அரசியல்

தெகல்கா வழக்கும், அது எழுப்பும் சில கேள்விகளும் !

கட்டுரையாளர் – பிருந்தா காரத்
(Member of the Polit Bureau
CPI(M) and
former Member of Parliament)

‘தெகல்கா’ (Tehelka) பத்திரிகை நிறுவனத்தில் அலுவலக வேலைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது உடன் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணிடம்  தலைமைப் பதிப்பாசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கோவா அரசாங்கமும் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளன. இது மிகச் சரியான நடைமுறை. பொதுவாக பாலியல் குற்றங்களைப் பொறுத்த வரை, காவல்துறை தானாகவே நடவடிக்கை எடுக்க வேண்டிய “வாரண்ட்” தேவையில்லாத குற்றங்களாகும். மேலும் இது போன்ற குற்றங்கள் பற்றிய தகவல் பொது தளத்தில் வெளியாகும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசின்  கடமையாகும்.  தெகல்கா ஏட்டினைப் பொறுத்த வரையில் பெண்களுடைய உரிமைகளுக்காகவும், சமூகத்தில் உள்ள பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அடிக்கடி குரல் கொடுக்கக் கூடிய ஒரு நிறுவனமாகும். அத்தகையதொரு நிறுவனத்தின் மதிப்பிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், ஸ்தாபன ரீதியாக ஒரு ஒழுக்க நடத்தை விதி மீறல் நடந்தது என்பது, தெகல்காவினை பாராட்டி அங்கீகரிப்பவர்களை அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியது.

பாலியல் குற்றங்களைப் பொறுத்த வரையில் அந்த குற்றம் பதிவு செய்யப்படுவது என்பது பாதிக்கப்பட்ட நபர் இந்தக் குற்றத்தைப் பற்றி பேச முடிகிற சூழலில் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பொறுத்து அமையும். பொதுவாக இந்தக் குற்றங்கள் பல நேரங்களில் பதிவு செய்யாமல் விடப்படுவதும் உண்டு.  அதற்கு பல காரணங்கள் உள்ளன.  சமூகத்தில் உண்டாகும் அவமானம், மன அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையிலான சட்ட நடவடிக்கைகள், அதிகாரிகளின் வெறுப்பான அணுகுமுறை, பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பும் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள், இது மாதிரியான குற்றங்களை பதிவு செய்வதை விரும்பாமல் தடுப்பது போன்றவை தான் இதற்கான காரணங்கள்.  இதன் காரணமாக, பல குற்றங்கள் வெளியில் சொல்லப்படாமலே மறைக்கப்பட்டு விடுகின்றன.  இதனால் குற்றத்தினை செய்தவர் தப்பிவிடுகிறார்.  வேலை பார்க்கும் பெண்ணை எடுத்துக்கொண்டால், ஒரு மேலதிகாரியின் கீழ் வேலை செய்யும் பெண்ணாக அந்த பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் பட்சத்தில் இது மாதிரியான குற்றங்களைப் பதிவு செய்வது இன்னும் சிக்கலை ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது.  அப்படி குற்றம் வெளியில் சொல்லப்பட்டு பதிவு செய்யப்படுமானால், மேலே கூறிய இத்தனை துன்பங்களையும் தாண்டி, கூடுதலாக அந்தப் பெண் தன்னுடைய வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.  அதாவது அந்தப் பெண்ணின் வேலை பறிபோய்விடும்.  எனவேதான், வேலை பார்க்கும் பெண்கள் பல நேரங்களில் இது போன்ற குற்றங்கள் பற்றி வெளியில் பேசவே அச்சப்படும் நிலை உள்ளது.

தெகல்கா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் பத்திரிகையாளர், மற்றவர்கள் பின்பற்றத்தக்க தைரியத்துடன், தனக்கு நேர்ந்த பாலியல் தாக்குதல் குறித்து அந்த நிறுவனத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான ஷோமா சௌத்ரியிடம் பதிவு செய்துள்ளார்.  ஆனால், அந்தப் பெண் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்களால் கைவிடப்பட்டுள்ளார்.  புகாரை பெற்றுக் கொண்ட சௌத்ரி புகாரை அலட்சியம் செய்யும் வகையில் தேஜ்பால் அளித்த ‘மன்னிப்பினை’ ஏற்றுக் கொண்டு, அவருடைய குற்றத்தை மூடி மறைக்கும் இடத்திற்குச் சென்று விட்டார். தேஜ்பால் தனக்குத் தானே வழங்கிக்கொண்ட, தீர்மானித்துக் கொண்ட, விதித்துக் கொண்ட தண்டனையாக ‘ஆறுமாத காலம் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதை’ ஏற்றுக் கொள்ளும் நிலைக்குச் சென்றுள்ளார்.  மேலும், தேஜ்பாலின் இந்த முடிவு சரியானது என்பதனை வலியுறுத்துவதற்காக  “இது கோரப்பட்டதைவிட அதிகமான நடவடிக்கை” என்றும், அவர் மன்னிப்பு மட்டும் கேட்கவில்லை, அதையும் விட கூடுதலாக ஆறு மாதங்கள் நான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன் என்ற பிராயச்சித்தத்தையும் செய்துள்ளார்” என்று அதிர்ச்சி தரும் வகையில் ஷோமா சௌத்ரி பேசியுள்ளார்.   ஒரு வேளை இந்திய நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள இது போன்ற குற்றவாளிகளுக்கு இந்த மாதிரியான சாதகமான அணுகுமுறை கொடுக்கப்படுமேயானால், அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டு கதவருகே மன்னிப்பு கேட்கவும், அவர்களுக்கு உகந்த வகையில் சில மாதங்கள் ஓய்வு கேட்டும் வரிசையில் காத்திருப்பார்கள்.  நண்பர்கள் மற்றும்

