இலக்கியம் சமூகம்

“கட்டைப் பஞ்சாயத்தும், பக்குவப்பட்ட ஜனநாயகமும்“ – மாதொருபாகன்

பக்குவப்பட்ட ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடு என்று பீற்றிக் கொள்ளும் நம் நாட்டில் அரசு இயந்திரமானது ஒரு கட்டைப் பஞ்சாயத்து நடத்தி, எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எழுத்து மரண தண்டனை விதித்திருக்கிறது. அந்த எழுத்தாளரும் மரண தண்டனையை ஏற்றுக் கொண்டு தனக்கான தண்டனை நிறைவேற்றத்தை அறிவித்துவிட்டார். சில நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹெப்டோ என்ற நையாண்டி பத்திரிக்கையின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று கேலிச் சித்திரக்காரர் உள்ளிட்ட ஐந்து பத்திரிக்கையாளர்களும், பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட நான்கு அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ள அந்த அரசானது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாடிக் கொன்றது. தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன. கேலிச் சித்திரப் படைப்பாளிக்கு தீவிரவாதிகள் மரணதண்டனை கொடுத்ததற்கும், பெருமாள் முருகன் என்ற எழுத்தாளருக்கு நமது அரசின் பிரதிநிதியான மாவட்ட வருவாய் அதிகாரி மரண தண்டனை கொடுத்தற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்பொழுது ஊடகங்கள் வாய் மூடி மௌனம்.

 

சட்டத்தின் ஆட்சி என்பது பற்றி துளிக்கூட கவலையில்லாமல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிற ஒரு குடிமகனுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதில், மாவட்ட வருவாய் அதிகாரி ஒரு சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டி சட்டவிரோத கோரிக்கைகளை ஒரு குடிமகன் மீது திணித்துள்ளார். வட இந்தியாவில் நடக்கும் காப் பஞ்சாயத்து எனப்படும் கட்டைப் பஞ்சாயத்தை தவிர இது வேறு இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு பதில் இந்தக் கூட்டத்தை அந்த அதிகாரி ஆலமரத்தடியில் ஜமுக்காளம் விரித்து, சொம்பு வைத்துக் கொண்டு நடத்தியிருக்கலாம். அமைப்பு ரீதியான ஜனநாயக ஆட்சிமுறையில் இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழுகிறது. மாவட்ட வருவாய் அதிகாரி கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது எழுத்தாளரின் மரண தண்டனையை அறிவிப்பதாகும்.  அவர் இனிமேல் இதுபோல் எழுதக்கூடாது என்ற ஷரத்தைப் படித்தாலே விளங்கும் கூட்டத்தின் நோக்கம் புரியும். “இதுபோல்“ என்பதை தீர்மானிப்பது யார்?

 

ஒரு தனிநபருக்கும் ஒரு கூட்டத்திற்கும் உள்ள பிரச்சனையில் தனிநபருக்கு பாதுகாப்பு அளித்து சட்டத்தை மீறீனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தை பார்த்து எச்சரிக்க வேண்டிய அதிகாரி, ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசதிகாரிக்கு சொந்த கருத்து இருந்தால் அதை அவர் பொது வெளியில் வெளிப்படுத்தலாம். தன்னுடைய அன்றாடப் பணியில் கிடைத்த அனுபவமாக, இதன் மூலம் சட்ட ரீதியான மாற்றம் வேண்டுமென்றால் அவர் அரசிற்கு எழுதி மசோதா கொணரலாம். தான் ஒரு பதவில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை பயன்படுத்தி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தற்காக மாவட்ட வருவாய் அதிகரி மீது அரசு ஓழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்திருப்பது அப்பட்டமான ஒரு ஜனநாயகப் படுகொலை, கருத்துரிமையின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அரசியல் அமைப்புச் சட்டத்தை துச்சமாக மதித்த செயல்.

 

காலச்சுவடு பதிப்பகத்தால் 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற புதினம் இருபதிப்புகளை கண்டு மூன்றாம் பதிப்பு வெளிவந்துவிட்டது. முதல் பதிப்பானது டிசம்பர் 2010ல் வந்து அச்சடிக்கப்பட்ட 3000 பிரதியும் ஏழுமாதத்திற்குள் விற்று ஆகஸ்ட் 2011ல் இரண்டாம் பிரதியாக 3000 புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதுவும் தீர்ந்து போய் மூன்றாம் பதிப்பு நவம்பர் 2012ல் வெளிவந்திருக்கிறது. புதினம் வெளிவந்து அதுவும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து இது தங்களுடைய உணர்வுகள் காயம்பட்டதாக சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் அமைப்புகளின் போர்வையில் பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார்கள். அத்துடன் நில்லாமல் ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பில் இறங்கியிருக்கிறார்கள். மத்தியில் வகுப்புவாத சக்திகள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது எதேச்சையானது அல்ல. தமிழகத்திலும் சாதிய மத உணர்வுகளை கிளறிவிட்டு அதன் மூலம் பிரபல்யமடைய வகுப்புவாத சக்திகள் எத்தனித்து வருகின்றன அதன் ஒருபகுதியாக, நான்காண்டுகள் கழித்து இதை பிரச்சனையாக்கியிருக்கிறார்கள்.

