அறிவியல் நிகழ்வுகள்

சனிப்பெயர்ச்சிக்கு அறிவியல் முகமூடி தரிக்கும் தினமலர் ! – அம்பலக் கட்டுரை …

சனி

கடந்த நவம்பர் 25, 2014 தினமலர் நாளிடதழுடன் இணைப்பாக வந்த ஆன்மீக மலர் புத்தகத்தின் கடைசி இரு பக்கங்களில் ஒரு கட்டுரை வெளியானது. ஏழரைச் சனிக்கு அறிவியல் பரிகாரம்என்பதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு.இந்த திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம் பொய்யும் புரட்டும் கலந்து எழுதப்பட்டுள்ளது. 

பழங்காலத்தில் அறிஞர்கள் பலரும் வானியலில் ஈர்ப்புக் கொண்டு அவற்றை உற்று நோக்கி, அவர்களின் கண்களில் புலப்பட்ட பல்லாயிரம் நட்சத்திரங்கள் என்றும் , அவற்றிலிருந்து சற்று பெரிதாகவும், வெளிச்சம் அதிகமாக இருப்பவைகளுக்கு கோள்கள் என்றும் கண்டறிந்து, ஒவ்வொரு கோள்களுக்கும் பெயரிட்டனர். பெயர்கள் நினைவில் வைத்துக்கொள்ள சுலபமாகவும், மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவியாகவும் இருந்தன. இதனை ஏதோவொரு நாட்டைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு மட்டும் செய்யவில்லை. அவரவர் சூழலில் அவரவர் இடத்திற்கு, மொழிக்கு ஏற்றாற்போல் இவற்றை பதிவு செய்தனர். அப்படித்தான் கிரேக்கர்களும் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டுபிடித்தனர். சனி என்று நாம் குறிப்பிடுவது, அவர்கள் புராணங்களில் க்ரோனோஸ் (KRONOS) என்று அழைக்கப்படுகிறது.

ஆரியபட்டா, ப்ரம்மகுப்தா போன்ற இந்திய அறிஞர்கள் கணிதவியல் மற்றும் வானியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதும், அவர்கள் தங்கள் காலத்தில் இருந்த மரபுகளையும் கேள்விக்குள்ளாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று கோள்கள், நட்சத்திரங்கள், எரிகல், விண்கல், வால்நட்சத்திரம் என்பவற்றிற்கு அறிவியலில் விளக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இன்று இருக்கும் கருவிகள் மூலமும், தொழில்நுட்பம் மூலமும் நம்மால் அவற்றின் உருவத்தைக் காண இயலும். விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைகோள்களின் மூலம் கிடைக்கும் அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட (infra-red) புகைப்படங்கள் மற்றும் அல்ட்ரா ஹைடெஃப்னிஷன் கருவிகள் மூலம் எடுக்கப்படும் படங்கள் அவற்றை தெளிவாகக் காட்டுகின்றன. அக்காலத்தில் இதுபோன்ற கருவிகள் இருந்திருக்கவில்லை. அதனால், வெறும் கண்களுக்கு புலப்பட்ட வேறுபாடுகளை வைத்து கணித்ததால் ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு என்ன வேறுபாடு என்பது தெளிவாக இல்லை. அதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கவும் இல்லை.

சரி, இது ஒருபுறம் இருக்கட்டும், நாம் தினமலர், சோதிடத்திற்கு அறிவியல் முலாம் பூச முயன்ற கட்டுரையில் கூறிய சிலவற்றைப் பார்போம்.

கோள்களின் நகர்வு பற்றி அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்என யஜூர் வேதம் கூறுகிறது

எதனடிப்படையில் இது கூறப்பட்டது? முதலில் நல்லது, கெட்டது என்பதற்கு பொதுவான விளக்கமே சொல்ல முடியாது. ஒருசிலருக்கு நல்லதென்று படுவது, ஒருசிலருக்கு கெட்டதென்று படும். அப்படி இருக்க கோள்களின் நகர்வுக்கும், நல்ல பிள்ளைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

நாசா விஞ்ஞானி கார்ல் சாகன் இவ்வாறு கூறுகிறார்: , “நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவிற்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய எதிர் காலம் நன்றாக இருக்கும்

