அரசியல்

 மத்திய பட்ஜெட் 2017 – 18: அன்று தேர்தல் ஜும்லா, இன்று பட்ஜெட் ஜும்லா . . . !

உலகின் பல நாடுகளில் அரசாங்களின் பட்ஜெட், அரசின் பல் வேறு தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. அரசுகளின் கொள்கைகளின் அடிப்படையில், அந்த அந்த ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், ஒப்புதல்கள் என்ற அளவிலேயே அவை அமைகின்றன. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் பட்ஜெட் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கவும், பேசவும் படுகிறது. ஏனெனில், பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புக்கள் மற்றும் வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. அரசின் அடிப்படைக் கடமைகள் கூட, சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் விளம்பரப் படுத்தப் படுகின்றன.

பட்ஜெட் என்பது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மேலோட்டமாகத் தோன்றினாலும், அது ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகளின் நீட்சியேயாகும். பா.ஜ.க மத்தியில் பதவியேற்பதற்கு முன்னரும், பின்னரும் கடந்த இரண்டு ஆண்டு பட்ஜெட்களிலும், இந்த பட்ஜெட்டிலும் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.

ஒரு நாட்டின் பட்ஜெட் அந்த நாட்டின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும், உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைத் தர வேண்டும். அண்மையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்திருக்கும் பட்ஜெட் அந்தத் திசையில் உதவியிருக்கிறதா என்பதே இங்கு மையமான கேள்வி.

பட்ஜெட் பின் புலத்தில்.. ! 

2014 நாடாளுமன்றத் தேர்தல்களின் பா.ஜ.கவும், குறிப்பாக அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பல வாக்குறுதிகளை அளித்தனர்.  பதவி ஏற்ற நூறு நாட்களில் வெளி நாடுகளிலுள்ள கருப்புப் பணத்தைக் கொணர்ந்து குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் தருவதாகவும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் ஐம்பது சதவீதம் சேர்த்து நியாய விலையினை உறுதி செய்வதாகவும், இளஞர்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு இரண்டு கோடி வேலைகளை உருவாக்கித் தருவதாகவும் வாக்குறுதிகள் தரப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சியினை மத்தியில் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் எனில், அத்தகைய வாக்குறுதிகளை இந்திய மக்கள் எந்த அளவு ஆழமாக நம்பியிருக்கிறார்கள் என்பது புரியும்.

 எழுந்து வந்த கேள்விகள்:

பதவியில் அமர்ந்து இரண்டரை ஆண்டுகள் ஆயினும், கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட மோடி அரசு நிறைவேற்றவில்லை.  ரூ.15 லட்சம் குறித்து பேச்சு மூச்சு இல்லை. விவசாயிகளுக்கு விலை உற்பத்திச் செலவுடன் ஐம்பது சதவீதம் என்பதை, ஐம்பது ரூபாய் எனக் குறைத்து பா.ஜ.க விவசாயிகளை வஞ்சித்து விட்டது. இரண்டரை ஆண்டுகளில் இளைஞர்களுக்கு கிடைத்திருக்க  வேண்டிய ஐந்து கோடி வேலைகளுக்குப் பதில் உருவான வேலைகள் ஒன்றரை லட்சம் மட்டுமே.

இயல்பாக மக்கள் மனதில் இவை குறித்த கேள்விகள் எழத் தொடங்கின. மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகவோ, நாடாளுமன்றம் மற்றும்  ஊடகங்கள் மூலமாக பதில் சொல்லும் பழக்கம் கிஞ்சித்தும் இல்லாத பிரதமர் மோடி, இவற்றிற்கும் பதில் எதுவும் சொல்லவில்லை. அவரது கட்சியின் தலைவர் அமித்ஷா அவர்களிடம் இந்தக் கேள்வியினை எழுப்பிய போது, அவையெல்லாம் “எலக்க்ஷன் ஜும்லா” (தேர்தல் கால ஜம்பப் பேச்சுக்கள்) என்று எளிதாகப்  பதில் கூறி கேள்விகளைக் கடந்து சென்றுவிட்டார். மக்களிடம் எத்தகைய வாக்குறுதிகளையும் கொடுக்கலாம். ஆனால், அவற்றை நிறைவேற்றத் தேவையில்லை என்பதே அவர்களின் அறம் சார்ந்த  அரசியல். இதனுடைய நீட்சியினை, பா.ஜ.கவின் அனைத்து அரசியல் பொருளாதார நடவடிக்கைகளிலும் காண முடியும். பட்ஜெட்டும் அவற்றில் ஒன்றே.

