அரசியல் இதழ்கள் இலக்கியம்

இரணியனின் இறுதி நாட்கள்!

iranianபிதா சுதன் தன் பரிசுத்த ஆவியின் பேராலே எங்களின் பாவங்களை எல்லாம் மன்னித்தெம்மை ரட்சித்து அருள்வீராக – என  ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் கிருத்துவத்திடம் மண்டியிட்டு கிடந்த அந்நாட்களில் இருளில் இருந்து புறப்பட்ட செங்கதிராய் 1818 மே 05 அன்று பேராசான் மார்க்ஸ் பிறந்தார்.

அதுவரை இது தான் நம் கெதியென தம்மை சுரண்டி கொழிக்கும் முதலாளித்துவத்திடம் வேறுவழியின்றி சமரசம் செய்து கொண்ட ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை தலைநிமிர செய்து, இதற்கு முன்பான அனைத்தையும் புரட்டிபோட்டு, தலைகீழாகக்  கிடந்த மனித எண்ணங்களை நேராக நிமிரச் செய்து … இது நாள் வரையிலான வரலாறுகள் அனைத்தும் வர்க்க போராட்டங்களின் வரலாரேயாகும் என சமரசமற்ற போராட்டத்திற்கு வித்திட்ட மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த அந்த தினத்தை உலக பாட்டாளி வர்க்கமே கொண்டாடிக் கொண்டிருக்கையில்…

1950 மே 05 அன்று தஞ்சை தரணியில் செழித்து சரியும் நெல்மணிகளுக்கு பின்னால் அடிமைப்பட்டு கிடந்த விவசாயத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அதிகாரமும் நிலவுடமையும் பின்னிக்கிடந்த பண்ணையடிமை முறை வாழ்வை எதிர்த்து கிளம்பிய வாட்டாக்குடி இரணியனை சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தால் சுட்டுக் கொல்லபட்ட நிகழ்வைச் சொல்லும் சிறு பிரசுரம் இது.

விளைநிலமும்  நிலம் சார்ந்த வாழ்வும் விவசாய அடிமைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த அந்நாளைய தமிழக சூழலில் ஆண்டான் அடிமை முறையின் இரண்டாம் கட்டமான பண்ணை அடிமை சமூக வாழ்வில் விடிவதற்கு முன்பே நிலத்திற்கு செல்பவர்கள் இருட்டிய பிறகே வீடு திரும்ப முடியும் என்கிற நிலையில் புழுத்த அரிசியும் எதற்கும் உதவாத கோணிப்பையையும் அணிந்து கொண்டு குளிரிலும் வெய்யிலிலும் விவசாய நிலமே கெதி என கிடந்த விவசாய தொழிலாளிகளை ஒன்றிணைத்து பண்ணையடிமை முறைக்கு எதிராக சங்கம் கட்டிய காரணத்திற்க்காக வாட்டாக்குடி இரணியன் அதிகார வர்க்கத்திற்கு எதிரியாகிறான்.

குடும்ப வறுமையை போக்க சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை பார்க்க செல்லும் இரணியன் தேசிய எழுச்சியின் காரணமாக ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து கிளம்பிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் தன்னையும் சக போராளியாக இணைத்துக் கொண்டவர். பின் சிங்கப்பூர் துறைமுக தொழிற்சங்கத்தின் தலைவராக பணியாற்றும் போது தொழிற்சங்க பணியும் தோழர்களின் பழக்கமும் இரணியனை கம்யூனிஸ்ட்டாக மாற்றுகிறது. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட இரணியன் சுதந்திர இந்தியாவிற்கு திரும்புகையில் தேர்ந்த கம்யூனிஸ்ட்டாக திரும்புகிறார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அங்கமாக தன்னை இணைத்து கொண்டவர் விவசாய தொழிலாளர்களின் நிலை கண்டு அவர்களுக்கான போராட்ட வழிமுறைகளை சீர்படுத்த துவங்குகிற போதே சுதந்திர இந்தியாவின் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக ஆளும் காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டையாடப்பட்டார்கள்.

