அரசியல்

நான் ஒரு உந்துதள்ளி (I am a Troll)

இப்புத்தகத்தை எழுதியவர் சுவாதி என்ற பெண் பத்திரிக்கையாளர். இப்பத்திரிக்கையாளர் வடமாநிலங்களில் மிகவும் அறியப்பட்டவர் போலும். இவர் தொலைக்காட்சிகளில் அடிக்கடித் தோன்றுவார் போலும். இருபதாண்டு அனுபவம் என்கிறார். வயது 45ஐ கடந்திருக்கும். இவரை விபச்சாரி என்று வர்ணித்தும், அவரின் விலை என்ன என்று கேட்டும், கடந்த இரவில் உன்னுடன் ஈடுபட்ட கலவி இன்பமாக இருந்தது என்றும். உன்னுடன் ஈடுபட்ட மலத்துவாரக் கலவி (Annal Sex) இன்பமாக இருந்தது என்றும் அடிக்கடி கெக்கலிச் செய்திகள் (Tweet) டிவிட்டர் பக்கங்களில் வருவதை ஒட்டி டெல்லி வசந்த் விகார் காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு புகார் கொடுத்திருக்கிறார். இப்படி கெக்கலிச் செய்திகளை வெளியிடுவது @lutyensinsider  என்ற டிவிட்டர் கையாடு (Handle – கையாடு அல்லது கணக்கு என்பது பொதுவாக பயன்படுத்துவர் தன்னை அடையாளப்படுத்த தெரிவு செய்யும் சொல். இச்சொல் @ சின்னத்திற்குப் பிறகு பதிவாகும். பெயர்கள் என்று கூறலாம். பலநேரங்களில் வாசிக்க முடியாத சங்கேத வரிகளைக் கொண்டிருப்பதால் இவற்றை கையாடு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்) இந்த அனாமதேய டிவிட்டர் கையாட்டை பின்தொடருபவர்கள் 40000 பேர். அதுமட்டுமல்ல இந்த அனாமதேயப் பேர்வழியின் டிவிட்டர் கணக்கை டிவிட்டர் நிறுவனம் முடக்கியதோடல்லாமல் இவரின் இணையவரையரை முகவரியையும் (IP address) அதில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியையும் டெல்லி காவல்துறைக்கு கொடுத்திருக்கிறது. இதுவரை இந்த அனாமதேயம் கைது செய்யப்படவில்லை காவல்துறையால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி ஆறுமாதங்களாக கெக்கலிச் செய்திகள் வருவதை ஒட்டி டிவிட்டர் உலகத்தை புலனாய்வு செய்வது என்று முடிவெடுத்திருக்கிறர். அவரது புலனாய்வு அனுபவமே இப்புத்தகம்.

 

நூற்றி எழுபத்தி மூன்று பக்கங்கள் கொண்ட இப்ப்புத்தகத்தில் ஐந்து பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் பிரதமர் மோடி எத்தனை டிவிட்டர் கையாடுகளை பின்தொடர்கிறார் என்றும் அவர்களின் யோக்யதை என்ன என்பதையும் சில சாம்பிள்களைக் கொண்டு விளக்குகிறது,. இவர்களின் கெக்கலிச் செய்திகள் சுவாதிக்கு வரும் கெக்கலிச் செய்திகளின் வகையினத்தைச் சார்ந்தவை. பெண் பத்திரிக்கையாளர்கள், பாஜக அல்லாத பெண் அரசியல்வாதிகள், குறிப்பாக சோனியாகாந்தி ஆகியோர் இவர்களின் தாக்குதல் இலக்கு. அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் வேசிகள் என்றும் ஏசும் கெக்கலிச் செய்திகளும் கீழ்த்தரமான பாலியல் வக்கிரச் சொல்லாடல்களுடன் ஏசும் கெக்கலிச் செய்திகளுமே அதிகம் உள்ளவை. வரைகலை மென்பொருள் ஆயுதங்களைக் (Graphic Tools) கொண்டு திருத்தப்பட்ட படங்கள், தில்லுமுல்லு செய்த வீடியோக்கள் ஆகியவையும் உண்டு. இத்துடன் வதந்திகளை பரப்பும் செய்திகளும் பொய்யுரைகளும் ஏராளம். இவர்கள் கெக்கலிச் செய்திகளில் இடம் பெறும் அடையாளக் குறிச்சொல் (Hashtag – # என்ற சின்னத்தை ஒட்டி எழுதப்படும்சொல் அடையாளக் குறிச்சொல்லாக மாறிவிடும்) அவற்றின் விருப்பப் போக்கு அளவு (Trend) ஆகிய தகவல்களும் உள்ளன. இவர்கள் எல்லாரும் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப்ப் பிரிவு நடத்தும் சமூகஊடகப் பிரிவின் உறுப்பினர்கள். இவர்களின் அப்பட்டமான பொய்கள் நிரூபிக்கப்பட்டு பிரச்சனையானால் இவர்கள் எங்கள் உறுப்பினர் இல்லை என்று அதன் தலைவர் அரவிந்த் குப்தாவால் கூறப்படும். வெவ்வேறு நேரங்களில் இவர்களை அம்பலப்படுத்தி வெளியிடப்படும் கெக்கலிச் செய்திகளை வைத்து ஒரு சமயம் “இவர் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார்“ என்ற கெக்கலிச் செய்தியும் இருக்கும் இன்னொரு சமயம் அதாவது தப்ப முடியாதபடி மாட்டிக் கொண்ட பிறகு இவருக்கு எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் இருக்கும்.  சுவாதியின் ஆய்வில் இவையெல்லாம் வெளி வந்தவை.43 பக்கங்கள் வரை இது பற்றிய விபரங்கள் ஏராளமாக உள்ளன. விபரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படித்துக கொள்ளுங்கள்.

