இலக்கியம்

மனிதம் மறுக்கும் மொழிகள் ! (சிறுகதை)

மூன்று பெண்கள் ஓவியம் – அம்ரிதா ஷெர்கில் 1935

மூன்று பெண்கள் ஓவியம் – அம்ரிதா ஷெர்கில் 1935

தார் சாலை சூடாக இருந்தத்து. சாலையோரத்தில் நீண்ட இடைவெளிகளில், கிடைத்த மர நிழல்களில் அவ்வப்போது ஒதுங்கி நின்றபடி, குழந்தை ராகவனை இழுத்துக்கொண்டு விருவிருவென நடந்தாள் பத்மா. ராகவனுக்கு இப்போதுதான் 4 வயது, பள்ளிக்கு அனுப்ப முடியாது.  ‘இருக்குற கஷ்டத்துல இதையும் நடத்திக் கூட்டிக்குட்டு அலைய வேண்டியிருக்கு’ என பத்மாவின் மனசு புலம்பியது. தோளில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.

“கால் வலிக்குதும்மா!”

“அம்மா வீடு எங்கே!?, இன்னும் கொஞ்சம் தூரம்…” என்று அம்மா சொல்ல ராகவனுக்குள் உற்சாகம் எழுந்தது. அவனும் திரும்பத் திரும்பச்  சொல்லியபடியே தன் கால் வலியை மறந்தபடி பின்தொடர்ந்தான்.

பத்மா முற்பட்ட சாதியில் பிறந்தவள். பழனிச்சாமியைக் காதலித்து திருமணம் முடித்திருந்தாள்.
வறுமையோடே இருந்தாலும், அவன் பாசமாக இருந்தான்.

“நம்ம வீட்டு வாசல்ல நிற்க வெச்சு பேசவேண்டிய சூத்திரனை, மருமகனா கொண்டுவந்திருக்கா. இவளெல்லாம் உருப்புடுவாளா?. இவளைப்போய் எப்படி நம்ம வீட்டில் சேர்த்துகுறது?” என்று பத்மாவின் வீட்டில் வெறுத்து ஒதுக்கினார்கள்.

ஒருமுறை வழியில் பத்மா தன் அம்மாவை சந்திக்க நேர்ந்தது. பாசத்தில் ஏங்கிப்போன அம்மா, படுக்கையில் விழ – ‘அவள மட்டும் வரச்சொல்’ என்றார் பத்மாவின் அப்பா. அதுவும் இரவில் மட்டும்தான் என்ற நிபந்தனையுடன்.

முடிந்தவரை அப்பா இல்லாத நேரத்தில் அம்மாவைப் பார்த்துவிட்டு, காபியோ, தண்ணீரோ குடித்துவிட்டு உடனே திரும்பிவிடுவாள். இந்த நான்கு வருடங்களாக இப்படித்தான். வீட்டில் தங்குவதோ, சாப்பிடுவதோ கிடையாது. எத்தனை பசியாக இருந்தாலும் காட்டிகொள்ள மாட்டாள்.

பழனிச்சாமிக்கு கொஞ்ச நாளாக வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்தது. வண்டி வாங்க வேண்டும், அது அவசரத் தேவையாக இருந்தது. யாரிடமும் கடன் வாங்குவதில் விருப்பமில்லாததால், வயிற்றை இருக்கிப் பிடித்தே காசு சேர்க்க ஆரம்பித்தான். வீட்டுச் செலவுகளில் முக்கால் பங்கு குறைந்தது. ஏதாவது பேசத் தொடங்கினால், ‘கொஞ்ச நாள்தானே பொருத்துக்கோ’ என்ற பதில்தான் வரும். கஞ்சியோ, கூழோ குடித்து – குடும்பம் ஓடியது.

இன்று ஏதாவதொரு வகையில், குழந்தைகளுக்கு அரிசிச் சோறு தந்தாகவேண்டுமென பத்மா, தாய்வீடு கிளம்பினாள். ரோசமெல்லாம் விட்டுப் பறந்திருந்தது.

ஒரு வழியாக தாய் வீடு வந்து சேர்ந்தாள். வாசலில் இருந்தபடியே அப்பா தெளிவாகத் தெரிந்தார். பயத்துடன் உள்ளே நுழைந்தாள் பத்மா.

தாத்தாவைக் கண்டதும் ராகவனின் கண்கள் விரிந்தன.

“தாத்தா…” என அவரை நெருங்கினான்

உடலை வேகமாக பின் இழுத்துக் கொண்ட அவர் … “தொட்ராத … தள்ளி நில்” என அதட்டலுடன் கூறினார். ராகவன் முகம் வாடியது. குழந்தையின் கையைப் பிடித்து பத்மா அரவணைக்க, அம்மாவின் குரல் உள்ளே அழைத்தது.

ராகவனும், முருகனும் பத்மாவின் பக்கத்தில் அமர்ந்துகொண்டனர். அம்மா பிஸ்கட்டை எடுத்து வந்து குழந்தைகள் கையில் திணித்தாள். பத்மா காபியை உதட்டில் வைக்கும் நேரத்தில், வாசல் கதவில் நிழலாடியது.  அப்பாவின் சினேகிதர் பஞ்சரத்தினம் உள்ளே நுழைந்தார். இருவரும் பேசத் தொடங்கினர். ராகவனும், முருகனும் தாத்தாவை எட்டிப் பார்த்தனர்.

