பிற

மும்பையைக் கலக்கும் ‘இட்டிலி’க்காரர்கள் …

  • பிரார்த்தனா உப்பல்

நாள் முழுதும் கடும் வெப்பத்தில் உழைத்து விட்டு வீடு திரும்பும் இட்லிவாலாக்கள்

idly wallah

இட்லிவாலாக்கள் அவர்களது பல வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டி முழுதும் சுவைமிக்க உணவை எடுத்துச் செல்கின்றனர்.

லுங்கியையும், சட்டையையும் அணிந்து கொண்டு, பெரிய அலுமினியச் சட்டிக்களை தமது சைக்கிளில் ஒரு மெல்லிய துண்டால் கட்டிக் கொண்டு வருபவர்கள்தான் அந்த இட்லிவாலாக்கள். சிறிய சட்டிகளில் சட்னியையும், சாம்பாரையும் எடுத்துக் கொண்டு, பேப்பர் பிளேட்டுக்களையும் அவர்கள் கொண்டு செல்கிறார்கள். அவையெல்லாவற்றையும் ஒரு தேய்ந்து போன சைக்கிள் டியூபால் சேர்த்துக் கட்டி எடுத்துச் செல்கிறார்கள்.

காலை சுமார் ஏழு மணியளவில் அவர்கள் நகரத்தில் ஆயிரக்கணக்கானோரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யத் தெருவில் இறங்குகிறார்கள். அவர்கள்தான் மும்பையின் இட்லிவாலாக்கள். அவர்களது அடையாளமாக பாம்-பாம் சப்தம் திகழ்கிறது. அச்சத்தத்தை தூரத்திலிருந்தே கேட்க முடியும். இந்த ரப்பரால் செய்யப்பட்ட ஹாரன் எழுப்பும் தனிப்பட்ட ஒலிதான் இட்லிக்காரர்கள் வந்து விட்டார்களென்பதை அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கும் ஒலி.

சைக்கிளில் வந்து இட்லி விற்கும் இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரையிலிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்திருக்கும் ஒரு சமூகம். சுமார் 500லிருந்து 700 குடும்பங்கள் ஆசியாவின் மிகப்பெரும் சேரிப்பகுதியான தாராவியில் வசிக்கின்றனர். இவர்கள் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவான இட்லியைத் தயாரித்து விற்று தம் பிழைப்பை நடத்துகின்றனர். இட்லி-வடையை இவர்கள் மும்பையின் மிகவும் விரும்பப்படும் உணவாகவும் மாற்றி விட்டனர். ஒவ்வொரு குடும்பமும் சுமார் 400 ஆவி பறக்கும் இட்லிக்களைத் தயாரிக்கிறது. ஒரு நாளைக்கு சுமாராக 400-500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இரண்டு மூன்று ஆண்கள் இருக்கும் வீடென்றால் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் ரூபாய் இலாபம் பார்க்க முடியும்.

ஒவ்வொரு நாளும் இந்தக் குட்டித் தமிழ்நாட்டிலிருந்து 3,00,000 இட்லிக்களும் மற்ற தென்னிந்திய உணவு வகைகளும் மும்பையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகத்தினர் வசிக்கும் பக்கா சேரிகள் மும்பையின் முக்கிய இடங்களான சயான், மாஹிம் ஆகிய பகுதிகளுக்கிடையே இருக்கிறது. அதாவது சென்ட்ரல், வெஸ்டர்ன் ஆகிய இரண்டு ரயில் தடங்களுக்கிடையே அமைந்துள்ளது இப்பகுதி. இங்கிருந்து இட்லிவாலாக்கள் நகரத்துக்குள் சென்று அதன் உழைப்பாளிகளின் பசியைத் தணிக்க முடியும்.

அவர்கள் கடந்து செல்லும் தாராவியின் சந்துகள் வெளியார் ஒருவருக்கு புதிராகவே இருக்கும். ஆனால் அவர்களோ தலையில் பெரிய சட்டிகளை பாலன்ஸ் செய்து கொண்டு வழுக்கும் தரைகளையும், சாக்கடைகளையும் தாண்டி எளிதாகச் செல்கின்றனர்.

உலகின் மிகவும் செலவு மிக்க மெட்ரோக்களில் ஒன்றில் வாழ்வதற்கான நீண்ட போராட்டத்தின் கதையையும், நகரம் பெறக்கூடிய மிகவும் மலிவான காலை உணவின் கதையையும் இவர்களது வீடுகள் நமக்குச் சொல்கின்றன. இந்த வீடுகளின் உள்ளே பிரும்மாண்டமான பட்டறைகள் உள்ளன. அங்கு ஆண்களும், பெண்களும் விடிவதற்குள்ளேயே மிகப்பெரிய இட்லிப் பானைகளை அடுப்பில் வைத்து, மிகக்குறைந்த நேரத்தில் இட்லிக்களை அவித்து விடுகின்றனர்.

matunga-idliwalas.width-800

ஒரு நடிகராகும் ஆசையுடன் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையிலிருந்து மும்பைக்கு வந்த மூத்த இட்லி விற்பனையாளர், மணி