 

அடுத்த முப்பது பக்கங்களுக்கு இரண்டாவது பிரிவு விரிகிறது. பாஜக தொடர்பு என்ற இப்பிரிவில் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும், அதற்குள் இயங்கும் சமூகஊடக துணைப்பிரிவும் தோன்றிய வரலாறு உள்ளது. அத்துடன் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய பெண் தொண்டர் கோஸ்லா என்பவரின் அனுபவமும் உள்ளது. இந்தப் பகுதியைத்தான் பிரதானப்படுத்தி இப்புத்தகத்தைப் பற்றிய மதிப்பீட்டையும் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன. எனவே நான் அதற்குள் செல்லவில்லை. போதை உச்சிக்கு ஏறிவிட்டால் தவறிழைப்பது தடுக்கமுடியாத்து என்பதை அனுபவ வாயிலாக கோஸ்லா என்ற பஞ்சாப் பெண் புரிந்து கொண்டது விளக்கப்படுகிறது. நிர்வாகவியலில் பட்ட மேற்படிப்பு படித்த இவர், பொறியியல் பட்டதாரியான கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது மகன் அமெரிக்க பண்பாட்டிற்கு இரையாகக் கூடாது என்று இந்தியா திரும்பி அமெரிக்க வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிறுதொழிலை டெல்லியில் நடத்தி வந்தவர் கோஸ்லா. இந்தியப் பண்பாட்டின் மேல் உள்ள பற்று காதலாகி, அது மோகமாகி, போதையேறி மோடியிடம் சேர்கிறார் இவர். சமூக ஊடகப்பிரிவிற்காக திரட்டப்பட்ட தொண்டர்களில் இவரும் ஒருவர். இவர் சம்பளம் வாங்காமல் தன்னார்வலராக செயல்பட ஒப்புக் கொண்டவர். மோடியின் நேரடி அழைப்பின் பேரில் இக்குழுவில் இணைந்தவர். அரவிந்த குப்தாவிடமிருந்து வரும் கட்டளைகளை தினமும் நிறைவேற்றுவது இவரது பொறுப்பு. சமூக ஊடகத் துணைப்பிரிவு என்பது ஏதோ ஒரு அரசியல் இயக்கத்தில் அதன் கொள்கைகள்பால் ஈர்க்கப்பட்டு வந்த தொண்டர்கள் ஜனநாயக ரீதியாக இயங்கும் அமைப்பு அல்ல என்பது இவரின் அனுபவம் காட்டுகிறது. கார்ப்பரேட் பாணி Command and Control Structure உள்ள அமைப்பு இது. அரவிந்த குப்தாவே எல்லாவற்றையும் தீர்மானிப்பவர். இவருக்கும் மோடிக்கும் தினமும் இரவு 10-11 மணிக்கு Conference Call உண்டு. இவர்கள் உரையாடல் முடிந்ததும் அடுத்த நாளுக்கான கெக்கலிச் செய்திகள் உற்பத்தி செய்யப்படும். இவர் தீர்மானிப்பதை மற்றவர்கள் செயல்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ராணுவச் செயல்பாடுபோல் செயல்படும் அமைப்பு இது. இவரை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது காரணம் இவர் மோடியிடம் நேரடியாக தொடர்பு உள்ளவர். இவர்கள் பரப்பும் பொய்யுரைகளை கொண்டு செல்லும் ஊடகமாக ஒரு இயந்திரத்தனமான செயல்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டவர் கோஸ்லா. இப்படை வீரர்களை ஆங்கிலத்தில் ட்ரால் என்று அழைக்கிறார் சுவாதி. உந்துதள்ளி என்ற வார்த்தை  பொருத்தமான தமிழ் வார்த்தையாக நான் கருதுகிறேன். இதன் வன்மங்களும், அசிங்கங்களும் உச்சகட்டத்தை அடைந்தவுடன் உந்துதள்ளிப் பட்டாளத்திலிருந்து வெளியேறுகிறார். பெண் பத்திரிக்கையாளர்களை வசைபாட Prestitute போன்ற வார்த்தைகள் அரவிந்த் குப்தாவிடமிருந்து இவர் கற்றுக் கொண்ட வார்த்தைகள். உந்துதள்ளிப் பட்டாளத்தின் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளான நடிகர் அமீர்கானின் கதையும் இதில் உள்ளது. இப்படி ஒரு கடுமையான பாடத்தை கற்றுக் கொள்ள இவர் கொடுத்த விலையானது இவரது தொழில் மந்தப்பட்டு போவதும் குடும்ப வாழ்வில் பிணக்குகள் ஏற்பட்டதுமே. நாணயமான பெண் என்பதால் சுயபரிசோதனை செய்து நரகத்திலிருந்து மீண்டு விட்டார். அத்துடன் பிராயச்சித்தமாக இவர்களை அம்பலப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பும் தந்திருக்கிறார்

