அரசியல் சமூகம்

சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மனிதநேயமே நாங்கள் – தோழர்கள்” – தோழர். அசோக்.

“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு பேசிப்பேசியே உங்கள மாதிரி ஆளுங்கதான் ஒழிஞ்சிபோன ஜாதிய திரும்பத் திரும்ப கொண்டாந்து பிரச்சனைய வளக்குறீங்க”
என்று சொல்பவரா நீங்கள்?

அப்படியென்றால் நீங்கள் யார் என்று நான் சொல்லட்டுமா?

ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்மா-அப்பாவிற்குப் பிறந்து, அந்த ஒரே ஜாதியைச் சேர்ந்த முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்தை அனுபவித்துக்கொண்டு, பூர்வீகவீடு என்னும் பெயரில் இருக்கும் அந்த ஒரே ஜாதி முன்னோர்கள் கட்டியவீட்டில் வாழ்ந்து, அந்த ஒரே ஜாதியினர் சுற்றிலும் அதிமாக வாழும் பகுதியில் வளர்ந்து, அந்த ஒரே ஜாதிப் பிள்ளைகளுடனேயே பெரும்பாலும் ஓடியாடி விளையாடி, அந்த ஒரேஜாதிப் பிள்ளைகள் அதிகமாகப் படிக்கும் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலுமே படித்து, அந்த ஒரேஜாதி சொந்தக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீட்டு விசேசங்களுக்கு மட்டுமே போய்வந்து, அந்த ஒரேஜாதியிலேயே அம்மா-அப்பா பார்க்கும் ஜோடியையே கல்யாணம் செய்து, இறுதியில் இறந்தும்கூட அந்த ஒரே சாதி பிணங்களுக்கும் எலும்புக்கூடுகளுக்கும் நடுவில் போய் படுத்துக்கொள்ளும் நபராகத்தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்…

ஒடுக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக வாழும் ஒரு பகுதியில் பிறந்து, அந்த ஊருக்கு மிகமிக அடிப்படை வசதிகளான ரோடும் லைட்டும் தண்ணீரும் கூட வராமலும், அதேவேளையில் ஆதிக்க சாதிகள் வாழும் அதன் அக்கம்பக்கத்து ஊர்களில் எல்லாம் அதே அடிப்படை வசதிகள் எளிதில் கிடைத்தும், ஒடுக்கப்பட்ட சாதியினர் வாழும் ஊரிலோ பூர்வீகவீடு இல்லாமலோ அல்லது இருந்தும் ஓட்டை உடைசல்களாகவோ ஓலைக்குடிசைகளாகவோ இருந்தும், விவசாய நிலங்களோ சொத்தோ சுகமோ என வாழ்வதற்குத் தேவையான எதுவுமே இல்லாமல் காலங்காலமாக அக்கம்பக்கத்து ஆதிக்க சாதியினரின் தொழில்களிலும் வயல்களிலும் வீடுகளிலுமே வேலைசெய்யவேண்டி இருந்து, அவர்களின் ஏளனமான பார்வையை அனுதினமும் எதிர்கொண்டு, தப்பித்தவறி அந்த ஆதிக்க சாதியில் ஒருவரைப் பிடித்துப்போய் அவரைக் கல்யாணம் செய்ய நினைத்த அந்த நொடியிலேயே கொலைசெய்யப்பட்டும், செத்தால் கூட ஒரேசுடுகாட்டில் இடம் தரப்படாமல் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததற்காகவே பிணங்களானபோதும் கூட அடித்துவிரட்டப்பட்டும் நிலையில் இருக்கும் மக்களைக் குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

அப்படி ஒருநாள் அமைதியாக உங்களது பூர்வீகவீட்டின் வராண்டாவில் உட்கார்ந்தோ, அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துபாருங்களேன்… அப்போது ஜாதி இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்…

ஒரு ஒடுக்கப்பட்ட ஊரில் பிறந்து, எல்லா ஒடுக்குமுறைக்கும் ஆளாகிவருபவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதா என்று தான் எப்போதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை யாரோ ஒருவர் வெளியில் இருந்து வந்து சரிசெய்வதைவிடவும், அவர்களின் உரிமைக்காக அவர்கள் குரல்கொடுப்பதே சரியான முதல்படியாக இருக்கமுடியும் என்பதை அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் என யாராவது எழுதிவைத்ததைப் படித்துவிடும் சூழலில் அம்மக்களின் விடிவுகாலத்திற்கான வழிபிறக்கிறது. காலம்பூராவும் சுயமரியாதையை இழந்தே வாழமுடியாது என்பதை உணர்ந்ததும், தன் ஊர் மக்களை ஒருங்கிணைத்து, அவ்வூரின் நலனுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் மனதளவில் உறுதியெடுக்கின்றனர்.