 

இன்னொரு புறம் எழுத்தாளர் ஒரு மலிவான விளம்பரத்திற்காக தானே தன்னுடைய ஆட்களைவிட்டு கிளப்பிவிட்டுவிட்டதுதான் இது என்று சிலர் “புத்திசாலித்தனமாக“ முகநூலிலும் இதர மின்னணு உடகங்களிலும் மூன்றாம் பதிப்பு கண்ட நூல் இது என்று கூட தெரியாமல் எழுதியிருந்தார்கள். அவர்களின் கற்பனையானது எழுத்தாளருக்கு கிடைத்த எழுத்து மரண தண்டனையோடு மரணமடைந்து விட்டது. இதன் பின்னணியில் சங்பரிவார அமைப்புகள் ஒருபுறமும், நாமக்கல் பள்ளி முதலாளிகள் ஒருபுறமும் இணைந்து பணத்தை வாரியிறைத்து சாதிய அமைப்புகளின் மூலம் அணிதிரட்டியிருக்கிறார்கள். காரணம் நாமக்கல்லில் பள்ளிகள் என்ற பெயரில் நடைபெறும் கல்வித் தொழிற்சாலைகளைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தவர் பெருமாள் முருகன்.

 

இராமாயணமும், மகாபாரதமும் எப்படி புனைக்கதைகளோ அதே போன்ற ஒரு புனைக்கதைதான் மாதொருபாகன். புனைக்கதைகள் அதன் படைப்பாக்க மதிப்பு என்ற அடிப்படையில், படைப்பாளியின் தேர்ச்சித் திறனும், அழகியல் உணர்வும் வாசகனுக்கு ஒருவித புலனின்பத்தை வழங்கக் கூடியது. நமது முன்னே வடிக்கப்பட்ட சிற்பமோ, நடைபெறும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியோ எப்படி பார்வையாளனுக்கு ஒரு புலனின்பத்தை வழங்குகிறதோ, அதே போன்றதே புனைவு எழுத்துக்களும். புனைவுக் கதைகளுக்குள் ஆதாரத்தை தேட முடியாது, ஏனென்றால் அது புனைவு. ஆனால் பண்பாட்டு ரீதியாக வளர்ந்த நாடு என்று சொல்லிக் கொள்ளும் நமக்கு புனைவுக் கதையை எந்த தளத்தில் நிறுத்துவது என்பது இன்று வரை குழப்பமே. புனைவை நிஜவாழ்க்கையாக எடுத்துக் கொள்ளும் பழக்கமே இதன் அடிப்படையாக வருகிறது. புனைவுக்கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவதும், நடைபெற்றதாக சொல்லப்படும் இடங்கள் பெயரில், இருக்கும் இடங்களின் பெயர்களை மாற்றுவதும் நமது பாரம்பரியமான விஷயம்தான். எங்கள் ஊரில் வசித்த ஒரு எம்ஜிஆர் ரசிகர் தன்னுடைய பிள்ளைகளுக்கு எம்ஜிஆர் கதாநாயகனாக வரும் பாத்திரங்களின் பெயர்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு சூட்டியிருந்தார். இப்படித்தான் ராமன், கிருஷ்ணன் போன்ற பெயர்களும் புராணப் புனைவுப் பாத்திரங்களின் பெயர்களும் வழிவழியாக நிலைபெற்றுவிட்டன. இன்னொரு புறம் புனைவுக் கதைகள் ஆகாயத்திலிருந்து உதித்துவிட முடியாது. நமது சமூகத்தில் நடைபெறும் அசைவுகளிலிருந்தே புனைவுகள் தோன்றுகின்றன. சமூகத்தை தாண்டி வெகுதூரம் மனிதனால் கற்பனை செய்ய முடியாது. அப்படி வரம்புக்குட்பட்டு செய்யப்படும் கற்பனைகள் உண்மை ஆகிவிடாது. இந்தப் புரிதலுடன் புனைவு எழுத்துக்களை எவ்வளவு தூரத்துக்கு ஒரு சமூகம் அணுகுகிறது என்பதைப் பொருத்தே அந்த சமூகம் எவ்வளவு தூரத்திற்கு நவீனமயமாகி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

