அரசியல்

ஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . ! – 1

பாமியான் புத்த விகார்களை தாலிபான்கள் தகர்த்ததுபோல சங்பரிவாரங்களால் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வானது அவ்வளவு வெளிப்படையானதல்ல. இன்று வெகுஜனங்கள் மனதில் பதியவைக்கப்பட்டுள்ள அல்லது சாமானிய மக்களின் சிந்தனையில் நம்பவைக்கப்பட்டுள்ள இராமர் கோவில் எதிர் பாபர் மசூதி என்கிற சித்திரம் முழுமையானதுமல்ல. ஆன்மீக முகமூடி அணிவிக்கப்பட்டிருக்கிற இந்தச் சித்திரத்தின் பின்னால் வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும் பின்னப்பட்ட நீண்ட நெடிய வரலாற்று மோசடிக்கதைகள் ஒளிந்திருக்கின்றன. ஒரு சாதாரன உள்ளூர் நிலப்பிரச்சனை ஒரு நாட்டையே, நாட்டின் அரசியலையே தீர்மானிக்கிற ஒரு சக்தி வாய்ந்த காரணியாக வலிமை பெற்றிருப்பதன் பின்னனியை நாம் ஆராயப்புகுந்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏராளமான தகவல்களும் தரவுகளும் துண்டு துண்டாகக் கிடைக்கின்றன. அவற்றை கோர்வையாக்குவதன் மூலம் ஒரு உரையாடலைத் துவங்கும் முயற்சியே இது.

இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் சதுரடி பரப்பளவுள்ள ஒரு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த, பொக்லின் பிரேக்கர் போன்ற நவீன கருவிகளைக் கொண்டு வேலை செய்தாலே ஒரு நாளில் முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியிருக்க இரண்டிலிருந்து மூன்றடி வரை அகலமான, வலிமையான சுற்றுச் சுவர்களையும், ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருந்த கருங்கற்களாலான கட்டிடக் கட்டுமானங்களையும் கர சேவகர்கள் வெறும் சுத்திகளையும் கடப்பாரைகளையும் வைத்துக்கொண்டு ஒரு நாளில் இடித்துத் தரை மட்டமாக்கிவிட முடியுமா..? என்ற அடிப்படைக் கேள்வியிலிருந்துதான் இதைத் துவக்க வேண்டும்.

அயோத்தியில் நூற்றுக்கணக்கான இராம ஜென்மஸ்தான்கள் (இராமர் பிறந்த இடம்) இருந்திருக்கின்றன. அதாவது நூற்றுக்கணக்கான வெவ்வேறு சாமியார்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற வெவ்வேறு கோவில்களும் இங்கு தான் இராமர் பிறந்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட எல்லாக் கோவில்களுக்கும் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இராமர் பிறந்த இடமென்று சொல்வதன் மூலம் தங்கள் கோவிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக நிறுவுவதன் மூலம் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் முயற்சியில் இருந்தன. இன்று வரையிலும் இராமர் பிறந்த இடம் என்று சொல்லிக்கொள்ளும் வெவ்வேறு கோவில்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1857 இல் பாபர் மசூதிக்கு அருகில் கிட்டத்தட்ட 50 அடி தொலைவில் இராம சபூத்ரா என்கிற மேடை உருவாக்கப்பட்ட பின்பு அதன் போக்குகள் மாற்றமடைந்தன. சிப்பாய்ப்புரட்சியின் போது பிரிட்டிஸ் அதிகாரிகளுக்கு ஆதரவளித்துப் பாதுகாத்த அனுமன் கோட்டை சாமியார்களான மஹந்த்துகள், அதற்கு பரிசாக பிரிட்டிசாரிடம் பெற்றுக்கொண்ட வெகுமதியில் கட்டப்பட்ட இராம சபூத்ரா தான் பிரச்சனையின் துவக்கப்புள்ளி. (பின்னால் தேவைப்பட்டால் விரிவாகப் பார்ப்போம்) அப்போதிலிருந்தே இஸ்லாமியர்களின் எதிர்ப்புகள் வழக்குகள் என்று தொடர்ந்துகொண்டே இருந்தாலும், இராம் சபூத்ராவின் செல்வாக்கு பெருகிக்கொண்டே இருந்தது. 22.12.1949 நள்ளிரவில் மசூதியின் மையப் பகுதியில் இராமன் சிலைகள் வைக்கப்படும் வரையில் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பிறகு ஆட்சியதிகாரம் தங்கள் கைகளுக்கு வருமென்று நம்பியிருந்த பார்ப்பனியவாதிகளின் நோக்கம் நிறைவேறாமல் போகவே, ஏதாவது செய்து ஒரு பெரிய கலவரத்தின் மூலம் வலுக்கட்டாயமாக காங்கிரசை நீக்கிவிட்டு அரசைக் கைப்பற்றும் திட்டத்தோடிருந்த இந்து மகாசபை, அபிராம் தாஸ் என்கிற ஒரு முரட்டுச் சாமியாரைப் பயன்படுத்தி அதற்கான முதலடியை வைத்தது.

