சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் உலகமும் பெண்களுக்கு எதிரானதே…!

Irandam_Ulagamஎல்லாவற்றையும் வார்த்தைகளால் சொன்னால் புரிந்து கொள்வதும், மனதில் பதிய வைப்பதும் கடினம் என்பதால், காட்சிப்படுத்தி எளிமையாக புரிய வைப்பது, கல்வி முறையில் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. அதாவது “படம் பார்த்து கதை சொல்” என்பது போல.

இரண்டரை மணி நேரம் படம் பார்த்தும், கதை புரியாமல், கதையையும் சொல்ல முடியாமல் போனது தான் “இரண்டாம் உலகம்” திரைப்படம். உண்மையான காதலை வளர்ப்பதற்காக, இவ்வுலகிலிருந்து “உண்மையாக காதலிக்கும்” ஒருவனை இரண்டாம் உலகிற்கு காதலை மலர வைக்க அழைத்துக் கொள்கிறது இரண்டாம் உலகின் கடவுள். (படம் பார்த்து புரிந்து கொள்ள முடியாததை, தேடி படித்து சொல்லியிருக்கிறேன்) படத்தில் இவ்வளவு புனைவுகள் இருந்தாலும், “பெண் முழுக்க, முழுக்க ஆணை சார்ந்து தான் வாழ வேண்டும்” என்பது தான் செல்வராகவனின் கதை.

வர்ணா என்பவள் இரண்டாம் உலகில் வாழ்பவள். வாள் வித்தையில் சிறந்தவள், யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க மாட்டேன் என்று சுதந்திரமான வாழ்க்கையை விரும்புபவள். திருமணம் என்றால் கூட, ஒருவனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டி வரும், அது தன்னுடைய கனவுகளை நிஜமாக்கிட முடியாது, எனவே திருமணமே வேண்டாம் என்பவள் தான் வர்ணா…!

இந்த வீரமான வர்ணாவிற்கு காதலை சொல்லிக் கொடுத்து, காதலில் முடக்கி கத்தியை சுழற்றி பகைவர்களை வீழ்த்தியவளை, வெட்க்கப்பட வைத்து தன் கணவனின் வீர வாள் வீச்சை ரசிப்பவளாக மாற்றி முடிகிறது படம். (உண்மையில் காதல் முடக்குவதாக இருக்க முடியாது. அது வளர்ப்பதாகவும், இணைந்து முன்னேற வைப்பதாகவுமே இருக்க முடியும்)

படத்தின் இறுதியில் எதிரிகள் சூழ்ந்திருக்கும் போது வரும் உரையாடல் ஒன்று …

ஆண் : சண்ட போட்ரியா

பெண் : இல்லை, எனக்கு வெட்கம் வருகிறது.(வெட்க்கப்பட்டு சிரிக்கிறாள்)

ஆண் : இந்த சிரிப்பு இருந்தா போதும் டி, உலகத்தையே உன் காலடியில் கொண்டு வந்து வெச்சுடுவேன்.

நீ வீட்டிலேயே இரு, உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள், நான் உனக்கு தருகிறேன். நீ .. நீயாக முயற்சித்து, என்னை தாண்டி போகாதே என்ற பழைய பெண் அடிமை தனத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சொல்கிறார் செல்வராகவன்.

இவ்வுலக மட்டுமல்ல, இரண்டாம் உலகத்திலும் பெண்கள் தன் சுயத்தை இழந்து, ஆணாதிக்க சூழலை ஏற்க நிர்ப்பந்திக்கிறது – இந்தப் படம்.

Related Posts