அரசியல்

புறநிலைத் தேவையிலிருந்து எழும் முழக்கங்களும்… இஸ்லாமியோஃபோபியா மனநிலையும்…

சமீபத்தில் நடந்து வரும் #CAA #NCR #NPR போராட்டங்கள் குறித்த பதிவு ஒன்றை பழனி ஷஹான் எழுதியிருந்தார்.

அது குறித்து சில தோழர்கள் அந்த லிங்கை அனுப்பி அதில் எனது நிலைபாடு என்ன என்பதாக விளக்கம் கேட்டிருந்தார்கள். வினவில் வெளியிடப்பட்ட அந்த கட்டுரையை படித்தேன்அந்த கட்டுரை ஒருவிதமான #Islamophobia விற்கு ஆட்கொண்ட மனநிலையில் இருந்து எழுதி இருப்பதாக புரிந்து கொண்டேன்.

முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து வந்தவர்கள் நாங்கள் என்பதால் (நான், அபுதாஹிர், ஹைதர் அலி, நவாஸ்) இயல்பாகவே எங்கள் பகுதி கிளையில் முஸ்லீம் குடும்ப பின்னனியில் வந்த நாங்களே அதிகமாக இருந்தோம், நாங்கள் சார்ந்திருந்த அமைப்பின் சார்பில் (HRPC) பாபர் மசூதி தீர்ப்பு வெளியானபோது, அந்த தீர்ப்பு பற்றியான தெருமுனை கூட்டங்கள் மாநிலம் தழுவிய அளவில் நடத்தத் தலைமையின் செயல்திட்டம் அதையொற்றி எங்கள் பகுதில் போத்தனூர் கடைவீதி மற்றும் குனியமூத்தூர் பகுதிகளில் தெருமுனைக் கூட்டமும் அந்த நிகழ்வின் முடிவு நிகழ்வாக அரங்க கூட்டமும் நிகழ்த்த ஆலோசனைக் கூட்டம் போட்ட போது, இஸ்லாமிய பெயரில் இருந்த தோழர்கள் அந்த நிகழ்வின் முன்னெடுப்புக்கு ரொம்பவும் தயங்கினார்கள் . குறிப்பாக, ஹைதர் சொன்னார் ‘நாங்கள் இந்த பெயரில் இதை செய்ய முடியாது’ என்பதாக. அதற்கு காரணம் இந்த Islamophobia தான்.

என்னால் அப்படி சிந்திக்க முடியவில்லை. ஆதலால் அந்த முன்னெடுப்பை முன் நகர்த்தினேன். போத்தனூர் கடைவீதியிலும்,, குனியமுத்தூரிலும் நானும், தோழர் மணிவண்ணனும் உரை நிகழ்த்தினோம். குறிப்பாக, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட கோவையில் நடந்த HRPCயின் கருத்தரங்கத்தின், தலைமை நாநன்தான்.

பழனி சஹான் கட்டுரை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.

  1. முதலாவதாக அவர் சொல்லும் முழக்கம் (நாரே தக்பீர் அல்லாவு அக்பர்) பற்றியது
  2. இரண்டாவது ஜமாத்துகள் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றியது.

முழக்கம் குறித்து முதலில் பார்த்திடுவோம்.
ஜிக்னேஷ் மேவானி, லால்சலாமுடன் சேர்த்து #ஜெய்பீம் என முழக்கம் போட்ட போது, அஜெண்டாவுடன் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் நபர்களும் சரி அல்லது எப்போதும் அறிவு அதிகமாகி வழிந்தோடும் முற்போக்கு?! நபர்களும் சரி என்ன கேட்டாங்க தெரியுமா..?

‘அது என்ன ஜெய்பீம் லால்சலாம், அப்படினா நாளைக்கு நாரே தக்பீர் அல்லாவு அக்பர் என முழங்குவீங்களா?’ என இஸ்லாமிய சமூக பின்னனி கொண்ட தோழர்கள் சிலரை tag செய்து கேள்வி வைக்கப்பட்டது.

அப்போது பதிவு எழுதினேன், ‘எல்லா முழக்கமும் புறநிலை தேவையிலிருந்து எழும், தேவையை ஒட்டி முழக்கங்கள் மாறலாம்’ என.

கருவறை போராட்டம் ஏன் நடத்தப்படுகிறது? கருவறை நுழைவு மறுக்கப்படும்போது கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்படுகின்றன.
ஆறுமுகசாமி தமிழ் ஓதுவாரின் கடவுள் வழிபாட்டு பாடல் பாடும் உரிமைக்காக நிற்ப்பது தவறாகுமா..?
வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத பெரியாரிய ,பொது உடமைவாதிகள் அந்த போராட்டத்தை முன் எடுத்தது ஆறுமுக சாமியின் (அடையாளம்) நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் எனதானே.