ஊற வைத்த அரிசி, பருப்பைச் சேர்த்து அரைத்த மாவை இரவில் புளிக்க வைத்து அதைக் கொண்டு காலை 4 மணியளவில் இட்லித் தட்டுக்களை நிரப்புகின்றனர். இட்லிக்கள் தட்டில் ஒட்டிக்கொண்டு விடாமல் இருக்க அவற்றின் மேல் பிளாஸ்டிக் ஷீட்டுக்களை வைக்கின்றனர். ஒவ்வொரு இட்லிப் பானையும் ஒரே நேரத்தில் 100 இட்லிக்களை ஆவி பறக்க அவிக்க முடியும். இட்லிக்கள் ஒரு புறம் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு புறம் சுவை மிகுந்த தேங்காய் சட்னி, தக்களிச் சட்னி, சாம்பார் ஆகியவற்றைத் தயாரிப்பது தொடங்குகிறது.

மணி சுப்ரமணியம் கடந்த இருபது ஆண்டுகளாக மத்திய மும்பாயில் பாட்டியா மருத்துவமனை, சோபியா கல்லூரி ஆகியவற்றுக்கருகே தினமும் இட்லி விற்று வருகிறார். “என் மாமா என்னை மதுரையிலிருந்து அழைத்து வரும்போது எனக்கு 20 வயது. நான் ரஜினிகாந்தைப் போல ஒரு நடிகராக விரும்பினேன். ஆனால் அது எனக்கு சாதகமாக இல்லை. இட்லி செய்வது மட்டும்தான் எனக்குத் தெரிந்த ஒரே தொழில்” என்று அவர் நினைவு கூர்கிறார்.

ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து தொழிலைத் துவங்கிய மணி இப்போது அந்தத் தொழிலில் பலரும் அறிந்த நபராகி விட்டார். ஒரு நாளைக்கு சுமார் 600 இட்லிக்களை அவர் விற்கிறார். அதிகாலையில் விழித்தெழும் அவரும் அவரது மனைவியும் பசியுடன் வரும் கல்லூரி மாணவர்களுக்குப் பருப்பு வடையை அறிமுகப்படுத்தினர். அவரது வழக்கமான வாடிக்கையாளர்களில் ஒருவரான அஃப்ரீன் அன்சாரி, “அண்ணா மிகவும் சுவை மிகுந்த இட்லிக்களைத் தயாரிக்கிறார். அவை மிகவும் மென்மையாகவும், லேசாகவும் உள்ளன. நான் அடிக்கடி அவற்றை வீட்டுக்கு வாங்கிச் செல்வேன்” என்கிறார்.

இன்னொரு வழக்கமான வாடிக்கையாளரான யாடின் ரத்தோர் மணியின் இட்லிக்களை கடந்த 15 ஆண்டுகளாக உண்கிறார். “நான் சாப்பிடத் தொடங்கிய போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். அப்போதிலிருந்து சுவை ஒரே மாதிரியாகவே உள்ளது. அண்ணாவுக்கு எனக்குப் பிடித்த சட்னி எதுவென்று குறிப்பாகத் தெரியும்.”

”மும்பையில் காலையில் இத்தனை வயிறுகளை என்னால் நிரப்ப முடிகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. எனது மகள்கள் சுஜிதாவும், அஜிதாவும் என் பிசினசை புதிய அளவுக்கு உயர்த்த படித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்கிறார் மணி.

மணியைப் போலவே வேறு பலரும் வேறு வேலை தேடி அது தோல்வியடைந்த பிறகுதான் இந்த வேலைக்கு வந்துள்ளனர். வேலை தேடி மும்பைக்கு வந்த கே.பாண்டி பின்னர் இந்த இட்லி தொழிலைச் செய்வதென்று முடிவு செய்தார். ” நான் என் சொந்த ஊரில் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருந்தன. ஆனால் கொஞ்சம் பணம்தான் மிச்சமிருந்தது. எனக்குத் தெரிந்தவர்கள் சிலருடன் ஒரு சிறிய அறையில் வசித்துக் கொண்டு, எங்கள் சமையலைச் செய்து வந்தோம்” என்று அவர் நினைவு கூர்கிறார்.

 ”நான் விற்பனை செய்வதற்காக இட்லிக்களையும், மெது வடைகளையும் சில தோசைகளையும் எனக்குக் கொடுத்தனர். நான் சமையல் செய்ய உதவவும், சில சமயம் காய்கறி நறுக்கவும் காலை மூன்று மணிக்கு எழுவேன். ஒரு நாள் நான் யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்ற ஆவலில் அனைத்தையும் கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினேன்” என்று அவர் கூறுகிறார்.

