அரசியல்

கத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு

காஷ்மீரின் கத்துவா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தையை, ஒருவாரம் கோவிலிக்குள் அடைத்துவைத்து வன்புணர்ந்து, கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள் சிலர்.

“குற்றவாளிகளைக் கொல்லவேண்டும்”

“குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும்”

“அவர்களது ஆணுறுப்பை அறுத்து எறியவேண்டும்”

போன்ற குரல்கள் நாடுமுழுவதும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

எந்தவொரு குற்றம் நிகழ்ந்தாலும், குற்றம் செய்தவர், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்று இருதரப்பை மட்டுமே உலகிலுள்ள அனைத்து சட்டங்களும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. குற்றங்களை விமர்சிக்கும் நாமும் அதே அளவுகோளைத்தான் வைத்திருக்கிறோம். ஆனால் குற்றம் நிகழ்வதற்கான சமூகக் காரணங்களையும் அழுத்தங்களையும் நாம் ஆய்வு செய்வதே இல்லை. மிக எளிய உதாரணமாக, நீட் தேர்வுக்கு எதிராக இறுதிவரை போராடிய அனிதாவின் தற்கொலையை எடுத்துக்கொள்வோம். சட்டப்படி பார்த்தால், அவருடைய மரணத்திற்கு யாருமே காரணமில்லை. எவரையும் தண்டிக்கவும் முடியாது. ஆனால், அவருக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டு அவரது மருத்துவக்கனவைத் தகர்த்தவர்களும், அவருக்கு இறுதிவரை போலியான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் தானே தார்மீக அடிப்படையில் குற்றவாளிகள்? அக்குற்றவாளிகளையும் அவர்கள் உருவாக்கிய சமூகநீதிக்கு எதிரான நீட்டும் தானே தண்டிக்கப்படவேண்டும்? நீட் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் அனிதா இறந்திருக்கவே மாட்டாள் இல்லையா? அப்போது, இப்படியான பார்வையில்தானே நாம் அனைத்துக் குற்றங்களையும் ஆய்வு செய்யவேண்டும்? இன்றைக்கு நடப்பிலிருக்கும் தண்டனைச் சட்டங்கள் எதுவுமே குற்றத்தின் காரணங்களை ஒழிக்கும் திறன்படைத்தவை இல்லைதானே?

இந்தியாவில் ஓராண்டுக்கு 39000 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாவதாக  2016இல் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சொல்கிறது. அதாவது, ஒவ்வொரு ஒருமணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 4 பெண்களாவது இந்தியாவின் ஏதோவொரு மூலையில் வன்புணர்வுக்கு ஆளாவதாக வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. அவர்களில் ஏறத்தாழ 19000 பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆவர். அதுமட்டுமின்றி வருடத்திற்கு 66000 பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களின் நிலை என்னவாகிறது என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஆனால் வழக்கு என்கிற எதையுமே பதிவு செய்யாமல் விட்டதைக் கணக்கில் கொண்டால், உண்மையான எண்ணிக்கை அதைவிடவும் பலமடங்கு இருக்கலாம். எல்லா பாலியல் வன்புணர்வுக்கும் அடிநாதமாகவும் பொதுவான காரணமாகவும் இருப்பது ‘பெண்ணுடலை போகப்பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கத்திமிர்’ தான். வன்புணர்வு செய்தவனைத் தூக்கில் போட்டுவிடுகிறோம், ஆனால் அவனை வன்புணரத் தூண்டிய ஆண்குறியாதிக்கத் திமிர் இங்கேயே தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறோம்?

‘பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல’,

‘இனவிருத்தி செய்வது மட்டுமே பெண்களின் பணி’,

‘பெண்ணுடல் என்பது ஆணின் பயன்பாடுக்கான ஒரு பொருளே’