Identify me from the way I dress………

Identify_me_from_the_way_I_dress என இஸ்லாமியர் அல்லாதவர்கள் இஸ்லாமியர் போல ஆடை அணிந்து பதிவிட்டார்கள். CAAவை எதிர்க்கும் ஒருவடிவமாக, மோடியின் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் அறிக்கைக்கு எதிராக . அதற்காக அவர்கள் அந்த மதத்தை ஏற்றுகொண்டதாகவோ தத்துவத்தை ஏற்று கொண்டதாகவோ அல்ல. எதன்பொருட்டு தாக்கப்படுகிறார்களோ அதன்பொருட்டு நாம் துணை நிற்கனும்.

எப்படி பர்தா பற்றிய விமர்சனங்கள் முன் வைக்கிறோமோ, அதுபோல பர்தா அணியக்கூடாது என்பது கட்டாய சட்டமாக வந்தால் அதற்கு எதிராக நாம் நிற்போம். அதானே சரி?

ஜெய்பீம் லால்சலாம் பற்றி, அல்லது சாதி ரீதியாக ஒடுக்கப்படும் சமூகம் பற்றி பழனி சஹான் புரிதலோடு இருக்கிறார், ஒடுக்கப்படும் சாதியினர் அடையாளமாக, அமைப்பாவது பற்றி அவரால் சரியானதை பேச முடிகிறது.

ஆனால் இஸ்லாமியர்கள் தங்களுக்கான போராட்டங்களை ஜமாத்துகள் வழியாக நடத்தும் போது அவர்கள் தங்கள் அடையாளங்களோடு பொதுவான போராட்டங்களில் கலந்துகொள்ளும் போது பேச முடியாமல் போகிறது.

தன்னுடைய சுயகழிவிரக்க Islamophobia எனும் பொதுபுத்திக்கு பலியான அச்சமூட்டபட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மனநிலையில் இருந்து அப்படி பார்க்கிறார்.

ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடையாள அரசியலுடன் திரள்வது தனியாகவோ அமைப்புகள் கூட்டமாகவோ ஆர்பாட்டம் செய்வதை ஏற்று கொள்கிறார் பழனி சஹான். ஆனால் ஜமாத்தும் சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் செய்து முழக்கம் எழுப்புவது பிரச்சனையாக பார்க்கிறார், கருதுகிறார்.

சிறுபான்மை சமூகம் அது சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ தாக்குதலுக்கு உள்ளாகும் போது பெரும்பான்மை சமூகம் அவர்களுக்காக நிற்க வேண்டியது போராட வேண்டியது கடமை. அதே சமயம் தாக்குதலுக்கு உள்ளானவன் தனக்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் என்ன தவறு..? தவறு இல்லை என்பது மட்டுமல்ல அப்படி முன்னெடுப்பது அவசியமும் கூட.

‘நாங்கள் 800 காலம் இந்தியாவை ஆண்டோம்’ என்பதை ஆண்ட பெருமை திமிரி தொணிக்க இச்சமூகம் பேசுமே ஆயின் அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது.
ஆனா, இஸ்லாமிய மேடைகளில் அந்த தொணியில் அல்ல அந்த திமிரில் அல்ல மாறாக தங்களை நிரூபிக்கவே பேசப்படுகிறது. ‘நீ இம்மண்ணின் மைந்தன் இல்லை’ என விதைக்கப்படும் கருத்தாக்கத்துக்கு மாறாகவும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது எனும் கோயபல்ஸ் பிரச்சாரத்துக்கு எதிராகவும் அவர்கள் 800 ஆண்டுகால ஆண்ட வரலாற்றைச் சொல்லி இஸ்லாம் வாளால் பரவவில்லை மட்டுமல்ல, நாங்கள் விடுதலை ‘போரில் அதிகமாக இரத்தம் சிந்தியவர்களின் வாரிசுகள்’ என முழங்குகின்றனர்.

கடவுள் நம்பிக்கையற்ற பெரியாரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து ‘இது பெரியார் மண்’ என ஜமாத்து மக்களும் முழங்குகிறார்கள் எனும் போது, கூடவே அவர்களின் தனிப்பட்ட முழக்கம் வைப்பது எப்படி சிக்கலுக்குள்ளானதாக ஆகும்..?

மாலைபோட்ட ஒரு இந்துமத நம்பிக்கையில் தீவிரமாக உள்ள நபர் (நம்பிக்கையில் தீவிரம் உள்ளதால்தானே மாலை போடுகிறார்) caa nrc க்கு எதிரான போராட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதை பெருமையாக சொல்லமுடியும் என்றால், ‘அல்லாவு அக்பர்’ எனும் முழக்கம் ஏன், எப்படி சிக்கலானதாக ஆகனும்.

