அறிவியல் தொழில்நுட்பம்

சூரிய ஆற்றலே ஒரே தீர்வா? …

solar pannelகூடங்குளமும் ஃபுக்குஷிமாவும் சூரிய மின்னுற்பத்தி குறித்த கவனத்தைக் குவித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் வழக்கம்போல மேலெழுந்தவாரியான புகழ் பாடலாகவும் அணு ஆற்றலை தவிர்க்க வியலாது எனும் கருத்தை மறுப்பதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. உண்மையில் சூரிய மின்னுற்பத்தி என்பது அணு மின்னுற்பத்திக்கோ அல்லது படிம எரிபொருள்கள் கொண்டு நடக்கும் அனல் மின்னுற்பத்திக்கோ மாற்றா என்பது சற்று ஊன்றி கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

சூரிய ஆற்றல் குறித்த சில விவரங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படவில்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சற்று ஆழமான தொழில்நுட்ப விவகாரமாக இருக்கின்றது; பொதுத்தளத்தில் பெருமளவு மேலோட்டமான நுனிப்புல் செய்திகளைத்தான் எழுத முடிகின்றது.

மற்றொரு காரணம் சூரிய ஆற்றல் ஒரு புனிதப் பசு இடத்தைப் பெற்றுவிட்டது. சூரிய ஆற்றல்தான் அண்டத்தின் சகல ஆற்றலுக்கும் தாய்; அதனால்தான் நமது முன்னோர்கள் அதனை வணங்கினார்கள் என்றெல்லாம் மகிமைப் படுத்தப்படுகின்றது. இருக்கட்டும். ஆனால் சூரிய ஆற்றல் என்பதே அடிப்படையில் அதன் மையத்தில் நடக்கும் அணுக்கரு வினையால் எழும் ஆற்றல்தான். ஆம் காற்று, புணல், அனல் ஆற்றல் அனைத்திற்கும் சூரிய ஆற்றல்தான் தாய். ஆனால் சூரிய ஆற்றல் என்பதே அணு ஆற்றல்தான். சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் உள்ள சில பிரச்சினைகள் என பின்வருவனவற்றைக் கூறலாம்.

  1. சூரிய ஆற்றல் எனும்போது அதில் இரு வகை இருக்கின்றன. ஒன்று சூரிய அனல் ஆற்றல் மற்றது சூரிய ஒளி ஆற்றல். இந்த வேறுபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசுவது பிரச்சினைகளை மறைக்கின்றது.
  2. சூரிய அனல் ஆற்றலை பயண்பாட்டிற்கு கொண்டுவருவதில் வானிலை மற்றும் நிலவியல் காரணிகள் மிகவும் முக்கியம். தெளிவான மேக மூட்டமல்லாத மழை அதிகம் இல்லாத மனித நடமாட்டம், விலங்குகள் தாவரங்கள் அதிகம் இல்லாத, காற்றின் ஈரப்பதம் அதிகம் இல்லாத.. மொத்தத்தில் வரண்ட பாலை நிலம் தேவை. இந்தியாவில் தார் பாலைவனம் தவிர வேறேதும் இடமில்லை. சென்னையிலும் செங்கல்பட்டிலும் இடிந்தகரையிலும் சூரிய அனல் மின்னிலையம் சாத்தியமில்லை.
  3. சூரிய ஒளிமின்னிலையம் இந்தியாவில் பெரும்பாலான இடஙளில் சாத்தியம். ஆனால் சூரிய ஒளிமின்னுற்பத்தியின் போது சூரிய அனல் என்பது பெரும் இடையூறு. சூரிய ஒளிமின்னுற்பத்திக்கு தோதான வானிலை எனபது தெளிந்த குளிர்கால ஐரோப்பிய வானிலை என்பார்களல்லவா. அதுதான் மிகவும் உகந்தது. ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாறும் நிகழ்வு ஜீரோ டிகிரி செல்ஷியஷில்தான் அதிகத் திறனுடன் நடக்கும். சாதரானமாக சூரிய மின்தகடுகளின் திறன் 20 டிகிரி செல்ஷியஷில் என்ன என்றுதான் குறிப்பிடப்படும். வெப்பநிலை அதிகம் ஆக ஆக திறன் குறையும். அதுமட்டுமல்ல ஒளிஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவதில் கோட்பாட்டு அளவிலான உச்சபட்ச திறன் என்பதே 30% தான். நடைமுறையில் 13%, 14% தான் அதிக பட்ச உறபத்தி திறன்.
  4. சூரிய மின் தகடுகள் எல்லாம் ஏதோ கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் போல மானாவாரிப் பயிராக விளைவது போல கூறப்படுகின்றது. உண்மையில் அது மிகவும் ஆற்றல் தேவைப்படும் உயர் தொழில்நுட்ப முறைபாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஓரு குவிண்டால் நெல் சாகுபடி செய்ய ஒரு குறிப்பிட்ட அளவு விதை நெல் அவசியம் என்பது போல ஒவ்வொரு வகை மின்னுற்பத்தியிலும் ஒரு அலகு மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது சூரிய மின்னுற்பத்திக்கு மிக அதிகம். அப்படியிருக்க சூரிய மின்னுற்பத்தி சூழலை மாசுபடுத்தாத முறை என்பது என்ன பொருளில்?

மொத்தத்தில், எந்த ஒரு காலத்திலும் அது ஒரு முதன்மையான அடிப்படை ஆற்றல் முறைபாடாக இருக்கப் போவதில்லை. முடிந்த மட்டும் பயன்படுத்தலாம், சில சூழ்நிலைகளில் மற்ற முறைகளைக் காட்டிலும் தோதானது என்ற அளவில்தான் அதற்கான இடமுள்ளது.

Related Posts