அரசியல்

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 4

ஏற்றகாலம் முழுவதும் இந்தியப் பெருமூலதனம் பீடுநடைபோட்டு முன்னேற அதன் ஒரு பகுதியான பிரதேச மூலதனம் அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டே வளர்ந்தது. இதற்கு தோதான முதலாளி வர்க்க அரசியலே திராவிட முன்னேற்றக் கழகம். அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த இந்திய பெருமூலதனத்தை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தினால் பிரதேச அளவில் உள்ளுர் மூலதனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம். இவைகளுக்கிடையிலான முரண்பாட்டின் உச்சகட்டமே தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிமாற்றம்.

 

பெருமுதலாளித்துவம் பீடுநடைபோட்டு முன்னேறுகிறது என்று சொல்லும் பொழுது மூலதனத் திரட்டல் தங்குதடையின்றி பாய்ச்சல் வேகத்தில் நடைபெறுகிறது என்று அர்த்தம். இதற்குள்ளே சென்று பார்த்தால் தொழிலாளி வர்க்கத்தின் உபரி உழைப்யைக் கைக்கொள்ளும் மூலதனத்தின் உக்கிரம் அதிகரித்திருக்கிறது என்பதும் அதன் விளைவாக தொழிலாளி வர்க்கம் சிரமத்திற்குள்ளாகிறது என்பது ஒரு புறமும் இதர முதலாளித்துவமல்லாத உற்பத்தி முறைகள் நசுக்கப்படுகிறது என்பதும் அதைச் சார்ந்து வாழும் மக்கள் பிரிவினரிடம் அது ஏற்படுத்தும் துயரமும் அதிகரித்திருக்கிறது என்பது மறுபுறமும் நடந்து வந்தது என்பது தெரியவரும். இது வெகுமக்கள் திரளிடம் கோபமாக வடிவெடுப்பதும் அது நேரடியாக அரசியல் மாற்றத்திற்கு அடிக்கோலுவதும் நடைபெறும். சுதந்திரத்திற்குப் பின்பு ஏற்பட்ட இருபதாண்டுகால முதலாளித்துவ வளர்ச்சியானது அரசியல் மட்டத்தில் ஒரு மாற்றத்திற்கான இன்றியமையாத தன்மையைத் தோற்றுவித்தது. இந்த இன்றியமையாத்தன்மையை ஆங்காங்கே செயல்பட்டுக் கொண்டிருந்த அரசியல் இயக்கங்கள் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கையிலெடுக்க முயற்சித்து வந்தது. இந்த அரசியல் மாற்றத்தின் இன்றியமையாத்தன்மை என்பது முதலாளித்துவச் சட்டகத்துக்குள் நடைபெற வேண்டிய மாற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அதன் முரண்பாட்டின் அளவு நிலை வளர்ச்சியானது பண்புநிலை வளர்ச்சி என்ற கட்டத்திற்கு வரவில்லை ஆகவே அது முதலாளித்துவ அரசியலை மறுதலிக்கும் நிலைக்கும் வரவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த அரசியல் மாற்றம் 1967ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பிரதிபலித்தது. ஒன்பது உள்ளூர் அரசாங்கங்கள் மாற்றப்பட்டன. தமிழகத்திலும் இது நடைபெற்றது. திமுக ஆட்சியைப் பிடித்தது. ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்ற மாற்றங்களை ஆய்வு செய்தால் அதற்கேயுரித்தான பிரத்யேக சூழநிலையின் வாயிலாக அவை ஏற்பட்டிருக்கும்.

 

முதலாளித்துவ நிறுவனங்கள் தோன்றுவதும் அது நிலைபெறுவதும் அது முன்னோக்கிச் செல்வதும் இயக்கவியல் விதிகளின்படிதான் நடந்தேறுகிறது. முரண்பட்ட இருஅமசங்களை கையாளும் முதல்விதியில் எதிரும் புதிருமான இரண்டு விஷயங்களில் ஒன்று வெகுமக்களுக்கோ தொழிலாளர் வர்க்கத்திற்கோ நல்லதைப் பேசினால் மற்றொன்று அதற்கு நேர் எதிரானதாக இருக்கும். இவையிரண்டும் பிரிக்க முடியாதது. தொழிலாளி வர்க்க நலன் என்ற அம்சத்தில நங்கூரமிட்டு அது தொழிலாளிவர்க்கத்திற்கு கேடுவிளைவிக்கும் விஷயத்தை முன்னெடுத்துச் செல்கிறது. தொழிலாளி வர்க்கமும் அதற்கு நலம் பயக்கும் விஷயத்தில் நங்கூரமிட்டு அதற்கு எதிரான விஷயத்தை அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான விஷயத்தை முன்னெடுத்துச் செல்லும். இந்த தள்ளுமுள்ளு எப்பொழுதுமே அடிநீரோட்டமாக நடந்து வருகிறது. என்று எனது முந்தைய பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

 