முரட்டுச் சாமியார் அபிராம்தாஸ்…

பீகார், தர்பங்கா மாவட்டம், இராடி என்கிற சிற்றூர். மைதிலி பிராமணக் குடும்பத்தில் ஏழு குழந்தைகள் கொண்ட தந்தைக்கு மூத்த பிள்ளையான அபிநந்தன் மிஸ்ராவின் இளமைக்காலத்தில் வறுமை தாண்டவமாடியது. ஒரு பிராமணன், உடல் உழைப்பில் ஈடுபடுவது தகுதிக்குறைவென்பதால் அவனது தந்தை ஒரு சிறு கோவிலின் பூசாரியாக இருந்தார். குறைந்த வருமானத்தைக் கொண்டு இரு வேளை உணவுக்கே சமாளிக்க முடியாத நிலை.

ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் விட்ட அபிநந்தன் தந்தைக்கு உதவியாக கோவில் வேலைகளைச் செய்தான். அவனது சகவயது நண்பர்கள் வயல் வேலைகளைச் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தபோதும் அபிநந்தன் அந்த வேலையில் ஆர்வம் காட்டவில்லை. கடுமையான வறுமையிலும் கூட ஒரு பிராமணனாகப் பிறந்துவிட்டு வயல் வேலையை, அதுவும் சொந்த ஊரில் செய்வதற்கு அவன் மனம் இடம் தரவில்லை. வெளியூர் சென்று வேலை செய்து குடும்ப வறுமையைப் போக்க முடிவு செய்து வீட்டை விட்டுக் கிளம்பினான்.

தொலைவில் ஒரு ஊருக்குச் சென்று பண்ணையார்களின் கால்நடை பராமரித்தல், மூட்டை சுமத்தல், கடைகளில் கூலி வேலை செய்தல் போன்ற கிடைத்த வேலைகளைச் செய்தான். அப்போது வந்த ஒரு தகவல் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவனது ஆறு வயது தங்கை பட்டாஹியை ஒரு கிழவனுக்கு திருமணம் செய்யப்போவதாக அறிந்து கொதிப்படைந்தான். அந்தக்காலத்தில் இதுபோன்ற திருமணங்கள் சாதாரனமாய் நிகழக்கூடியது தான் என்றாலும் தன் செல்ல தங்கையை ஒரு கிழவனுக்கு மணம் முடிக்க அனுமதிக்கக்கூடாதென்று ஊருக்குச் சென்றான்.

எவ்வளவோ சண்டையிட்டும் பிரயோஜனமில்லை. அவனது அப்பா அந்தக் கிழவனிடம் 200 ரூபாய் பெற்றுக்கொண்டு திருமணம் நடத்தி விட்டார். மூன்று மாதங்களில் அந்தக்கிழவன் இறந்துவிட பட்டாஹி கைம்பெண் ஆனாள். இந்த நிகழ்வால் மனதளவில் பாதிக்கப்பட்ட அபிநந்தன் பாட்னா சென்றான். மீண்டும் உடல் உழைப்பில் ஈடுபட அவன் மனம் ஏனோ விரும்பவில்லை. தனது தந்தையைப் போலவே ஒரு கோவில் பூசாரியானான். அப்போது அங்கு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர்.

இதிலும் மனதளவில் பாதிக்கப்பட்ட அபிநந்தன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்து அயோத்தி சென்றான். கோவில் கோவிலாகச் சுற்றினான். பண்டாரங்களுக்கு வழங்கப்படும் உணவை வாங்கி உண்டான். சரயு ஆற்றங்கரையில் உறங்கினான். இப்படியே நாட்கள் கழிந்தன.