குடும்பங்கள் வட்டத்தில், சட்டத்தினை சந்திப்பது என்பதைவிட இது போன்று

தவறுகளை திருத்தும் பிராயச்சித்தங்களை தேடிக் கொள்வது என்பது குற்றவாளி களுக்கு மிக எளிய காரியமாகும்.

இந்தக் குற்றம் பாலியல் பலாத்காரமே

தற்போது திருத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375(பி)-யின் கீழ் பாலியல் பலாத்காரம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பார்க்கும்போது, இந்தக் குற்றம் ஒரு பாலியல் பலாத்காரமே.  இது நிரூபிக்கப்படுமேயானால், குற்றவாளிக்கு குறைந்த பட்சம் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.  மேலும், பாலியல் பலாத்காரம் என்பது “ஒரு உறவினரால், பாதுகாப்பாளரால், ஆசிரியரால், நம்பிக்கைக்குரிய நபரால், அல்லது அதிகாரியால்” இழைக்கப்படுமேயானால் பிரிவு 376(2)(எப்) படியும், அதே போல ”ஒரு பெண்ணை கட்டுப்படுத்தும் மற்றும் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செய்யும் நிலையிலுள்ள ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும்போது” , பிரிவு 376(2)(கே)ன் படியும், அந்தக் குற்றமானது கூடுதல் மோசமான குற்றமாகக் கொள்ளப்படும் தண்டனைக்காலமானது குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனையாக இருக்கும்.  தெகல்கா வழக்கு இந்தப் பிரிவுகளின் கீழ் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்.

தெகல்கா ஆசிரியரின் குற்றத்தை பொறுத்த வரையில், அதனுடைய தீவிரத்தன்மையை இன்னொரு வழியிலும் மறைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.  சில பெண் போராளிகளும், பெண் வழக்கறிஞர்களும் பல தொலைக்காட்சி சேனல்களில் தோன்றி தங்களுடைய தவறான விவாதங்களின் மூலம், இந்த ஏமாற்று வேலைக்கு உடந்தையாகிப் போயுள்ளனர் என்பது வருந்தத்தக்கது.  அந்த விவாதங்களில் வைக்கப்பட்ட ஒரு கருத்து, ‘பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த நிறுவனத்திற்குள் உள்ள பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெதிரான புகார் குழுவில் தன்னுடைய புகாரினைப் பதிவு செய்து முடித்திருக்கலாம்’ என்பது. உண்மையைச் சொன்னால், இந்தச் சட்டமே கூட மத்திய அரசாங்கத்தால் இன்னும் விதிமுறைகள் முழுமையாக வரையறுக்கப்படாத சூழலில் புறக்கணிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.  தெகல்கா நிறுவனத்தில் புகார் குழு ஒன்று இதுவரையில் இல்லை என்பதால், ஒரே நாளில் ஒரு குழுவினை வடிவமைத்துக கொண்டு, இந்த இளம் பெண்ணின் துன்பம் மிகச் சரியாக கையாளப்பட்டதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படும்.

2013ம் ஆண்டு சட்டத்தின் வரம்பு

உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் அமைந்த சட்டம்தான் 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டம்’  இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கூறப்படும் பாலியல் வன்முறை என்ற வரையறையின் கீழ் அல்லாமல், அதைவிட சற்று குறைவான பாலியல் தொந்தரவு என்ற வரையறையின் கீழ் வரும் குற்றங்களால் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட நேர்ந்தால், அது மாதிரியான நேரங்களில் வழக்காடு மன்றங்களின் நீண்ட நெடிய நடைமுறைகளினால் கிடைக்க வேண்டிய நீதி தாமதப்படாமல் இருப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இது இந்தச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல்கள் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வரையறைகளில் இருந்து  தெளிவாகும். “உடல் ரீதியான தொடுதல் மற்றும் முயற்சிகள்”, “பாலியல் உறவிற்கான விண்ணப்பங்கள்” அல்லது “பாலியல் இம்சை குறிப்புகள்” என்று பல்வேறு வரையறைகள் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.  இவையனைத்துமே பாலியல் குற்றங்களே எனினும், அவை பாலியல் பலாத்காரம் அளவிற்கு மோசமான குற்றங்களாகவில்லை.  ஆனால், மிக முக்கியமானது – இந்தச் சட்டம் ஒரு சிறப்புப் பிரிவினை கொண்டுள்ளது.  அதன்படி இதன் கீழ் வரும் அத்தனை வழக்குகளும் வழக்காடுமன்றத்தின் வரையறையின் கீழ் வராதவையாக இருக்கும்.

