அரசியல்

இரட்டை மாட்டு வண்டியில் இந்தியா!

make-in-india

(தம்பா ஓவியம் – இந்தியாவை இந்துத்துவம் மற்றும் தனியார்மயக் கொள்கைகளின் சேவையாளாக மாற்ற விரும்பும் பாஜகவின் ஆபத்தான முயற்சியை கேலி செய்கிறது)

எப்பொழுதுமே மாட்டு வண்டியைக் காணும் பொழுதெல்லாம் எனக்கொரு அலாதி இன்பம் ஏற்படுவது வழக்கம். அதுவும் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியை ஓட்டுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு முறை எனது பெரியப்பாவின் மாட்டு வண்டியை ஓட்டி, அதை தவறுதலாக கால்வாயில் இறக்கி மாடுகள் இரண்டையும் சாட்டையால் அடித்து பெரியப்பா அவர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. நமது இந்தியப் பிரதமர் திரு.மோடி அவர்கள் திறமையானவர், யுக புருசர் இரண்டு மாடுகள் அல்ல இருநூறு மாடுகள் பூட்டிய வண்டியைக் கூட அருமையாக ஓட்டிச் செல்லக் கூடியவர். பொருங்கள் இதற்க்காக நான் அவரை மாட்டு வண்டிக்காரர் என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட திறமைசாலிக்கு கைவசம் சிக்கியது என்னமோ இரண்டு மாடுகள் மட்டுமே.

ஆட்சிக்கு வந்து அரையாண்டுகள் கழிந்துவிட்டன, 100 நாள் வேலை திட்டத்தை பதம் பார்த்தவருக்கு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறிதியின் படி 100 நாட்களில் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. அதனாலேயே உச்ச நீதி மன்றம் வண்டியை சரியாக ஓட்டுங்கள் மோடி அவர்களே என செல்லமாக ஒரு குட்டு வைத்தது.

அதென்ன இரண்டு மாடுகள் என நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. எங்கள் வீட்டருகே ஒரு முதியவர், காளை மாடுகளுக்கு பதிலாக, பசு மாடுகளைக் கொண்டு வண்டியை ஓட்டுவது அவரது வழக்கம். நான் பல முறை அதனைக் கண்டு வியந்துள்ளேன். இன்று மோடி அவர்களோ முதலாளித்துவம் மற்றும் இந்துத்துவம் எனும் இரு பசுக்களை பூட்டிய வண்டியில் நம்மையும் நம் நாட்டையும் ஏற்றி ஓட்டிச்செல்கிறார். இனியும் மாடு என்று சொன்னால் நம் காவி நண்பர்கள் கோபித்துக் கொள்ள்வார்கள். பசு என்று சொன்னால் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைவார்கள்.

முதலாளித்துவம் எனும் “சாந்தமான” பசு இந்தியாவை வல்லரசாக்கும் பொறுப்பை “தன் முதுகில் தனியாக சுமந்து கொண்டு “இந்தியாவில் உருவாக்கு” எனும் திட்டத்தில் மூலமாகவும், “மிகுந்த நஷ்டத்தில்” தள்ளாடிக் கொண்டிருக்கும் மருந்து தயாரிப்பாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்து, அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தியும், “(shramava jayate)” எனும் திட்டத்தின் மூலம், தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்து வந்த ஒரு சில சட்டங்களையும் முற்றாக அழித்தும், காப்பீடு மற்றும் வங்கித் துறைகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விடுவதற்கான சட்ட திருத்தங்களை செய்தும் மற்றும் டிசல் விலை நிர்ணயத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது விட்டு படு வேகமாக இந்த முதலாளித்துவ பசு ஓடிக்கொண்டிருக்கின்றது.

மருபுறத்தில் பள்ளி கல்வி திட்டங்களை காவி மயமாக்குதல், இந்தி தினிப்பு, சமஸ்கிருத தினிப்பு, இந்து ராஷ்டிரத்தை நிறுவுதல், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ஐ நீக்குதல், பசுவதை தடைச்சட்டம், கட்டாய இந்து மத மாற்றம் என காவி நிற பசுவும் படு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த காவி நிற பசு அடுத்ததாக பகவத் கீதையை இந்திய தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தனது வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி அவர்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த வண்டியில் பயணிக்கும் நாமும், நம் நாடும், அதே வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என சில ஊடகங்களும், காவிக் கூட்டமும் பிதற்றிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த வண்டி “U டர்ன்” போட்டுக் கொண்டு நம்மையும், நம் சமூகத்தை பின்னோக்கி தான் வேகமாக இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.

கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்தது நமக்கு ஒன்றும் ஆச்சிரியத்தை அளிக்கவில்லை. மாறாக அவர் அறிவித்த கால கட்டம் தான் எந்தளவிற்கு மோடி தலைமையிலான ப.ஜ.க அரசு சாதுர்யமாக செயல்படுகிறது என நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. சுமார் 63 சட்ட வரைவுகள் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் தொழிலாளர் நலன்களை அடியோடு அழிக்கும் சட்ட சீர்திருத்தங்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவை உயர்த்தும் சட்ட திருத்தங்கள் முதலியவை மிக முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன. இததகைய கால கட்டங்களில் காவி நிற பசுவின் சேட்டையின் மூலம் நம்மை திசை திருப்பி முதலாளித்துவ பசு தன் காரியத்தை சதுர்யமாக நிறைவேற்றிக்கொள்ள இருக்கிறது.

சிறுவனாக இருந்த பொழுது தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்ட மகாபாரத தொடரை பெரியவர்களோடு, பக்கத்து வீட்டில் பார்த்த அனுபவம் உண்டு. குருஷேத்திர போர்க்கலத்தில் அர்ச்சுனன் தன் ஆயுதத்தை தூக்கியெறிந்து விட்டு, சொத்துக்காக தன் மாமன், மச்சான், அங்காளி பங்காளியுடன் இந்த “பங்காளிச் சண்டையில்” ஈடுபடப் போவதில்லை என அறிவித்த பிறகு, அர்ச்சுனனின் மாமா பகவான் கிருஷ்ணன் கூறும் உபதேசம் தான் கீதை. அப்பொழுது துவங்கி வாரா வாரம் ஒரு முறை என சுமார் 6, 7 மாதங்கள் தாண்டியும் அதே இடத்தில் நின்று கொண்டு புத்திமதி கூறிக்கொண்டே இருப்பார். பார்த்துக்கொண்டிருக்கின்ற நமக்கே கண்ண கட்டிக்கிட்டு வந்திடும். இன்று கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கிளம்பியிருப்பவர்களும், அவ்வாறு அறிவிப்பது நல்லது தானே என வெகுளியாக கேட்பவர்களுக்கும், அண்ணல் அம்பேத்கரின் ஆய்விலிருந்தும் அவரின் எழுத்துக்களிலிருந்தும் நாம் செல்லமாக ஒரு சிறு குட்டு வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அப்பாட ஒரு வழியாக இவன் விசயத்துக்கு வந்துட்டான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது.

அம்பேத்கர் அவர்கள் கீதை எத்தகைய நூல், அது எதை நிரூபிக்க முயன்றது, எதை போதிக்கிறது, என “கிருஷ்ணனும் அவனுடைய கீதையும் (Krishna and his Gita) எனும் தனது ஆய்வுக் கட்டுரையில் பல தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

கீதை ஒரு தத்துவக்களஞ்சியம், மதக்கோட்பாடு நிறைந்தது, பைபில் அல்லது குரான் போன்று மத போதனை (gospel) கூறும் நூல் என பல வாதங்கள் நிலவிக் கொண்டிருந்த வேலையில், அம்பேத்கரின் இந்த ஆய்வுக் கட்டுரை புதுவித ஒளியை நம் சமூகத்தில் பாய்சியது. ஆய்வின் துவக்கத்திலேயே கீதை “மதம் சார்ந்த நூலோ அல்லது தத்துவக் கோட்பாடு நிறைந்த நூலோ இல்லை. அது தத்துவார்த்த ரீதியில் இந்து மதக்கோட்பாடுகளை பாதுகாக்கிறது”என்று கூறுகிறார். தனது இக்கூற்றை இங்குள்ள காவி நண்பர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும், இக்கூற்றை நிரூபிக்க வேண்டிய கடமையை உணர்ந்த அவர், அவ்வாறு நிரூபிப்பது மிகவும் எளியது எனக் கூறுகிறார். அம்பேத்கர் தனது ஆய்வின் முடிவில் மிக முக்கியமான மூன்று உதாரணங்களை நம் முன் வைக்கிறார்.

முதலாவதாக, சொத்துக்காக “பங்காளிச் சண்டையில் “தன் சொந்த பந்தங்களை ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன் எனும் முடிவுக்கு வருகின்ற அர்ச்சுனனுக்கு, போர் தொடுக்க வேண்டும் எனக் கூறும் கிருஷ்ணன், “போரினையும், போரில் உயிர்கள் பழியாக்கப்படுவதையும் தத்துவார்த்தரீதியில் நியாயப்படுத்துகிறார்”. இந்த “நியாயத்தை” அத்தியாயம் 11, ஸ்லோகம் 11-28 இல் காணலாம். போரினை நியாயப்படுத்த மனிதராக பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறார்கள். அவ்வாறு வாய்க்கப்பட்ட நிலையில் அவர்கள் இயற்க்கையாக இறந்தால் என்ன? போரினால் கொலை செய்யப்பட்டால் என்ன? என்று “நியாயம்” கற்பித்துள்ளார் பகவான் கிருஷ்ணர். அத்தோடு நில்லாமல் உடல் வேறு, ஆன்மா வேறு என்று “அர்ச்சுனா நீ கொல்லப்போவது வெறும் உடலைத்தான், ஆன்மாவையல்ல. ஆன்மாவுக்கு ஒருபோதும் அழிவில்லை” என பக்கம் பக்கமாக வியாக்கானம் கொடுத்துள்ளார் பகவான் கிருஷ்ணர்.

