அரசியல்

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

எனதருமை இந்தியர்களே..

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் உங்கள் பங்களிப்பைச் செலுத்தினீர்கள் என்று பத்திரிகைகள் எல்லாம் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கின்றன.

நான் ஓரமாய் ஒதுங்கி நின்று என் பெயரில் நடக்கும் கூத்துக்களையும், என் பெயரால் நடக்கும் சம்பவங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை வலுப்படுத்துவதற்காகவும் மகிமைப்படுத்துவதற்காகவும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த இரண்டு மாத காலத்திற்குள் நடந்த ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அது ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி, இடம் ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம். ஊரின் பெயர் பத்ரேதி, தொழிற்சாலையின் பெயர் ஸ்ரீராம் பிஸ்டன் அன்ட் ரிங்ஸ் லிமிடெட். அங்கு வேலை செய்பவர்கள் 1856 பேர். இவர்களில் 560 பேர் மட்டுமே நிர்வாகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களெல்லாம் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தொழிற்சாலைக்குள் செல்வதற்கு ஒரு பாஸ் இருக்கும். ஒப்பந்தத் தொழிலாளி என்பதற்கான ஒப்பந்தமும் கூட வாய் மொழியானது. அதிகபட்சம் மூன்று வருடங்கள் இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கலாம். நிர்வாகம் இத்தொழிலாளர்களில் தங்கள் மனமுவந்து நடந்து கொண்டவர்கள் என்று கருதுகிறவர்களை மேலும் ஓராண்டு வைத்துக் கொள்ளும். அதற்கு மேல் நிச்சயமாய் நீட்டிப்பு கிடையாது. இவர்களுக்கு இஎஸ்ஐ கிடையாது. பிஎப் கிடையாது. சம்பளமும் 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடையாது. இதையெல்லாம் கேட்பதற்கு சங்கமும் கிடையாது.

முதலில் கேள்வி கேட்பதற்கு ஒரு சங்கம் உருவாக்க வேண்டுமென்று இவர்கள் முடிவு செய்தார்கள். இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். தொழிலாளர்களின் பொதுக்குழுவைக் கூட்டினார்கள். சங்கம் அமைக்கிறோம் என்று தீர்மானமும் போட்டார்கள். சங்கத்தை பதிவு செய்யும் அதிகாரி தொழிலாளர் துறை துணை ஆணையாளர். பதிவு செய்ய மறுத்துவிட்டார். காரணம் சொன்னார், கையெழுத்தெல்லாம் உண்மையானதுதானா என்று சரிபார்க்க முடியவில்லை என்று இப்போது சங்கம் வைக்க முடியாமல் போனது. இதை எதிர்த்துதான் ஏப்ரல் 15 முதல் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஏப்ரல் 26 மாலை மணி 4.30, போராடிக் கொண்டிருந்தவர்களை போலீஸ்காரர்கள் லத்தியால் அடித்தார்கள். 1200 தொழிலாளர்களைச் சுற்றிலும் 2000 போலீஸ்காரர்கள், நிர்வாகத்தின் 200 அடியாட்கள். போலீஸ் லத்தியால் அடித்தது, குண்டர்கள் கத்தியால் குத்தினார்கள். 150 பேருக்கு காயம். 76 பேர் பிவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். 4 பேருக்கு கடுமையான காயம். அவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். தொழிலாளிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்தவர்களுமான 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். கொலை முயற்சி, கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்டு 6 கடுமையான பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குகள் இருக்கிறது.

அந்த ஏப்ரல் 26 என் மனதில் இன்னொரு காயம் மட்டுமே. இப்படி நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கிறது.

இங்கே தொழிலாளிக்கு, அங்கே பெண்ணுக்கு, இன்னொரு இடத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு, இன்னொரு இடத்தில் பழங்குடியினத்தவருக்கு, இன்னுமொரு இடத்தில் விவசாயக் கூலிக்கு, இன்னுமொரு இடத்தில் மதச் சிறுபான்மையினருக்கு. பொதுவாக பேசவும் போராடவும் வாய்ப்பும் துணிவும் தலைமையும் இல்லாதவர்களுக்கு எப்போதும் இது நடந்து கொண்டே இருக்கிறது.

ஒரு காலத்தில் என் பெயரால் நீங்கள் எல்லாம் கனவு கண்டு திரிந்தீர்கள். தொழிலாளர்களுக்கு  நிர்வாகத்தில் பங்கு கொடுப்பது பற்றி பெருமையாய் பேசிக் கொண்டதெல்லாம் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஆனால், இப்போது ஹூண்டாயில், மாருதி சுசூகியில், முஞ்சல் கிரியு ஆட்டோமொபைல்சில் என்று எல்லா இடங்களிலும் சங்கம் வைப்பதற்காக தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஹூண்டாயில் வளர்ச்சியின் பெயரால் அதைத் தடுப்பதாக கூறி அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களை கைவிலங்கு போட்டு இழுத்துப்போனார்கள். மாருதி சுசூகி மானேசரில் தொழிற்சங்கம் வைக்க முனைந்ததற்காக 146 பேர் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 ஆம் தேதியிலிருந்து சிறைக்குள் இருக்கிறார்கள். ஸ்ரீராம் பிஸ்டனில் தொழிற்சங்கம் வைக்க முயன்றததற்காக 26 பேர் இப்போதும் சிறைக்குள் இருக்கிறார்கள். எனக்கு சற்று மரியாதை கொடுக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. தொழிற்சங்கம் வைக்க முயற்சித்தார்கள் என்று இவர்கள் என்மேல் எல்லாம் குற்றம் சாட்டப்படவில்லை. மாறாக கலவரம் செய்ததாக, கொலை செய்ததாக, கொலை முயற்சி செய்ததாக, கொலை செய்ய சதி செய்ததாக இவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