மோடி ஸ்பெஷாலிட்டி:

மோடியின் நடவடிக்கைகளைக் கவனிப்பவர்களுக்கு வேறு ஒரு அம்சமும் புலப்படும். ஒரு வாக்குறுதியினை நிறைவேற்ற முடியவில்லை எனில், அதற்கு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக வேறு ஒரு வாக்குறுதியினைக் கொடுத்து மக்களின் கவனத்தைத் திருப்பி விடுவார். செல்லாப் பண அறிவிப்பில் நடந்தது. கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிப்பதற்கே அந்த நடவடிக்கை என்றார் மோடி. கரூப்புப் பணம் பெருமளவில் மாற்றப்பட்டு வெள்ளைப் பணமாக வங்கிக்கு திரும்பிய நிலையில், ரொக்கமில்லாப் பொருளாதாரமே தனது நோக்கம் என தனது இலக்கினை மாற்றிக்கொண்டார். அதுவும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பினைப் பெறாத நிலையில், வங்கிக்குத் திரும்பும் கூடுதல் பணத்தை வைத்து அதை மக்கள் நல்வாழ்விற்கான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவேன் என்று பேசினார். வங்கிக்குத் திரும்பும் பணமும், திரும்பாத பணமும் அரசிற்குச் சொந்தமான பணம் அல்ல, ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பணமே என்ற உண்மையினைக் கூட கண்டு கொள்ளாமல், அவர் கொடுத்த வாக்குறுதி இது. இவ்வாறு நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் வாக்குறுதி கொடுப்பது அவரது வழக்கமாக மாறி விட்டது. அது தான் மோடியின் ஸ்பெஷலாட்டி.

உடனடி வைத்தியம்?

ஏற்கனவே மந்த கதியில் சென்று கொண்டிருந்த பொருளாதாரம், செல்லாப்பண அறிவிப்பினைத் தொடர்ந்து மேலும் மோசமடைந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் கணிசமான் பெரும் பகுதி, விவசாயம், சிறு குறு தொழில்கள் முடக்கப்பட்ட நிலையில் சிக்குண்டு  திணறிப்போனது. மக்களின் வாங்கும் சக்தியும், அதன் தொடர்ச்சியாக உள்நாட்டுச்  சந்தையும் சுருங்கிய நிலையில், உற்பத்தியும் அதன் தொடர்ச்சியாக வேலை வாய்ப்புக்களும் சுருங்கின. இத்தகைய பொருளாதாரச் சூழலில் செய்ய வேண்டியது என்ன? பெரிய அளவில் அரசாங்கம் பொருளாதாரத்தில், குறிப்பாக, கட்டமைப்புத் துறையில் பொது முதலீடுகளைப் பெருக்குவதன் மூலமே நிலைமையினைச் சரி செய்ய முடியும். இந்த உடனடி நிலைமையினை 2017-18 பட்ஜெட் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறதா என்பதே இங்கு நமது கேள்வி.

சொல்லும், செயலும் – இடைவெளிகள்:

“எங்களது அரசாங்கம் மக்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்டது” என்பதுடன் தான் நிதி அமைச்ச்சர் தனது பட்ஜெட் உரையினைத் தொடங்கினார். உடனடிப் பிரச்சினைகளிலும், நீண்ட காலப் பிரச்சினைகளிலும், எதிர்பார்ப்புக்களை பட்ஜெட் எவ்வாறு நிறைவு செய்திருக்கிறது என இப்போது பார்க்கலாம்.

அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பினும், அதற்கு நேரெதிராக, மொத்த பட்ஜெட்டின் அளவே வெட்டிச் சுருக்கப்பட்டு விட்டது. சென்ற ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி பட்ஜெட்டின் அளவு ஜி.டி.பி மதிப்பில் 13.6 சதவீதம். நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அது 12.74 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அதன் உள்ளடக்கத்தினைப் புரிந்து கொள்ள முடியும்.

நிதிப்பற்றாக்குறையினை 3.2 சதவீதத்தில் ஆணி அடித்து நிறுத்துவதற்கு நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட அக்கறை மிக அதிகம். இவ்வாறு  பட்ஜெட்டின் மொத்த அளவினைக் குறைப்பதற்கான அவரது முயற்சியில் பலியானவை சாமானிய மக்களின் நலன்களேயாகும்.

நிதிப்பற்றாக்குறையினை குறைப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த அம்சங்களை வைத்தே அவரது சார்பு நிலையினைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இதை எல்லாம் மறைப்பதற்கு அவர் பயன்படுத்திய சொல்லாடல்களையும் மீறி, அவரது நடவடிக்கை அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது. அவரது வெட்டரிவாள் பட்ட இடங்கள் இதோ!

  • மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ 10,000 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தார். இது வரை இவ்வளவு தொகை இதற்கு ஒதுக்கப்பட்டதில்லை எனவும் கூறினார். ஆனால், உண்மை என்னவெனில், சென்ற ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டிலேயே அத்தொகை ரூ.47,499 கோடியாக உயர்ந்து விட்டது. இந்தியாவின் 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் நிலுவையில் நிற்கும் கூலிப் பாக்கித் தொகை மட்டும் ரூ. 13,000 கோடி இப்போது ஒதுக்கியிருக்கும் ரூ.48,000 கோடி என்பது கூடுதலாக ஒரு சதவீதம் (வெறும் ரூ.501 கோடி) மட்டுமே. வறட்சி, செல்லாப்பண நடவடிக்கையால் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதார்த்தப் பின்னணியில் இது எவ்வளவு அற்பமான தொகை என்பதை புரிந்து கொள்ள முடியாதா?
  • விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு கூடுதல் ஒதுகீடு வெறும் ரூ.20 கோடிக்கும் கீழ். ரூ 1,67,768 லிருந்து ரூ.1,87,223 மட்டுமே.
  • சிறு குறு தொழில்களுக்கான் ஒதுக்கீடு (MUDRA) ரூ. 1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.44 லட்சம் கோடியாக இரட்டிக்கப்படுகிறது என அமைச்சர் அறிவித்தார். சென்ற அறிவிப்பில் உண்மையில் செலவழிக்காமல் விட்டது ரூ.42,000 என்பதும், இவ்வாண்டும் அவ்வாறு நடக்காது என்பதற்கு அவர் எவ்வித உறுதியினையும் வழங்கவில்லை.
  • கல்விக்கும், மருத்துவ சேவைக்கும் கூடுதல் ஒதுக்கீடு ரூ.1,14,806 லிருந்து ரூ. 1,30,215.
  • உயர் கல்விக்கு ஒதுக்கிய ரூ. 8,876 கோடி என மார் தட்டும் அமைச்சர், 2015-16ல், முந்திய ஒதுக்கீட்டில் 53 சதவீதத்தை வெட்டியதையோ, இவ்வாண்டு ஒதுக்கீடு 2014 -15 ஒதுக்கீட்டின் அளவு கூட இல்லை என்பதையோ மறைத்து விடுகிறார்.

இடதுசாரி முகமூடி:

முறை சார் மற்றும் முறைசாராத் தொழில்களில் சுமார் பத்து கோடி பேர் நல்ல வருமானத்துடன் வாழும் இந்நாட்டில், 3.55 கோடி பேர்கள் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதாகவும், அதிலும் சுமார் ஒரு கோடிப் பேர் வருமான வரி விதிப்பு அளவிற்கு வருமானம் இல்லை என்று கணக்குக் காட்டுகிறார்கள் என்றார். அதே போன்று, நாட்டில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட 5.97 லட்சம்  கம்பெனிகளில் 2.76  லட்சம் கம்பெனிகள் நஷ்டக் கணக்கு காட்டுவதாகவும், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் மட்டுமே ஒழுங்காக வரி செலுத்துகின்றனர் எனவும் கூறினார்.

