அரசியல்

கும்பகோணம் பள்ளி விபத்து: அரசு தப்பலாமோ?

“பால்வாசம் மாறும் முன்னே பாலூத்த விட்டீகளே
தங்கத்த கருகவிட்டு சாம்பலத்தான் தந்தீகளே
மாடு அலறலையே, வழிகூட மறிக்கலையே
மாடவிளக்கணிச்சு மரணத்த சொல்லையே”

கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 94 குழந்தைகளை பலி வாங்கிய தீவிபத்து தொடர்பான வழக்கில் 232 சாட்சிகளிடம் விசாரணை முடிந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோன்ற அநீதிகளுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 11 பேரை விடுவித்து கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. விதிகளைத் துச்சமாக்கி, கல்விக் கடைவிரிக்கும் தனியார் பள்ளிகளுக்கும், லஞ்சத்துக்கு, ஊழலுக்கும் நம் குழந்தைகளைக் காவுகேட்கும் அரசுக்கும் ஒரு பாடம் கற்று தந்திருக்கக் கூடிய வாய்ப்பை நீதிமன்றம் தவற விட்டுவிட்டது.

2004-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் அப்போதிருந்த தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஏற்கெனவே விடுதலை ஆகிவிட்டனர்.

மீதமுள்ள 21 பேர் மீதான வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி நிறுவனர் உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 51 லட்சத்து 65,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பழனிச்சாமியின் மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, தலைமையாசிரியை சாந்த லட்சுமி, சத்துணவு அமைப்பாளர்கள் வசந்தி, விஜயலட்சுமி ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பாலாஜி, சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ் ஆகியோருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தரச்சான்று வழங்கிய பொறியாளர் ஜெயந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பை மட்டும் வாசிப்பவர்களுக்கு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதோடு முடிந்துவிடும். ஆனால், அது சட்டெனக் கடந்துபோகக் கூடிய சம்பவமா?

பள்ளி எரிந்தது
கருகின
பல்கலைக் கழகங்கள்

என்று எழுதினான் ஒரு கவிஞன். ஒவ்வொரு குழந்தையின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், கனவுகளும் ஒரு நொடிக்குள் கருகியதன் வெம்மையில் வந்த வார்த்தைகள் அவை.

ஆசிரியர்களின் உத்தரவுக்குப் பணிந்து வாயில் விரல் வைத்தபடி அறைக்குள் ஒடுங்கி அமர்ந்து கருகியிருந்த பிணங்களைச் சுட்டிக் காட்டும் இது யாருடைய வகுப்பறை புத்தகம் வரையில், தமிழகத்தின் கல்விச் சூழல் குறித்த விவாதத்தில் கும்பகோணம் விபத்து இடம்பெற்றுத்தான் வருகிறது. ஆனால், அது குறித்த தீர்ப்போ, ஏதோ ஒரு பள்ளி தாளாளர், தலைமையாசிரியர் உள்ளிட்டோரை குற்றம் சாட்டி, கடுங்காவல் கொடுத்ததுடன் முடிந்தும் விட்டது.

ஒரே கட்டிடத்தில் மூன்றுப் பள்ளிகள் அந்த வளாகத்தில் இயங்கி வந்திருக்கின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 477 பிள்ளைகள் படித்து வந்தனர். சரஸ்வதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 126 பிள்ளைகள் படித்து வந்தனர். இது தவிர உயரிநிலைப்பள்ளியும் இயங்கி வந்திருக்கிறது. மூன்று மாடி கட்டிடத்தில் இத்தனை பிள்ளைகளுக்கு கல்வி சொல்லித் தரப்பட்டு வந்ததாம். சம்பவம் நடந்த தினத்தன்று 165 மாணவர்கள் கூரை வகுப்புகளில் இருந்திருக்கின்றனர்.  இதற்கெல்லாம் அனுமதி கொடுத்தது யார்? இது போன்று எத்தனை பள்ளிகளை விதிகளை மீறி கட்டப்பட்டு இருக்கின்றன என அரசுக்கு தெரியாதா?  லாப நோக்குடன் செயல்படும் தனியார் பள்ளிகளை வளர விட்டது அரசு தானே. எல்லா தவறுக்கும் பின்புலமாக இருந்து விட்டு, தற்போது இதிலிருந்து மிக லாவகமாக தப்பித்துக் கொள்ள நினைக்கும் அரசை  தண்டிப்பது யார்?

