குறும்படங்கள்

இந்திரனின் ராணி – ஒரு ரசிகரின் முதல் பார்வையில்………

தோழர் வினோத் மலைச்சாமி அவர்களை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வியந்து வருபர்களில் நானும் ஒருவன்…

இந்த சமூகத்தின் மீது பெரும் அக்கறை காட்டுவதோடு அதை தன் படைப்புகள் தொடர்ந்து பேசிவருபவர். அவருடைய குறும்படமான குறியீடு ஆணவக்கொலை பற்றி பெரும் சீற்றத்தோடு அழுத்தமாக பேசியது. அன்றில் இருந்து அவரை கூர்மையாக கவனிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு படைப்புக்கும் தன்னை அவர் ஆழப்படுத்திக்கொண்டே வருகிறார்.

18ம் ஆளாகிய நான் ஒரு பாதிக்கப்பட்டவன் கோபத்தை எழுதிப்போனது. கொரோனா குறித்து அவர் எடுத்த குறும்படம் ஆச்சர்யப்படுத்தியது.

இரட்டை தொகுதி முறை வேண்டும் என்று பேசிய அவரின் குறும்படம் என்னை அவர்பால் ஈர்த்து அருகே அமரவைத்தது.

இப்படி நெருக்கம் கொண்டவரின் புதிய படைப்பான இந்திரனின் ராணியை ஒரு மாலைப்பொழுதில் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது. இதில் என்ன புதுமை செய்திருக்கிறாரோ என்ற ஆர்வத்தோடு அமர்ந்த எனக்கு தொடக்கம் முதல் முடிவுவரை அவர் செய்து காட்டியிருக்கும் நேர்த்தி என்னை பெரும் உற்சாகத்திற்கு அழைத்துச்சென்றது.

ஒரு வரலாற்றை அதன் எல்லையில் நின்று அப்படியே காட்சிப்படுத்துவது ஒரு கலை எடுத்துக்காட்டாக பல வரலாற்று நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதை தற்கால நோக்கில் புதிய மாறுபட்ட விதத்தில் அதை பதிவு செய்த விதம் சிறப்பு.

ராணி காலத்து கதை என்றவுடன் தலையில் கிரீடம் கழுத்து நிறைய நகைகள் என்று புராணம் பாடாமல் நவீன போக்கில் நின்று சிறப்பான திரைக்கதையோடு அதை சுவாரசியம் குறையாமல் நடைபோட வைத்தற்கு அவருக்கு பெரிய நன்றியே சொல்லவேண்டும்.

வெள்ளையானையோடு இந்திரனின் பூர்வத்தை பேசி அதற்கு எதிராய் கிருஷ்ணன் அவனின் நால்வர்ணப்படையை நிறுத்திய விதம் வரலாற்று சிறப்பு.
குறியீடுகளை வலிந்து திணிக்காமல் கதாப்பாத்திரங்களாக உலவவிட்ட விதம் புதுமை.

குறும்படம் தானே என்று எதிலும் அலட்சியம் காட்டாமல் ஒரு முழு நீள திரைப்படத்திற்கான அத்தனை மெனக்கெடலையும் அவர் செய்திருக்கிறார் அதற்கு ஒரு சிறு சாட்சி கடலுக்குள் படகு சீறிப்பாயும் காட்சி.

இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் காட்சி …….

ராணி இப்படி செய்திருந்தால் என்ன? என்ன மாற்றங்கள் நடந்திருக்கும்? என சிந்திக்கும் காட்சிகள் வசனங்கள் மிகமிக அழகு. இனி வரும் காலங்களில் என்ன நிகழும் எனர் கரையொதுங்கும் புத்தகம் மூலம் குறிப்பாக சொல்லும் சாமர்த்தியம் சிறப்பு. இக்குறும்படத்தில் தமிழ் பௌத்தம் என்ற சிந்தனை மரபை காட்சி வடிவில் வடிவமைத்து
இருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாக இருக்க முடியும், இன்னும்
தெளிவாக கூற வேண்டும் என்றால் இயக்குனர் ஒரு வரலாற்றை இதுவரை யாருமே செய்திடாத அளவில் நிறுவி இருக்கிறார் என்றே கூற வேண்டும். அரசியல் பகுப்பாய்வோடு பார்த்தால் வீழ்த்தப்பட்ட எளிய மக்களின் வரலாற்றை புரட்டிப்போட முற்படுகிறார் .

புராணக் கதைகள் பின்னணியில் இருந்து அவர் இந்திரனின் ராணி குறும்படத்தை இயக்கிய விதம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டங்களும், வரலாறு பேசும் நுண்ணரசியல் கொண்ட குறியீடுகளால் நிரம்பி வழிந்து நம்மை பெரும் ஆச்சரியம் அடைய செய்கிறது.

கூடவே பயணிக்கும் இசை நல்ல கதைக்கு ஊக்கம் கொடுக்கிறது. ஒளிப்பதிவு முழு நீளபடத்திற்கான நிறைவை தந்து நகர்கிறது. இந்த படத்தை பார்த்து முடிக்கிறபோது வினோத்மலைச்சாமி தமிழ்சினிமாவில் மாற்றதையும் வியப்பையும் ஏற்படுத்தப்போகும் சிறந்த படத்தை தரபோவது உறுதி என்று நம்புகின்றேன் படம் பாருங்கள் நீங்களும் நம்புவீர்கள்.

  • கணியன்செல்வராஜ்.

Related Posts