அரசியல்

ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் ஏன்?

 

சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகான மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட உலகமயம் தனியார்மயம் தாராளமயம் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்  அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்திய நாட்டின் சுயச்சார்பான பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது.

மத்திய அரசு. சுதந்திரமடைந்து நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அன்றைய இந்திய முதலாளித்துவ வர்க்கம் முன்வராத நிலையில் பாம்பே திட்டம் என்ற திட்டத்தின் மூலம் அரசையே முதலீடு செய்ய சொன்னார்கள் அன்றைய முதலாளிகள். ஏனென்றால் முதலீடு செய்ய வேண்டிய அனைத்து துறைகளும் உடனடியாக இலாபம் கொடுக்கக்கூடிய துறைகள் இல்லை என்பதை நன்கறிந்தே வைத்திருந்தனர்.புதிய நாட்டைக் கட்டியமைக்க மக்களின் வரிப்பணத்தில் தொடங்கியதுதான் பொதுத்துறை நிறுவனங்கள்.1950 முதல் 1970 கள் வரை கேந்திர தொழில்களான சுரங்கத்துறை, பெட்ரோலியத்துறை, மின்சாரத்துறை, கனரகத்தொழில்கள்,  வங்கித்துறை, காப்பீட்டுத்துறை என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு துறைகளை அரசே மேற்கொண்டது.பிரம்மாண்டமான பொதுத்துறை தொழில்கள் 30- லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு உருவானது. இந்தியா போன்ற சாதி பேதமிக்க நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களை பொருளாதார சமூக ரீதியாக உயர்த்தியதில் பொதுத்துறைகளின் பங்கு மகத்தானது.உலகமயம் என்ற கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களை நாட்டிற்குள் அனுமதித்த போதும் பொதுத்துறைகள் தங்களின் சிறப்பான செயல்பாட்டால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் இருந்தன.ஆகையால் பொதுத்துறைகளை சீரழித்தால் மட்டுமே பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக இந்திய நாட்டை மாற்ற முடியும் என தெரிந்துக்கொண்ட மத்திய அரசு பொதுத்துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கின

பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக நீதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்புகளும் பறிபோய்விடும். மேலும் பொதுத்துறைகள்தான் அரசிற்கு சரியான முறையில் வரியும், ஈவுத்தொகையும் வழங்கி நாட்டின் வளர்ச்சிக்காக பங்காற்றி வருகிறது.

பாஜக ஆட்சியில் பொதுத்துறைகள்ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி பொய்த்துப்போக நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்து பாதுகாப்போம், நல்லகாலம் பிறக்கிறது (அச்சே தின்) என்ற வெற்று வாய் ஜம்பத்தால் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு வழக்கம்போல மக்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் சேவையாற்றத் தொடங்கியது.இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலையாக தனது கார்ப்பரேட் சாகாக்களை இரயில்வே துறையை ஏலம் எடுக்க அழைத்ததன் மூலம் தனது கார்ப்பரேட் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.மேலும் இரயில்வே அச்சகங்களையும் மூடிவிட்டது.அதுமட்டுமின்றி இரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் 47 விழுக்காடு மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி பிரச்சாரத்தை மேற்கொள்ள அறிவிப்பையொன்றையும் வெளியிட்டுள்ளது.

பொதுத்துறைகளை விற்பனை செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு கேவலமான கொள்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்து.IPO, FPO, OFS,ETF,STRATEGIC SALE, BUY BACK மற்றும் ஏலம் விடுவதன் மூலம் என, பல்வேறு வழிகளில் பொதுத்துறைகளை சீரழித்து வருகிறது.மேற்சொன்ன திட்டங்களால் 2017-2018 ஆம் ஆண்டுகளில் மட்டுமே சுமார் 46,246 கோடி ரூபாய்க்கு பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்திருக்கிறது.2019-2020 -ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 90,000 கோடி அளவிற்கு பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த வகையில் தற்போது BPCL MRPL, AIR INDIA, SAIL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்தத் தொகையை ஈட்டுவதற்கு நிறுவனங்களின் பங்குகளை மட்டுமல்லாமல் நிலம் உள்ளிட்ட இதர சொத்துக்களையும் விற்பனை செய்வதற்காக (ASSETS MONETISATION )சொத்துக் கண்காணிப்பு கட்டமைப்பு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.பொருளாதார வீழ்ச்சியும் வேலையின்மையும் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இலக்கு என ஆட்சியாளர்கள் கதையளந்தாலும் உண்மை நிலை மிக மோசமாக இருக்கிறது

நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி கடும் சரிவை சந்தித்திருக்கிறது.8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி 2% அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம் 5.4% அளவிற்கு அதிகரித்துள்ளது.நாட்டின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையேயான வித்தியாசம் ஒட்டுமொத்த GDP -யில் 3.3% மட்டுமே இருக்க வேண்டும் என அரசே இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் தற்போதைய உணவுப் பொருட்களின் விலை பணவீக்கமானது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை 36% அதிகரித்துள்ளது.வெங்காய விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் ‘வெங்காயம் சாப்பிடும் பழக்கம் எனக்கில்லை’ ஆகையால் அதைபற்றி எனக்குத்தெரியாது என நிதியமைச்சர் பொறுப்பற்ற பதில் அளிக்கிறார்.மேலும் அரிசி, பருப்பு, கோதுமை, பால் உள்ளிட்ட 22 அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.ஆட்டோ மொபைல் துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உற்பத்தியை மாதக்கணக்கில் நிறுத்திவிட்டு நிறுவனங்களில் வேலை நாளை குறைத்துவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை வேலையைவிட்டு துரத்தியிருக்கிறது.

நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது.கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒரு புதிய முதலீடுகளும் இந்தியாவில் செய்யப்படாத நிலையில் பன்னாட்டு நிறுவனங்களே முதலீடு செய்வதற்கு அஞ்சும் அளவிற்கு நாட்டை மாற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.தங்களது வர்க்க நலனை பாதுகாக்க உள்நாட்டு முதலாளிகளால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பாஜகவானது தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதற்காக அவர்களையும் கைவிட்டுவிட்டது.நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இன்றைக்கு நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கடந்த ஆட்சியில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த மக்கள் விரோத கொள்கைகளேயாகும்.குறிப்பாக பணமிதிப்பிழப்பு என்ற பெயரில் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியதும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி என்ற பெயரில் GST யை கொண்டு வந்து நாட்டில் 90% வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் சிறு குறு தொழில்களை அழித்தொழித்ததே பாஜக அரசின் சாதனையாகும். மேலும் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் உழைப்பை சுரண்ட FTE NEEM போன்ற திட்டங்களை வகுத்து நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளில் ஒப்பந்த முறையை அமுல்படுத்துகிறது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் தொழிற்துறை நலிவடைந்து சமார் 90 லட்சம் பேர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர் இதில் 95% பேர் ஒப்பந்த தொழிலாளர்களாவார்கள்.பணிப்பாதுகாப்பின்மையாலும் சட்டப்படியான குறைந்தபட்சம் ஊதியம் இல்லாமலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் தொடர்கதையாகிறது.

பொதுத்துறை வங்கிகள் சீரழிப்பும் வாராக்கடன் தள்ளுபடியும் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 67 ஆண்டுகளில் இந்தியா பெற்ற மொத்தக் கடன் ரூபாய் 54 லட்சம் கோடி என்றால் பாஜக ஆட்சியின் 5-ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்களை கடனாக பெற்று இந்திய நாட்டின் மொத்த கடன் சுமையை 84 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது.மேலும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணத்தை, கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் மொத்தம் 51 முதலாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார்கள்.இவர்கள் வாங்கிய மொத்தக் கடன் 17 ஆயிரத்து 947 கோடியே 11 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு, நகைக் கடனுக்கு மானியம் ரத்து மேலும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரிக்கை வைத்தால் முதலாளிகளின் கடனை வாராக்கடனாக்கி பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்து விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளுகிறது மத்திய அரசு.

தொழிலாளர் நலச் சட்ட திருத்தமும் மக்கள் விரோத சட்டங்களும்தொழிற்சங்கங்களை 45 நாட்களுக்குள் பதிவு செய்யும் ILO வின் 87 மற்றும் 98 சரத்துகளை உடனே அமல்படுத்தாமல் இந்திய நாட்டு பாட்டாளி வர்க்கம் போராடிபெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்கிறது. தொழிலாளர்களுக்கு அரணாக உள்ள பெருமுதலாளிகளின் சுரண்டலை கட்டுக்குள் வைத்திருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களை ஊதிய விகிதங்கள்; தொழிலக உறவுகள்; சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு; தொழிலாளர் சுகாதாரம் மற்றும் பணிநிலை மேம்பாடு ஆகிய நான்கு தலைப்புகளுக்குள் தொகுத்து மொத்தமே நான்கு சட்டங்களாக மாற்றுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொழிலாளர் ஊதியங்கள் சட்டத் தொகுப்பு ( Code on wage) மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 28-ம் தேதி தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த மசோதா இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட வகை செய்கிறது.இந்த சட்டம் முதலாளிகள் விருப்பம்போல் தொழிலாளர்களை பணியில் அமர்த்தவும் துரத்தவும் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது. இதற்கு முன்பு சட்ட விதிகளின் குறிப்புகளில் ஒன்று என்ற அளவில் மட்டும் வகைபடுத்தப்பட்டிருந்த ‘குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான வேலைவாய்ப்பு’ (FIXED TERMS EMPLOYMENT) என்பதனை சட்டத்தின் ஒரு பகுதியாகவே மாற்ற வழி செய்கிறது. இந்த மசோதா சட்டமானால் நமது சந்ததியினர் கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக்கப்படுவார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

