சமூகம்

மானிய வெட்டும், விலையேற்றங்களும் தவிர்க்கவே முடியாததா? – ஓர் ஆய்வு !

ஒவ்வொரு ஆண்டும் நமது மத்திய அரசு பட்ஜெட்டின் போது துண்டு விழுவது என்பது வழக்கமான நடவடிக்கை தான். அப்பொழுதெல்லாம் திருவாளர்கள் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மோடி மற்றும் அருண் ஜெட்லி வகையராக்கள் மக்களை நோக்கி வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள் அல்லது மக்களுக்கு கசப்பு மருந்து தரவேண்டியுள்ளது என்று அறிவுரையாகவோ அல்லது வேறு வழியில்லாமல் மருந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டியுள்ளது என்று தங்களது நடவடிக்கைகளுக்கு வக்காளத்து வாங்குவார்கள். இவர்கள் கூறுவது போல் வேறு வழியே இல்லையா என்பதை அலசுவது தான் இப்பதிவின் நோக்கம்.

 

1.பட்ஜெட் துண்டும்,மான்ய வெட்டும், மற்றும் அரசுத் துறைப் பங்கு விற்பனையும்  

மத்திய அரசின் வரவுகளை விடச் செலவுகள் தான் அதிகம் இருப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. அதனால் நமது மத்திய அரசுகள் செலவைக் குறைப்பதற்காக சாதாரண மக்களுக்குக் கொடுத்து வந்த மானியங்களை வெட்டுவதும், சமூக நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைப்பதும், அதற்கும் ஒருபடி மேலாகச் சென்று அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குகின்றது.

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் கூடிய மத்திய கேபினெட் கூட்டத்தில் கீழ் காணும் பங்குகளை விற்று அரசுக்கு ரூ.58,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ONGC) 5% மான பங்குகளையும், கோல் இந்தியா நிறுவனத்தின் (CIL) 10% மான பங்குகளையும், தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனத்தின் National Hydroelectric Power Corporation (NHPC)  11.36%மான பங்குகளையும் மற்றும் ஏற்கனவே தனியார்மயமாக்கிய பாரத் அலுமினியம் (Bharat Aluminium) ஹிந்துஸ்தான்  சிங்க் (Hindustan Zinc) நிறுவனத்தின் பங்குகளையும் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது.   மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் சரிதானே என்பது போல் தோன்றும். மத்திய அரசு வருவாயைப் பெருக்குவதற்கு வழியே இல்லை என்றால் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

2.மத்திய அரசு வருடா வருடம் தனது வரி வருமானத்திலிருந்து விட்டுக் கொடுக்கும் வருமான இழப்பு

நமது மத்திய அரசு

ஒவ்வொரு நொடிக்கும் ரூ.1,28,538 கோடியை விட்டுக் கொடுத்து வருவாயை இழந்து வருகிறது. அல்லது

ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ77,12,273 கோடியை விட்டுக் கொடுத்து வருவாயை இழந்து வருகிறது. அல்லது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ46,27,36,380 கோடியை  விட்டுக் கொடுத்து வருவாயை இழந்து வருகிறது .

2005-06 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையில், நமது மத்திய அரசு 1.நிறுவன வருமான வரி(Corporate income tax ), 2.தொழில் வரி (Excise Duty ), மற்றும் 3.சுங்க வரி (Customs Duty ) ஆகியவற்றில் வரவேண்டிய வரிவருவாயை வசூலிக்காமல் இந்த 9 வருடங்களில் மட்டும் ரூ. 36,48,214 கோடி ரூபாய் வருவாயை இழந்துள்ளதை கீழ்காணும் அட்டவனையின் மூலம் இதனை நாம் அறியலாம்.

அட்டவணையில் கூறப்பட்டுள்ள தொகை ரூபாய் கோடியில்

Taxes 2005-06 2006-07 2007-08 2008-09
Corporate tax 34,618 50,075 62,199 66,901
ExciseDuty 66,760 75,475 87,468 1,28,293
Customs Duty 1,27,730 1,37,105 1,53,593 2,25,752
total 229108 2,62,655 3,03,260 4,20,945

 

Taxes 2009-10 2010-11 2011-12 2012-13
Corporate tax 72,881 57,912 61,765 68,720
ExciseDuty 1,69,121 1,92,227 1,95,590 2,09,940
Customs Duty 2,07,949 1,72,740 2,36,852 2,54,039
total 4,49,951 4,22,879 4,94,207 5,32,699