 

அடுத்த பத்து பக்கங்களுக்கு “நான் ஒரு உந்துதள்ளி“ என்ற தலைப்பிடப்பட்ட மூன்றாவது பிரிவு விரிகிறது. உந்துதள்ளிகளின் குணாம்சங்களைப் பற்றி பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் 11-06-2015 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் கூறுகிறார். மோடியின் பக்தர்கள் பெரும்பாலும் ஆண்கள், தொடர்பாடலில் குறைபாடு உள்ளவர்கள், குறிப்பாக ஆங்கிலத்தில் தொடர்பாடுவதில் சிரமமுள்ளவர்களாக இருப்பதால் தாழ்வுமனப்பான்மை வியாதிக்குள் சிக்கிக் கொண்டவர்கள். பொதுவாக இவர்கள் பெண்களிடம் பேசுவதில் சிக்கல் இருப்பதால் இவர்கள் விரும்பும் பெண்களிடம் இவர்களால் உரையாட முடிவதில்லை. இதனால் பாலியல் விரக்தி என்ற வியாதிக்கும் ஆட்பட்டவர்கள். இது எப்படி கணகச்சித்தமாக பொருந்திப்போகிறது என்பதையும் அத்துடன் அவர் குறிப்பிடாமல் விட்ட கூடுதல் குணாம்சங்களையும் மூன்று உந்து தள்ளிகளிடம் நேர்காணல் செய்து விளக்குகிறார். இந்த மூன்று உந்து தள்ளிகளின் நேர்காணலும் இப்பிரிவில் உள்ளது. இதில்தான் உந்து தள்ளிகளின் வருமானம் பற்றிப் பேசுகிறது. உந்து தள்ளிகளில் எந்த சம்பளமும் பெறாமல் செயல்படும் மோடி பக்தப் பிரிவும் உண்டு. சம்பளம் வாங்கிக் கொண்டு செயல்படும் உந்து தள்ளிகளும் உண்டு. கார்ப்பரேட் நிறுவனங்களில் Closed Salary System  இருப்பது போல் இங்கும் ரகசிய சம்பள முறையே. இதில் அவுட்சோர்சிங்கும் உண்டு. அதாவது பத்து முதல் ஐம்பது உந்து தள்ளிகளை ஏற்பாடு செய்து ஒரு தனி நிறுவனமாக பேரம் பேசி தொழில் செய்யலாம்.