ஒரு வேளை சங்கம் வைக்க முயற்சிப்பது, மேற்கண்ட குற்றங்களுக்கெல்லாம் இணையானதோ? எனக்குத் தெரியவில்லை. ஸ்ரீராம் பிஸ்டன் விசயத்தில் கைது செய்யப்பட்ட 26 பேரில் தொழிலாளர்கள் மட்டுமில்லை. அவர்களுக்கு ஆதரவளித்தத ஆறுதல் வார்த்தை கூறிய பல பேரும் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தொழிற்சங்கம் வைப்பதும் குற்றம். தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக பேசுவதும் குற்றம். இத்தனையும் என் பெயரால் நடக்கிறது. ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி 147 பேருக்கு 2 ஆண்டு காலமாக பிணையில் வெளியே வர அனுமதி மறுக்கப்படுகிறது. இதுவும் என் பெயரால் நடக்கிறது.

நிரந்தரப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளிகளை அமர்த்தவே முடியாது என்பதுதான் என்னுடைய நியதி. ஆனால், வளர்ச்சியை முன்னிட்டு அதை மறுப்பதாய் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுகிறார்கள். அப்பாவியாய் பல படித்தவர்களும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தனையும் என் பெயராலேயே அரங்கேறுகிறது.

எல்லோரும் சமம் என்பதாக என் பெயரால் பிரகடனப்படுத்துகிறீர்கள். டீ விற்பவர் கூட பிரதமர் ஆக முடியும் என்பதாக என் மகிமையை சொல்லிச் சொல்லிச் மாய்கிறீர்கள். யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லுகிற அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு நான் வழங்கியதாகச் சொல்லி மார்தட்டி கொள்கிறீர்கள். ஆனால், ஏப்ரல் 26 ஸ்ரீராம் பிஸ்டனிலும், 2012 இல் மாருதியிலும் நடந்தது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களால் நான் குற்றுயிரும் குலையுயிருமாய் அலைகிறேன்.

நோக்கியா கைபேசி வழியாக பேசுகிறீர்கள். வெளிநாட்டிலிருந்து பேசினாலும் அது உங்களுக்கு கேட்கிறது. ஆனால், ஸ்ரீபெரம்புதூர் நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிவோரின் அவலக்குரல் மட்டும் உங்களுக்கு கேட்கவில்லை. ஆனால், நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அத்தனையும் துயரம் தோய்ந்த குரல்கள். ஒன்றே ஒன்றை மட்டும் எனக்காக கேளுங்கள்.
“என் பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பெண்கள், நான்தான் மூத்தவள். என்ஜினியரிங் படிக்க ஆசை. அப்போதுதான் 2009 ஆசை காட்டியது நோக்கியா. +2 படிக்கும் போது மாதச் சம்பளம் 15,000 ரூபாய் என்றது. வேலைக்குப் போனேன். முதலில் என் தங்கையின் திருமணத்தை கடன் வாங்கி நடத்தினேன். என் திருமணத்திற்குப் பின் தங்கையின் திருமணத்தை நடத்த செலவழிக்கும் அளவிற்கான சுதந்திரம் புகுந்த வீடுகளில் இருக்கிறதா என்ன? நோய்வாய்ப்பட்ட தந்தையின் சிகிச்சைக்கு கடன் வாங்கினேன். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நோக்கியா நிர்வாகம் எங்களை – என்னைப் போன்ற 6000 பேரை டைவர்ஸ் செய்துவிட்டது. என் திருமணம் நடக்குமா?”

இப்படி கேட்டுக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். 6000 அழுகுரலில் ஒரு சிறு குரல் இது. இதைக் கேட்கும்போதே என்னையும் இந்தியா மதிக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு டீ விற்பவரோ பிச்சைக்காரரோ பிரதமராவதிலோ, குடியரசுத் தலைவராவதிலோ நான் மகிமையடைந்து விட மாட்டேன். அதில் எனக்கு பெருமையும் கிடையாது, என் நோக்கமும் அது கிடையாது. ஆனால், ஒவ்வொரு முறையும் என்னுடைய நோக்கமெனவும் எனக்கு பெருமை சேர்ப்பதெனவும் யாரோ கட்டிவிடும் புரளிகள் இந்தியா முழுவதையும் பற்றி கொள்கிறது. ஆனால், இப்படி புரளி கிளப்புவோர்களும் அதை அமல்படுத்துபவர்களும் அம்புகளே தவிர, எய்தவர்கள் அல்ல. அவ்வபோது அம்புகளை நீங்கள் பழிதீர்த்துக் கொள்கிறீர்கள். ஆனால், எய்தவர்கள் மட்டும் எப்போதும் நிம்மதியாய் இருக்கிறார்கள்.