 

Taxes 2013-14(proposed) 2005-14TOTAL 2005-14INCREASE %
Corporate tax 76,116 5,51,187 219.87%
ExciseDuty 1,95,679 13,20,553 293.108%
Customs Duty 2,60,714 17,76,474 204.10%
total 5,32,509 36,48,214 232.43%

 

*மத்திய அரசின் (Annexure 12- Revenue forgone statement) விட்டுக் கொடுக்கப்பட்ட வரி வருமான அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

*2013-14 ம் ஆண்டிற்கு மட்டும் உத்தேச அறிக்கை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் அந்நிதியாண்டிற்கான அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.

3.ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானமும், உலக நடைமுறையும் 

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை“.                –திருக்குறள்

அரசின் வருவாயைப் பெருக்கி, செல்வத்தை வளர்த்து, அம்முயற்சிக்குத் தடை வருமானால் அதை நீக்கித் திறமையுடன் செயல்படுவனே சிறந்த அரசாளன் ஆவான்.

நமது மத்திய அரசு ஏன்? தனது வரி வருவாயை விட்டுக் கொடுக்கிறது. ஒருவேளை நமது மத்திய அரசு, நமது இந்திய முதலாளிகள் மீது அளவுக்கதிகமான வரிச் சுமையை ஏற்றியுள்ளதோ என்ற ஐயப்பாடு நமக்கு எழலாம். ஆதலால் நாம் உலகில் நடைமுறையில் உள்ள வரி வசூலிப்பு அளவையும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் பார்த்தோமானால் உண்மை நிலை விளங்கும்.

3.1 ஐக்கிய நாடுகள் சபை, தனது சியாட்டில் தீர்மானத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்(GDP)கும், வரி (TAX) வசூலிப்பிற்குமான விகிதம் குறைந்த பட்சம் 20% இருக்க வேண்டும் என்றும், அப்போழுது தான் ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி மில்லினியம் டெவலப்மெண்ட் கோலை

(Millennium Development Goals) அடைய முடியும் என்று வலியுறுத்துகிறது.

(An International Assessment, UNDP, June 2010, page 26)

3.2 உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வரி வசூலிப்பிற்குமான விகிதம் சராசரியாக 14.2% ஆக உள்ளது. நமது இந்திய நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வரி வசூலிப்பிற்குமான விகிதம் 9.7% ஆகத் தான் உள்ளது.

3.3. உலக அளவில் 2013ம் ஆண்டில் முக்கியமான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வரி வசூலிப்பிற்குமான விகிதம் உத்தேசமாக எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்

( https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/print_2221.html)

1.கியூபா- 65.9%, 2.குவைத்- 63.6%, 3.ஜெர்மனி-45.3% 4.கிரிஸ்-43.7%, 5.போர்ச்சுக்கல்-43.5%, 6.யுனைடட் கிங்டம்-41.1%, 7.இஸ்ரேல்-40.2, 8.பிரேசில்-38.9%, 9.கத்தார்-38.8% 10.நியூசிலாந்து-38.2%, 10.கனடா-37.7%, 12. யூ.ஏ.இ-35.4%, 13.ஜப்பான்-34.7%, 14.ஆஃஸ்திரேலியா-33.2%, 15. பக்ரைன்-28.7%, 16.வெனிசூலா-28.7%, 17.பூடான்- 27.6%, 18.அர்ஜென்டினா-26.8%, 19.வியட்னாம்-25.2%, 20.ரஸ்யா-23.6%, 21.யூ.எஸ்-22%, 22.மலேசியா-21%, 23.சைனா-19.4%, 24.நேபாள்-17.1%, 25.ஸ்ரீலங்கா-12.9%, 26.பாகிஸ்தான்-12.6%, 27.பங்களாதேஸ்-12.3%, 28.இந்தியா-10.3%.

இப்புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாதெனில் உலகிலேயே மிக மிகக் குறைவான வரி வசூலிப்பாளராக நமது மத்திய அரசு இருந்து வருவது தெள்ளத்தெளிவாக விளங்கும். 

