அரசியல்

சர்வதேச மகளிர் தினம்.. போராட்டத் தீ பரவட்டும்…!

மார்ச்-8 சர்வதேச மகளிர் தினத்தை 1975 ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடுவது என ஐநா சபை தீர்மானித்தது. அதற்கு முன் வெவ்வேறு தேதிகளில் ஒவ்வொரு நாட்டிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. மார்ச்-8 தான் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஐநா முடிவு எடுத்தற்கு அடிப்படை காரணம் என்ன..? அந்த தேதியின் சிறப்பு என்ன..? தற்போது நாடு முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு இத்தினம் கடந்து வந்த உண்மையான வரலாறு பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் நிலவி வருகிறது. வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும், வாக்களிக்கும் உரிமையை வழங்கக்கோரியும் 15,000க்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்.
முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், “அமைதியும் ரொட்டியும்”தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய மன்னரான ஜார் அதிகாரத்தை இழப்பதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது…

1910ஆம் ஆண்டு மறுக்கப்பட்ட உரிமைக்கான கோரிக்கையை அடிப்படையாக வைத்து கிளர்ந்தெழுந்த பெண்கள் கூட்டம் 110 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் அதே நிலைமை நீடிக்கும் போது வீறுகொண்டு எழ வேண்டிய அவசியம் இருக்கிறது. பெண்கள் தினம் போராட்ட திசையை நோக்கி போகாமல் அல்லது அதை விவாதிக்கும் ஒரு நாளாக கூட இல்லாமல் வெறுமனே பெண்கள் தினத்தை கோலப்போட்டி வைப்பது, சமையல் போட்டி நடத்துவது என போட்டிகள் நடத்தி அத்தினத்தை மழுங்கடிக்கும் வேலையினை பல அமைப்புகள் இங்கே செய்கிறது. ஏற்கனவே சமூகத்தில் பெண்களுக்கு மட்டும்தான் இந்த வேலை என்று திணிக்கப்பட்ட சூழலில் அதே வேலையில் அவர்களுக்காக போட்டிகள் நடத்துவது பரிசுகள் வழங்குவதெல்லாம் மேலும் அந்த ஒடுக்குமுறையை ஊக்கப்படுத்துவது போல் உள்ளது.
பெண்களை ஒருங்கிணைக்க இதுபோன்ற போட்டிகள் அவசியம் என்றாலும் குறைந்தப்பட்சம் அதிலிருந்து மீள்வதற்கான புரிதலிலிருந்து அடுத்த ஆண்டு கொண்டாட்ட முறையில் மாற்றம் இருந்தால் வரவேற்கலாம். ஆனால் பெரும்பாலான எந்த மாற்றமும் இல்லாமல் அதே சடங்குமுறை கொண்டாட்டங்கள் தொடர்கிறது…

பெண்களின் நிலை என்ன…?