இந்த பிரபஞ்சம் உருவானதற்கும், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல பொருள்களுக்கும் காரணம் பெரு வெடிப்பு (Big bang) என்று பல அறிவியலாலர்களால் தற்போது நம்மிடம் உள்ள அறிவியல் பூர்வமான தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்மூடித்தனமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஏற்பட்ட வெடிப்பிலிருந்து உருவான கோள்தான் நாம் வாழும் பூமி. பூமி – வெடித்த உடனே உருண்டையாகவும் அதன் மேற்பரப்பில் செடிகளும், பூக்களும், உயிர்களும் வந்துவிடவில்லை. சூரியன் கொழுந்து விட்டு எரியக் காரணம் அதற்குள் இருக்கும் ஹைட்ரஜன் வாயு தான் காரணம். அதுபோல் பூமியின் வளிமண்டலத்தில் பல வாயுக்கள் நிரம்பி இருந்தன (இவை உயிர்கள் உருவாக சாத்தியமில்லாத நிலையில் தான் இருந்தன), பூமியின் பரப்பிற்கு அடியில் பல கணிமங்கள் இருக்கின்றன, அவற்றின் ஆதாரம் தான், நிலக்கரி, தங்கம் போன்றவை. இவை அனைத்தும் பல கோடி வருடங்களாக சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள், வெப்பம், போன்றவைகளால் உந்தப்பட்டு, பூமியில் உயிர்கள் உருவாகத் தகுந்த சூழ்நிலையை ஏறபடுத்தின. சூரியன், கோள்கள், நட்சத்திரம், விண்கல், இன்னும் என்னவெல்லாம் விண்வெளியில் சுற்றித்திரிகின்றனவோ இவை அனைத்தும் பெரு வெடிப்பிலிருந்து பிறந்தவை என்பதைத் தான் கார்ல் சாகன் தன் புகழ்பெற்ற காஸ்மோஸ் (Cosmos) என்னும் தொலைக்காட்சித் தொடரில் குறிப்பிடுகிறார். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேற்சொன்னதற்கும் எதிர்காலத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அந்த எதிர்காலம் என்பது ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையைப் பற்றியது அல்ல மாறாக இந்த ஒட்டுமொத்த பூமியில் வாழும் உயிர்களுடையது. எப்படியென்றால், உதாரணத்திற்கு பூமி வெப்பமயமாதல் பற்றி படிக்கிறோம், அதன் காரணம், பூமியில் கரியமில வாயு உள்ளிட்ட மாசுக்களை உருவாக்கி (carbon) மூலம் நாம் வளிமண்டலத்தை அசுத்தம் செய்கிறோம் அதனால் ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக நம் மீது பட்டு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதே இந்த ஓசோன் படலத்தின் வேலை. சூரியனில் இருந்து புற ஊதா வரும் என்று அறிந்து வைத்து கொண்டதன் காரணமாகத்தான் பூமியின் எதிர்காலத்தை பற்றி கவலைக்கொள்கிறோம். இந்த வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாதன் விளைவாக இன்று ஆர்ட்டிக் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது.

அதுபோலத்தான் விண்வெளியில் சுற்றித் திரியும் பல பொருட்களைக் கண்கானித்து அவற்றின் வேகம், தூரம் போன்றவற்றை கணக்கில் வைத்துக் கொள்வது, அவை பூமியை நோக்கி வரும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க உதவுகிறது.

தற்போதைய சனிப்பெயர்ச்சியில், சூரியனுக்கு மிகவும் அருகில், அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி கிரகம் இருக்கும், எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம்.

பெயர்தல் என்பதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்தல் என்கிறார்கள்.   இதற்கு முன்பு எத்தனையோ முறை வருடா வருடமும் சனிப்பெயர்ச்சி என்று கூறினார்கள், இதில் எத்தனை முறை சனிப்பெயர்ச்சியை வெறும் கண்களால் நீங்கள் கண்டுள்ளீர்கள்?

கடந்த 2013-ஆம் வருடம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, ஐசான் (ISON) எனப்படும் வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வெப்பத்தால் கருகியதை தொடர் நேரடிக் காட்சியாக நாசா தனது இணைய தளத்தில் ஓளிபரப்பியது. இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். அப்படியிருக்க இவர்கள் கூறுவது போல் ஏன் சனி பெயர்ச்சியை அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி நமக்குக் காண்பிக்க முடியவில்லை அதுவும் சூரியனுக்கு மிகவும் அருகிலாம்?

இதே கட்டுரையின் முன் பகுதியில், சூரியனை விட்டு 85 கோடி மைல் தூரத்தில் சனி இருக்கிறது என்பதையும், அது சூரியனுக்கு அருகில் இல்லை என்று சொல்லிவிட்டு, சூரியனுக்கு மிகவும் அருகில் சனி இருக்கும் என்று முரணாக எழுதியிருக்கிறார் கட்டுரையின் ஆசிரியர்.

saturnசனி என்பது ஒரு கிரகம் அல்லது கோள். சூரியன் என்பது நட்சத்திரம். ஆனால் இவர்கள் கூறும் யஜூர் போன்ற வேதங்களில், சூரியனை ஒரு கோள் என்கிறார்கள். ஒரு 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லும் சூரியன் என்பது நட்சத்திரம் என்று. சூரியனைக் கோள் என்று கருதும் அளவே மனித அறிவு முதிர்ச்சி இருந்த காலத்தில்தான் யசூர் வேதம் எழுதப்பட்டது.. ஒரு விண்பொருளை எதுவாக கருத வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கம் உண்டு என்பதை தொடக்கத்திலேயே கூறியிருந்தேன். அறிவியல் என்ன சொல்கிறதென்றே தெரியாமல் அறிவியல் பரிகாரம் என்று தன் கட்டுரைக்கு தலைப்பு வேறு வைத்திருக்கிறது தினமலர்.

சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்றுஎன மனதால் தியான செய்ய வேண்டும்.

சூரியனில் இருந்து வெளிப்படும் கெடுபலனான புற ஊதா கதிரைத் தடுக்க, “சூரியா! எனக்கு உன்னால் வரும் புறஊதா கதிரிலிருந்து என்னை காப்பாற்றுஎன்று தியானம் செய்தால் கதிர்கள் நம்மீது விழாதா? இல்லை மழை பெய்யும் போது “வருணா! நான் நனையாமல் இருக்க வேண்டும்என்று தியானம் செய்து மழையில் நடந்து போனால் நனையாமல் இருப்போமா? என்ன முட்டாள் தனம் இது? மழையில் நனையாமல் இருக்கக் குடை பிடித்தோ அல்லது அதற்காக வடிவமைக்கப்பட்ட கோட் போட்டுக் கொள்ள வேண்டும். சூரியக் கதிர் தாக்காமல் இருக்க நாம் வளிமண்டலத்தை அசுத்தம் செய்வதை நிறுத்த வேண்டும்.

சரி முதலில் சனி (Saturn) எனும் கோளில் இருந்து என்ன கெடுபலன் வருகிறது என்பதை அவர்களால் விளக்க முடியுமா? . அந்த கோளிலிருந்து ஏதேனும் புறஊதா போன்ற கதிர் வருகிறதா? இல்லை வேறு ஏதாவது இருந்தால் ஏன் அதனை ஆன்மீகவாதிகளால் கூற முடியவில்லை?

இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப் பார்வை மூலம் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி ஆரோக்கியத்தை அடையலாம்.

பகலில் சூரியன் பிரகாசமாய் இருக்கும் ஆதலால் தூரத்தில் இருக்கும் கிரகம், நட்சத்திரம் போன்றவை கண்ணுக்கு தெரியாது. இரவு நேரத்தில் சூரிய வெளிச்சம் இருக்காது ஆதலால் அவை கண்ணுக்கு தெரிகிறது. ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் பறவைப்பார்வை என்று மனதால் கற்பனை செய்ய சொல்கிறார் கட்டுரையாளர். உண்மையில் அறிவியலோடு அறிவியல் பார்வை கொண்டு இதை எழுதியிருந்தால், நாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எந்த நேரத்திலும் கிரகங்கள், நட்சத்திரங்களை காண வழி சொல்லியிருக்க வேண்டும். தற்கால அறிவியலில், அது சாத்தியமான ஒன்றுதான் . ஆம். ஸ்டெல்லாரியம் (Stellarium) என்ற கட்டற்ற மென்பொருளை (Free Software) இணையத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்தால் இலவசமாகவும் எந்தக் கட்டுபாடுமின்றியும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். நீங்கள் இருக்கும் வீட்டிலிருந்தே அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைகோள்கள் ஆகியவற்றின் இருப்பிடம் அறிந்து உங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதும் உறுதி.

அறிவியல் என்னும் பெயரால் உண்மைக்குப் புறம்பான பல மூடநம்பிக்கைகளை கடவுள் எனும் கற்பனை குதிரையின் மீது ஏற்றி அந்த மூடநம்பிக்கைக்கு பலம் சேர்க்கும் தினமலரின் செயல் திட்டமிட்டே செய்யப்படுகிறது. இந்தியாவில் இது போல் பல இதழ்களிலும், வாய்வழியாகவும் தொடர்ந்து கட்டுக்கதைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன, இருந்தாலும், இவற்றைக் கண்மூடித்தனமாக நம்புபவர்களின் எண்ணிக்கை குறைவுதான் . அறிவியல் பூர்வம் என்று யாரேனும் சொன்னால் முதலில் அது அறிவியல் தானா? அல்லது அவர்கள் கூற்றுக்கு ஏதேனும் அறிவியல் தரவுகள், சாட்சியங்கள் இருக்கின்றனவா? என்று ஆராயத் தொடங்குவதே இந்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு நாம் வைக்கும் முற்றுப்புள்ளியாக அமையும்.

Related Posts