அரசியல்

வதந்திகளின் பரிணாம வளர்ச்சி !

மோசஸ் பிரபு

பள்ளி நாட்களில் பிள்ளையார் பால் குடித்தார், மாதாவின் கண்களில் நீர் வருகிறது, நள்ளிரவில் ஆட்டோவில் ஏறிய ஒரு பெண் தன் குழந்தையை தானே மென்று தின்றாள் என்பது போன்ற வதந்திகள் மிக பிரபலமானவை கடவுள்-பேய்-பிசாசு குறித்த வதந்திகள் இதுபோல் ஏராளமாய் இன்றும் வந்துகொண்டே இருக்கின்றன.

முகநூல், ட்விட்டர், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்கள் இல்லாத காலத்திலேயே வதந்திகள் உண்டு ஆனால் அன்றைய வதந்திகள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய கலவரங்களோ, அரசியல் தளத்தில் ஆட்சி மாற்றமோ ஏற்படவில்லை. ஆனால் இன்றைய அபரிதமான சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வதந்திகளின் வீரியம் அதிகரித்திருக்கிறது. வதந்திகளினால் நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை அந்த அளவிற்கு சமூக தளத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்தியா-அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படவே சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்று இந்திய சந்தைக்கான ஆராய்ச்சி குழு ( ஐஎம்ஆர்பி ) தெரிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதும் அதனோடு எந்நேரமும் உறவாடுவதும் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறியிருக்கிறது. குடிப்பதை-சிகரட் பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பதை போல அந்த வரிசையில் முகநூல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று யோசிக்கும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.

இன்றைய இணைய உலகில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த விவரங்களை நாம் உடனக்குடன் தெரிந்துகொண்டாலும் அச்செய்திகள் உண்மையா.? பொய்யா? என்பதை நம்மால் ஆராய முடிவதில்லை, அதற்கான நேரம் இருப்பதாகவும கருதவில்லை, கிடைக்கும் செய்திகள் நம் சிந்தனைக்கு அல்லது நம் கருத்தியலுக்கு உடன்பாடான செய்தி எனில் உடனே எவ்வித ஆய்வுமின்றி மற்றவர்களுக்கு பகிர்ந்துவிடுகிறோம் சில நேரங்களில் தகவல்களை முந்தி தருவது என்கிற செய்தி நிறுவனங்களின் மனப்பான்மையும் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோருக்கு வந்துவிடுகிறது இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை உணரவில்லை.

முற்போக்குவாதிகள் பிற்போக்குவாதிகள் என்கிற பேதமில்லாமல் அனைவரும் பல பொய்யான செய்திகளை சமூக ஊடகத்தில் தெரியாமல் பரப்பியிருக்கிறோம் இந்த பழக்கத்தை மிக அருமையாக ஆளும் வர்க்கம் பயன்படுத்திகொள்கிறது. எனவே தனக்கு சாதகமான பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்ப ஒரு குழுவோடு செயல்படுகிறது. அது குறித்து தான் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது.

ஆங்கிலத்தில் INDIA MISINFORMED என்கிற பெயரில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகத்தை பிரதிக் சின்ஹா, சுமையா சைக், அர்ஜூன் சித்தார்த் ஆகிய மூவரும் இணைந்து தொகுத்து எழுதியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான தோழர்.இ.பா.சிந்தன் இதை தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.
“எதிர்” வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இவர் “இந்துத்துவ உதிரி அமைப்புகள் குறித்து திரேந்திரா.K.ஜா எழுதிய Shadow Armies என்கிற ஆங்கில புத்தகத்தை “நிழல் இராணுவங்கள்” என்கிற பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்திருந்தார்.

மதவெறியை பரப்புதலில் துவங்கி அறிவியல் வதந்திகள் வரை 7 தலைப்புகளில் மிகப்பிரபலமாக பரவிய நானும் நீங்களும் உண்மையென பகிர்ந்த 83 நிகழ்வுகளை தொகுத்து அது எப்படி திட்டமிட்டு பொய்யாக பரப்பப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு செய்தியையும் ஆல்ட் நியூஸ், Google Reverse Image மற்றும் ஏராளமான வரலாற்று குறிப்புகளோடும், களத்தில் நேரடியாக ஆராய்ந்தும் உண்மை எதுவென விரிவாக ஆதரங்களோடு இப்புத்தகம் நிருபிக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை 2014ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நரேந்திர மோடிக்கு தந்த ‘பில்டப்’ செய்திகளிலும் ஆட்சிக்கு வந்த பிறகு தரும் பில்டப் செய்திகளிலும் பல பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. அமீத் ஷா சொன்னது போல் 30லட்சம் பாஜகவின் ஐடி ஊழியர்களுக்கு இப்பொய் செய்திகளை சமூக ஊடகத்தில் பரப்ப அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது ஆர்எஸ்எஸின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான முஸ்லிம்-கிறித்தவ மத வெறுப்பின் மூலம் ஏராளமான பொய் செய்திகளை இந்த 6 ஆண்டுகளில் உருவாக்கியிருக்கிறார்கள்.

மாட்டுக்கறி வைத்திருக்கிறார் என்று அக்லக் கொலை முதல் குழந்தையை கடத்துகிறார் என்று முகமது கையூம் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பொய் செய்திகள் உருவாக்கப்படுகிறது. நிகழும் விபத்துக்களை முஸ்லிம் மக்களோடு தொடர்பு படுத்தி இந்துத்துவா சக்திகள் கலவர நெருப்பில் குளிர்காய்ந்துள்ளனர்.

மேலும் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தன் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்யும் ராகுல் காந்தி சோனியா காந்தி குறித்து அரசியல் ரீதியாகவும் தனிநபர் சார்ந்தும் பல பொய் செய்திகளை பரப்பியுள்ளனர் மறைந்தவரையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை “ஜவகர்லால் நேருவும்
இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சுபாஷ் சந்திரபோஸ்,
குறித்த முக்கிய ஆவணத்தையே Fakeஆக தயாரித்து உலவ விட்டுள்ளனர்
பல வரலாற்று உண்மை நிகழ்வுகளும் திரித்து கூறப்பட்டுள்ளது.

இதை எல்லாவற்றையும் தன் அரசியல் லாபத்திற்காக பாஜக பயன்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் மோடி அமீத்ஷா யோகி ஆதித்யநாத் குறித்தும் சில பொய்யான செய்திகளும் பரப்பப்பட்டுள்ளது இதையும் நேர்மையாக இப்புத்தகம் பதிவு செய்கிறது. இந்த பொய் செய்திகளுக்கு சாதாரண ஆட்கள் மட்டுமல்ல எதையும் ஆராய்ந்து எழுதுவதாக சொல்லும் பெரும் செய்தி நிறுவனங்களும் பலியாகியுள்ளனர். அதன் நம்பகத்தன்மையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சமூக ஊடகத்தை பயன்படுத்தி அமைதியின்மையை கெடுக்கும் சக்திகளுக்கு எதிராக கண்ணில் விளக்கண்ணெய்யை வைத்து வேலை செய்ய வேண்டிய பணியை சமூக செயல்பாட்டாளர்களுக்கு உள்ளது என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது. அனைவரும் வாசியுங்கள் பொய் செய்திகளை முறியடியுங்கள்.

Related Posts