இப்போதும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மோடிகளும், மன்மோகன்களும் முதலாவதுமல்ல, அவர்களோடு முடிந்துவிடப் போவதுமல்ல. ஏனெனில், இவர்கள் ஆடுபவர்கள் மட்டுமே. ஆட்டுவிப்பவர்கள் வேறிடத்தில் இருக்கிறார்கள். மோடியா? மன்மோகன் சிங்கா? என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். மதச்சார்பின்மை அவர்களுக்கு சேவகம் செய்ய முடியுமென்றால் அவர்கள் மதச்சார்பின்மையை தூக்கிப்பிடிப்பார்கள். மதவெறி இன்னும் சிறப்பான சேவை செய்யுமென்றால், அப்போது மதவெறிதான் உண்மையான நாகரீகம் என்று அதை அலங்கரித்து வைப்பார்கள். நான்தான் அவர்களின் லாபம் கொழுக்க உதவுவேன் என்றால் என்னை பூ வைத்து அலங்கரித்து புகழ் மாலை சூட்டுவார்கள். சர்வாதிகாரம் தான் அதற்குச் சரியான சேவகன் என்றால் அவர்கள் மிகச்சிறந்த சர்வாதிகாரியையே கொண்டாடுவார்கள்.

மதவெறியும், சர்வாதிகாரமும் இணைந்த ஒன்று அவர்களின் வேட்டைக்கு தங்குதடையற்ற வழிகளை உருவாக்கித்தரும் என்றால் அவர்கள் அதன் மீதே காதல் கொள்வார்கள். அந்தக் காதலே மோடி வழியாக இப்போது அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

எனவே, மோடிகளும், மன்மோகன்களும் அவர்களின் அடியாட்கள் மட்டுமே. அடியாட்களைக் குறிவைத்து நீங்கள் போராடினால் அவ்வபோது நீங்கள் சந்தோசப்பட்டுக் கொள்ள முடியும். சிறிது காலம் ஆவடி சோசலிசம் என்று பெருமைப்பட்டுக் கொண்டீர்கள். பிறகு வறுமையே வெளியேறு என்று சந்ததோசப்பட்டுக் கொண்டீர்கள். வேலையின்மையே வெறியேறு என்ற வேலைக்காரனை வெகுவாக புகழ்ந்தீர்கள். பிறகு வந்த 21 ஆம் நூற்றாண்டுக்கான அழைப்பு உங்களை கனவிலே மிதக்க வைத்தது. அதன் பிறகு வந்த இந்தியா ஒளிர்கிறது என்ற வெறிக் கூச்சலில் மயங்கிக் கிடந்தீர்கள். இப்போதைய அவர்களின் தாரக மந்திரமான வளர்ச்சி என்பதில் மெய்மறந்து நிற்கிறீர்கள்.

மோடியோ, மதச்சார்பின்மையோ, உண்மையான மீட்பர்களும் அல்ல, சாத்தான்களும் அல்ல. இவையெல்லாம் துயரச் சூறாவளியின் அடையாளங்கள் மட்டுமே. புராதணக் கதைகளில் அரக்கனின் உயிர்நாடி ஏழு கடலுக்கு அப்பால், ஏழு மலைகளுக்கு அப்பால் ஏதோ ஒரு கிளியின், ஏதோ ஒரு உறுப்பில் ஒளிந்திருக்குமென்று என்று சொல்வார்கள். உண்மையான எதிரி முதலாளித்துவ பொருளாதார அமைப்பு என்னும் உண்மைக்குள் அடங்கிக் கிடக்கிறது. மோடிகளையும் நோக்கியாக்களையும் எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தினாலும் எத்தனை முறை சிரச்சேதம் செய்தாலும் எத்தனை முறை கிழித்துப் போட்டாலும் மீண்டும் ஒட்டிக் கொண்டு முன்னிலும் ஆவேசமாய் அது அழித்தொழித்தலைத் தொடரும்.

எனவே, முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்கிற அந்த உயிர்நாடியை தகர்ப்பது என்பதே உண்மையான மீட்பாக, உண்மையான சாத்தானை ஒழிப்பதாக அமையும். இதையே, இதை மட்டுமே உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.

டீ விற்பவர் பிரதமராவதில் எனது மகிமை அடங்கியிருக்கவில்லை. அது அவர்களிள் பிரச்சாரம். ஒவ்வொரு டீ விற்பவனும் வாழ்க்கைக்கு அல்லாடாத ஒரு உலகத்தைப் படைப்பது மட்டுமே என்னை மகிமைப்படுத்தவதும், போற்றுவதும், பெருமைப்படுத்துவதும் ஆகும். அந்தக் கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பாத்துக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு
உங்கள் நலனில் என்னலனும் அடங்கியுள்ள
ஜனநாயகம்

Democracy

(ஜனநாயகம்)

Related Posts