மார்க்ஸ்-ஏங்கெல்ஸால் 1848ம்ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது “கம்யூனிஸ்ட்களுக்கு ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்க நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது“ என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது. அதே அறிக்கையில் “கம்யூனிஸ்ட்கள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாக கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்க்ளை அடைய முடியும் என்று அறிவிக்கின்றனர்“ என்றும் கூறப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் உத்தியானது அங்குள்ள முதலாளித்துவத்தின் வளர்ச்சி கட்டத்தைப் பொருத்து இருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு களத்தில் இயங்கிய அரசியல் இயக்கமான கம்யூனிஸ்ட் இயக்கத்தை தொழிலாளி வர்க்கமானது அதனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு முழுவதுமாக பயன்படுத்தும் உத்தியைக் கடைப்பிடிக்கவில்லை. எதிரிவர்க்கத்தின் அரசியல் இயக்கத்திற்குள்ளேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தன்னுடைய நலனை முன்னெடுத்துச் செல்லும் உத்தியே இக்காலகட்டத்திற்கு பொருத்தமானது என்று தொழிலாளி வர்க்கம் நம்பியது. சமூகத்திரளில் பெரும்பான்மையாக வளராத ஒரு வர்க்கமானது இப்படி ஒரு உத்தியை தெரிவு செய்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை. இதை நாம் இன்றும் கூட வெளிப்படையாகக் காணலாம். கம்யூனிஸ்ட்கள் மீது நல்ல மரியாதை இருக்கிறது. ஆனால் நெருங்கி பேசினால் உங்களால் காரியத்தை சாதிக்க முடியாது ஆகவே அவர்கள் இருக்கட்டும் என்பார்கள். அதே நேரத்தில் தொழிற்சங்கம் என்று வந்துவிட்டால் அங்கே கம்யூனிஸ்ட்களே அவர்களுக்கு சிறந்த தெரிவு. இந்த நிலைப்பாட்டை நாணயமற்ற நிலைப்பாடு என்றோ சந்தர்ப்பவாத நிலைப்பாடு என்றோ கூற முடியாது. உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் அதற்கு பொருத்தமான உத்தி என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பின்தங்கிய நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சி காலத்தில் நடைபெற்று வந்த வர்க்கப் போராட்டத்தை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். அளவு நிலை மாறமால் பண்புநிலை மாறாது. பண்புநிலை மாற்றத்திற்கு ஆசைப்படுபவர்கள் அளவுநிலை மாற்றத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். இதை லெனின் கூறிய தொழிலாளி வர்க்க மேட்டிமைத்தனம் (Laour Aristocracy) என்றும் கூறமுடியாது. காரணம் தொழிலாளி வர்க்க மேட்டிமைத்தனம் என்ற வியாதியானது தொழிலாளி வர்க்கத்தில் மேலாடை போல் உள்ள மிகுந்த சௌகரியங்களுடன் இருக்கும் தொழிலாளி வர்க்கப்  பிரிவினருக்கு மட்டும் தொற்றும். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பின்னால் நிற்கும் தொழிலாளி வர்க்கப் பிரிவினர் மேட்டிமைப் பிரிவினர் அல்ல. தமிழகத்தின் தொழிலாளி வர்க்கமானது திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பின்னால் அணிதிரண்டதன் பின்னணியை இந்த அம்சத்தை வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

உற்பத்தியமைப்பு அடிக்கட்டுமானமாக இருக்கையில் அரசியல் அமைப்பு மற்ற விஷயங்கள் மேல் கட்டுமானம் என்கிறது மார்க்சியம். இந்த இரண்டுக்குமான உறவு என்பது இயக்கவியல் உறவு. அதாவது உற்பத்தியமைப்பு முறையே ஆட்சியமைப்பை தீர்மானிக்கிறது ஆனால் ஆட்சியமைப்புமுறை உற்பத்தியைமைப்பில் செல்வாக்கு செலுத்துகிறது. முன்னது பின்னதை தீர்மானிக்கிறது. பின்னதோ முன்னதன் மேல் செல்வாக்கு மட்டும் செலுத்துகிறது. அதாவது அதன் முரண்பாடுகளால் அதற்குள் ஏற்படும் மாற்றங்களில் செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே மேல்கட்டுமானம் என்பது அடிக்கட்டுமானத்திற்கு கட்டுப்பட்டு அதன் சொல்படி அப்படியே இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதர முரண்பாடுகள் செலுத்தும் செல்வாக்கின் அடிப்படையில் மேல்கட்டுமானத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் இறுதியாக அதனை தீர்மானிப்பது அடிக்கட்டுமானமே. இன்னொருபுறம் அடிக்கட்டுமானமானது மேல் கட்டுமானத்தின் தாக்கமில்லாமல் சுயேட்சையானது என்று யாந்த்ரீகமாக புரிந்து கொள்ளக் கூடாது. அடிக்கட்டுமானத்திற்குள் உள்ள உள்முரண்பாடுகளின் மோதலுக்குள் மேல்கட்டுமானம் செல்வாக்கு செலுத்தும். ஆகவேதான் அரசியல் மாற்றங்களை பொதுவாக வர்க்கப் பேராட்டத்தின் அடிப்படையில் விளக்க முடிந்தாலும் குறிப்பிட்ட கட்டத்தில் ஏற்பட்ட குறிப்பிட்ட மாற்றத்தை விளக்குவதற்கு மேல்கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிலெடுக்காமல் விளக்க முடியாது.

