாம் நம் அரசியல் கடமையை, ஜனநாயகத்தை வரையறுத்துக்கொள்வோம். புறக்கணிப்பு செய்யுமளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்துவிட்டார்கள்? (மேற்சொன்ன எந்தப் படங்களும் கார்ப்ரெட்டுகளால் எடுக்கப்பட்டவையல்ல..!)

ஆனால் தான் பேசும் அரசியலிலும், தன்னுடைய படைப்பிலும், தான் வாழும் வாழ்விலும் முரண்களற்று (அந்த அரசியலில் நமக்கு முரண் உண்டு என்பது வேறு) இயங்கும் ஒரு படைப்பாளனைத்தான் தாக்கிக்கொண்டே இருப்போம்! திரைத்தொழிலில் அதற்கேயுரிய ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாடு மற்றும் வணிகச்சங்கிலி எப்படி இயங்கும் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாது வறட்டுத்தனமாக எதிர்ப்போம்! அவர் படத்தைப் புறக்கணியுங்கள் என்று களமாடுவோம்.

அடிப்படையில் இரஞ்சித் சாதி மறுப்பாளராக இருக்கிறார். சுயசாதிப் பற்றை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்புகிறார், நவீன கலையாக்க முயற்சிகள் மூலம் சாதி மற்றும் அரசியல் சித்தாந்த முரண்பாடுகளுக்கப்பால் புதிய தலைமுறையினை ஒருங்கிணைக்கிறார். தன் வருமானத்தின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்டோரை அரசியல்மயப்படுத்தும் இயக்கச் செயல்பாடுகளுக்காய் இறைக்கிறார். இதெல்லாம் நமக்குத் தேவையில்லை! ஆனால், அவர் நம் தலைவர்களைப் பற்றி பேசுவதில்லை, நாம் பேசும் விடுதலை அரசியலை அவர் ஏற்கவில்லை, அவ்வரசியலைக் கொச்சைப்படுத்திய நபர்களோடு அவர் நெருங்கி உறவாடுகிறார், தலித் தலித் தலித் என்று தலித்திய அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார் ஆகவே அவர் ஓரம் கட்டப்பட வேண்டியவர். நட்புச் சக்தியை பகைச் சக்தியாய் மாற்ற இதுவே போதுமானது..!

கூலி பெற்று உழைத்துக் கொட்டும் கட்டுப்பாடான வணிகத் தளம் வேறு, நிஜ வாழ்வில் அரசியல் சக்தியாக சுதந்திரமாக இயங்கும் தளம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல் இப்படித்தான் உண்மையான அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் வரும் இடதுசாரி அரசியல் சக்திகளை வெறுப்பேற்றி, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி ஓட ஓட விரட்ட முனைவோம்.

இடதுசாரி தளத்தில் வந்துவிட்டதாலேயே ஒத்த கருத்தில்லாத காரணத்தாலோ அல்லது நாம் முன்னெடுக்கும் ஒரு அரசியல் பிரச்சினைக்கு குறிப்பிட்ட நபர் ஆதரவளிக்காத்தாலோ, அல்லது நமக்குப் பிடித்த ஒரு தலைவரை விமர்சித்துவிட்டதாலோ ஒரு கோபத்தை வளர்த்துக்கொண்டு காயடிக்க முற்படுவோம்!

பெண் உடலை சுரண்டிப் பிழைத்துக் கொழுத்து சமூகத்தை பின்னுக்குத் தள்ளும் நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாம் சம்பாதித்து பங்களாக்களும், ரிசார்ட்டுகளும் கட்டிக்கொண்டு, தொழில்களைப் பெருக்கிக்கொண்டு அவ்வப்போது ‘சமூக அக்கறையை’ வெளிப்படுத்திக்கொண்டு, புரவலர்களாக ஆங்காங்கே சில உதவிகளை செய்துகொண்டு கதாநாயகர்களாக வலம்வர சிகப்புக் கம்பளம் விரித்தே வைப்போம்!

ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல அவமானங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் மத்தியில் வளர்ந்து தனக்கான பிழைப்பு மட்டும் போதாது தன் சமூக மக்களின் பிழைப்பும் சுயமரியாதையோடும், சுதந்திரமானதாகவும் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் கலை இலக்கிய பண்பாட்டு தளத்தை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முக்கிய ஊடகமாக கருதி தன் வாழ்விற்கும், தன் படைப்பிற்கும், தன் அரசியலுக்கும் முரணற்று வாழும் ஒரு மனிதனை வாழவிடாமல் செய்ய நாமெல்லாம் இவ்வளவு முனைப்புடன் செயல்படுவது நம்மின் அரசியல் புரிதலை மிகச்சிறப்பாக பறைசாற்றுகிறது!

இதுவே இந்த ஆணாதிக்க சமூகத்தின் உணர்ச்சிகர கதாநாயகத்தன்மை சார்ந்த அரசியலின் வெற்றி!

– கொற்றவை.

Related Posts