தன்னுடைய ஊருக்குத் தேவையான சிறுசிறு கோரிக்கைகளை முன்வைத்து, ஊர்மக்களைத் திரட்டி, ஆதிக்க சாதியினரால் சூழப்பட்டிருக்கும் இந்த அரசமைப்பினை எதிர்த்து விடாமல் கேள்விகேட்டு சில நியாயங்களை பெறமுயற்சிக்கின்றனர். தனிநபர்களை மிரட்டி, ஒடுக்கி, சுரண்டி, வேலைவாங்கி, அடிமையாக்கி வைத்திருப்பது எளிது, ஆனால் கூட்டமாகக் குரல் எழுப்புவோரை எப்படி ஒடுக்கமுடியும் இந்த சாதி ஆதிக்க சமூகத்தால். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு குரலெழுப்பும் மனிதர்கள் யாரென்ற பட்டியலைத் தயாரித்து, அவர்களைக் கொன்று போட்டால், இனி எவரும் சாதியை ஒழிக்கவோ ஆதிக்கத்தை அழிக்கவோ கூட்டமாக திரளமாட்டார்கள் என்பதே ஆதிக்க சாதியினரின் கணக்காக இருக்கிறது.

அதிலும் மிகமுக்கியமாக, ஒடுக்கப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவர்களையே ஒழித்துப்போடும் இந்த ஆதிக்க சாதி சமூக அமைப்பானது, எல்லா சாதியினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி சாதியையே ஒழித்து ஒரு சமத்துவ சோசலிச சமூகம் அமைக்கவேண்டும் என்று குரல் கொடுக்கும் மனிதர்களை நிச்சயமாக விட்டுவைக்கவே வைக்காது. அதைவிடவும், அப்படியாக குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருபவர்களாக இருந்தால், சொல்லவே வேண்டாம்.

அப்படித்தான், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒடுக்கப்ப்பட்ட சாதி மக்கள் வாழும் ஒரு ஊரில் பிறந்து, “இந்த சமூகம் ஏன் இப்படி ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கிறது” என்று தொடர்ந்து தன்னையும் சுற்றியுள்ளவர்களையும் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தான் அசோக். அதற்கான விடையைத் தேடும் பாதையில் ஏராளமாகப் படிக்கிறான். சோசலிச சமூகத்தில் தான் ஏற்றத்தாழ்வு ஒழியும், சமத்துவம் சாத்தியப்படும் என்பதைக் கண்டறிகிறான். அதற்கான இயக்கமாகவும் வாழும் உதாரணமாகவும் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) யும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் அளவீடு செய்து ஏற்றுக்கொள்கிறான்.

பிறப்பால் தன்மீது சுமத்தப்படுகிற ஒரு சாதியில் இருக்கும் பிரச்சனைகளையும், ஆதிக்க சாதியென்று சொல்லப்படுகிற சாதியில் பிறந்தவர்களை அவர்களுக்கும் மேல் இருப்பதாக சொல்லப்படும் சாதியினரால் வரும் பிரச்சனைகளையும், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் கூலித்தொழிலாள மக்கள் எந்த சாதியில் பிறந்தாலும் இருக்கிற பிரச்சனைகளையும் குறித்தெல்லாம் அவனுக்கு புரிதல் ஏற்படுகிறது.

தன்னுடைய ஊருக்கான பிரச்சனைகளாக அவனுக்கு தெரிகிற பிரச்சனைகளுக்கு அவ்வூர் மக்களை ஒன்றுதிரட்டிப் போராடி, பலம்பொருந்திய அதிகார அமைப்புகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்பி, பல நியாயங்களை அவ்வூர் மக்களுக்குப் பெற்றுத்தருகிறான். தண்ணீருக்கு அலையோ அலையென்று அலையவேண்டியிருந்த சூழலை மாற்றி, ஊருக்குள்ளே ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியைக் கொண்டுவருவதற்காக ஒட்டுமொத்த ஊரையும் ஒருங்கிணைத்து போராடவைத்ததில் அசோக்கின் பங்கு அளவிடமுடியாதது.

அதேவேளையில், ஊர் எல்லையைத் தாண்டி, எல்லா சாதி இளைஞர்களையும் இணைத்து, அவர்களுக்குள் ஒரு நட்பை உருவாக்கி, அவர்களிடையே ஏராளமான பொதுப்பிரச்சனைகள் இருப்பதை அவர்களுக்கு உணர்த்தி, சாதிகடந்த சமத்துவக்குழுவை உருவாக்கவும் அவன் முயற்சித்தான். அவன் சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கும் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க அந்தந்த ஊருக்கே சென்று அவர்களுடன் உரையாடினான், அவர்களை ஒன்றாக கைகோர்க்கவைத்தான்.

ஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஆதிக்க சாதிசமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா என்ன?