இரண்டாவதாக, இன்றளவும் நம்மிடையே நிலவி வருகின்ற சாதிக் கட்டமைப்பிற்க்கு (சதுர்வர்ன்யா) தத்துவார்த்த ரீதியாக மிக பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார் கிருஷ்ணர். கீதையில் “வர்ணாசிரமம் என்பது கடவுளால் படைக்கப்பட்டது”என தெளிவாக கூறுகிறார் கிருஷ்ணர். வர்ணாசிரமத்திற்க்கு வலுசேர்க்கும் வகையில் தத்துவார்த்தரீதியாக, பிறப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் சாதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் குழந்தை கருவில் அவதரிக்கும் முன்னரே தீர்மாணிக்கப்படுகின்ற வர்ணம், அவர்கள் இறந்த பிறகும் தொடர்ந்து வருகிறது. சாதி என்பது உடலுக்கு பொருந்துமா அல்லது ஆன்மாவுக்கு பொருந்துமா? அழிவில்லாத ஆன்மா அடுத்த முறை அதே வர்ணாசிரமத்தை சேர்ந்த உடலை தேர்வு செய்யுமா அல்லது வேறு வர்ணாசிரமத்தை சேர்நத உடலை தேர்வு செய்யுமா? என டாடி எனக்கொரு டவுட்டு ஸ்டையிலில் நாம் கேள்வி கேட்டால் அதற்க்கும் நமக்கு விளங்கிடாத வகையில் மனனம் செய்துவைத்த ஒரு ஸ்லோகத்தை கூறுவார்கள்.

மூன்றாவதாக, கர்ம மார்கத்தையும் தத்துவார்த்த ரீதியாக கீதை பாதுகாக்கிறது. கர்ம மார்கம் என்பது முக்தியடைய யாகம் செய்தல் போன்ற விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமெனவும், அவ்வாறு கடைபிடிக்க அதற்கான தத்துவார்த்தங்கள் எவ்வாறு கீதையில் கூறப்பட்டுள்ளது என்பதையும் அம்பேத்கர் தன்னுடைய இந்த ஆய்வில் விவரித்துள்ளார்.

தன்னுடைய ஆய்வின் அடுத்த பகுதியாக என்னென்ன மதக்கோட்பாடுகளுக்கு கீதை தத்துவார்த்த அரண்களை வழங்கியுள்ளது? அடுத்ததாக இந்து மதக்கோட்பாடுகளுக்கு தத்துவார்த்த அரண்களை வழங்குவதற்க்கான தேவை ஏன் ஏற்பட்டது? என்பதையும் ஆய்வு செய்துள்ளார். அம்பேத்கர் இவ்வாய்வில் முக்கியமாக, அன்றைய காலகட்டத்திலேயே சாதியத்திற்க்கு எதிராகவும், யாகம், கர்ம மார்க்கம், கர்ம கண்டம், போர் மற்றும் பிரமணியத்திற்க்கு எதிராக புரட்சிகரமான கோட்பாடுகள் பலவற்றை பௌத்தம் இந்த சமூகத்திற்க்கு தந்ததோடு, ஒரு சமூக புரட்சியை நிகழ்த்தியுள்ளது. பௌத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு எதிர்-புரட்சியை நடத்திட இந்து மதக்கோட்பாடுகளுக்கு தத்துவார்த்த தளத்தில் பல அரண்களை ஏற்படுத்தி தருவதே கீதையின் முழுமுதல் நோக்கம். அத்தகைய தத்துவார்த்தங்களினால் தான் இன்று வரை இந்து மதம் நீடித்து நிலைத்து வருகின்றது.