போன்ற கருத்துக்களை வெகுஜனப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், சமூகவலைத்தளங்கள், சமூகம் என அனைத்தும் ஏதோவொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ துணுக்குகளாகவோ, நகைச்சுவைகளாகவோ, மீம்களாகவோ, செய்திகளாகவோ, கட்டுரைகளாகவோ அனுதினமும்  தொடர்ந்து பரப்பிக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றைக் கேள்வி கேட்காமலும், திருத்தி எழுதாமலும், தனிநபர்களை மட்டும் தண்டித்து என்ன பலன்? ஒரு வன்புணர்வாளன் போனாலும், பல்லாயிரக்கணக்கான வன்புணர்வாளர்கள் உருவாகி இங்கே எப்போதும் குற்றமிழைக்கத் தயாராகவே காத்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்தான பார்வையை இச்சமூகத்தில் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கு ஒட்டுமொத்த சமூகமே சொல்லிக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இவ்வுலகம் ஆண்களுக்கானது மட்டுமல்ல என்றும், இவ்வுலகில் வாழ்வதற்கு ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்றும் தொடர்ந்து மாபெரும் பிரச்சாரத்தை செய்யவேண்டியிருக்கிறது. சாதியொழிப்பு குறித்து சேரிகளில் மட்டுமே பாடமெடுப்பதைப்போல, பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்று பெண்குழந்தைகளுக்கு மட்டுமே இன்னும் எவ்வளவு காலம்தா அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்.

சரி, கத்துவா சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு ஆணாதிக்கத்திமிர் மட்டும்தான் காரணமா? நிற்க…

பாலியல் வன்புணர்வுக்கு ஆணாதிக்கம் தான் அடிப்படைக் காரணம் என்றாலும், அதற்கு ஊக்கம் அளிக்கிற வேறுசில காரணங்களையும் நாம் ஆய்வு செய்தல் வேண்டும். அதிகார வெறியில் இருக்கும் ஒரு ஆயுதந்தாங்கிய கூட்டத்திற்கு, ஆக்கிரமிப்பு ஒன்றே குறிக்கோளாகும். அப்படியான ஆக்கிரமிப்புப் பயணத்தில் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு பயத்தினை ஏற்படுத்தி, தனக்கான தேவைக்காக பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தும் அதிகாரவெறி கொண்டு அலைவத வரலாறு நெடுகிலும் பார்க்கலாம்.

வடகொரியாவைப் பற்றியும் கிம் யொங்க் பற்றியும் தினந்தோறும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் ஒருநாளாவது தென்கொரியாவில் என்ன நடக்கிறது என்று எந்த செய்தி ஊடகமாவது சொல்லியிருக்கிறதா?

அமெரிக்காவிற்கு உலகெங்கிலும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 1000த்திற்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் இருக்கின்றன. அவற்றில் இலட்சக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் வருடக்கணக்கில் தங்கி, அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கு உதவிவருகின்றனர். அவர்களால் நினைத்த நேரத்திலெல்லாம் குடும்பத்தை சந்திக்கமுடியாது. அவர்களுடைய உணவுப்பசிக்கு, அமெரிக்க அரசும் அந்தந்த உள்ளூர் அரசும் உதவி செய்கின்றன. அதே போன்று அவர்களது உடல்தேவையையும் கணக்கிலெடுத்து, அந்தந்த நாடுகளில் அதனை எவ்வகையிலாவது பூர்த்திசெய்துகொள்ள அதிகாரப்பூர்வமற்ற அனுமதியையும் அமெரிக்க அரசு அளித்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இராணுவத் தளவாடங்களுக்கு அருகிலெல்லாம் பாலியல் வன்புணர்வுகள் சர்வசாதாரணமாக நடைபெறும்.