சிறையில் சொல்லொனா துயரத்தை அனுபவித்தார்கள் தூக்கில் எற்றபட்டார்கலென மிகக்கொடிய போராட்ட பாதியில் பயணித்து வந்திருக்கும் இந்திய கம்யூனிச இயக்கத்தின் வீரமிக்க தமிழக தியாகிகளில் ஒருவரான வாட்டாக்குடி இரணியன் கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று தலைமறைவாக சுற்றி திரிந்த போது எதிர்பாரா விதமாக வடசேரி சவுக்கு தோப்பில் பட்டாமணியம் சம்பந்தமூர்த்தி என்பவரால் பிடிபடுகிறார்.

கைது செய்யப்பட்ட சில நேரங்களுக்கெல்லாம் ஒரு வேனில் அவரையும் உடன் இருந்த வடசேரி காவல் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டி வட்ட குளத்தின் திடலில் நிற்கிறது…..

DSP சுப்பையாபிள்ளை வேனில் இருந்து இறங்கிய  இரணியனையும் ஆறுமுகத்தையும் பார்த்து கொளத்துக்கு போறதா இருந்தா போயிட்டு வா என்று  சொல்ல…

அன்னியரின் அடக்குமுறையை விடக் காங்கிரசின் அடக்குமுறை குறைந்தது இல்லை என்பதையே காட்டுகிறீர்கள்! தப்பி ஓட நினைத்தார்கள் சுட்டு கொன்றோம் என்று சொல்லவா?! துணிவிருந்தால் நெஞ்சில் சுடுங்கள்…..

ஒரு நாளுக்கு முன்பு தான் சாம்பவான் ஓடை சிவராமனை சுட்டு கொண்டீர்கள் இன்று நாங்கள்! எங்களை போன்ற இளைஞர்களுக்கு தாய்ப்பாலாய் புரட்சியை ஊட்டிய பகத்சிங்கே! அடிமைப்பட்ட இந்தியாவில் வெள்ளையனிடம் “நான் ஒரு புரட்சியாளன்! என்னை தூக்கில் இடாதே! சுட்டுக்கொல்! என்று கேட்டாய்! உன் கோரிக்கை ஏற்கப்படவில்லை ஆனால் சுதந்திர இந்தியாவில் வாழும் எனக்கு கேட்காமலேயே துப்பாக்கி தோட்டாக்கள்  பரிசாகக் கிடைக்கப் போகின்றது என கர்ஜிக்கும் போதே DSP துப்பாக்கி இரணியனின் மார்பில் பாய்கிறதுபுரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க! என சரிகிறார். அடுத்து ஆறுமுகத்தை பார்த்து ஓடு என சொல்ல நான் ஒன்றும் கோழை இல்லை என்னையும் சுடு! துணிவிருந்தால் சுடு! என காடே அதிரும்படி கதறுகிறான் தோட்டாக்கள் பாய ஆறுமுகமும் சரிகிறார்.

இருவரின் உடலிலும் இருந்து செங்குருதி கொப்பளித்து பாய்கிறது. சூரியன் வேடிக்கை பார்க்க அரங்கேறிய இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியுற்று காட்டிகொடுத்த சம்பந்தமூர்த்தியே “அடப்பாவிகளா இப்படி செய்துட்டீங்களே” என கதறி அழுவதாக நிறைவடைகிறது புத்தகம். இச்சிறு பிரசுரத்தின் கடைசி பக்கங்களை வாசிக்கும் போது நம்மை அறியாமல் கொப்பளிக்கும் கண்ணீர் மட்டுமே இரணியனுக்கும் ஆறுமுகத்துக்கும்  சாம்பவான் ஓடை சிவராமன்  ஆகிய தோழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகாது என்பதை மட்டும் மறக்காதிருப்போம்.

Related Posts