அரசியல்

YES வங்கி NO வங்கி ஆனது எப்படி?

இந்தியாவின் 5 வது மிகப்பெரிய வங்கி என அழைக்கப்படும் எஸ் வங்கி திவாலாகியுள்ளது. வங்கிகள் மீது குறிப்பாக தனியார் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். மக்களின் கவலை நியாயமானது. தனியார் வங்கி திவால் என்பது தொடர் கதையாகி வருகிறது. 2004ம் ஆண்டு குளோபல் டிரஸ்ட் வங்கி திவால் இதன் தொடக்கம்.  சமீபத்தில் பஞ்சாப் மகாராஷ்ட்ரா வங்கி திவாலானது. பின்னர் ஐ.எல்.எஃப்.எஸ் மற்றும் டி.எச்.எஃப்.எல்.ஆகிய நிதிநிறுவனங்கள் முடங்கின. இப்போழுது எஸ் வங்கியும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

30க்கும் அதிகமான மாநிலங்களில் 1100 கிளைகளையும் 18,000 ஊழியர்களையும் 2 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையையும் கொண்டது எஸ் வங்கி. எனவேதான் இதன் திவால் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தனியார்துறை திறமையானது; பொதுத்துறை முழுவதும் தனியாருக்கு தந்துவிட வேண்டும் எனும்  மோடி அரசாங்கம் மற்றும் தனியார்மய ஆதரவாளர்களின் கொள்கை மிக  தவறானது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த திவால் நிரூபித்துள்ளது.

எஸ் வங்கியின் முறைகேடுகள்

எஸ் வங்கி 2004ம் ஆண்டு மூன்று நண்பர்களால் உருவாக்கப்பட்டது. ராணா கபூர், அசோக் கபூர்,  ஹரிகிரத் சிங் ஆகிய மூவருமே பன்னாட்டு வங்கிகளில் பணியாற்றியவர்கள். ரானா கபூர் மற்றும் அசோக்  கபூர் ஆகிய இருவரின் மனைவிமாரும் சகோதரிகள். வங்கி தொடங்கிய சில மாதங்களில் ஹரிகிரத் சிங்க் வெளியேறிவிட்டார். அசோக் கபூர் 26/11 பயங்கரவாதிகளின் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அசோக் கபூரின் மனைவி  தனது கணவரின் இடத்தில் தனது மகளை இயக்குநராக சேர்க்க  வேண்டும் என முயற்சித்தார்.  ஆனால் அந்த கனவை ராணா கபூர் முறியடித்து கொண்டே இருந்தார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்புதான் அசோக் கபூரின் மகள் இயக்குநர் பதவியில் உட்கார முடிந்தது. ராணா கபூரின் உளவியலை வெளிப்படுத்தும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

“உங்களுக்கு கடன் வேண்டுமா? மற்ற வங்கிகள் கடன் தரவில்லையா? அப்படியானால் ராணா கபூரிடம் செல்லுங்கள்” இதுதான் கார்ப்பரேட் வட்டங்களில் நிலவிய கருத்து. கடன் தருவதில் பின்பற்றப்பட வேண்டிய விதிகளை முறையாக பின்பற்றாமல் ஏராளமான கடன் தரப்பட்டுள்ளது. ஆனால் கடன் பெற்றவர்கள் சாதாரண ஆட்கள் அல்ல! அனில்  அம்பானி, ஜீ குழுமம்,  டி.எச்.எஃப்.எல்., எஸ்ஸெல் குழுமம், வொடொஃபோன் போன்ற கார்ப்பரேட் குழுமங்கள்தான் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கியுள்ளனர்.

எஸ் வங்கியும் ராணாகபூரும் நீண்ட நாட்களாகவே முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 2016ம்  ஆண்டு மார்ச் மாதம் தனது வங்கியின் வாராக் கடன் வெறும் ரூ 836 கோடிதான் என எஸ் வங்கி தெரிவித்தது. ஆனால் இதனை ரிசர்வ்  வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கிய பொழுது வாராக்கடன் 4662 கோடி என வங்கி தெரிவித்தது. அடுத்த ஆண்டு 7562 கோடியாக வாராக்கடன் உயர்ந்தது. தனது கணக்கு வழக்குகளை திரித்து சொல்லும் நடைமுறை எஸ் வங்கிக்கு வெகு நாட்களாகவே இருந்துள்ளதாக தெரிகிறது.

டி.எச்.எஃப்.எல். நிறுவனத்திற்கு எஸ் வங்கி ரூ 3700 கோடி கடன் தந்துள்ளது. இந்த கடன் வாராக்கடனாக மாறியது மட்டுமல்ல; இந்த கடனை பெற்ற வாத்வானி குடும்பத்தினர் இந்த நிதியை மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை வாங்க பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒருபுறம் எஸ் வங்கி டி.எச்.எஃப்.எல்.ன் உரிமையாளர்களில் ஒருவரான கபில் வாத்வானி நடத்தும் ஆர்.கே. டபிள்யூ. எனும் நிறுவனத்திற்கு ரூ 750 கோடி கடன் தருகிறது. மறுபுறத்தில் ராணா கபூர் குடும்பத்தினர் நடத்தும் டூ இட் வென்சர்ஸ் எனும் நிறுவனத்திற்கு டி.எச்.எஃப்.எல்.ரூ 600 கோடி கடன் தருகிறது. இவை அனைத்தும் வாராக்கடன்களாக மாறுகின்றன. எஸ் வங்கி மற்றும் டி.எச்.எஃப்.எல். இரண்டுமே திவாலாகியுள்ளன. டெபாசிட் செய்த அப்பாவி முதலீட்டாளர்களுக்கு பட்டை நாமம் போடப்பட்டுள்ள அதே சமயத்தில் இந்த உரிமையாளர்கள் அதீத பலன் அடைந்துள்ளனர். இப்படி பல முறைகேடுகள் நடந்துள்ளன.