நாவல் வெளிவந்து நான்காண்டுகள் கழித்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தையோ அல்லது பதினாறு வயதினிலே படத்தையோ இன்று யாரேனும் விமர்சித்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டதுதான் இந்த விமர்சனம். அடுத்தது நாவலை படித்துவிட்டு விமர்சிக்கிறார்களா என்பது எனக்கு பெருத்த சந்தேகம். பொதுவாக படிக்காத பிரதியின் மீது கருத்து சொல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு. அந்த வகையில் இது படிக்காமலே கருத்து சொல்லப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. யாரோ ஒருவர் நாவலால் மனம் புண்பட்டுவிட்டார் என்று வதந்தியாக பரவி அதன் தொடர் வினையாக நானும் புண்பட்டு விட்டேன் என்ற கோரல் எப்படி நியாயமாக இருக்க முடியும். ஏழுகோடி தமிழர்களில் 7000 பேர் வாசித்திருந்தாலே அதிகம். வாசித்த 7000 பேரில் எத்தனை பேரின் மனம் புண்பட்டிருக்கிறது என்ற களஆய்வு யாரேனும் நடத்தியிருக்கிறார்களா? நாமக்கல் நகரோ அல்லது திருச்சொங்கோடு நகரோ குறைந்தது 2 லட்சம் மக்களைக் கொண்டிருக்கும் என்பது எனது கணிப்பு. படித்துவிட்டு சுயமாக முடிவெடுக்க முடியாதவர்கள் அடுத்தவர்கள் பின்னால் திரளுகிறார்கள் என்பது துரதிஷ்டமே.

 

சமீபகாலம்வரை எந்த படைப்பும் பிரச்சனைக்குள்ளானதில்லை. காரணம் பண்பாட்டு பதிவுகளை வரலாற்றியல் பிரச்சனைக்குள் பொருத்தும் முயற்சி தமிழகத்தில் இதுவரை இருந்த்தில்லை. சங்பரிவார அமைப்பினரின் செல்வாக்கு இந்தியாவின் இதர பகுதிகளில் தலை தூக்க ஆரம்பித்தவுடன் அதன் தாக்கமாக இரும்புக் கோட்டையாக இருந்த தமிழகம் சற்று கலகலக்க ஆரம்பித்திருக்கிறது. அதே நேரத்தில் ஜாதிய சக்திகள் சங்பரிவாரத்தினரின் அடிச்சுவட்டை பின்பற்றி அதன் தலைமை அந்த ஜாதியில் தன்னுடைய பிடிப்பை இறுக்கிக் கொள்ள இது போன்ற விஷயங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

 

வாசிப்பு தளம் என்ற வட்டத்திற்குள் வராமல் அத்தளத்தின் உள்விஷயங்களை எப்படி விமர்சிக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. குடிப்பழக்கம் இல்லாதவன் ஸ்காட்ச் விஸ்கியைப் பற்றி “குடிமகன்“களின் சபையில் பேசினால் “குடிமகன்கள்“ எப்படி நோக்குவார்களோ அதுபோலே வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் இந்த நாடகத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

 

நாவலைப் படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய உணர்வு குழந்தை இல்லாத தம்பதிகளை இந்த சமூகம் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறது என்ற ஆத்திரமே எஞ்சி நின்றது. குழந்தை இல்லாதவர்களின் கதையை, அவர்கள் இந்த சமூகத்தில் படும் பாட்டை சொல்வதற்கு ஊடகமாக படைக்கப்பட்ட கதை மாந்தர்களையும் கதைத்தளத்தையும் எடுத்துக் கொண்டு கதையைப் படிக்காதவர்கள் மத்தியில் தவறாக பிரசாரம்செய்து அணி திரட்டியதுதான் கொடுமை. அந்தக்காலத்தில் இந்தப் பிரச்சனை எப்படியெல்லாம் குழந்தையில்லாத தம்பதிகளை உலுக்கி எடுத்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமூகம் அதற்கான தீர்வையும் கொடுத்திருக்கிறது. இன்றும் கூட அது தீர்ந்தபாடில்லை.  அது வேறு வடிவத்தில் வடிவெடுத்திருக்கிறது. இன்றைக்கு எல்லாமே மாறிப் போன சூழநிலையில் இன்றைய நிலையில் வைத்து அதை பொருத்திப் பார்த்து விமர்சிப்பது அறியாமை. இதைவிட கொடுமை என்னவென்றால் கதையைப் படிக்காமலேயே மனச்சாய்வுக்கு ஏற்றாற்போல் அதன் மீதான விமர்சனத்தை வைப்பது அறிவுடமை ஆகாது.

 

எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாக பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர்வாழ்வான்“

  • திங்கள் நள்ளிரவில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் எழுதிய வேதனை தோய்ந்த பதிவு

 

 

Related Posts