  1. நமது இந்திய நிறுவனங்களின் வரி செலுத்தும் விவரங்கள்

Financial Year 2011-12   Sample size – 4,94,545 companies

Financial Year 2012-13     Sample size – 618806  companies 

Financial year Total No. Companies No.ofLoss making

Companies

No loss andNo profit Companies No. of Companies not paid Tax
2011-12 4,94,545 1,84,653       30,910 2,32,296
2012-13 6,18,806 2,50,865 33,832 3,07,632

 

4.1- 2011-12 ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு வரியே செலுத்தாத கம்பெனிகளின் எண்ணிக்கை சுமார் 2,32,296 ஆகும். அதாவது 46.97% கம்பெனிகள் வரியே செலுத்துவதில்லை. ஏனெனில் அவை லாபமில்லாமல் இயங்குகின்றனவாம்.

2012-13 ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு வரியே செலுத்தாத கம்பெனிகளின் எண்ணிக்கை சுமார் 3,07,632 ஆகும். அதாவது 49.71% கம்பெனிகள் வரியே செலுத்துவதில்லை. ஏனெனில் அவை லாபமில்லாமல் இயங்குகின்றனவாம்.

மேலும் அரசு நிறுவனங்களிலிருந்து வரி மட்டுமல்லாது, டிவிடெண்ட், ராயல்டி மற்றும் பல்வேறு அரசின் திட்டங்களுக்கு குறைந்த வட்டியில் நிதியுதவியும் அரசுக்குக் கிடைத்து வருகிறது.

அதாவது நமது இந்தியாவில் இயங்கும் 2-ல் 1 நிறுவனம் நட்டத்தில் இயங்குகின்றனவாம்!!. ஆமாம் அவர்கள் எல்லாம் நமது தேச சேவைக்காகவே கம்பெனிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!!! நம்புவோம் நாமும்???????. 

4.2- நமது இந்தியாவில் பொதுத் துறை (Public sector)நிறுவனங்கள் மற்றும் தனியார் (Private sector) நிறுவனங்கள் மொத்த நிறுவன வரி வசூலில் எவ்வளவு வரி செலுத்துகின்றன என்பதைக் கீழ்காணும் அட்டவணைத் தெளிவாக விளக்கும். 

2011-12 2012-13
SECTOR No. ofCompanies Share inTotal tax payable in % No. ofCompanies Share inTotal tax payable in %
Public Companies 230 27.16% 227 25.59%
Private Companies 494315 72.84% 618579 74.41%
Total 494545 100% 618806            100%

 

இந்த அட்டவணையிலிருந்து நாம் தெரிந்து கொள்வதுயாதெனில் குறைந்த எண்ணிக்கையிலானப் பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 26% மான வரியையும், மிக மிக அதிக எண்ணிக்கையிலுள்ள தனியார் துறையிடமிருந்து 74% வரியையும் அரசு பெற்று வருவது விளங்கும்.

 

  1. நமது மத்திய அரசுகள் சில முக்கியமான பொருட்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளைப் பார்ப்போம்

 

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும், காத்த

வகுத்தலும் வல்லதரசு”.   –திருக்குறள்

 

அரசுக்குப் புதிய வருவாய்க்கான வழிமுறைகளை உருவாக்குதலும், அவ்வாறு உருவாக்கிய வருவாயை விரயம் செய்யாமல் காத்து,

பல்வேறு திட்டங்களுக்கு உரிய முறையில் செலவு செய்வதே சிறந்த அரசாகும்.

ஒரு சில முக்கிய பொருட்களில் அரசு தனது சுங்க வரி வருவாயை விட்டுக் கொடுத்துள்ளதைப் பார்ப்போம்.

2011-12 2011-12
Commodity Amount in Crores % in Customs Duty
Diamond and gold (71) 65,975 23%
Crude oil andmineral oils (27) 55,576 19.5%
Fertilizer(31) 7439 3%
Drugs (30) 1628 1%

 

 

2012-13 2012-13 2013-14(esti) 2013-14(esti)
Commodity Amount in Crores % in Customs Duty Amount in Crores % in Customs Duty
Diamond and gold (71) 61,676 21% 48,635 16%
Crude oil andmineral oils (27) 64,780 22% 77,851  26%
Fertilizer(31) 6943 2% 4961 2%
Drugs (30) 1236 less than 1% 1053 less than 1%

இந்த அட்டவணைகளிலிருந்து நாம் தெரிந்து கொள்வதுயாதெனில், ஒவ்வொரு ஆண்டும் தங்கம் மற்றும் வைரம் போன்ற பொருட்களுக்கான சுங்க வரியில் மட்டும் நமது மத்திய அரசு விட்டுக் கொடுத்து வருவது, இப்பொழுது அரசு பொது துறைப் பங்குகளை விற்பதால் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம் என்பது புலப்படும்.