ராணா கபூர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது?

இந்த முறைகேடுகளை செய்யும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது?

ஒரு புறம் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் உருவாக்கியுள்ள கூட்டு களவாணி முதலாளித்துவம். மறுபுறம் ராணா கபூர் போன்றவர்கள் ஆள்வோருக்கு நெருக்கமானவர்களாக தம்மை அடையாளப்படுத்தி கொண்டதும் அதனை அனுமதித்த ஆட்சியாளர்களும்தான் இதற்கு காரணங்கள் ஆகும்! ரூ 500, 1000 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வரலாற்று சிறப்பான முடிவு என உடனடியாக பாராட்டியவர் ராணா கபூர். அதே போல் ஜி.எஸ்.டி.யையும் பாராட்டினார். ஆளும் பா.ஜ.க.விற்கு தம்மை நெருக்கமானவராக காட்டிக்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை எக்னாமிக் டைம்ஸ் இதழ் உலக முதலீடு மாநாட்டை நடத்தியது. அதில் பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒன்று எஸ் வங்கி என்பது கவனிக்கத்தக்கது.

நிதிதுறையில் ஒரு கடும் நெருக்கடி உருவாகி வருகிறது என்பதை கூட மோடி அரசாங்கம் அங்கீகரிக்க மறுக்கிறது. எஸ் வங்கியின் திவாலுக்கு முந்தைய யு.பி.ஏ.  அரசாங்கம்தான் காரணம் என நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால் பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ்தான் எஸ் வங்கியின் கடன் தாறுமாறாக உயர்ந்துள்ளது என்பதை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்குகின்றன:

ஆண்டு எஸ் வங்கி அளித்த கடன்/ கோடி ரூபாயில்
2014 55,000
2015 75,000
2016 98,000
2017 1,32,000
2018 2,03,000
2019 2,41,000

பா.ஜ.க. ஆட்சியில்தான் வங்கியின் கடன் 400%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வங்கியின் டெபாசிட் அளவான 2 லட்சம் கோடியைவிட கடன் 2018ம் ஆண்டே அதிகரித்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கியும் ஏனைய கண்காணிப்பு அமைப்புகளும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துள்ளன. பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகள் மீது மின்னல் வேகத்தில் பாயும் அமைப்புகள் கூட்டு களவாணி முதலாளிகள் விஷயத்தில் அடக்கி வாசிக்கின்றன.

தீர்வு பலன் தருமா?

எஸ் வங்கியின் 49% பங்குக்ளை வாங்கி அதனை காப்பாற்ற ஸ்டேட் வங்கி நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அதற்காக 10,000முதல் 20,000 கோடி ரூபாயை ஸ்டேட் வங்கி செலவழிக்கும் என கூறப்படுகிறது. ஒரு தனியார் வங்கியை அரசு வங்கிதான் காப்பாற்ற பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே ஸ்டேட் வங்கியே வாராக்கடன் சுமையில் உள்ளது. இந்த சமயத்தில் ஸ்டேட் வங்கி மீது மேலும் சுமை ஏற்றுவது சரியானதுதானா எனும் கேள்வி எழுகிறது. அரசுக்கு ஆமாம் சாமிகளாக உள்ள வங்கி உயர் அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்காமல் இத்தகைய நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

அப்படியே ஸ்டேட் வங்கி முன்வந்தாலும் எஸ் வங்கியை நெருக்கடியிலிருந்து மீட்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்! ஸ்டேட் வங்கி வாங்கும் 49% போக மீதி 51% பங்குகளை யார் வாங்க முன்வருவார்கள்? மூழ்கும் கப்பலில் யாராவது ஏற முன்வருவார்களா? எஸ் வங்கியிடம் கடன் வாங்கிய நிறுவனங்களான அம்பானியின் ரிலையன்ஸ், டி.எச்.எஃப்.எல்., காஃபி டே, வொடோ ஃபோன் ஆகியவை திவாலாகிவிட்டன அல்லது திவால் பாதையில் சறுக்கி கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களிடமிருந்து கடன் திரும்ப வரும் எனும் உத்தரவாதம் இல்லை. அப்படியானால் டெபாசிட்தாரர்களின் முதலீடு என்ன ஆகும் எனும் கேள்வி எழுகிறது.

“எஸ் வங்கி விவாகரத்தில் எனது கட்சிக்காரரை பலிக்கடாவாக ஆக்க சதி நடக்கிறது” என ராணா கபூரின் வழக்கறிஞர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார். ராணா கபூர் பலி ஆடு எனில் பலி கொடுப்பவர்கள் யார் என்பதை ஊகிக்க சாணக்ய மூளை தேவை இல்லை. பொதுத்துறையை தனியார்மயமாக்க கூடாது என தொழிற்சாங்கங்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் உட்பட பல இயக்கங்கள் நடத்திவருகின்றன. அது எவ்வளவு சாரியானது என்பதை எஸ் வங்கி திவால் மீண்டும்  ஒருமுறை நிரூபித்துள்ளது.

  • அன்வர் உசேன்.


நன்றி தீக்கதிர்

Related Posts