இந்த நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 1.25 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளன என்றும், 2015ம் ஆண்டில் மட்டும், தொழில் மற்றும் சுற்றுலா என்ற பெயரில் 2 கோடி  இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வந்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். மொத்தத்தில் பெருமளவு வரி ஏய்ப்பு நடப்பதாகவும் கூறினார். இந்தியாவில் வரி – ஜி.டி.பி வெகு குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், சமூக நீதி அடிப்படையில் பார்த்தால், நேர்முக வரிகளின் விகிதங்கள் நியாயமான  அளவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அந்த விஷயத்தில்,  இடதுசாரித் தலைவர்களை மிஞ்சும் அளவில் இருந்த  அவரது பேச்சு, நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பேச்சை அப்போது கேட்டவர்களுக்கு, அநேகமாக, அவர் உயர் வருமானங்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

ஆனால், இவரது இடதுசாரி முகமூடி சில நிமிடங்களிலேயே கழன்று கீழே விழுந்து விட்டது. தனி நபர் உயர் வருமானம் மற்றும் கார்ப்பரேட் வருமானங்கள் மீதான வரி விகிதங்களில் எவ்வித உயர்வும் இல்லை. இது குறித்து அமித் ஷாவிடம் கேட்டால், அதுவெல்லாம் பட்ஜெட் ஜும்லா என்று சொன்னாலும் சொல்லக் கூடும்.

ஒழுங்காக வரி செலுத்துகிறார்கள் என்று அவர் பாராட்டிய மாத ஊதியர்களுக்கு ஒரு சிறிய வெகுமதி. மாதம் சுமார் ரூ1,000 என்ற அளவில் வரியினைக் குறைத்திருக்கிறார். ஆனால், மறுபக்கத்தில் ரூ.50 கோடி வரையிலான வருவாய் ஈட்டும் தொழிலகங்களுக்கு கார்ப்பரேட் வரியினை 30 லிருந்து 25 சதவீதமாகக் குறைத்திருக்கிறார். இது சிறு குறு தொழில்களுக்கான சலுகை எனச் சொல்லப்பட்டாலும், பெரும் புள்ளிகளுக்கு திறந்து விடப்பட்ட புதிய கதவுகள் என்ற வலுவான ஐயத்தினை எழுப்பியிருக்கிறது.

சென்ற ஆண்டு விதித்த வரிகளை வசூலிக்காமல் விட்டும் (Revenue Forgone) இதை நிறைவேற்றியிருக்கிறார். இது வரை நேரடி வரிகளில்  வசூலாகாமல் நிலுவையில் நிற்கும் தொகை ரூ.6.59 லட்சம் கோடி. இதில் ரூ.81,406 கோடி வரையிலான தொகையில், தகராறுகள், நீதிமன்ற வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும் இந்த அளவில் நிலுவை அனுமதிக்கப்படுகிறது. வங்கிகளின் வாராக்கடன் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் என்பதும், இதில் பெருமுதலாளிகளின் பங்கு கணிசமானது என்பதும் இங்கு நமக்கு நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாதது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு கச்சை கட்டி நிற்கும் அரசின் முக விலாசம் இது தான்.

நிதிப்பற்றாக்குறையினைக் குறைக்கும் முயற்சியிலும், அவரது பாரபட்ச அணுகுமுறையினைக் காண முடிந்தது. சாதாரண மக்கள் செலுத்தும் மறைமுக வரிகளை ரூ.75,000 வரை அதிகரித்தும், நேரடி வரிகளை ரூ. 20,000 வரை குறைத்துமே அதனைச் சாதித்திருக்கிறார்.

அன்று தேர்தல் ஜும்லா; இன்று பட்ஜெட் ஜும்லா!

– இ.எம் ஜோசப் 

Related Posts