சமூகம்

குவாடன் பெய்லஸ் #iStandWithQuaden

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்தவன் குவாடன் பெய்லஸ் எனும் இந்தச்சிறுவன். எலும்பு வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டவன். இதனால் தலை பெரியதாகவும் உயரம் குறைவாகவும் இருக்கிறான். இந்திய சமூகம் போன்று சமச்சீரற்ற வளர்ச்சி.

அவன் படிக்கும் பள்ளியில், இங்கு பார்ப்பனர்கள் சூத்திரர்களையும், சூத்திரர்கள் பஞ்சமர்களையும் கேலி செய்வது போல,மாணவர்களால் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளான். இதனால் பலமுறை மனமுடைந்து வந்த அவனை அவரது தாயார் யர்ராகா பெய்லஸ் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவந்தார்.

கேலி கிண்டலால் மிகவும் உடைந்துபோன அவன், “யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்!, எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்” என்று கதறியிருக்கிறான். இந்த வீடியோவை அவரது தாயார் கேலி மற்றும் கிண்டலுக்கு எதிரான கடும் விமர்சனத்துடன் வெளியிட சமூக வலைத்தளங்களில் உலகமெங்கும் இருக்கும் மக்கள் பலரையும் சென்று சேர்ந்தது அவனது குரல்.

அதற்குச் செவிசாய்த்து பலரும் குவாடனுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர். மார்க்சிய,அம்பேத்கரிய, பெரியாரியச் சிந்தனை கொண்டோர் உலகெங்கிலும் உண்டு.

ஹூக் ஜாக்மேன் ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலங்கள் வரை பலரும் இதுகுறித்து பேசிவருகின்றனர். #iStandWithQuaden என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலானது.

National Rugby League வீரர்கள், குவாடனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டனர். குவாடனை அவர்களோடு மைதானத்தில் அழைத்துக் கௌரவிக்க ஆசைப்பட்டனர். அதை நேற்று நிறைவேற்றியும் உள்ளனர். மைதானத்தில் ஜெர்ஸி அணிந்த குவாடன் கேப்டன் ஜோயல் தாம்ப்சன் கைபிடித்து முன்னே செல்ல ஆல்ஸ்டார்ஸ் ரக்பி அணி பின்வந்தது.

இதுகுறித்து பேசிய குவாடனின் தாயார் யர்ராகா பெய்லஸ், “மிகவும் மோசமான நாட்களிலிருந்து அவன் வாழ்வின் சிறந்த நாட்களாக இவை மாறிவருகின்றன” எனத் தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் ரக்பி மைதானத்திற்குள் வரும் குவாடனின் இந்த புகைப்படம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடி புகுந்துள்ளது.

இயற்கையில் தனித்த ஒன்று
எப்போதும் இருந்ததில்லை.
ஒவ்வொன்றுக்கும்
மற்ற ஒன்றோடு
தொடர்பு உண்டு.

அந்த மற்ற ஒன்று
அதன் முன்னே இருக்கும்
அதன் அருகில் இருக்கும்
அதன் கீழே இருக்கும்
அதன் மேலேயும் இருக்கும்.

ஒன்று உறுதி
கண்டிப்பாய் இருக்கும்
என்பதே அது.

சூர்யா சேவியர்.

Related Posts