அரசியல்

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது.

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் 10 கட்டளைகள், 100 நாட்களுக்கான திட்டங்கள் என ஒரு பக்கம் கவர்ச்சி அறிவிப்புகள் வந்தபடியிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் மக்களிடம் அப்படியே இருக்கின்றன.

“வளர்ச்சியும், பண வீக்கமும் அரசின் முன் இருக்கும் முக்கிய சவால்கள்” என தெரிவித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த சூழலில் கடந்த சில தினங்களில் ‘பங்குச் சந்தை’ புள்ளிகள் குறைகின்றன. இப்போது இது மோடி விளைவல்ல, மாறாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற அரசு முயல வேண்டும் என ஊடகங்கள் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது. இது ஒரு மிரட்டலும் கூட. அடுத்த அடுத்த நாட்களில் வெளிவரும் செய்திகளைப் படித்தால், பழைய அரசைப் போலவே, புதிய அரசும் இந்த மிரட்டலுக்கு பணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

நேற்று நள்ளிரவில் டீசல் விலை உயர்த்தப்பட்டது. டீசல் விலை எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் ஏற்றிவிடும். ரயில் கட்டணத்தில் உயர்வு இருக்கும் எனச் சொல்கிறார் புதிய ரயில்வே அமைச்சர். பண வீக்க விசயத்தில் இந்த அரசின் பார்வை இவ்வளவுதான். ஆனால், அதே சமயம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவில்லை என அறிவித்த அவர்கள், ஆயுத தளவாட உற்பத்தியில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளனர்.

இப்போதும் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. இந்தச் செய்திகள் எல்லாம், பத்திரிக்கை தலைப்புகளில் சிறிய அளவில் மட்டும் இடம்பிடிக்கின்றன. அவற்றின் விளைவுகள் ஒன்றும் மிகச் சிரிய அளவில் இருக்கப் போவதில்லையே?.

இத்துடன், புதிய அரசு அமைதியை சீர்குலைக்கும் அச்சமூட்டலையும் கொண்டிருக்கிறது. “முஸ்லிம்கள் சிறுபான்மை அல்ல” என்று பேசியுள்ளார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர். காஷ்மீர் விவகாரத்தை கிளறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் முந்திக்கொண்டு தன் கருத்தை முன்வைக்கிறது. ஸ்மிருதி ராணியின் மோசடி வெளிவருகிறது. வெளிக் கொண்டுவந்த அலுவலர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஒரு வாரத்தைக் கூட தாண்டியிருக்காத நிலையில், புதிய அரசின் அரசியல் இப்படித்தான் இருக்கப் போகின்றன என்பது எந்த விதமான விளைவுகளை உண்டாக்கும்?

மற்றொரு பக்கம் ஊடகங்களின் போக்கை தீர்மானிப்பதில் கார்பரேட்டுகள் ஆர்வத்துடன் கைவைத்துள்ளனர். தனியார் தொலைக்காட்சிகளில் பெரும் நிறுவனங்களின் பங்கு கடுமையாக உயர்ந்திருக்கிறது. நெட்வொர்க் 18 நிறுவனத்தை கடன் உதவி மூலம் கைப்பற்றியிருந்த ரிலையன்ஸ், முதலில் அந்த நிறுவன ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பியது, இப்போது நிறுவனத்தின் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் பெரும்பகுதி பங்குகளை வளைத்துப் போட்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் ஊடகங்களை சரியாக செயல்படுத்தினால், நமக்கு தேவையான அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் செயல்படுகின்றனர். “நல்ல காலம் வரப்போகுதே” என்ற துள்ளல் இசைப் பாடலை ரசித்தபடி, “தாமரையில்” பட்டனை அழுத்தியவர்களுக்கு உண்மை புரிய வேண்டும். “இந்த முறை அமைந்திருப்பது மோடி அரசு” … ஆம் … ஆனால், எந்த முறையும் இது கார்ப்பரேட் அரசு.

Related Posts