பிற

“நான் அழுதேன், நான் எழுதினேன்” –

black town karuppar nagaram– உரையாடல்: இரா.சிந்தன்

கருப்பர் நகரம் நாவலைப் படித்து பல மாதங்களுக்கு பின் எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. கருப்பர் நகரம் நாவல் குறித்த பத்து கேள்விகளை தயாரித்தேன். ஆனால், எங்கள் உரையாடல் அதையும் தாண்டி நீண்டது. யாரோ அன்னியருடன் பேசுவது போலவே தோன்றவில்லை…

உங்கள் ‘கருப்பர் நகரம்’ புத்தகத்தை, வாசிக்கத் தொடங்கியதும் கீழே வைக்க முடியவில்லை. இத்தனை நாட்கள் வாசிக்காமல் விட்டோமே என்று தோன்றுகிறது. என்னைப்போன்ற வாசகர்கள் உங்களிடம் இப்படிப் பேசும்போது என்ன சொல்வீர்கள்?

நன்றி! மகிழ்ச்சி! என சொல்ல விருப்பமில்லை, ஆனால் எனக்கு என் உணர்வை சொல்ல பொருத்தமான வார்த்தைகள் இல்லாததால். அவற்றையே சொல்லுகிறேன்.
மக்களுக்கு பொதுமையான உண்மைகளை எடுத்துச் சொல்வதுதான் எழுத்தாளனின் வேலை என்று நினைக்கிறேன். நான் போதுமான வருமானத்தோடு வாழவில்லை. ஆனால் எனது பணி எழுதுவதுதான். இயற்கை என்னை எழுதுவதற்காக தேர்வு செய்திருக்கிறது. எப்படி சிற்பத்தின் வழியே உளியின் உழைப்பு வெளிப்படுகிறதோ, அப்படி ஒரு நல்ல படைப்பின் வழியே ஒரு எழுத்தாளன் வெளிப்படுகிறான்.

வாசிப்பு ஒரு தேடல். ஒரு நல்ல வாசகன்தான், எழுத்தாளனை விட அதிக அவதிக்கு உள்ளாகிறவன். அவன் தனக்கான படைப்பைத் தேடுகிறான். வாசிக்கிறவன் ஒரு நாள் எழுதுவான். அதுதான் அதன் பரிணாம வளர்ச்சி.

நீங்களும் அப்படித்தான் இந்த நாவலை எழுதினீர்களா?

சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், வாழ்க்கைப் போரட்டத்தில் 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் நான் எதுவும் படிக்கவும், எழுதவும் இல்லை. அது ஒரு செத்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் செயல்படுவதே என்னை உயிருடன் வைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். ‘அறுபடும் விலங்கு’ என ஒரு நாவல் எழுதினேன். அது 600 பக்கத்துக்கும் மேல் நீண்டது. எழுதி முடித்தபின் அதனை வெளியிட 9 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. வெளியான ஆண்டிலேயே, அந்த ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான தமுஎகச பரிசு கிடைத்தது. அதே காலகட்டத்தில், அடுத்த நாவலான கருப்பு விதைகள் என்.சி.பி.எச் இல் வெளியானது. இந்த உற்சாகத்தில்தான் நான் கருப்பர் நகரம் நாவலை எழுதினேன்.

கருப்பர் நகரம் என ஏன் பெயர் வைத்தீர்கள்?

உலகம் முழுவதும் ஆண்கள் ஆண்களாகவும், பெண்களாகவும் அரவாணிகளாக பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சாதிய மனிதனாக பிறக்கிறான். அதுதான் சிக்கல் இங்கே. அந்த துயரம் எனக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம். ஆனால், அந்த உழைப்பாளிகளுக்கு அது சென்று சேரவில்லை.
வெள்ளையர்களுக்கான நகரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. கருப்பரின் நகரம்தான் சென்னை. சென்னையின் குடிசைப்பகுதிகளில் ஒண்டிக்கொள்ளும் யாவருமே ஏதேனும் ஒருவகையில் விரட்டப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பார்க்க முடியும். ஏழை பார்ப்பனரைக் கூட கண்டுபிடித்துவிட முடியு. சென்னையின் சேரிகள் உழைப்பவர்களின் சேரிகள். இந்த நகரத்தில் இருந்து கருப்பர்களை, உழைப்பாளர்களை பிரித்துப் பார்ப்பதானது. இந்த நகரத்தின் ஆன்மாவையும், உயிரையும், மனசாட்சியையும் தூக்கி எரிவதாகும்.