மேலும் நாம் தெரிந்து கொள்வது கச்சா எண்ணெய் மற்றும் தாதுப் பொருட்களுக்காக விட்டுக் கொடுத்ததை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ தங்கம் மற்றும் வைரம் போன்ற பொருட்களிலும் சுங்க வரி வருவாயை நமது அரசு விட்டுக் கொடுத்துள்ளது.

தங்கம் மற்றும் வைரம் போன்ற பொருட்களுக்கான சுங்க வரியில் விட்டுக் கொடுத்ததென்பது அத்தியாவாசியத் தேவையான உரம் மற்றும்

மருந்துப் பொருட்களுக்காக விட்டுக் கொடுத்ததை விட மிக, மிக அதிகம் என்பது விளங்கும்.

தங்கம் மற்றும் வைர இறக்குமதியால் அந்நியச் செலாவனியில் அதிகத் துண்டு விழுவதால், அதைச் சரிக்கட்ட நமது அரசு செய்யும் தகிடு, தத்தங்கள் ஆராய்ந்தால் இன்னொரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.

(இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, கச்சா எண்ணை இறக்குமதியில் அரசு வரியைத் தள்ளுபடி பண்ணுகிறது, ஆனால் அதிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தின் போது இறக்குமதி தீர்வையும் சேர்த்து தான் விலை நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்களை விற்கச் செய்கிறது. இதன் மூலம் நாம் ஒவ்வொரு வரும் பெட்ரோல், டீசலுக்குச் செய்யும் செலவில் உள்ள வரி அரசையும் சேராமல் எண்ணெய் நிறுவனங்களின் பாக்கெட்டிற்குச் செல்கிறது.)

6.முடிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

நமது மத்திய அரசு தன்னுடைய வரிகளைச் சரியானபடி வசூலித்து அதன் மூலம் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்வதற்குப் பதிலாக

பட்ஜெட் செலவுகளைக் குறைக்கிறேன் என்ற பெயரில் சாதாரண மக்களுக்குச் செலவிடும் நிதியில் தான் கை வைக்கிறது. ஆனால் இந்தியப் பெரும் முதலாளிகளுக்கு சலுகையாக (தப்பு?? தப்பு?? ஊக்கத் தொகையாக) பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி வழங்குகிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தாலும், பெட்ரோலியப் பொருட்களிலிருந்து வரியாக அரசுப் பெறும் வருவாயைக் குறைக்காமல் அலிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் பென்சன், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றில் தான் தன் செலவைக் குறைத்து, பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்வேன் என்று சண்டமாருதம் செய்யும் அரசின் வர்க்கச் சார்பை நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இது மட்டுமல்லாது அரசுக்கு வரியையும், டிவிடெண்டையும், ராயல்டியையும் மற்றும் குறைந்த வட்டியில் நிதியுதவியும் பெற்று வரும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்று பட்ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்ய நினைக்கிறது. இது தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பாகும்.

மகாகவி பாரதியின் வரிகளில் சொல்வதென்றால்

             செருப்புக்குத் தோல் வேண்டியே இங்கு கொல்வரோ

              செல்வக் குழந்தையினை            -மகாகவி பாரதியார்.     

(குறிப்பு:- நாம் இங்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பணத்தையோ? 2ஜி ஃஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தையோ? கறுப்புப் பணமாக கல்வி, ரியல் எஃஸ்டேட், தாதுப் பொருட்கள் விற்பனை/ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி/இறக்குமதியில் போலியான விலைக் குறியீடு போன்றவற்றால் வருகின்ற கறுப்புப் பணத்தைப் பற்றியோ பேசவில்லை என்பதைக் கணக்கில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

இந்தப் பதிவை எழுத தூண்டுதலாக மற்றும் உறுதுணையாக இருந்தது பி.சாய்நாத் அவர்களின் “The feeding frency of kleptocracy” என்ற பதிவு தான்.

(http://www.thehindu.com/todays-paper/tp-opinion/the-feeding-frenzy-of-kleptocracy/article4514545.ece)

  • ச.அரியநாயகம்

Related Posts