2013ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 27(1)ன் படி,  “எந்த வழக்காடு மன்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பெண் புகார் அளிப்பதன் பேரிலோ, அந்த நிறுவனத்தின் பாலியல் புகார் குழுவின் அதிகாரி தண்டனையளிக்க வேண்டிய ஒரு குற்றம் என்று வரையறுக்கும்போதோ  அந்த குற்றத்தை தன் வரையறையின் கீழ் எடுக்காது” என்று கூறுகிறது.  பிரிவு 27(3) ’‘இந்தக் குற்றத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குற்றமும் வழக்காடு மன்றத்தின் வரையறையின் கீழ் வராது” என்று தெரிவிக்கிறது.  இந்த இரண்டு பலபொருள்படும் பிரிவுகளும் இந்தச் சட்டத்தின் ஓட்டைகள். தெகல்கா வழக்கு போன்ற குற்றங்களில், அரசாங்கம் தானே சுயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் அரசின் கடமையை ரத்து செய்யக் கூடியவையாக இந்த ஓட்டைகள் உள்ளன.  ஒரு வேளை இந்தச் சட்டம் பாலியல் பலாத்காரம் போன்ற அதிதீவிரமான கடுமையான பாலியல் குற்றங்களின் தீவிரத்தை குறைப்பதற்கான ஒரு கருவியாகுமேயானால், நீதிக்காகப் போராடும் உழைக்கும் பெண்களின் போராட்டத்தை ஏமாற்றும் மோசடி வேலையாக மாறிவிடும்.

ஒருவேளை இந்தக் குற்றத்தை புரிபவர் ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக இந்த பாலியல் புகார் குழுவே அந்த குற்றவாளியை பாதுகாக்கும் குழுவாக மாறிவிடும்.  தெகல்கா வழக்கை பொறுத்த வரையில் குற்றத்தின் தீவிரத்தை மறைக்கும் முயற்சி இருந்தபோதும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததன் மூலம் துவங்கிவிட்டன.

தெகல்கா போன்ற வழக்குகளில், அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் கடமை  என்னவாக இருக்க வேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய சட்ட ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும், அந்த பெண் காவல் துறையில் வழக்கினை பதிவு செய்வதற்கான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.  உண்மையில் விஷாகா தீர்ப்பின் கீழ் ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கே குற்றத்தை காவல் துறையிடம் பதிவு செய்ய வேண்டிய கடமை உள்ளது.  அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் தங்கள் கீழ் வேலை செய்யும் பெண்களை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள விளையும் சுரண்டலை நாம் அனுமதிக்க முடியாது.

அப்படியானால் குஜராத்?

இதற்கு அரசியல் ரீதியான ஒரு பக்கமும் உள்ளது.  தெகல்கா பத்திரிகை பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் மற்றும் ரகசிய நடவடிக்கைகள் பற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிறுவனம்.  தற்போது பாஜகவிற்கு திருப்பி அடிக்க சாதகமான ஒரு வழக்கு இது.  உண்மையில் இந்த வழக்கு என்பது அந்த கட்சியின் இரண்டு பாரபட்சப் போக்குகளை வெளிக்கொணர்ந்துள்ளது.  பாஜக ஆளும் கோவா அரசாங்கம் சட்டப்படி இந்த வழக்கின் கீழ் ஒரு சுயமான நடவடிக்கையை எடுக்க முடிகிறது எனும்போது, குஜராத்தில் முதலமைச்சரின் கட்டளைகளின் கீழ் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு இளம்பெண் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது ஏன் பாஜக அரசாங்கத்தால் இதே மாதிரியான ஒரு சுறு சுறுப்பான, சுயமான நடவடிக்கையை அங்கே எடுக்க முடியவில்லை. இந்தக் குற்றம் என்பது இந்திய தபால் தந்தி சட்டத்தின் பிரிவு 5.2-ஐ மீறி ஒரு பெண்ணை ரகசியமாகப் பின் தொடர்வது என்பது திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பிரிவு 354னு(ii)ன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமாகும். இதனை உடனடியாக செய்ய வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது.

குற்றங்கள் மாறலாம்,  ஆனால் இரண்டுமே சட்டத்தின் கீழ் வழக்காடுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டிய குற்றங்கள். கோவாவில் என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ அவை தான் குஜராத்திலும் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க

  1. பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டம்
  2. நன்றி : தீக்கதிர், (27.11.2013) தமிழில், ஆர். எஸ். செண்பகம், திருநெல்வேலி
  3. நன்றி : தி இந்து (25.11.2013) ஏட்டில் வெளியான  கட்டுரையின் பகுதிகள்

Related Posts