Call the dog mad then shoot. எனும் கோட்பாட்டின் படி. இஸ்லாமிய சமூகத்தின் மீதான பொது உளவியலை கட்டமைக்க திரைப்படங்கள் , செய்தி ஊடகங்கள் என எல்லா வற்றையும் பயன்படுத்தி அவன் விதைத்த விசத்தின் பரவலை அறிய வேண்டும் எனில் ஒரு செகண்ட்ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பிப்பாருங்கள் புரியும். இரவு நேரத்தில் காவல்துறை செக்போஸ்ட் இருந்தால் மற்றவர்களைப் போல சட்டுன்னு கேள்விக்கு பதில் சொல்லி கடந்து விட முடியாது ஒரு இஸ்லாமிய பெயர் தாங்கிய நபரால்.

ஏன் இந்த போராட்ட காலத்திலும்.கூட இரு தினங்களுக்கு முன்னாள்

ஜன்பாத்தில் புர்காபோட்டு நடந்து கொண்டிருந்த பெண்ணை டெல்லி போலீசார் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள் ,
அந்த பெண் போராட்டக்குழுவிலோ , JNU மாணவியோ இல்லை , சாதாரணமாக வீதியில் நடந்து சென்ற பெண் ,மிகவும்
தாக்கப்பட்டாநிலையில் இருந்தும்
போலீசார் ஆம்புலன்ஸ் அழைக்க மறுத்துவிட்டனர்.

அங்கிருந்த லீ மெரிடியன் ஹோட்டலின் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறது , அந்த மனிதநேயமிக்கவர்களுக்கு நன்றிகள்

ஆக , அடையாளம்தான் இவர்கள் அந்த பெண்ணை தாக்குதலுக்கு உட்படுத்தக் காரணம்.

எந்த அடையாளத்தை அவர்கள் நம் மூளையில் சிக்கலானதாக பதிந்திருக்கிறார்களோ. அதை பொதுவெளியில் அங்கீகரிப்போம். அதுதானே சரியான திசை வழி.

இதையெல்லாம் அறியாமையால் இஸ்லாமிய அடையாளமே சிக்கல் என பேசும் நபர்களிடம்.
அரசியல் புரிதல் உள்ள நாம். புரிதலற்றவர்களுக்கு அவரவர் அடையாளங்களோடு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதன் புரிதலை விளக்க வேண்டிய இடத்தில் இருக்கும் சமூக பொறுப்பாளர்களே, Islamophobia விற்கு வலுசேர்க்கும் விதமாக எழுதுவது தவறு.

இல்லை அடையாளங்களை துறந்தேதான் ஆகனும் என நீங்கள் நினைத்தால் மிக நீளமான கட்டுரை எல்லாம் எழுத வேண்டாம் ஒற்றைச் சொல்லில் முடித்து விடுங்கள் அந்த சொல் கர்வாப்ஸி.

இறுதியாக : ஃபாரூக் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசும் போது சொன்னேன் கடவுள் நம்பிக்கை குறித்த விவாதங்கள் நீண்டு கொண்டேதான் இருக்கும். உலகம் உள்ளவரை என.

கீழே இறங்கி வந்த என்னிடம் வழக்கறிஞர் தோழர் அலாவுதீனும் மதுரையை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் (தோழர் பெயர் நினைவில் இல்லை) குடியுரிமை பாதுகாப்பு நடுவ அமைப்பு என நினைக்கிறேன். இருவரும் கோபமாக விவாதித்தனர். ‘அது எப்படி அப்படி சொல்றீங்க? சோஷலிச சமூகத்தில் கடவுள் நம்பிக்கை உலர்ந்து உதிர்ந்திடும்’ என.

நான் பதிலளித்தேன் ‘எனக்கு அப்படி தோணவில்லை கட்டாயமாக இருக்கும் ஆனால் நீங்கள் இப்போது பார்க்கும் வடிவங்களில் அல்லாமல் பரிணாமமும் பரிமாணமும் மாறி இருக்கலாம் ஆனால் ஏதோ ஒரு விவாதம் ஓடிக் கொண்டுதான் இருக்கும். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதாம் விவாதங்களை ஜனநாயக்ப்படுத்துவது மட்டுமே’ என.

ஆம் விவாதங்கள் ஜனநாயகமாகட்டும் அவரவர் தனித்த அடையாளங்களை மற்றவர் வலிந்து அழிக்க முயலாமல். முனையாமல்.

  • ஃபெரோஸ் பாபு.

Related Posts