சமத்துவத்தை ஒழிப்பதென்றால், முதலில் சமத்துவம் பேசுகிறவர்களை ஒழிக்கவேண்டும் என்பதுதான் ஆண்டாண்டுகாலமாக ஆதிக்க வெறியர்கள் பின்பற்றிவரும் வழிமுறை. அசோக் தனியாக போகும்போதும் வரும்போதும் பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். அசோக்குக்கு செல்லும் பாதையினை மறிக்க ஆரம்பித்தனர். ஆதிக்க சாதியினருக்கே ஒட்டுமொத்த சாலைகளும் சொந்தமென சொல்லாமல் சொல்கின்றனர்.

சாதி ஆதிக்க வெறியர்களால் அசோக்கிற்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் காவல்துறை அசோக்கை எச்சரிக்கிறது.

அசோக்கின் நலன்விரும்பிகள் சிலர், அசோக்கை தலைமறைவாக இருக்கும்படி சொல்கின்றனர்.
ஆனால் அசோக்கோ, “என்னால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் இந்த சமூகத்தை சீர்திருத்த வந்திருக்கின்றனர். நானே இப்படி பயந்து ஓளிந்துகொண்டால், இனி மற்றவர்களும் பயப்பட மாட்டார்களா?” என்று கேட்கிறான் அசோக்.

ஒருநாள் இரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கெளம்பிய அசோக்கை, கண்மூடித்தனமாக வெட்டிசாய்க்கிறது சாதி ஆதிக்க வெறிபிடித்த கும்பல்.

“அதான் பிரச்சனை இருக்குன்னு தெரியுதுல்ல. அவன் பாதுகாப்பா இல்லாதது அவன் தப்பு” என்று இன்னமும் சொல்வீர்களானால் ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்….

தன் சொந்த நலனுக்காக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவனின் உயிரைப் பறித்து, இரத்த வெள்ளத்தில் கீழே வீழ்த்தியிருக்கிறது சாதிவெறி. நம் எல்லோருக்காகவும் உழைத்த அவனது உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டிய கடமை இந்த ஒட்டுமொத்த சமூகத்தினுடையது. அவனைக் காப்பாற்றத்தவறியது அவனல்ல, இந்த ஒட்டுமொத்த சமூகமும் தான்.

சாதியாலும் வர்க்கத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கிற ஒடுக்குமுறைகளிலும் பிற்போக்கத்தனங்களிலும் வாழப்பழகிய இந்த சமூகத்திலிருந்து, அதை எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு, இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிருவர் தான் “தோழர்”களாக மாறுகின்றனர். அவர்களையும் கொன்று போட்டுவிடுகிறது சாதி ஆதிக்கசக்தி. ஒரு அசோக் உருவாவதற்கு எத்தனை பேரின் உழைப்பு பின்னால் இருக்கிறது தெரியுமா? அதைவிடவும் அசோக்கின் உழைப்பு எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ஆனால் சர்வசாதாரணமாக ஒருநொடியில் அவர்களை நாம் இழக்க நேரிடுவது எவ்வளவு பெரிய கொடுமை.

ஒரு திருடன் உருவானால், இந்த சமூக அமைப்புக்குப் பிரச்சனையில்லை, அவனைக் கண்டுகொள்ளாமல் ஏற்றுக்கொள்கிறது. அதேபோல், ஒரு கொலைகாரன் உருவானாலும் அதேதான். ஆனால், ஒரு அசோக் உருவாவதை மட்டும் ஆதிக்கமனம் கொண்ட பிற்போக்கு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. ஏனெனில் அவனைச் சுற்றியுள்ள ஒரு பெரும் சமூகத்தையே இந்த ஒடுக்குமுறை அமைப்பினை எதிர்த்துக் கேள்வி எழுப்பவைத்துவிடும் திறனைக் கொண்டவர்கள் “தோழர் அசோக்” போன்றவர்கள்.

அசோக்குகளை அவர்கள் கொல்வதற்கு முக்கியமான காரணமே அசோக்குகளை விட அவர்கள் பலமானவர்களாக இருப்பதனால் அல்ல, அசோக்குகளைப் பார்த்து அவர்கள் பயப்படுவதனாலேயே தான்…

அந்த பயத்தை அப்படியே கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்வதோடு, அப்பயத்தை அதிகரிப்பதற்கான வேலையையும் நாம் செய்ய வேண்டும். அதாவது, ஆயிரமாயிரம் அசோக்குகள் உருவாகுதல் வேண்டும். இது அத்தனை எளிதான காரியம் இல்லைதான், ஆனால் இதுவொன்றே இந்த சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான ஒரே வழியாகும்….

இதனை அசோக்கின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்,

“சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மனிதநேயமே நாங்கள் – தோழர்கள்” – தோழர். அசோக்.

-இ.பா.சிந்தன்.

Related Posts