“யாரு இந்த குழந்தைக?”

அப்பா “பக்கத்து வீட்டுக் குழந்தைகள்” என்று சொன்னது பத்மாவுக்கு கேட்காமலில்லை. சொந்த பேரன்களையே இப்படிச் சொல்லும் அளவுக்கு சாதி இன்னும் அவரைப் பிடித்து ஆட்டுகிறது. வந்த நோக்கத்தை உதரித்தள்ளிய பத்மா, அங்கிருந்து திரும்பினாள்.

****

பத்மாவின் மாமியாரும் சாதிப் பெருமிதத்தில் விதிவிலக்கல்ல.  “எங்க வீட்டு கல்யாணம் காட்சிக்கு, ஊடு புன்னியாச்சினைக்கு, சடங்கு சம்பிரதாயத்துக்கு மந்திரம் சொல்றவங்க கூட எங்களுக்கு ஈடு தர முடியாது. ஏன்னா? நாங்க எதுக்காகவும் அடுத்தவங்க வீட்டுக்கு போக மாட்டோம்”

பொம்பளைக்கு என்ன தனியா சாதி கெடக்கு. யாரைக் கட்டுரமோ, அவன் பெண்டாட்டி என்றுதானே இந்த சமூகம் சொல்கிறது. பத்மாவின் மனசுக்குள் இப்படித்தான் ஓடும்.

மாலை மணி 4 இருக்கும். ‘அம்மா, அம்மா’ என்ற சத்தம் கேட்டு அவள் எழுந்தாள்.

அப்போது வீட்டில் பத்மாவும், மாமியாரும் மட்டும் இருந்தார்கள். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கூப்பிடு தூரத்தில் எந்த வீடும் இல்லை. பக்கத்துக் காலியிடத்தில் வீட்டு அஸ்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தார் சின்னையா.

அழைப்புக் குரலை யூகித்தபடி வெளியே வந்த பத்மாவிடம், “குடிக்க கொஞ்சம் தண்ணி குடுங்க சாமி!” என்று கேட்டார் சின்னையா. சின்னையாவுக்கு 60 வயதிருக்கும். கடின உழைப்பாளி என்பது அவரின் கருத்த உடல் காட்டிக் கொடுத்தது. பத்மா சொம்பில் தண்ணீர் கொடுக்க, அப்படியே அண்ணாந்து குடிக்கத் தொடங்கினார் சின்னையா.

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பழனியம்மாவுக்கு, ஆத்திரம் பொங்கிவந்தது. வேகமாய் அருகில் வந்து செம்பைத் தட்டிவிட்டார்.
“கையேந்திக் குடிக்க வேண்டிய உனக்கெல்லாம், செம்புல தண்ணி கேட்குதாடா!”
அவளின் ஆவேசத்தைப் பார்த்த சின்னையா அங்கிருந்து ஓடிப்போனார்.

பழனியம்மாளின் செய்கையைப் பார்த்து அதிர்ந்த பத்மாவுக்கு மனசு கேட்கவில்லை. “என்ன இப்படி செய்துட்டீங்க? பாவமில்லையா? தண்ணி குடிக்க குடிக்க தட்டி விட்டுடீங்களே!”

ஆவேசம் தனியாத பழனியம்மாள், பத்மாவின் முடியைச் சுருட்டிப் பிடித்து, சீவைக்கட்டையைத் தேடினாள். “யாருகிட்ட காட்டுற உன் வேலையை? ஏதோ என் மகன் உன்னை மருமகளா கூட்டியாந்துட்டான். அதுக்காக காலம் காலமா இருப்பதையெல்லாம் மாற்ற நினைச்சா? நடக்காது. அவன் ஓடுன மாதிரி நீயும் ஓட வேண்டியதுதான். என் பையனுக்கென பொண்ணா கெடைக்காது?” ஒரு ஓரமாக, பாதி தேய்ந்து போயிருந்த சீவைக்கட்டை அவளின் கையில் பட்டது.

பத்மாவை வாசலிலிருந்து நெட்டித் தள்ளியபடி, சீவைக்கட்டையை கையிலெடுத்தாள். “என் பையனுக்கென்ன பொண்ணா கிடைக்காது. வாரிசா ரெண்டை பெத்திருக்கற ஆம்பள சிங்கம்மாக்கும்” ஆவேசம் தனிவதற்குள் பத்மா சற்று தூரம் ஓடியிருந்தாள்.

வெலெவெலத்துப் போன அவள் மனதில், எனக்கென ஒரு வாசலும் இல்லையா? என்று நினைப்பு ஓடியது. தன் கணவனின் வருகையை எதிர்பார்த்தபடி ஒற்றையடிப்பாதையில் நடக்கத் தொடங்கினாள். எங்கிருந்தோ ரேடியோ பெட்டி ஒலிக்கக் கேட்டது. “ஒன்று எங்கள் சாதியே, ஒன்று எங்கள் நீதியே… உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!” பத்மாவுக்கு அந்தப் பாடல் ஒரு நீண்ட பயணத்தை உணர்த்தியது.

Related Posts