தென்கொரியாவிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவைக் காப்பாற்றுவதற்கு எனச்சொலி, அமெரிக்காவின் 15க்கும் மேற்பட்ட இராணுவத் தளவாடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு அருகாமையில் வாழும் பெண்களை துப்பாக்கி முனையில் அமெரிக்க இராணுவ வீரர்கள் வன்புணர்வு செய்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது. ஒருகட்டத்தில், தென்கொரிய அரசே அமெரிக்க இராணுவத்திற்கு உதவ முன்வந்தது. ‘அமெரிக்க இராணுவத் தளவாடங்களுக்கு அருகில் வாழும் பெண்கள் அமெரிக்க இராணுவ வீரர்களின் ஆசைக்கு இணங்குவது தென்கொரிய தேசத்திற்கு செய்யும் மாபெரும் உதவியாகும்’ என்ற பிரச்சாரமும் செய்தது. இராணுவத் தளவாடங்களுக்கு அருகாமையில் வாழும் பெண்களுக்கும் வேறு வழியில்லாமல் போனது. இணங்க மறுத்தால், கடத்திக்கொண்டுபோய் வன்புணர்வு செய்துவிடுகிறார்கள் என்பதால், ஏராளமான பெண்கள் “கன்ஃபார்ட் உமன்” (Comform Woman) என்று சொல்லப்படுகிற அமெரிக்கா இராணுவவீரர்களின் பாலியல் தேவைக்கு இணங்கி நடக்கும் பாலியல் தொழிலுக்கு அரசு மற்றும் இராணுவத்தால் தள்ளப்பட்டனர். 1995இல் சில சமூகசேவை நிறுவனங்களால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 10,00,000 (பத்து இலட்சம்) த்திற்கும் மேற்பட்ட தென்கொரியப் பெண்களின் வாழ்க்கையை வன்புணர்ந்தும் பாலியல் தொழிலுக்குத் தள்ளியும் அமெரிக்க இராணுவமும் தென்கொரிய அரசும் சீரழித்திருக்கிறது என்னும் உண்மை வெளியாகியிருக்கிறது. தற்போது மேலும் 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவ்வெண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அத்தொழிலைவிட்டு தப்பிக்க முயலும் பெண்கள் கடத்தி கொல்லப்பட்ட சம்பவங்களும் நிறைய நடந்தேறியிருக்கின்றன. சமீப ஆண்டுகளில் தெனகொரியாவில் அவ்வப்போது எழுந்துவரும் எதிர்ப்புகளினால், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெண்கள் கடத்திக் கொண்டுவரப்படுகின்றனர்.

தென்கொரிய உதாரணத்தில் பார்த்த பெண்களை வன்புணர்வு செய்வதற்கான காரணம் வெறுமனே ஆணாதிக்கத் திமிர் மட்டுமல்ல. ஆணாதிக்கத்திற்கு தீனிபோடும் அதிகாரத்திமிரும் தான். ஒரு நிலத்தில் வாழும் பெண்களை அடித்துவிரட்டுவதல்ல அதன் நோக்கம், மாறாக அவர்களை தனது அதிகார வெறியின் பாதையில் தனது தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்கவெறியும்தான். எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்ந்து அவர்களுக்கு பயத்தையும் இழப்பையும் கொடுக்கும் திட்டமாக இவ்வகையான வன்புணர்வை தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. தனக்கு எதிரிகளல்லாதவர்களையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொத்துக்கொத்தாக திட்டமிட்டு வன்புணர்வு செய்யும் திமிர் இது. மற்றொரு கொடுமை என்னவென்றால், அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் பெண்களிலேயே 50%த்திற்கும் மேற்பட்டோரை அதே இராணுவத்தில் பணிபுரியும் ஆண்களால் பாலியில் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இராணுவத்தில் நிகழும் குற்றங்களை பொதுநீதிமன்றங்கள் விசாரிக்காது என்பதாலும், குற்றத்தை நிகழ்த்திய உயரதிகாரியே கூட விசாரித்து, எவருக்கும் எந்த தண்டனையும் வழங்காமலும் விடப்படுவதாக The invisible war என்கிற ஆவணப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் உத்தியும் இதேதான். பல்வேறு நாடுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சண்டைபோட வந்தவர்களின் உடல்தேவையை பூர்த்திசெய்வதற்காகவே பெண்களையும் அவ்வியக்கத்தில் சேர்த்துக்கொள்கின்றனர். அவ்வியக்கத்தில் இருக்கும் பயங்கரவாத ஆண்களுக்கு இணங்கிப்போவது மட்டுமே அப்பெண்களின் வேலையாக்கிருக்கின்றனர். இது அப்படியே அமெரிக்கா உருவாக்கிய “கம்ஃபார்ட் உமன்” (Comfort Woman) திட்டத்தை ஒத்திருப்பதை கவனிக்கலாம்.