 

அடுத்த இருபது பக்கங்களில் இன்னும் பிற போக்குகள் என்ற தலைப்பில் நான்காவது பிரிவு விரிகிறது. உந்துதள்ளிகளுக்கு Performance Based  Reward என்பதால் உந்துதள்ளிகளின் Performance அளவிட உற்பத்தி செய்யப்படும் கெக்கலிச் செய்திகளில் அடையாள குறிச்சொல் இருக்கும் (Hash Tag).  இந்நிறுவனத்தின் நிதிப்பிரிவினர் ஒவ்வொரு உந்துதள்ளிக்கும் எத்தனை பின்தொடர்வுக்ள் இருக்கின்றன என்றும் அந்த அடையாளக் குறிச்சொல் உடைய கெக்கலிச் செய்தியை உந்தித் தள்ளியிருக்கிறாரா என்று கணக்கிட்டு பணம் கொடுக்கப்படும். அத்துடன் இன்னொரு சுவாரஸியமான செய்தியும் உண்டு. உற்பத்தி செய்யப்பட்ட கெக்கலிச் செய்தியை உந்து தள்ளிகளுக்கு எங்கிருந்து போகிறது என்று ஆய்வு செய்தால் அவையனைத்தும் தாய்லாந்திலிருந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தாய்லாந்தில் ஒரு நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலமாக உந்தித் தள்ளுவதோ அல்லது தாய்லாந்தில் புறவாசல் (Gateway) உள்ள சேவைக் கணிணியை இணையத்தில் இணைத்து அதன் முலம் மாயத்தனியார் பிணையம் (Virtual Private Network) மூலமாக உந்தித் தள்ளும் உத்தியைக் கையாண்டால் அது இந்தியாவிலிருந்து செய்ய முடியும்.  உந்துதள்ளிப் படையைக் கொண்டு பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சிகள் அதிருபதியாளர்கள் (உட்கட்சிக்குள் இருப்பவர்கள் உட்பட) உண்மை பேசும் விஞ்ஞானிகள் அறிவுஜீவிகள் ஆகியோரை மட்டும் மிரட்டுவதில்லை. வியாபார நிறுவனங்களையும் மிரட்டுகிறார்கள். உதாரணமாக மைந்த்ரா என்றொரு இணையவெளி விற்பனை நிறுவனம் கிருஷ்ணபகவான் துகிலுரியும் காட்சியில் மைந்த்தாரா முலமாக சேலைகளை ஆர்டர் செய்வதுபோல் வெளியிட்ட விளம்பரத்தை சாக்காக வைத்து இந்நிறுனத்தை மிரட்டி பணிய வைத்திருக்கிறார்கள். இந்த உந்துதள்ளிகளில் சிலர் அரசுப் பணிகளில் இருப்பதால் அரசு கொடுக்கும் மின்னணு நிர்வாக மாற்றத்திற்கு அவ்வ்வப்போது கொடுக்கும் ஒப்பந்தங்கள் மீது தாக்குதல் நடத்தி இவர்கள் விரும்பும் ஆட்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் வரை ஓய்வதில்லை. அத்துடன் அரவிந்த குப்தாவால் உற்பத்தி செய்யப்பட்ட கெக்கலிச் செய்தி ஒன்றை உந்தித் தள்ள 40 ரூபாய் கிடைக்கிறது என்பதும் இந்தப்பிரிவில் உண்டு. அரசு வெளியிடும் கெகலிச் செய்திகளை இவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் அதில் எப்படிப்பட்ட அபத்தங்கள் உள்ளன என்பதையும் எழுதியிருக்கிறார். அபத்தங்களை தெரிந்துகொள்ள விரும்புவர்கள் புத்தகத்தை படிக்க வேண்டும்.

 

ஐந்தாவது பிரிவு 12 பக்களுக்கு உள்ளது. இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொடர்பைப் பற்றி பேசுகிறது. குறிப்பாக ராம் மாதவின் நேர்காணல் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் எப்படி சாகா நடத்துகிறது என்பதையும் அது மற்ற சாகாக்க்ளுடன் எந்தவித்த்தில் வித்தியாசமானது என்பதையும் அவர் விளக்குகிறார். Prestitute போன்ற வார்த்தைகளை வைத்து ஏசுவது சரியல்ல என்பதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். தான் பயன்படுத்தியது கிடையாது என்றும் இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறார். தகவல் தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தங்கள் ஸ்தபானத்தை வளர்ப்பதற்கு முயலுவதாகவும் கூறுகிறார்.

 

இறுதியாக அவருடைய முடிவுரையும் வருகிறது. அத்துடன் இரண்டு அனுபந்தங்களும் இப்புத்தகத்தில் உண்டு. மொத்தத்தில் எனக்குத் தெரியாத இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை இப்புத்தகத்தை வாசித்த்தன் மூலம் அறிந்து கொண்டேன். இப்படி ஒரு திட்டமிட்ட ஒரு உந்துதள்ளிப் பட்டாளத்தை பெருமளவில் திரட்டி அதற்கு தீனிபோட்டு பராமரிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. ஊழல் செய்யாமல் இதற்கான பணத்தை எப்படித் திரட்ட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது

Related Posts