தீர்ப்பு குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் ராஜ் மோகனிடம் பேசியபோது, “கல்வி வியாபாரமானதன் கோர வெளிப்பாடுதான் கும்பகோணத்தில் நடைபெற்ற பள்ளி தீ விபத்து. பள்ளி கட்டிடம் கொட்டகையாக இருந்ததுதான் தீ விபத்துக்கு காரணம் என்று பலர் கூறுகிறார்கள். அது சரியான வாதமல்ல. ஊழல் மற்றும் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து பல்வேறு விதிமுறை மீறல்களைச் செய்ததுதான் தீ விபத்திற்கு காரணம். 94 குழந்தைகள் மரணமடைந்தனர், 18 குழந்தைகள் படுகாயமுற்றனர். அனைத்தையும் இழந்த குடும்பத்தினருக்கு அரசு ரூ. 1 லட்சமும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த 18 குழந்தைகளுக்கும் ரூ. 50,000 நிவாரணம் கொடுத்து, தன் கடமையை விலக்கிக் கொண்டது. இது படுகாயமுற்ற குழந்தைகளின் மருத்துவ செலவிற்குக் கூட போதாது. அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் உளவியல் பாதிப்பு வேறு. சென்னை மற்றும் தஞ்சை கோர்ட்டுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் இறுதி தீர்ப்பு அரசு தரப்பில் குற்றம் செய்தவர்களை தண்டிக்காதது சரியல்ல” என்கிறார்.

நிவாரணத்தை மறுக்கும் அரசு:

இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.

ஆனால், தமிழக அரசு அந்தத் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பிஞ்சுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு, நிவாரணத் தொகை வழங்க மனமின்றி, தொடர்ந்து மேல்முறையீடு செய்துவந்தது அரசு. உச்ச நீதிமன்றம் வரை சென்று, தற்போது அரசின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

‘தலா ரூ.25 லட்சம் தரவேண்டும்’

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் தெரிவித்ததாவது:“விபத்துக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமும், அரசு அதி காரிகளும் தான் காரணம். எனவே, அரசுதான் இழப்பீடு தரவேண்டும். தமிழக அரசு மேல் முறையீடு செய்தது அநீதியானது. இதற்கு முன்பு நடைபெற்ற விபத்துகளில் இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன.1989-ல் ஜாம்ஷெட்பூரில் தீ விபத்தில் டாடா பள்ளியில் படித்த 69 குழந்தைகள் இறந்தனர். உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு குழந்தைக்கு ரூ.3.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதன்படி, கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று சொல்வதில் நியாயம் இருகிறது.

 
அவலம் தொடரலாமா?:

கும்பகோணம் பள்ளி தீவிபத்தைப் பற்றி விசாரிக்க  2004-ம் ஆண்டு சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு அந்த கமிஷன் சமர்பித்த அறிக்கையின் படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதன் படி பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதியை உரிய அலுவலரிடம் முறையாக பெற வேண்டும். பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைக்கு செல்லும் வழி மூடப்பட்டிருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய் இருக்க வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும்.

மாணவர் அமரும் இருக்கைகள் பின்புறம் முதுகு சாய்வாக அமைக்க வேண்டும். ஆபத்து காலங்களில் முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தால் முழு நேர மருத்து வசதி அமைக்கப்பட வேண்டும். வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம்.

விதிமுறைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பள்ளியிலும் இந்த விதிகள் அமலில் உள்ளனவா? அமல்படுத்த முயற்சிக்கும் அதிகாரிகள் எத்தனைபேர்? கேள்வி கேட்கும் பெற்றோராராக நாம் இருக்கிறோமா?, கேள்வி கேட்கும் பெற்றோரின் நியாயங்களுக்கு செவிகொடுக்கும் நிர்வாகங்கள் உள்ளனவா? நமது குழந்தைகள்… நமது எதிர்காலம் என்ற பாரை அரசிடம் உள்ளதா? … என ஏராளமான கேள்விகள் நம் முன் எழுகின்றன.

எது நீதி என்பது ஒரு கேள்வி. நீதி மறுக்கப்படின் என்ன செய்வதென்பது இரண்டாவது கேள்வி. இதில் எந்தக் கேள்விக்கான பதிலையும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது நம் ஒவொரு நாள் செயல்பாடுகளையும் சார்ந்தது. நீதிமிக்க சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நீதி மறுக்கப்படின், அதனை எதிர்க்கும் கடமையும் நமக்கே உள்ளது. பொறுப்புடன், கடமையைத் தொடர்ந்து செய்வோம்.

மேலும் படிக்க……

சம்பத் கமிஷன் அறிக்கை

Related Posts