சரி, ஆணாதிக்கமும் எதிரியல்லாதவர்களையும் வன்புணரும் அதிகாரத்திமிரும் மட்டுமே கத்துவா சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்குக் காரணமா? நிற்க…

ஒரு கூட்டத்தை மற்றொரு கூட்டம் ஆக்கிரமிக்கவும் அடக்கியாளவும் பெண்ணுடலை முக்கியமான கருவியாகப் பயன்படுத்தும் அதிகாரத்திமிரை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தை எப்போதும் தனக்குக் கீழாகவே வைத்திருக்கவேண்டி, ஒடுக்குவதும் அக்கூட்டத்தின் பெண்களை தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவதுமே இவ்வகையான ஆதிக்கத்திமிர். இவ்வகையான குற்றங்களைப் பொருத்தவரையில் ஒடுக்கப்படும் கூட்டத்தை முற்றிலுமாக இல்லாமல் செய்வதல்ல ஒடுக்குவோரின் திட்டம். மாறாக, அவர்களை எப்போதும் மிரட்டியே தன்னுடைய கூட்டத்திற்கு சேவை செய்யவும் அடிமைகளாகவே வைத்திருக்கவுமே அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் நிகழும் பாலியல் வன்புணர்கள் இதற்கு மிகச்சரியான உதாரணம். உலகெங்கிலுமுள்ள இராணுவங்கள், தனது எதிரிநாட்டிலோ, தனது சொந்த நாட்டிலேயே எதிரி இயக்கங்கள் இயங்கும் பகுதியிலோ நிகழ்த்தும் வன்புணர்வுகளும் இவ்வகையில்தான் சேரும். ஈழத்தில் தமிழர்களைக் காப்பாற்றவே வந்திருக்கிறோம் என்றுசொல்லி, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பெண்களை வன்புணர்ந்த இந்திய அமைதி(?) காக்கும் படையினரின் செயல்பாடுகளும் ஆதிக்கத்திமிரின் காரணமாக விளைந்தது.

காங்கோவில் இன்றைக்கு வாழும் பெண்களில் 30% அளவிற்கு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள்தானாம். ஆங்காங்கே இயங்கும் ஆயுதக்குழுக்களின் வேட்டைக்கு இரையாகிப்போகிறார்கள் அப்பகுதியில் வாழும் பெண்கள். என்னிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. உன்னுடைய உடலை நான் எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்வேன் என்கிற ஆதிக்கத்திமிர் தான் அது. இருபிரிவினருக்கு நடக்கும் போரில் இருபக்கமும் உள்ள பெண்கள் தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்ட பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களையும் இதில் சேர்க்கலாம். 2016 ஆண்டில், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒட்டுமொத்த வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கையில், சுமார் 19% அளவிற்குதான் தீர்ப்பே வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகளில் எல்லாம் ஏதோவொரு சாக்கு சொல்லப்பட்டு நீண்டநெடுங்காலம் இழுத்தடிக்கப்படுக்கொண்டே இருக்கிறது. இதுவே மிகக்குறைவு என்றால், தலித் பெண்கள் வன்புணர்ந்ததாகப் பதியப்படுகிற வழக்குகளில் 2% அளவிற்குதான் தீர்ப்பே வழங்கப்படுகிறது. ஆக, 100க்கு 98 வழக்குகளில் நியாயம் வழங்கப்படுவதே இல்லை. நீதிமன்றங்களில் தலித் பெண்களுக்கு நியாயம் என்பது கிடைப்பதே இல்லை என்பதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன. அதுமட்டுமின்றி பல அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வுகளின்படி, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளாக இருப்பவர்களின் அழுத்தத்தினாலும் அலட்சியத்தினாலும தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்களை வழக்குகளாகப் பதிவதேயில்லையாம்.

“உங்களையெல்லாம் தொட்டாக்கூட பாவம்னு நினைக்கும் உயர்சாதி ஆண்கள் எப்படி உங்களை வன்புணர்ந்திருக்க முடியும். எனவே நீங்கள் பொய் தான் சொல்கிறீர்கள்”

என்று கூறி தலித் பெண்களின் வழக்குகளைக்கூட ஏற்க மாட்டார்களாம்.