சென்னைத் தமிழை, நாவலில் கையாள எளிதாக இருக்கிறதா?

கருப்பர் நகரம், சென்னையின் சேரி மக்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது. அதுவும் இந்தக் கதை 1970 களில் நடக்கிறது. நகரத்தில் இருந்துகொண்டு எழுதுகிறேனே தவிர – இந்திய சமூகத்தின் மக்களின் கதைகளை பிரதிபளிக்க வேண்டும் என்பதே என்னுடையை நோக்கம் – கலை என்கிற பெயரில் எந்த வித பாசாங்கும், சமரசமும் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. சென்னைத் தமிழில் அச்ச உணர்வும், அலட்சியமும் இருக்கிறது அதே சமயம் அதில் பண்பு இருக்கிறது. அந்தத் தமிழில் கேலியும், கேள்வியும் ஒரு சேர அமைந்திருக்கும். நம் சமூகத்தை கேள்வியின்றி சுரண்டுவதற்கு கொடுக்கப்படும் அனஸ்தீசியாதானே சாதியம். அந்த அமைப்பை கேலி செய்வதும், கேள்விக்கு உள்ளாக்குவதும் சென்னை தமிழில் அடங்கியுள்ளது.

‘திருவல்லிக்கேணி’ உச்சரிப்பு குறித்து ஒரு விவாதம் வருமே!

ஆம், சென்னையின் உழைப்பாளர்கள் கீழ்படிவார்கள், அல்லது முரடனாக இருப்பார்கள். கதை நடக்கும் 1970 களில், சூழல் இன்னு கடுமையானது. கீழ்ப்படிந்துகொண்டே இருக்கும்போது மனசாட்சி வெளிப்படும். ஒரு பூனை அடிபட்டால் சீறுமே அப்படி. கடினமான உழைப்புக்குப் பின், கூலி வாங்க வந்து நிற்கும்போது அவனது உச்சரிப்பை கேலி பேசுகிறார்கள். புறம் தள்ளப்பட்ட ஒரு மனிதனுக்கு உரையாடலுக்கான வெளி அப்படித்தான் அமைகிறது.

இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் நீங்கள் சந்தித்த மனிதர்கள்தானா?

என் எந்தவொரு நாவலும் முழுமையாக புனைவு அல்ல. நான் சந்தித்தவர்களின் பாதிப்பு இருக்கும் (பாளையமும், அதே போல முனியம்மாவும்). என் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்க்கும்போது ஏற்படும் வலியை அப்படியே பதிவு செய்கிறேன். 3 வயதில் இருந்து நான் இந்த நகரத்தைப் பார்த்து வருகிறேன். எல்லாம் மாற்றமடைகிறது. நான் வாழ்ந்த இடங்களைச் சென்று பார்க்கும்போது அவை மாறியிருக்கின்றன. ஒரு குடிசைப் பகுதி, இபோது வெறும் குப்பை மேடாக ஆகிவிட்டது, மற்றொரு பகுதி நடைபயிற்சி மைதானமாகிவிட்டது.

குற்றவாளியாக தண்டனை அனுபவித்து திரும்பும் ஒருத்தனை அவன் குடும்பமே நிராகரித்து விடுகிறது அல்லவா?…

ஒரு தலைமுறைக்குள் சென்னையில் வாழ்ந்த குடும்பங்கள் ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்திற்கு உள்ளாகின. குற்றவாளியான ஒருவன், அவன் தண்டனைக் காலம் முடிந்து திரும்போது, மாற்றத்திற்குள்ளான குடும்பங்கள் அவனை அணுகும் விதமே வேறு. அப்போது அவர் பிள்ளைகளை சந்திக்கும்போது அவர் நிராகரிக்கப்படுவார். அவன் ஆசையோடு நெருங்கும் குழந்தை ‘மர்டரர்’ என்றபடி விலகிச் செல்லும். அவனுக்கு அந்த வார்த்தை புரியாது.