பௌத்தம் அடித்தட்டு மக்களுக்கும், சாதிய அடுக்கில் நான்காவதாக உள்ள சூத்திரர்களுக்கும் (இன்றைய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) சமூகத்தில் சம உரிமை மற்றும் சம அந்தஸ்துகளை, அக்கால கட்டங்களில் சாதிய அடுக்கின் கீழ் நிலையிலிருந்த மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கும் ‘சந்நியாசியாகும்’உரிமையை வழங்கியுள்ளது. இந்து மதத்தில் இத்தகைய உரிமைகள் முன்பு ஒருபோதும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (சூத்திரர்கள்) மற்றும் தலித்துகள், பழங்குடியினர்களுக்கு (ஆதி சூத்திரர்கள்) வழங்கப்பட்டிருக்கவில்லை. வேதங்களில் கூறப்பட்டுள்ளது போன்று “சாதிய அடுக்கை”எக்காரணத்தைக் கொண்டும் குழைத்துவிடக் கூடாது என வெறுமனே கூறினால் யார் கேட்பார்கள். ஆனால் கீதையில் அத்தியாயம் III ஸ்லோகம் 26 இல் கர்ம கண்டத்திற்க்கு எதிராக போராடக் கூடாது எனவும், அத்தியாயம் XVIII ஸ்லோகம் 41 – 8 இல் “ஒவ்வொருவம் தங்கள் வர்ணாசிரம அடிப்படையில் இடப்பட்ட தொழிலை செய்ய வேண்டும் என்றும், ஒருவன் எத்தகைய பக்திமானாக இருந்தாலும், சாதிய அடிப்படையில் தனக்கிட்ட பணியை செய்யவிடில், அவன் ஒருபோதும் முக்தியை அடைய முடியாது”என்கிறது கீதை.

பௌத்த கோட்பாடுகள் அன்றே அஹிம்சையை போதித்துள்ளது. இந்து மதம் வேதங்களில் கூறப்பட்டுள்ளது போன்று “கொலை செய்வது சத்திரியர்களின் கடமை, கொலை செய்வதால் அவர்களுக்கு பாவம் வந்து சேரப்போவதில்லை.”என சாதரணமாக கூறினால் அஹிம்சையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மக்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கீதை பல தத்துவார்த்த தளத்தை ஏற்படித்திக் கொடுத்துள்ளது.

ஆட்சிக்கு வந்த நாட்களிலிருந்து, காஷ்மீர் மாநிலத்திற்க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்க வேண்டும் என, சட்டபிரிவு 370 க்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகளை மேற்க்கோள் காட்டி ப.ஜ.க வின் முக்கிய தலைவரான சுப்பிரமனிய சுவாமி பேஸ்புக்கில் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். கீதையை ஆய்வு செய்துள்ள, அம்பேத்கரின் இது போன்ற கட்டுரைகள் ஏனோ அவருக்கு தெரியாமல் போய்விட்டது.

“பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர் புரட்சியும் (Revolution and Counter-Revolution in Ancient India)” எனும் தனது ஆய்வு நூலில் அம்பேத்கர் அவர்கள், இந்து மதத்தின் உயிர் நாடியாக இருந்து வந்த சாதியத்திற்க்கும், கர்ம மார்கம், கர்ம கண்டம் மற்றும் போர் முதலியவற்றிக்கு எதிராக சமூக புரட்சியை நிகழ்த்திய பௌத்தத்திற்க்கு எதிராக ஒரு “எதிர்-புரட்சியை”நிகழ்த்த இந்து மதத்திற்க்கு தத்துவார்த்த கோட்பாடுகளை கீதை வழங்கியதன் காரணமாகவே இந்து மதம் போதித்து வருகின்ற சாதியம் இன்றளவும் நம் சமூகத்தில் நிழவிவருகிறது. அப்புத்தகத்தின் “கிருஷ்ணனும் அவனுடைய கீதையும்”எனும் அத்தியாயத்தில் இந்து மதத்திற்க்கு கீதை வழங்கிய தத்துவார்த்த கோட்பாடுகளையும், கீதை பௌத்தத்திற்க்கு பிறகு தான் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அம்பேத்கர் தன் ஆய்வின் மூலம் நிறுவியுள்ளார்.

வர்ணாசிரமத்தையும், போர்களையும், போரில் உயிர் பழியாக்கப்படுவதையும், கர்ம மார்க்கத்தையும் உயர்த்தி பிடிக்கும் கீதையைத் தான் மோடி அரசு இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க துடிக்கிறது. இந்திய ஜனநாயகம் மதச்சார்பின்மை என்னும் அடித்தளத்தின் மீதே கட்டப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பஜக அரசின் சமஸ்கிருத தினிப்பு, கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது, கோட்சேவை தியாகி என்று கூறுவது, பள்ளி பாடதிட்டங்களை காவி மயமாக்கும் செயல்கள் என அனைத்தும் மதச்சார்பின்மையை அழிப்பதும், அதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை அடியோடு அழிக்கும் செயலாகவே பார்க்க வேண்டும். தரிகெட்டு ஓடும் காவி நிற பசுவும், முதலாளித்துவ பசுவையும் சேர்த்து அடக்கி இந்திய ஜனநாயகத்தை காத்திட, மதச்சார்பற்ற சக்திகளும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும்.

ஜனவரி மாதம் செம்மலர் இதழில் இக்கட்டுரை பிரசுரமானது.

– நன்றி செம்மலர்

Related Posts