1926 தொழிற்சங்க சட்டம், தொழிலாளர் நிலையானை சட்டம், மற்றும் 1947 தொழில்தாவா சட்டம் ஆகிய மூன்றையும் ஒரே தொகுப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதா தொழிற்சாலைகளில் தொழிற் சங்கங்கள் அமைப்பதை முற்றாக தடுக்கும் நோக்கத்தோடு வரையறுக்கப்பட்டுள்ளது.UAPA : சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைச்) சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தத்தில் எவர் ஒருவரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கான சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்குகிறது. இது நாட்டின் எந்த மாநிலத்திலும் இருக்கும் எவரையும் அந்த மாநில அரசிற்கு தெறிவிக்காமல் ஒருவரை கைது செய்ய அதிகாரம் பெறுகிறது.மேலும் பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவரை தகுந்த சாட்சியங்களுடன் அரசுதான் குற்றவாளி என நிருபிக்க வேண்டும்.ஆனால் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் தன்னை குற்றவாளி இல்லை என நிருபிக்க வேண்டும் எனக் கூறுகிறது.இந்த போக்கு நாட்டு மக்களை துன்புறுத்த வழிவகை செய்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் : இந்த சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு இடதுசாரிகளையே சாரும்.இந்தச் சட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.கடந்த காலங்களில் அரசின் பல மோசமான நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வந்ததில் இந்தச் சட்டம் முக்கிய பங்கு வகித்தது.தற்போதைய அரசு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் இந்தச் சட்டத்தை திருத்த முனைகிறது.

வன உரிமைச் சட்டம்:

வனங்களில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும், வனத்தின் மீதான அம்மக்களின் உரிமையை தக்க வைத்துக்கொள்ளவும் உரிமை வழங்குகிறது.ஆனால் தற்போது காடுகளிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளின் கனிம வளக்கொள்ளைக்காக காட்டை திறந்துவிட இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.பெரும் கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றும் விதமாக சர்வதேச நிதிசேவை மைய ஆணைய மசோதாவை கொண்டுவந்துள்ளது பாஜக அரசு.மேலும் இந்த நிதி சேவை மையத்தால் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்காகவும் மத்திய அரசையோ இந்த ஆணைய அதிகாரிகளையோ எந்தவிதமான சட்டபூர்வ நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை முறைபடுத்தும்14 சட்டங்களின் அதிகாரத்தையும் பறித்துள்ளது இந்த மசோதா.

ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்திலே குவிப்பதன் மூலம் நாட்டை வழி நடத்த முடியாது என பொருளாதார வல்லுநர்களே எச்சரிக்கும் வண்ணம்தான் இன்றைய ஆட்சி இருக்கிறது.

நாமும் பங்கெடுப்போம்………

நாட்டின் சுயசார்பான பொருளாதார கட்டமைப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறைகள் மற்றும் நாட்டு மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மத்திய அரசின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும் மத்திய தொழிற்சங்கங்களும் பல்வேறு துறைவாரி சம்மேளனங்களும், மத்திய, மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் என பலதரபட்ட தொழிற்சங்கள் கூடி விவாதித்து

பொதுத்துறைகளை விற்பனை செய்வதை நிறுத்து….
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து…
தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தாதே….
அமைப்புச்சார தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்….
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு…..
விவசாயிகளின் விலை பொருளுக்கு சாமிநாதன் கமிட்டியின் விலையை உத்திரவாதப்படுத்து……


உள்ளிட் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 8 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்துவதென முடிவு செய்து நாட்டு மக்களையும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபெறுமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போதைய இந்த அரசின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் பொருட்டு அனைத்துப் பகுதி மக்களும் தங்களிடமுள்ள வேற்றுமைகளை களைந்துவிட்டு நம்மை பாதுகாக்க நாட்டை பாதுகாக்க இந்த வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம்.

– சிலம்பரசன்.

 

 

Related Posts