பிற

ஜாதியற்றவளின் குரல் – வாசிப்போம் விவாதிப்போம் …

புலனாய்வுக் கட்டுரை எழுதத் துவங்கிய முதல் தலித் பெண் எழுத்தாளர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அநேகமாக இவர்தான் என்று எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடும் ஜெயராணி அவர்கள் எழுதி தலித்முரசு பத்திரிக்கையில் வெளிவந்த 37 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.இதை கருப்பு பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இவையனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் தலித்துகள்,பெண்கள்,மற்றும் சிறுபான்மையினர் சந்திக்கும்  பல்வேறு பிரச்னைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்த எழுத்துகள் இவரின் கடும் உழைப்பையும் ஆழ்ந்த மனித நேயத்தையும் காட்டுகின்றன.

ஆனாலும் பெரும்பாலான கட்டுரைகள், இந்நூலாசிரியர் குறிப்பிடுவது போல உழைப்பாளிகளாக, அறிவாளிகளாக, பேச்சுத்திறன் கொண்டவர்களாக, அன்பானவர்களாக எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் அடிமைத் தனத்தைக் கரைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடிகிற திறன் கொண்ட தலித் மக்கள் பற்றியது. யாரானாலும் இவைகளை ஒருசேரப் படிக்கும்போது மனம் கனத்து கண்ணீரும் சாதிய சமூகத்தின் மேல் ஆத்திரமும் வருவது தவிர்க்க இயலாதது.

ஒவ்வொரு இந்தியரையும், ஜாதி, ஆதிக்கவாதியாகவும் அடிமையாகவும் ஒருசேர வைத்திருக்கிறது. ஆதிக்கமும் அடிமைத்தனமும் தனித்தனி வெளியில் இயங்கவில்லை. அடிமைத்தனத்தின் ஆழம் ஆதிக்கத்தின் உயரமாக நீண்டு பார்ப்பனீயத்தின் உச்சத்தைத் தொடும்வரை    ஜாதியின் அடுக்குகள் அளக்க முடியாததாக பரந்து விரிந்து கிடக்கிறது.ஜாதியால் அடிமைகளாக்கப்பட்ட தலித் மக்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை புதிரை வண்ணார்களின் வாழ்வியல் அனுபவத்தோடு நமக்கு எடுத்துரைக்கிறார்.

ஜாதியை பிரிவினையாகக் கருதாமல் அதைக் கூட்டுணர்வாகவும் ஒற்றுமயாகவும் நம்புகின்றனர். இந்து மதம் ,அதன் கடவுள்கள்,சாதிகள்,ஆகியவை முற்றிலும் ஒழிக்கப் படாமல் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் அனைவரின் உண்மையான விடுதலை ஒருபோதும் முடியாது என்று கூறும் இவர் விடுதலைக்கான முதல் நிபந்தனை நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை உணர்வதுதான் என்கிறார்.

இந்த அளவு ஆழமாக சிந்திக்கும் இவர் இன்னும் கூட சில விபரங்களை ஆதாரத்தோடு தெரிந்து கொள்ள முயற்சித்திருந்தால் சமூக மாற்றத்திற்காகப் போராடக் கூடிய இடதுசாரிகளைப் பற்றி சில தெளிவான முடிவுகளுக்கு வர முடிந்திருக்கும். அது தலித் மற்றும் பெண் விடுதலைப் போராளிகளுக்கு பலம் சேர்ப்பதாயும் நம்பிக்கை அளிப்பதாயும் இருந்திருக்கும்.

இந்த புத்தகம் படித்தவுடன் கூடுதலாக சில விபரங்களைக் கூறத் தோன்றியது. பெண் , உழைப்பாளி,பிரஜை என்று மூன்று தளங்களிலிருந்து பிரச்னைகளை எதிர்கொள்பவளாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதையும் தலித் பெண் கூடுதலாக சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்திக்கிறாள் என்ற புரிதலிலிருந்து பெண்ணிய பிரச்னைகளை அணுகினால்தான் தீர்வை நோக்கி நகர முடியும்.

மனித மனங்களில் சாதி உணர்வு தொலைய வேண்டுமென்றால் கலப்பு மணங்கள்தான் தீர்வு என்ற அம்பேத்காரின் கருத்துகளை உள்வாங்க வேன்டும். அதோடு ஆணை மையமாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் வாரிசு முறை ஆணாதிக்கம் இதற்கு மிகப் பெரிய இடையூறாக இருப்பதை மனதில் கொண்டு இதில் முறிவை ஏற்படுத்த போராட வேன்டும்.

வெற்றிடத்திலிருந்து யாரும் எதற்காகவும் போராட முடியாது. எனவே நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி என்ற முறையில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் யாருக்காக யாரைக் கொண்டு போராடுகிறோம் என்பதிலிருந்து துவங்க வேண்டும் என்பதை மனதில் கொள்வது சிறப்பு.

கயர்லாஞ்சியும் திண்ணியமும் மிகக் கொடூரமான அனுபவங்கள் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை. சாதி, இனம், மொழி, மதம் என எதுவானாலும் உணர்வு வெறியானால் மதம் பிடிக்கும்.இதில் ஆண் பெண் பேதமில்லை என்பதை உணர்ந்து பிரச்னைகளை அணுக வேண்டியுள்ளது.

பார்ப்பனராகவோ தலித்தாகவோ யாரும் கேட்டுப் பிறப்பதில்லை.பிறந்தபின் சமூகத்திற்கு ஆற்றும் கடமைகள்தான் ஒருவரை நேசிக்கவோ வெறுக்கவோ வைக்கின்றன.வெண்மணியின் கொடூரத்தைச் சந்தித்து சாதியாகவும் வர்க்கமாகவும் நின்று போராடிய தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட தலித் விடுதலைப் போராட்ட அனுபவங்களையும் அசை போடுவோம்.

இறுதியாக நூலாசிரியர் கூறுவது போல் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை மாறிப்போனதால் நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகி விட்டன.நாம் ஒவ்வொருவரும் நம்முள் பெருமையாகவோ இழிவாகவோ சுமந்து கொண்டிருக்கும் சாதியை துறந்து சாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு அறைகூவி அழைக்கும் மனிதநேயக் குரலுக்கு செவிமடுப்போம்.

வாசிப்பதற்குத் தூண்டும் எளிய அழகு நடையில் சுவாரஸ்யமாக எழுதப் பட்டுள்ள இந்தக் கட்டுரைகளை வாசிப்போம். விவாதிப்போம்.

Related Posts