காலை ஏழு மணியளவில் அவர் கூட்டம் நிரம்பி வழியும் ரயிலில் விக்ராந்த் சர்கிளுக்குப் பயணம் செய்வார். அது வடக்கு மும்பையிலுள்ள காட்கோபர் என்ற பகுதி. அங்கு ஏராளமான குஜராத் மக்கள் வசிக்கின்றனர். முதலில் பெரிய பாத்திரங்களைச் சுமந்து கொண்டு இட்லி விற்பது பாண்டிக்கு மிகவும் கடினமாக இருந்தது. “ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, நான் நன்கறிந்த முகமாகி விட்டேன்” என்று அவர் கூறுகிறார். “காலை உணவாகத் தமது குழந்தைகளுக்கு இட்லி கொடுக்க விரும்பிய தாய்மார்கள் ஆவலுடன் எனக்காகக் காத்திருந்தனர். அவர்கள் சிறிய நாணயம் போன்ற அளவிலிருந்த இட்லியை விரும்புவதாக என்னிடம் கூறினர். ஏனென்றால் அவற்றைக் குழந்தைகள் ஒருபோதும் வீணாக்குவதில்லை. டிஃபன் பாக்சில் அடைத்துக் கொடுப்பதற்கும் இவை எளிதாக இருந்தன.”

பாண்டி நான்கு இட்லிக்களை ஒரு ரூபாய்க்கும், ஒரு தோசை ஐம்பது பைசாவுக்கும் விற்கத் துவங்கினார் – இது மிகவும் மலிவாகக் கிடைத்த உணவு. சில காலத்தில் தனக்கென அவர் ஒரு சைக்கிளை வாங்கினார். அவர் யாரும் சாலையில் குப்பையைப் போட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையையும் கொண்டு செல்கிறார். “மக்கள் காரில் வந்து என்னிடம் இட்லி வாங்க நிற்பார்கள். நான் சர்க்கிளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பல பணக்கார குஜராத்தி வணிகர்களுக்கு விற்பனை செய்திருக்கிறேன்” என்கிறார் அவர்.

அவர் மெதுவாக வாழ்க்கையில் நிலைத்தார். அவருக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் தாராவியிலுள்ள தொழிலாளர் காம்பிலுள்ள முனிசிபல் பள்ளியில் படிக்கின்றனர். “எனக்குக் கொடுக்கப்பட்ட கல்வியெல்லாம் அனைத்து இட்லிக்களையும் விற்று விட வேண்டும், எதையும் திருப்பிக் கொண்டு வரக்கூடாது என்பதுதான்”: என்கிறார் பாண்டி. ”என் குழந்தைகள் படிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களிடமிருந்து கற்பதற்கு ஏராளமாக உள்ளது.”

பெரும்பாலான இட்லிவாலாக்கள் ஆண்களே. பெண்கள் அவர்களுக்கு வீட்டிலிருந்து உதவுகின்றனர். அழகுத்தாய் போன்ற சில பெண்கள் விற்பனையும் செய்கின்றனர். காலஞ்சென்ற அவரது கணவர் துவங்கிய இந்தத் தொழிலை தொடர்ந்து நடத்த அவர் மிகவும் சிரமப்படுகிறார். 36 வயதான அழகு தமிழ் மட்டுமே பேசுகிறார். ஆனால் பல மொழிகளைப் பேசும் மும்பையில் அவர் தயாரிக்கும் அனைத்து உணவுகளையும் விற்று விடுகிறார்.

alaguthai.width-800

தாராவியில் இட்லி விற்கும் சில பெண்களில் ஒருவரான அழகு

மற்றவர்களைப் போலவே அவரும் அதிகாலையில் தனது சகோதரன் மலை ராமனுடன் 300-400 இட்லிக்கள், 250 வடைகள், 40-50 தோசைகளுடன் பைகுல்லா ரயில் நிலையத்துக்குச் செல்கிறார். அவரது 19 வயது மகன் ஒருநாள் இதைப் பெரிய அளவுக்குக் கொண்டு வருவார் என்று அவர் நம்புகிறார். “என் கணவரின் மரணத்துக்குப் பிறகு என் குழந்தைகளின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் சிரமப்பட்டதுபோல் என் மகன் சிரமப்பட மாட்டான் என்று நம்புகிறேன். அவன் விரும்பும்வரை படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.” அவரது சகோதரர் அவர் தமிழில் கூறுவதை மொழிபெயர்க்கிறார்.

அழகு, பாண்டி, மணி போன்றவர்கள் மும்பையில் தமது கனவுகளைத் தொலைத்து விட்டு புதிய கனவுகளையும், வாழ்க்கையையும் மீட்டெடுத்த லட்சக்கணக்கானோரில் சிலர்.   புலம் பெயர்ந்த பலரைப் போலவே “பாம்-பாம் காரர்களும்” இந்த நகரத்துக்குத் தமது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

(பிரார்த்தனா உப்பல் “ இரண்டாண்டு Teach for India fellowship programme ல் மும்பையில் குறைந்த வருமானமுடைய பிரிவுக் குழந்தைகளுக்காகப் பணி புரிந்து வருகிறார். மும்பையில் வெளியாகும் ஹார்மனி என்ற பத்திரிகைக்கும் எழுதி வருகிறார்.)

நன்றி: பாரி, https://ruralindiaonline.org/articles/the-men-with-the-‘pom-poms’/

தமிழில்: கி.ரா.சு.

Related Posts