தமிழகம் வளர்ச்சியில் கடைசி இடமா? : பொருளாதார அறிஞரின் பார்வை …

இரண்டு தினங்களுக்கு முன்னர், தமிழகம் வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதாக முக்கிய பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திகள் “சிறப்பு அந்தஸ்து பெறாத மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது நமது தமிழகம். வளர்ச்சி வீதம் வெறும் 3.39 தான். இது நாட்டின் சாராசரி வளர்ச்சி வீதத்தை விட மிக குறைவு.” என தெரிவித்தன. (தினகரன்) மேலும், மின்வெட்டும், தொழில்களுக்கு சலுகை வழங்காததுமே இந்த பின்னடைவுக்கு காரணம் என்று தெரிவித்தன.

மேம்போக்கான பார்வையில் எழுதப்பட்ட அந்தச் செய்தி குறித்த விளக்கத்தை பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் கேட்டோம், மாற்று இதழுக்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு …

இந்த புள்ளி விவரங்களின் ஆதாரம் தெளிவாக இல்லை. நான் அரசு இணைய தளங்களில் இவற்றை காண முடியவில்லை. இருப்பினும் அவை சரி என்றே கொண்டாலும், பலவிசயங்களை நினைவில் கொள்வது அவசியம்:

1. ஒருமாநிலத்தின் உற்பத்தி குறைவாக இருந்தால் அது சிறிய அளவில் அதிகரித்தாலும் அதுசதவிகிதத்தில் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 20 என்ற நிலையில் இருந்து 30 ஆனால் வளர்ச்சி விகிதம் 50 %. ஆனால் 100 இல் இருந்து 140 ஆக உயர்ந்தால் அது 40 % தான். இது தான் பீகாரின் அதிக வளர்ச்சிவிகிதத்திற்கு ஒரு முக்கிய காரணம். அது பின் தங்கிய வளர்ச்சி குன்றிய மாநிலம். எனவே அங்கு ஏற்படும் வளர்ச்சி அதிக விகிதமாக கணக்கில் வரும்.

2. ஒரு குறிப்பிட்ட ஆண்டையும் அதற்கு அடுத்த ஆண்டையும் மட்டும் வைத்து வளர்ச்சி விகிதம் பற்றி விவாதிப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. ஒரு மாநிலத்தில் பருவ மழை பொய்த்திருக்கலாம். அதனால் அந்த ஆண்டில் வேளாண் வளர்ச்சி குறையலாம். அல்லது வேறு பிரத்யேக காரணங்களால் தொழில் துறையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு தற்காலிக காரணங்களால் மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் பாதிக்கப்ப டலாம். இதையும் மனதில் கொள்ளவேண்டும். மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து கொள்கை முடிவுகளு க்கு வருவது எளிதல்ல என்பது மட்டுமல்ல. ஆபத்தானதும் கூட.

3. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதற்கு மின்பற்றாக்குறை மற்றும் கட்டுமானத் துறைகளில் வளர்ச்சி குன்றி இருப்பது முக்கிய காரணம் என்பது சரியே. தொடர்ந்து பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பனிகளுக்கு பெரும் சலுகைகள் அளித்து அதன் மூலம் வளர்ச்சியை சாதிக்கலாம் என்ற கருத்து தவறானது என்பதற்கு தமிழக கட்டமைப்பு துறை ஒரு உதாரணம். தி.மு.க., வும் அ.தி.மு.க., வும் தொடர்ந்து இத்தகைய சலுகைகளை வாரி வழங்கியுள்ளன. ஆனால் மத்திய அரசின் தனியார் மய தாராளமய உலக மய கொள்கைகளால் அரசு முதலீடுகள் சுருங்கி அதனால் பின்தள்ளப்பட்டுள்ள கட்டமைப்புத் துறையை மாநில அரசுகளும் வளர்த்த்டுக்கவில்லை. அதற்கான வளங்களைப் பெரும் முதலாளிகளிடம் இருந்து வரி வசூல் மூலம் பெற்று முதலீடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் கடந்த பதினைந்து ஆண்டு வளர்ச்சி என்பது நாட்டின் ஒட்டு மொத்த நிலையைப்போலவே சேவைத்துறை சார்ந்த வளர்ச்சியாக இருந்துள்ளது. தொழில் மற்றும் வேளாண் துறைகளுக்கு உரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. சாராய வருமானம் இல்லாவிட்டால் பல நலத்திட்டங்களைக் கூட செயல்படுத்தி இருக்க முடியாது என்ற நிலை உள்ளது.

4. பெரு முதலாளிகளுக்கு கூடுதல் சலுகை கொடுத்திருந்தால் வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருந்திருக்கும் என்ற வாதம் ஏற்கத்தக்கது அல்ல. இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், இச்சலுகைகள் பற்றிய விவரங்கள் சட்டசபையில் வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு முன்வந்து கட்டமைப்பபுத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் முதலாளிகள் எங்கு விரைவில் பெரும் லாபம் கிட்டுமோ அத்தகைய தொழில்களில்தான் முதலீடு செய்வார்கள்.

அரசு இப்படி செய்திட, மத்திய மாநில அரசுகளின் கொள்கைகள் மாறவேண்டும். மாநில அரசால் மட்டுமே இந்த முயற்சியை மேற்கொள்ள முடியாது. இன்று நிலைமை என்னவென்றால் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பேரு முதலாளிகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

புகைப்படம்: யுரேகா, இடம்: அசோக் பில்லர், சென்னை.