ஒருநாள் அனுமன் கோவிலின் வாசலில் அமர்ந்திருந்த அபிநந்தனை ஒரு துறவி அழைத்துச் செல்கிறார். அனுமன் கோட்டையில் உள்ள சரயுதாஸ் என்கிற ஒரு குருவிடம் சேர்த்து விடுகிறார். சடங்குகள் செய்து துறவிக்கோலம் பூண்டு அபிநந்தன் மிஸ்ரா, அபிராம்தாஸ் என பெயர் சூட்டப்பட்டான்.

குருவின் மரணத்திற்குப்பின்பு அனுமன் கோட்டையின் ஆசனம் அபிராம்தாஸ்க்கு சொந்தமானது. நல்ல உடல் வலுவும் சண்டியர்த்தனமான குணமும் கொண்ட அபிராம்தாஸ் தன் பலத்தையும் சூழ்ச்சியையும் பயன்படுத்தி பிற சாதுக்களை விரட்டி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக முழு அனுமன் கோட்டையையும் கைப்பற்றினான். கோட்டையைக் கைப்பற்றுவதென்பது வெறுமனே கோட்டையை மட்டுமல்ல அதன் கணக்கிலடங்கா சொத்துகளையும் நில புலன்களையும் கைப்பற்றுவது. அங்கு பெரும்பாலான சாதுக்களின் பீடங்கள் இதைச் செய்வதில் (சொத்துகளைக் குவிப்பதில்) போட்டி போட்டுக்கொண்டிருந்தன. முக்கியமாக நிர்மோகி அரோரா , நிர்வாணி அரோரா இரண்டும் பெரும் போட்டியாளர்கள். (எங்கோ கேள்விப்பட்ட் மாதிரி இருக்கிறதா..? பாபர் மசூதி தீர்ப்பை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த அரோராக்களைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம்)

அதில் அதிவேக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிர்மோணி அகாராவின் வைராகியான அபிராம்தாசுக்கு ஒரு விசயம் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. அதுதான் இராம் சபூத்ரா.

ராம் சபூத்ரா என்றால் ராம் மேடை. பாபர் மசூதி வளாகத்திலிருந்தி 50 அடி தள்ளியிருந்த ஒரு மேடை. இராமர் பிறந்த இடமென்று நம்பப்பட்ட இடம். லட்சக்கணக்கான பக்தர்களும் யாத்ரீகர்களும் அள்ளிக் கொட்டுகின்ற அபரிமிதமான நன்கொடைகளும் தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களும் ராம் சபூத்ராவை நிர்வகித்து வந்த நிர்மோகி அகாரா என்கிற சாதுக்களின் கூட்டமைப்பின் கைகளுக்குச் செல்கிறது. இது நிர்வாணி அகரா சாதுக்களின் கூட்டமைத்தின் தலைவரான அபிராம்தாசின் நாக்கில் எச்சில் சொட்டச் செய்தது.

எதாவது செய்து அந்த வருமானத்தை முழுதும் அபகரிக்க நினைத்த அபிராம்தாஸ் ஒரு முடிவுக்கு வந்தான். வேறு எதாவது இடத்தில் இராமர் பிறந்தார் என்று நம்பவைப்பதன் மூலம் இப்போதைய ராம் சபூத்ரா மேடை மதிப்பிழந்து போகச்செய்ய வேண்டும். அது மசூதியாக இருந்தால்பின்னும் நல்லது.  ஒட்டு மொத்த மசூதியும் நிர்வாணி அகராவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். கூடவே இந்த சிறிய மேடையும் மதிப்பிழந்து நாளடைவில் அதையும் கைப்பற்றி விடலாம். 

1949 டிசம்பர் 6 நள்ளிரவில் நம்பிக்கையான சில நபர்களின் துனையோடு கையில் சில சிலைகளை எடுத்துக்கொண்டு பாபர் மசூதியின் மதிலேறிக் குதித்தான் அபிராம் தாஸ்.. 

மிகச்சரியாக மசூதியின் மையப்பகுதியில் ஸ்ரீ ராமர் தன்னுடைய பிறந்த இடத்தை அடையாளம் காட்டினார். 

இந்து மகாசபை நிமிந்து அமர்ந்தது. 

( தொடர்ந்து பேசுவோம்..)

– சம்சுதீன் ஹீரா.

Related Posts