பிற

‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

1990 களில் புதிய பொருளாதரக் கொள்கை அறிமுகப்பட்டதன் பிறகு ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் தங்கள் கிளைகளை பரப்பின. அவற்றில் மிக முக்கியமானவை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள். இவை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நம் மாநில அரசுகளிடம் மலிவான விலைக்கு நிலங்களை விலைக்கு வாங்குகின்கின. மேலும் அரசுகள் இவர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மானிய விலையில் வழங்குகின்றன. அரசு முதலீட்டிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கல்விக் கடன் உதவியோடும் படித்த ஏராளமான பட்டதாறி இளைஞர்கள் இரவு பகலாக வேலைசெய்கின்றனர். இவற்றின் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறக்குறைய 4% அளவு பங்களிக்கும் சேவைத் துறையாக இத்துறை உள்ளது.

சட்டங்களுக்கு கட்டுப்படுமா?

இந்தியாவில் 3 மில்லியன் மக்கள் நேரடியாகவும் 9.5 மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் இத்துறையால் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நம் நாட்டில் மனித வளம் அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்புள்ள இந்தத் துறை அரசுகளின் கட்டுப் பாட்டில் இல்லை.

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிரான உரிமை மீறல்களை கேள்வி கேட்க நம் நாட்டு சட்டங்களுக்கு அதிகாரம் இல்லை. இந்த நிறுவனங்களின் எல்லைக்குள் இந்தியாவின் தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது இல்லை. இரவு பகலாக உழைப்பை உறிஞ்சும் இந்த நிறுவனங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை.

8 மணி நேர வேலை:

ஒரு நாளில் 8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற முழக்கத்தோடு, அமெரிக்காவின் சிக்காகோ நகரத் தெருக்களில் திரண்டு போராடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நினைவாக நாம் மே தினத்தை கடைப்பிடிக்கிறோம். இந்த நாளிலும் நம் இளைஞர்கள் நவீன கொத்தடிமைகளாய் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடத்தப்படுகின்றனர். இவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படவில்லை, விடிய விடிய வேலை பார்ப்பவர்களிடம், வீடு திரும்புகையில் மடிக் கணினியை கொடுத்தனுப்புவதன் மூலம் இந்த நிறுவனங்கள் அவர்களை 24 மணி நேரமும் தங்களின் கட்டுப் பாட்டிலேய வைத்துக் கொள்ள விரும்புகின்றன.

உலகிலேயே தொழில்நுட்பத்தில் மிகுந்த நிபுணத்துவம் கொண்ட இந்தியாவின் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கு அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் ஊழியர்கள் பெரும் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு கூட வழங்கப்படுவதில்லை. மேலும் ஊதியம், ஊதிய உயர்வு, பணிகொடை ஈட்டு நிதி ஆகியவற்றை தான் தோன்றித் தனமாகத்தான் அந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

கலாச்சார தாக்குதல்:

தங்களுக்கு எதிரான குரல் எழும்பாமல் பார்த்துக் கொள்வதில் உளவியல் சார்ந்த பல வழிகளை ஐடி நிறுவனங்கள் கையால்கின்றன. ஒப்பீட்டளவில் அதிக ஊதியம் பெறுகின்றன ஐடி தொழிலாளர்களின் வாழ்க்கை ஆடம்பர நுகர்வு மயத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது. மேலும், நாட்டு நடப்பு பற்றி பிரக்ஞை அற்றவர்களாகவும், கார்பரேட் சாமியார்களின் போதனைகளுக்கு ஆளானவர்களாகவும் அவர்கள் மாறிட நிறுவனங்களே முயற்சியெடுக்கின்றன. சுரண்டலுக்கு எதிராக கேள்வி கேட்காத, பெருநிறுவனகளுகக்கான அடிமைகளை உருவாக்கும் நமது பள்ளி/கல்லூரிக் கல்வி முறை இவர்களின் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கிறது.

இயற்கையின் சுழற்சிக்கு எதிராய் பணியாற்றும் ஐடி தொழிலாளர்களில் ஒரு பகுதி தங்கள் மன உளைச்சலின் காரணமாக எளிதில் எளிதில் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிறது. பலர் மூளை சிதைவு நோய்க்கு ஆளாவதும் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து இருக்கிறது. ஒருபக்கம் நிரந்தரமற்ற வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்கள், வாழ்க்கைச் சூழலின் மீது தாக்குதலையும் பொருளாதார சுரண்டலையும் தொடுத்து வருகின்றன.

பாதுகாப்பற்ற பெண்கள்:

ஐடி நிறுவன வளாகங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதை உமா மகேஸ்வரி, வைசியா உள்ளிட்ட பெண்களின் மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன. விசாகா வழக்கு, வர்மா கமிஷன் உள்ளிட்டவை பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தும் வகையில் அமைக்க சொன்ன பாலின சமத்துவக் குழுக்கள் பற்றிய பரிந்துரையை இந்த நிறுவனங்கள் பொருட்படுத்துவதே இல்லை. சில நிறுவனங்கள் அவற்றை பெயரளவிற்கே அமைத்து உள்ளன. அவற்றின் செயல்பாடு குறித்து நிறுவன பெண் ஊழியர்களுக்கு தெரியப் படுத்துவதும் இல்லை.

இப்படி எந்த வகையிலும் இந்திய மக்களை மதிக்காமலும், கட்டற்ற அதிகாரத்துடன் தனித் தீவுகளாக இயங்கும் இவ்வகை நிறுவனங்கள், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு நமது அரசியலைமப்பும் காரணம். பல நாடுகளில் அன்னிய தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்படும்போது, தங்கள் மக்களுடைய பாதுகாப்பும், அடிப்படை உரிமைகளையும் அரசுகள் பாதுகாக்கின்றன. இந்த அணுகுமுறையை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட.

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் – இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.

Related Posts