செங்கேணியை ஏன் கொலை செய்ய வைத்தீர்கள்?

செங்கேணி என்ற மனிதனின் மன நிலைக்கு – அவனின் மன உணர்வுக்கு ஆராயிதான் எல்லாமே. அவளை அவன் காதலிக்கவில்லை, மாறாக தன் அம்மாவின் மறு உருவமாகவே பார்க்கிறான். அவனுக்கு ஆராயிதான் வாழ்க்கை. அவன் சிறு வயதில் அம்மாவுக்கு வந்த சிக்கலும், தன் ஆராயியிக்கு வந்த சிக்கலும் ஒன்றாக இருக்கிறது. தூக்கில் தொங்கும் தன் அம்மாவை பார்க்கிறான். ஆராயி மீதும் பாலியல் வக்கிர தாக்குதல் நடக்கும் என்பதை அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணுக்கு எதிரான ஆதிக்கத்தை அழிக்க அவன் மனம் துடிக்கிறது. மனம் பிரழ்ந்த நிலையில், அவன் முடிவெடுக்கிறான். நான் திட்டமிட்டு கதை சொல்லவில்லை. கதையின் கடைசிப் பகுதியை எழுதவே எனக்கு இரண்டு மாதங்கள் எடுத்தன. நான் அழுதேன், நான் எழுதினேன்.

ஆம் நானும் அழுதேன். உங்கள் கதை சொல்லும் பாணி, உண்மையை கண் முன் நிறுத்துகிறது …

நாவல் எழுத்துதான் என்னுடைய கலை வெளிப்பாடு. என் கலையின் வடிவத்தில் நான் சொல்ல நினைப்பதை வடிக்கிறேன். என் வலியை, அந்த வலியைப் போக்க என்ன வழி? என்ற தேடலை, அந்த வலியின் மூலத்தை நாவலில் வடிகிறேன். ஒரு நாவலுக்கு கலையும், அழகும் அவசியம்.

ஒடுக்கப்பட்டவர் பர்வையில் கதை சொல்வது ஒரு அரசியல்தானே?

நான் எழுதும் கதையை என்னுடைய பார்வையில் பார்க்கவில்லை. அதனை நாவலின் தொடக்கத்திலேயே சொல்வேன். அதில் ஒரு ஆங்கிலோ இந்தியனும் பேசுவார். செங்கேணியும் பேசுவார். வேட்டையாடப்பட்ட எனக்கு ஒரு வலி இருக்கும், வேட்டையாடுபவனுக்கும் ஒரு வலி இருக்குமல்லவா?. என் கதைகளில் இலக்கும் இருக்கும் வலியும் இருக்கும். நிகழ்காலத்தில் நடைபோடுவதற்கு, எதிர்காலத்தின் இலக்கும் முக்கியம், கடந்தகாலத்தின் வலியும் முக்கியம்.

தாய் நாவல் போல, ஒரு இலக்கியம் எப்போது சாத்தியமாகும்?

எனக்கு சோர்வாகும்போதெல்லாம் மார்க்சிம் கார்க்கியின் ஜிப்சி (நாடோடிகள்) என்ற கதையை படிபேன். அதில் கலையின் மேன்மை இருக்கிறது. அந்த ஹிப்பி புல்வெளியில் உலவ முடிகிறது. 1898 ஆம் ஆண்டு, அந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் புரட்சிகர எழுச்சிகள் நடக்கவில்லை. அதே மாக்சிம் கார்க்கி , தாய் நாவலை எழுதும்போது நிலைமை மாறியிருந்தது. அந்த சூழலில்தான் தாய் போன்ற காவியங்கள் எழ முடியும்.

Related Posts