அரசியல்

பாலஸ்தீன சண்டை நிறுத்தம் – 26 வழிகளில் மீறிய இஸ்ரேல்

‘பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலை தாக்கின, அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது’ என்றுதான் பாலஸ்தீனை இஸ்ரேல் தாக்குகிறபோதெல்லாம் அதனை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும்(?!?), இஸ்ரேலிய ஆதரவாளர்களும், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் காலம் காலமாக நியாயம் சொல்லிக்கொண்டிருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், ‘பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ்தான் இஸ்ரேலின் மீது முதலில் தாக்குதல் நடத்தியது’ என்று பொய் பிரச்சாரம் நடத்தி, காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்கிறேன் பேர்வழியென்று, 2150க்கும் மேற்பட்ட அப்பாவி காசா மக்களை கொன்று தீர்த்தது இஸ்ரேல் அரசு. உலக நாடுகளில் இருந்தெல்லாம் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டது இஸ்ரேல். கூடுமான அளவிற்கு காசாவில் சேதத்தை ஏற்படுத்திவிட்டு, பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது இஸ்ரேல். ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாசுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, சிறிய குண்டு கூட வீசாமலும், எந்தவித ஒப்பந்த மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் அமைதி காத்து வருகிறது ஹமாசு இயக்கம்.

 

ஆனால், இஸ்ரேல் என்னவெல்லாம் செய்திருக்கிறது:

 • காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இஸ்ரேல் நடத்திய முற்றுகையினை திரும்பப்பெற வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை இன்றளவும் இஸ்ரேல் செய்யவில்லை
 • ஒப்பந்தத்தை மீறி, 4 வெவ்வேறு இடங்களில் பாலஸ்தீன மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது
 • 6 பாலஸ்தீன மீனவர்களை கைது செய்திருக்கிறது
 • முகம்மது சிநோக்ரோத் என்கிற 16 வயது சிறுவனின் தலையில் இரப்பர் புல்லட்டை சுட்டுவீழ்த்தி அவனைக் கொன்றிருக்கிறது
 • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெருமளவுக்கு, ஒருவரை கைது செய்து சித்தரவதை செய்திருக்கிறது
 • வெஸ்ட் பேங்கிலிருந்து 127 பேரை கைது செய்திருக்கிறது. ஹெப்ரோனைச் சேர்ந்த 7 வயது சிறுவனையும், சில்வடில் ஒரு வீட்டில் கண்ணீர்புகை குண்டினை வீசி தாயின் முன்னிலையிலேயே 7 வயது மற்றும் 8 வயது சிறுவர்களையும் கைது செய்திருக்கிறது
 • 33 பாலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது
 • கான் அல் அமர் பகுதியில், பெடுவீன் இன மக்களின் வீடுகளை இடித்து, அவர்களை வீடற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பெடுவீன் மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறது
 • ஹெப்ரோன் நகரில் இருக்கும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவுவதற்காகவே நடத்தப்பட்டுவந்த ஒரு பால் பண்ணையினை இடித்திருக்கிறது
 • சில்வனில் ஒரு வீட்டை இடித்து, அங்கு வாழ்ந்து வந்த 5 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை வீடற்றவர்களாக ஆக்கியிருக்கிறது
 • காசாவிற்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பதற்காக  ஜெருசலத்தில் இருந்த ஒரு வீட்டினை இடித்திருக்கிறது
 • நப்லஸ் பகுதியில் இயங்கிவரும் மருத்துவ மையம் மற்றும் நர்சரி பள்ளிக்குள் புகுந்து கடுமையாக சேதமாக்கியிருக்கிறது
 • கடந்த ஜூலை மாதம் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த முகம்மது அபு காதருக்கு ஜெருசலத்தில் வைக்கப்பட்டிருக்கிற சிறிய நினைவுச்சின்னத்தினை இடிக்கச்சொல்லி உத்தரவு போட்டிருக்கிறது
 • பாலஸ்தீன மாணவர்களை அல் குத் பல்கலைக்கழகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து, அவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தி, இரப்பர் புல்லட்டுகளாலும் தாக்கியிருக்கிறது
 • சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன், ஒரு இலட்சம் காசா மக்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது. அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கட்டிட பொருட்களை இஸ்ரேலிளிருந்துதான் வாங்கவேண்டும் என்றும் இல்லையென்றால் எந்தப்பொருளும் பாலஸ்தீனத்திற்குள் நுழையமுடியாது என்று தடைபோட்டு, 7.8 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய்) சர்வதேச நிதியினை அபகரித்திருக்கிறது

இயல்பு வாழ்க்கையை வாழவிடாமல் பாலஸ்தீன மக்களை துன்புறுத்திக்கொண்டே இருப்பது இஸ்ரேல் ஆட்சியாளர்களும் அதன் இராணுவமும்தான். இவற்றையெல்லாம் எந்த மேற்குலக ஊடகங்களும் அகில உலக கார்ப்பரேட் ஊடகங்களும் நமக்கு எப்போதும் போல சொல்லப்போவதில்லை. அடிமேல் அடிவாங்கிக்கொண்டே இருக்கும் பாலஸ்தீனர்கள் என்றாவது ஒருநாள் திருப்பிக் கேள்விகேட்டாலோ, எதிர்ப்பைக் காட்ட நினைத்தாலோ, ஒட்டுமொத்த ஊடகங்களும் நடிப்புறக்கத்திலிருந்து விழித்து ஒப்பாரிவைக்கத் துவங்கிவிடும். இஸ்ரேலிய ஆட்சியாளர்களான இனவெறியர்களுக்கு, இந்தியாவின் புதிய ஆட்சியாளர்களான மதவெறியர்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் இந்நேரத்தில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

 

உண்மையறிவோம்… பாலஸ்தீனர்களின் குரல்களுக்கு ஆதரவளிப்போம்….

(ஆங்கில மூலம்: http://ifamericansknew.org)

Related Posts