உலக அளவில் பெண்கள் இருவிதமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் உழைப்பு சுரண்டலோடு பாலியல் ரீதியான சுரண்டலிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் இதை நீண்டகாலமாக விவாதித்தாலும் திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. பெண்களை சந்தைப்பொருளாக பார்க்கும் முதலாளித்துவ சமூகத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி தற்போதைய நிலையில் பொருளாதார பங்கேற்பு பெண்களுக்கான வாய்ப்பு ஆகியவற்றில் பாலின இடைவெளியை இன்னும் 257 ஆண்டுகளுக்கு அகற்றப்பட முடியாது என தெரிவிக்கிறது. உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருக்கிறதாம். 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது 34% ஆண்களை விட பெண்கள் குறைந்த ஊதியத்தை பெறுகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்களை தெய்வமாக பார்ப்பதுதான் பாரத பாரம்பர்யம் எனும் வசனம் பேசும் இந்திய நாட்டில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் அதிக அளவு இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது…
இந்தியாவில் ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறார் என்பது எவ்வளவு கொடுமையான நிகழ்வு. அதோடு குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்குவதில் மிக தாமதம் நிலவுகிறது. பல வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. அரசியல் காரணத்திற்காக வன்புணர்வு குற்றவாளிகளில் சிலருக்கு தூக்குத்தண்டனை வழங்குவதால் இப்பிரச்சனை தீராது. தொடர் மாற்று திட்டங்களோடு செயல்பட வேண்டும்.
வர்மா குழு பலவற்றை பரிந்துரத்திருக்கிறது எதுவும் முழுமையாக அமுலாகவில்லை
கடந்த 2019ம் ஆண்டு தேசிய குற்றப்பிரிவுத்துறையின் அறிக்கையின் படி அதிகளவு பாலியல் வன்புணர்வு நடைபெறும் மாநிலம் பாஜக யோகி ஆதித்யனாத் ஆட்சி செய்யும் உத்திரபிரதேசம் தான். சட்டமன்ற உறுப்பினர்களில் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் அதிகம் இருப்பதும் பாஜகவில் தான் நாட்டையே ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் யோக்கியதை இதுதான் என்றால் அந்த நாட்டில் பெண்களின் நிலை மேலும் மோசமாகவே செல்ல வாய்ப்புகள் அதிகம். தன் மதவாத திட்டத்திற்கு பயன்படும் என்பதால் முத்தாலக் சட்டத்தை அவசர அவசரமாக அமுல்படுத்தியவர்கள் 2010ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை இன்னும் மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏன்..? பிரிவினையை ஏற்படுத்தும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசு பகுதியளவாது சமத்துவத்தை உண்டாக்கும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை அமுலாக்க மறுக்கிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், “பெண்கள் கல்வி அறிவு பெறுவதால் தான் விவாகரத்து அதிகரிக்கிறது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்”. பெண்களின் கல்வியறிவை பறித்து வேதகால கொடுங்கோனமை ஆட்சியை நடத்த விரும்பும் கும்பல் அப்படித்தான் பேசும். அதன் அரசியல் பிரிவான பாஜக எப்படி பெண் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்..? ஒவ்வொரு நாளும் அக்கும்பல் பெண்களுக்கு எதிராக அறுவெறுக்கத்தக்க கருத்தினை வெளிபடுத்துகிறது…

என்ன,செய்யலாம்..?
இது வெறும் சடங்கு கொண்டாட்ட தினமாக இல்லாமல் பெண்கள் மீதான சுரண்டல் ஒடுக்குமுறைக்கான புறச்சூழை உள்வாங்கி அதிகாரத்திற்கு எதிராக பெண்களை திரட்ட வேண்டிய முக்கிய கடமை நமக்கு இருக்கிறது. பெண்கள் தின வரலாற்றை வீதியெங்கும் பரப்புவதோடு. பெண்ணுரிமைக்கான போராட்டக்களங்களை அதிகப்படுத்த வேண்டும். இன்று நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக பல்கலைக்கழகங்களில் வீதிகளில் பெருமளவு போராடிக்கொண்டிருப்பது பெண்கள் தான் இந்த மாற்றதை அதிகப்படுத்த வேண்டும். அவர்களோடு அமைப்புகளும் இணைந்து போராட வேண்டும்.
குடும்ப அமைப்புகளில் பெண்களுக்கான ஜனநாயாக உரிமையை பாதுகாப்பதற்கும், வேலை செய்யும் இடங்களில் ஊதிய விகிதத்தில் இருக்கும் வேறுபாடுகளை களைவதற்கும், பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை உத்திரவாதப்படுத்துவற்கும் சட்டமன்ற நாடாளமன்றம் உள்ளிட்ட அதிகார அமைப்புகளில் சரிபாதி பிரதிநிதித்துவம் பெறுவதற்கும். பள்ளி-கல்லூரிகளில், பாலியல் சமத்துவத்திற்கு ஆதரவான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கும் தொடர் பிரச்சாரங்களை, போராட்டங்களை நடத்த வேண்டும். இப்படியான போராட்ட தீயை பற்ற வைக்கும் தினமாக மகளிர் தினத்தை மாற்றுவோம்

எந்த நோக்கத்திற்காக மகளிர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்று கிளாரா ஜெட்கின் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் தீர்மானித்தார்களோ அந்த லட்சிய பாதையை நோக்கி வீறுநடை போடுவோம் தோழர்களே…!!!!!!

-S.மோசஸ் பிரபு

Related Posts