 

தமிழகத்தில் சமூக உற்பத்தியமைப்புமுறையில் ஏற்பட்ட மாற்றங்களானவை, முதலாளித்துவப் போட்டியில் உள்ளூர் முதலாளிகளின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் பாதையில் பயணித்தன் விளைவாகவே அதற்கு தோதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான உள்ளூர் அரசு அமைந்தது. திராவிட முன்னேற்றக் கழகமானது அடிப்படையில் உள்ளூர் முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் மேல்மட்டத்தில் அது தமிழ் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவும் பிற்படுத்தப்பட்டோரின் நலனை முன்னெடுத்துச் செல்வதாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆகவே அதன் தலைமையில் அமையும் அரசானது வெறும் உள்ளூர் முதலாளிகளின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வது மட்டும் அதன் பணியாக இருந்துவிட முடியாது. அதன் அடிப்படைய அடையாளமாகிய தேசிய இனத்தின் சுயாட்சி உரிமையையும பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காகவும் செயல்பட வேண்டும். இதில் பிற்படுத்தப்பட்டோரின் நலன் என்பது முதலாளித்துவத்தின் நலனுக்கு எதிரானது கிடையாது. இது முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையான அனைவரையும் சமமாக சுரண்டும் உரிமைக்கு எதிரானது கிடையாது. ஆகவே மேல்கட்டுமான திமுக அரசுக்கும் அடிக்கட்டுமானமான முதலாளித்துவ உற்பத்திமுறைக்கும் இந்த அம்சத்தில் மோதல் கிடையாது.

 

தேசிய இன சுயாட்சி என்பது பிரதேச முதலாளிகளுக்கு மற்ற முதலாளிகளுடன் பேரம் பேசும் கோஷமாக மட்டுமே இருக்க முடியும். பேரம் படிந்து சமசரம் ஏற்பட்டுவிட்டால் இக்கோஷத்தை மேலும் வலுவாக்கி மோதலுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிரதேச முதலாளிகளுக்கும் இதர பகுதியில் தங்கள் சுரண்டலை கொண்டு செல்லும் உரிமையும் வாய்ப்பும்  ஏற்பட்டால் எதற்காக தேசிய இன அடையாளத்தைப் பற்றி பேச வேண்டும். இந்த ஒரு அம்சத்தில் அடிக்கட்டுமானத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் ஒரு லேசான முரண்பாடு இருந்து வந்தது. அதே நேரத்தில் பேரம் படிந்தாலும் பிரதேச முதலாளி வர்க்கமானது தேசிய இன அடையாள அரசியலை முற்றிலும் கைவிட்டுவிடவும் முடியாது. காரணம்  அதனுடைய பேரத்தின் விளைவாக ஏற்பட்ட சமரசத்திற்கான அடிப்படையிலிருந்து விலகுவதாக அது காட்டிக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு போக வேண்டியதிருக்கும். எனவே அது திமுகவை அருகில் வைத்துக் கொள்ளவும் முடியாது முற்றிலுமாக தூக்கியெறியவும் முடியாது. எதிரும் புதிருமான இந்த இரண்டு நிலைகள் செயல்படும் முரண்பாட்டுக்குள் பிரதேச முதலாளித்துவம் சிக்கிக் கொண்டது. அதற்கு தற்காலிகத் தீர்வே உள்ளூர் தேசிய இனஅடையாளத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அகில இந்திய தேசியத்துடன் இணக்கமாகும் ஏற்பாடு தேவைப்பட்டது. இந்த முரண்பாடு உருவாக்கிய இன்றியமையாத சூழலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிளவுக்கு வித்திட்டது. அது எம்ஜிஆர் என்ற மனிதர் வாயிலாகவும் அவர் தலைமைக் கழகத்திடம் கணக்கு வழக்குகளை கேட்பது என்ற தற்செயல் நிகழ்வுகள் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. எம்ஜிஆர் என்பதை தற்செயல் என்று கூறுவதை எளிமையான விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது இதற்குள் உள்ள மற்ற இன்றியமையதாத தன்மையை பின்னர் விவாதிக்கலாம்.

 

இந்த நிகழ்வு நடக்கும் நேரமானது உலக முதலாளித்துவத்தின் ஏற்றகாலத்தின் முடிவையும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் முதலாளித்துவ சுணக்கத்தின் துவக்கத்திலும் ஏற்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. பிரதேச முதலாளித்துவமும் காலூன்றி கோவை உள்ளிட்ட நகரங்களில் தொழில் நடத்திய உள்ளூர் முதலாளிகளுக்கு அகில இந்திய சந்தை கிடைப்பதையும் அகில இந்திய பெருமுதலாளிகளின் மன்றத்திற்குள் உள்ளூர் முதலாளிகள் நுழைவதுமான வளர்ச்சிப் போக்கு முற்றிய நிலையில் இப்பிளவு நடைபெற்றது என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

…..தொடரும்

Related Posts