சரி, கத்துவா சிறுமியின் கொடூர நிலைக்கு சாதியாதிக்கத்திமிர் மட்டும் தான் காரணமா? நிற்க…

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகான காலகட்டத்தில், தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், இணையம் என எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று பிரிவினையும் ஒப்பீடும் தொடர்ந்து பிரச்சாரமாகவே செய்யப்படுவதைப் பார்க்கமுடிகிறது. “ஆன்டி இந்தியன்”, “பாகிஸ்தானுக்குப் போங்கள்”, “முஸ்லிம் ஜிகாதிகள்”, “ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவல்”, “கர் வாப்சி”, “மாட்டுக்கறி தடை”, “பாகிஸ்தான் தீவிரவாதிகள்” போன்ற வார்த்தைகளை திரும்பிய பக்கமெல்லாம் யாராவது பயன்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுடைய எதிரிகளாக சிறுபான்மையின மக்களை சித்தரித்து, அதன்மூலம் அரசியல் இலாபமடைவதுதான் அவர்களின் நோக்கமென்றாலும் கூட, சமூகத்தில் பிளவையும், வெறுப்புணர்வையும் விதைத்துக்கொண்டே இருக்கின்றன அவ்வார்த்தைகள். இப்படியான வெறுப்புணர்வினை இந்துத்துவ இயக்கங்கள் தொடர்ந்து மேலிருந்து கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றன. அதனாலேயேதான், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்துவதற்கு தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கின்றனர் இந்துத்துவத்தின் அங்கத்தினராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அவ்வியக்கங்களின் ஆதரவாளர்கள்.

இப்படியான கருத்தியல் யாருக்கெல்லாம் பயன்படுகிறது? ஒருபுறம் முஸ்லிம்களுக்கும், மறுபுறம் சமூகத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானதாகவும் தொடர்ந்து செயல்பட்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலத்தையும் சொத்தையும் பணத்தையும் செல்வத்தையும் சுரண்டி ஆக்கிரமித்து வைத்திருக்கிற ஆதிக்க சாதியினருக்குத்தானே சாதகமாக இருக்கிறது.

கத்துவா சிறுமியின் குடும்பம் ஒரு முஸ்லிம் குடும்பமாகவும், சாதியால் ஒடுக்கப்பட்ட பழங்குடிக் குடும்பமாகவும் இருப்பதால், இந்துத்துவத்தின் நேருக்கு நேரான எதிரிகளாகக் கருதப்பட்டனர். வனச்சட்டம் 2006இன் படி, ஒடுக்கப்பட்ட அப்பழங்குடியின மக்களுக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்திடவேண்டி வந்திடுமோ என்கிற அச்சமும், முஸ்லிம்களுக்கு எதிராக மேலிருந்து விதைக்கப்படும் வெறுப்புணர்வும் இணைந்தே கத்துவா சிறுமியை வன்புணர்ந்து கொடூரமாகக் கொன்றுபோட்டிருக்கிறது. அதன்மூலம் அவள் சார்ந்த மக்கள் கூட்டத்தை அழிப்பதும் அடித்துவிரட்டுவதுமே அவர்களது மைய நோக்கமாக இருந்திருக்கிறது. அதனாலேயேதான், இக்கொடூரத்தை ஆதரித்து, இந்துத்துவ இயக்கங்கள் ஊர்வலம் நடத்தி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தன, முயற்சித்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு எதிர்வினையாக இதேபோன்றோ அல்லது சட்டவிரோதமான வேறுவகையிலோ பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக எதையாவது செய்வதற்காகவும் அதே ஆதிக்கவெறி காத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதையே காரணம்காட்டி, மிகவேகமாகவே அழித்தொழிப்பு செய்வதே அவர்களது நோக்கம். அதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள்தான் என்பது குறித்தெல்லாம், அரசியல் இலாபத்தினை இலக்காகக் கொண்டு இயங்கும் ஆதிக்கவெறித் தத்துவ தலைமைக்கு எள்ளளவும் கவலையில்லை.

கத்துவா சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு ஆணாதிக்க வெறியும் ஒரு காரணியாக இருந்தபோதும், வெறுமனே அதுமட்டுமே முழுக்காரணம் அல்ல. சாதிவெறியும் மதவெறியும் இணைந்து அழித்தொழிப்பு வெறியோடு அலையும் இந்துத்துவ அதிகாரவெறிதான் முழுமுதற்காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், எத்தனை பேரைத் தூக்கில் போட்டாலும், இக்கொடூரங்களைத் தடுத்துநிறுத்திவிடமுடியாது.

-இ.பா.சிந்தன்

(படம் வரைந்தவர்: யாநிலா)

 

Related Posts