இலக்கியம்

தோழர் இ.எம்.எஸ் – யின் இந்திய போராட்ட வரலாறு

தமிழில்: கி இலக்குவன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: 500 பக்கம்: 944

1.அறிமுகம், 2.வரலாற்று பின்னணி, 3.ஆரம்பகால போராட்டங்களும் தோல்விகளும்,  4.முதலாளித்துவ தேசியத்தின் தோற்றம், 5.இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப ஆண்டுகள், 6. தலைவர் சகாப்தம், 7.போர் காலத்தில் தேசியஎழுச்சி, 8.காந்திய சகாப்தம் எழுச்சியும் பின்னடைவும், 9.இயக்கம் எங்கே செல்கிறது? 10.போட்டி மனப்பான்மைகளும் பேச்சுவார்த்தைகளும். 11.புதிய எழுச்சி 12.முழு விடுதலையை நோக்கி, 13. உப்பு சத்தியாகிரகமும் காந்தி-இர்வின் ஒப்பந்தம், 14.ஒப்பந்தத்திற்கு பிறகு, 15.இரண்டாவது சட்ட மறுப்பு இயக்கம், 16.சட்ட மறுப்பு இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, 17. மீண்டும் இடதுசாரிகளை நோக்கி, 18.ஒரு மார்க்சிய பார்வைக்காக, 19. முதலாளித்துவ தலைமையின் உத்திகள், 20.அமைச்சரவையில் அமைக்கப்பட்ட பிறகு,  21.காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி, 22.யுத்தமும் தேச விடுதலைப் போராட்டமும், 23.யுத்த காலத்தில் ஏற்பட்ட பதற்றங்கள், 24.1942 போராட்டம், 25.காங்கிரஸ் கட்சியும் அதன் எதிர்ப்பாளர்களும், 26.காங்கிரஸ் முஸ்லிம் லீக் உறவு,  27.வேவல் திட்டம், 28.புரட்சிகர மக்கள் எழுச்சி, 29.பேச்சுவார்த்தைகளும் வகுப்புக் கலவரங்களும்,  30.வேவல் ஆட்சியின் இறுதி நாட்கள், 31.விடுதலை வெற்றியா தோல்வியா

          மேற்கண்ட தலைப்புகளில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மார்க்சிய அறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் முதல்வர் அன்புத் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் தேர்ந்த மார்க்சிய கண்ணோட்டத்தில் இந்திய விடுதலைப் போரட்ட வரலாற்றை ஆய்வு செய்திருக்கிறார். சற்றொப்ப ஆயிரம் பக்கங்களில் படர்ந்திருக்கும் இந்நூல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக அணுக நினைக்கும் இளம் ஆய்வாளர்களுக்கு  பெரும் பரிசு ஆகும்.

          ஆரியர்கள் வருகைக்கு பின்னர்தான் இந்திய வரலாறு துவங்கியது என்று ஒரு காலத்தில் நமது வரலாற்றாளர்கள் கருதி வந்தார்கள். இல்லையில்லை ஆரியர்களை விட புராதானமாக வளர்ச்சி அடைந்த ஒரு நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களாக திராவிடர்கள் இருந்தனர் என்று தென்னிந்திய வரலாற்றாளர்கள் வாதிட்டு வந்தனர். இவ்வாறு இந்திய வரலாறு குறித்து இருவகை கண்ணோட்டங்கள் தோன்றியிருந்தன. ஒன்று ஆரியர்கள் பக்க சாய்மானத்தை கொண்டதாகவும், மற்றது திராவிட சாய்மானத்தை கொண்டதாகவும் அமைந்திருந்தது. இவை இரண்டுமே புராண நூல்களை பெருமளவில் அடிப்படையாக கொண்டிருந்தவை.

           புராணங்களின் அடிப்படையில் வரலாற்றை எழுதுவதற்கு பதிலாக ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்தில் இருந்த உற்பத்தி சாதனங்கள் எவை? அந்த உற்பத்தி சாதனங்களை பயன்படுத்தி நடைபெற்ற உற்பத்தி முறையில் நிலவிவந்த சமூக உறவுகள் எத்தகையவை? சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அரசியல் மோதல்கள் மற்றும் புரட்சிகளுக்கு இட்டுச் சென்றன? இவைபோன்ற கேள்விகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதும் முயற்சியில் இந்த நூலை இ எம் எஸ் உருவாக்கியுள்ளார்.

          இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றாளர்கள் பெரும்பாலானவர்களின் அணுகுமுறையில் இருந்து இந்த முறை வேறுபட்டது. உதாரணமாக பிரிட்டிஷாருக்கு எதிராக தென் இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் முந்தைய காலங்களில் நடைபெற்ற கிளர்ச்சிகளை ஆங்கிலேய சார்பு வரலாற்றாளர்கள் வெறுப்புடன் ஒதுக்கி வைத்தனர். மறுபுறத்தில் தேசிய உணர்வு கொண்ட வரலாற்றாளர்கள் இவற்றை தேச விடுதலைப் போராட்டத்திற்கான முன்மாதிரிகளா மதிப்பிட்டனர். ஆனால் இந்த நிகழ்வுகளை வேறுபட்ட விதத்தில் இ.எம்.எஸ் மதிப்பிட்டு செய்துள்ளார்.

          உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் ஆட்சியை போலவே பழமையானவை. அவர்களின் ஆட்சி நாட்டில் வருவதற்கு முன்னரே நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். வேலுநாச்சியும், கட்டபொம்பனும், மருது சகோதர்களும், கேரளாவின் வேலுத்தம்பி தளவாய், பழசிராஜா போன்றவர்கள் எதிர்ப்புகளை இவற்றிற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.  இவ்வாறு குறிப்பிட்ட பகுதியில் நடைபெற்ற கலகங்களில் விரிவான அளவிலும் வடிவத்திலும் இடைப்பட்ட ஒரு கலகமாக 1857இல் எழுச்சி போராட்டம் அமைந்திருந்தது.

          விரிவான அளவில் நடைபெற்ற அந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு போருக்கு சிப்பாய்க்கலகம் என்று பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் பெயர் சூட்டி இருந்தனர். தேச விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கட்டம் சிப்பாய் கழகத்துடன் முடிவுக்கு வந்தது. திரளான விவசாயிகளும் அவர்களை சுரண்டலுக்கு உட்படுத்திய நிலப்பிரபுத்துவ தலைவர்களும் இணைந்து நடத்திய உயரிய வடிவ போராட்டமாக அது அமைந்திருந்தது.

          பிரிட்டிஷ் ஆட்சி காலத்திற்கு முன்னர் வருண சாதி உறவுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு கிராம சமூகம் இந்தியாவில் வழக்கில் இருந்து வந்தது. இந்த கிராம சமூக அமைப்பை பாதுகாக்கவே இக்கலகம் நடத்தப்பட்டது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட வகையான தேசிய போராட்டத்தின் கடைசி கட்டமாகவும் அது இருந்தது. இவற்றையொத்த போராட்டங்களில் காலத்திலும் வெற்றி பெற முடியாது என்பதை 1857 போராட்டத்திற்கு பிரிதான நிகழ்வுகள் தெளிவுபடுத்தின. இப்படி குறிப்பிடும் நூல் ஆசிரியர் கீழ்காணும் கேள்விகளை எழுப்புகிறார்.

1. 1857 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் நடைபெற்ற கலகங்கள் ஏன் வெற்றியடையவில்லை அவை ஏன் ஒடுக்கப்பட்டன?

2. 1857 ஆம் ஆண்டு எழுச்சி ஒடுக்கப்பட்ட பிறகு உருவான தேச விடுதலை இயக்கம் ஏன் மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வடிவத்திலிருந்து விலகியிருந்தது? அந்த இயக்கம் பொதுமக்களை சென்றடைந்த பின்னரும் அகிம்சை போராட்டமே அந்த இயக்கத்தின் மையமான முழக்கமாக இருந்தது ஏன்? அந்நிய ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் என்ற அபாயத்தை அந்த இயக்கத்தின் தலைவர்கள் ஏன் தவிர்த்தார்கள்?

3. விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே சமய சாதிய தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த குழுங்குழுவாத அரசியலானது தேசியவாதிகளின் பயணத்தில் முட்டுக்கட்டையாக இருந்தது எப்படி? இந்த வகை அரசியலை பயன்படுத்திக் கொண்ட அந்நிய ஆட்சியாளர்களால் விடுதலை இயக்கத்துக்கு உள்ளேயே பிளவுகளை வளர்க்க முடிந்தது எப்படி? விடுதலைப் போராட்ட காலம் முழுமையும் ஒரே அரசியல் அமைப்பாக இருந்த பிளவுபட்டது எவ்வாறு? விடுதலைக்குப் பிறகு இவை இரண்டும் தங்களுக்குள் ஓயாமல் சண்டையிட்டுக் கொண்டு இருப்பது ஏன்?

4. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி என்று ஒரு புதிய சகாப்தம் பிறந்தது குறித்து நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு தலைமுறை காலம் முழுவதும் தலைமை தாங்கிய மகாத்மா காந்திக்கு விடுதலைநாள் மகிழ்ச்சி அளிக்கத் தவறியது ஏன்? காந்திஜியின் சீடர்கள் ஒரு பிரிவினர் புதிய ஆட்சியாளர்களாக மாறியபோது மற்றொரு பிரிவினர் ஆட்சியாளர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இருப்பது கண்டு ஏமாற்றம் அடைந்தது ஏன்? விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் காந்தியவாதிகளில் ஒரு பெரும் பிரிவினர் ஏதாவது ஒரு வகையில் புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக திரண்டது ஏன்?

          நீண்டகாலத்திற்கு நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கு பெற்ற வீரமிக்க தேசபக்தர்கள் விரும்பிய வண்ணம் அந்த விடுதலை அமையவில்லை. 1930 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்றும் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சூளுரைத்து ஏற்ற உறுதி மொழிகளில் உள்ளடக்கத்திற்கு ஏற்ப நாட்டு விடுதலை அமையவில்லை. சமூக பொருளாதார கலாச்சார முனைகளில் அந்நிய ஆதிக்கம் தூக்கி எறியப்படவில்லை. நாட்டின் அரசியல் நிர்வாகத்தில்தான் மாற்றம் ஏற்பட்டிருந்தது. வெள்ளை எஜமானர்களின் இடத்திற்கு பழுப்பு எஜமானர்கள் வந்திருந்தனர். இது எப்படி?.

          இந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியில் ஆச்சரியமான பல நிர்ணயிப்புகளின் தொகுப்பாக இந்த நூலை எழுதியுள்ளார்.  தேசத்தின் இளம் தலைமுறையினர் கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டும். ஒரே நேர் கோட்டில் தேச விடுதலை போராட்டம் நடந்ததாக இளம் தலைமுறைக்கு போதனைகள் நடத்தப்படுகிறது. அதனினும் கொடுமையாக இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாத, அல்லது விடுதலைப் போராட்டத்தை கொச்சை படுத்திய மதவாத சக்திகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் சூழலில், இந்திய வரலாற்றை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த நூல் மிகவும் முக்கியத்துவம் பெருகிறது.

          உலகம் முழுவதும் நடைபெற்றது போல முடியாட்சிக்கு பிறகு நிலபிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளிகள் ஆட்சியை பிடிக்காமல் நிலபிரபுகளுடன் சமரசம் செய்து கொண்டது இந்திய நாட்டின் மிக முக்கியமான சமூக மாற்றம் ஆகும். இதன் பின்னணி குறித்தும், காந்தி அவர்களின் வருகைக்கு பின்னர் விடுதாலைப் போரட்டம் வெகுஜன மக்கள் இயக்கமாக பரிணமித்தாலும் அது எப்படி இந்திய முதலாளித்துவ வலதுசாரிகளில் தலைமையை தக்க வைத்தது என்பதையும் மிகவும் ஆதாரத்துடன் ஆவணப்படுத்தியுள்ளார்.

          நேரு ஒப்பீட்டளவில் காங்கிரசில் இடதுசாரி கண்ணோட்டத்துடன் செயல்பட்டாலும் அவர் காந்தியின் தலைமையோடு செய்து கொண்ட சமரசங்கள் குறித்து பல சம்பவங்களினூடாக விவரிக்கிறர் தோழர் இ.எம்.எஸ். நேதாஜி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட கன்யூனிஸ்டுகள் செய்த வேலைகள், பூரண சுயராஜ்ஜியம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கட்சி மாநாடில் முதன் முதலில் எழுப்பிய கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு என பல சம்பவங்கள் நூலில் விரிந்து செல்கிறது. முஸ்லீம் லீக் பாக்கிஸ்தான் என்ற கோரிக்கையை எழுப்பியதன் பின்னணி, இஸ்லாமியர்களிடம் துவக்கம் முதலே நம்பிகையை பெற தவறிய காங்கிரசின் அனுகுமுறை போன்றவற்றை  சுமார் கால்நூற்றாண்டு (1925 – 47) வரலாற்று போக்கின் வழியே விவரிக்கிறார்.

          குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் முக்கியமான மாநாடுகளாக 1929 லாகூர் மாநாட்டையும், 1936 லக்னோ மாநாட்டையும் அறிஞர்கள் சுட்டுவர். ஏனெனில்  காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த இடதுசாரிகள் நிர்ப்பந்தம் காரணமாக லாகூர் மாநாடு முழு சுதந்திர லட்சியத்தை ஏற்றுக்கொண்டது என்றால் லக்னோ மாநாடு முழு சுதந்திர லட்சியத்தை அடைவதற்கு ஒரு தெளிவான ஏகாதிபத்திய எதிர்ப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டது. லாகூர் மாநாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த  ஜவகர்லால் நேருவே லக்னோ மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          இந்த மாநாட்டில் தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது அதுமட்டுமல்ல குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த வேறு இரண்டு தீர்மானங்களையும் மாநாடு நிறைவேற்றி இருந்தது. ஜமீன்தாரி தாலுக்தாரி, மால்குசாரி எஸ்டர் மர்தாரி,  கோட்,  ஜென்மி, இனாம்தாரி போன்ற பல்வேறு வடிவங்களில் இருந்து வந்த நிலப்பிரபுத்துவ முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும், உழுபவனுக்கு நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் கூறியிருந்தது. ராயத்துவரி பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு வந்த நிலவரி முறையில் முழுமையான மாற்றம் கொண்டுவரப்பட்டு படிநிலை அடிப்படையிலான வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட வேண்டும் எனவும், ரூ 500 க்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு நில வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் மற்ற தீர்மானம் கூறியிருந்தது. மற்றொரு தகவல் இந்த மாநாட்டு அரங்கில் தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது.

          இவையெல்லாம் கம்யூனிஸ்டுகளும் முழு முயற்சி எடுத்த காரணத்தால் நடந்தெனினும் மக்கள் திரளை விடுதலை போராட்டபாதையில் திரட்டி ஆங்கிலேயரிடம் பேரம் பேசும் வலுவை அதிகரித்துக்கொள்ளும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனும் இதில் இல்லாமல் இல்லை. 

          இந்திய முதலாளித்துவ வர்க்கம் அடைந்த தொடர்ச்சியான பொருளதார மற்றும் அரசியல் முன்னேற்றமே காங்கிரஸ் கட்சியின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பின்னே இருந்து வந்துள்ளது. அரசியல் அதிகாரத்தை அடைவதும் தொடர்ச்சியான முதலாளித்துவ வளர்ச்சியுமே இந்த வர்க்கத்திற்கு குறிகோளாக இருந்து வந்துள்ளது. இந்த வர்க்கம்தான் காந்தியை தலைமையில் அமர்த்தியது தேவையான போது அவரை எதிர்க்கவும் துணிந்தது. இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையை இரு சமூக முதலாளிகளும் விரும்பினர். பிரிவினை என்னும் கொடூர நாட்களில் இரத்த ஆறு ஓட ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இஸ்லாமிய அடிப்படை வதிகளும் தூபமிட்டதை யாராளும் தடுக்க இயலவில்லை. விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் இருந்த தலைவர்கள் அதிகார பீடங்களில் அமர்ந்தவுடன் இந்திய அரசியலின் தன்மையே மாறிவிட்டது.

          காந்தியும் கிருபாளினியும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. மக்கள் பணியின் அடையாளங்களாக கருதபட்டு வந்த தலைவர்கள் நாட்டு நலனுக்கு மேலாகத் தங்களுடைய சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக மாறி இருந்தனர். நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களுக்கு சேவை செய்யும் மரபை உருவாக்கியிருந்த காங்கிரஸ் கட்சி விடுதலை கிடைத்த சில நாட்களில் அதனை இழந்து நின்றது என்பதோடு நூலை முடிக்கிறார். 

          ஆனால் தேசத்தின் தோல்வி துவங்கிய புள்ளியாகவும் இதுவே இருக்கிறது. இவர்களுக்கு மாற்றாக மக்களை இடதுசாரி பாதையில் திரட்டுவதே இன்றைய இந்தியாவின் விடுதலை மார்கமாகும். அந்த பாதையில் செல்ல இந்திய வரலாற்றை ஆழமாக கற்க வேண்டியுள்ளது. அதன் துவக்க புள்ளியாக இந்த நூலை வாசியுங்கள். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை வர்க்க கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்ள இதைவிட சிறந்த புத்தகம்  இன்றைய இளம் தலைமுறைக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

Related Posts