பாஜக எப்படி வெல்கிறது..?

“எதிர் ” வெளியீட்டின் புத்தகம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பணிபுரியும் பிரசாந்த் ஜா என்ற பத்திரிக்கையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சசிகலா பாபு என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கடந்த டிசம்பர் 2018ல் வெளியானது..

பாஜக 2014 நாடாளமன்ற தேர்தலில் தனிம்பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்ததில் துவங்கி  அதற்கு பிறகு நடைபெற்ற “பீகார்-டெல்லி” தவிர்த்து மற்ற மாநில  சட்டமன்ற  தேர்தல்களில் பாஜக எவ்வாறு  வெற்றிபெற்றது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம்.

“மோடி அலை”உருவாக்கப்பட்ட விதம் , உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமீத்ஷா பயன்படுத்திய தேர்தல் யுக்தி, ஆர்எஸ்எஸின் நேரடியான களப்பணி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டிய விதம், ஊடகங்களின் துணை என 7 முக்கிய தலைப்புகளைக்கொண்டு  பாஜக வெற்றி பெற்ற விதத்தை  விவரித்திருக்கிறார்.

மோடி பலூன் ஊத அரும்பாடுபட்ட   கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அதன் ஊடகங்களின் பங்களிப்பை அதிகம் பேசவில்லை  என்றாலும் முந்தைய பாஜக அனுகுமுறையிலிருந்து என்னென்ன மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதை  ஆராய்ந்திருக்கிறார். எதிரிகளின் பலத்தை சாதாரணமாக நினைக்க கூடாது என்ற பாடத்தை வாசிக்கும் போது கற்றுக்கொள்வோம்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை அமித்ஷா கிண்டலுக்குரியவர் ஆனால் மோடியின் பிரதமர் கனவு பலித்ததில்  முக்கிய காரணம் அவர்தான். இந்தி பேசும் மாநிலங்களான உத்தர்பிரேதசம், உத்ராகண்ட், இமாச்சல், பீகார்,டெல்லி,ஜார்கண்ட்,மத்திய பிரதேசம் ராஜஸ்தான்,அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிட்ட 225 பாராளமன்ற தொகுதிகளில் 190 தொகுதிகள் வெற்றிபெற்றுள்ளது இது சாதாரண புள்ளிவிவரம் அல்ல ஆபத்தான புள்ளிவிவரம்.

நாடே நடுத்தெருவிற்கு வந்த 200க்கும் மேற்பட்ட மக்கள்  உயிரழந்த, பல தொழில்கள் நாசமடைந்து வேலை இழப்புகளை உருவாக்கிய  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  “கருப்புப்பணம்”  -“தீவிரவாத” ஒழிப்பு நடவடிக்கைகள்  என மிகசாதுர்யமாக மோடி  தன் பேச்சு திறமையால் உத்திரபிரதேச மக்களை நம்ப வைத்தார். அதில் எதிர்கட்சிகள் விட்ட அத்தனை அம்புகளும் புஸ்ஸாகி கீழே விழுந்தது. ராகுலின் பேச்சும்  மக்களிடம் எடுபடவில்லை,   அதன் அறுவடைதான்  2017 உ.பியின்  சட்டமன்ற தேர்தல் வெற்றி.. இவ்வெற்றிக்காக 64 நாட்கள் உத்திரபிரதேச மாநிலத்திலயே தங்கி வேலை பார்த்தவர் அமீத் ஷா. 2014 நாடாளமன்ற தேர்தலில் உ.பியில்  மொத்தமாக உள்ள 1லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடியில் 13ஆயிரம் வாக்குச்சாவடியில் ஒரு ஓட்டுகூட மோடி வாங்கவில்லை இதை கண்டறிந்து அவ்விடங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 100 உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று 2017 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக. இதெல்லாம் அமீத்ஷாவின் தலைமையில் நடந்ததுதான்.

பல்வேறு சாதிகளை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கியது, பெருமளவு தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றது என களம் அறிந்து செயல்பட்டு அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ளனர்.

இந்திய மக்கள் தொகையில் 20% உள்ள இஸ்லாமிய மக்களை கழித்துவிட்டுதான் தேர்தல் யுக்தியை கையாள்கிறது பாஜக அவர்களை எதிரிகளாக சித்தரிப்பதன் மூலம் இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்கிறது அதற்கு பொய்யான செய்திகளை பரப்பும் வேலையிலும் ஈடுபடுகிறது.. இது உ.பியில் எடுபட்டுள்ளது. மேலும் பணமும் இங்கே பிரதான பங்கு வகித்துள்ளது உள்ளூர் முதலாளிகள் முதல் பெரு முதலாளிகள் வரை பணத்தை வாரி வழங்குகின்றனர். உ.பி. சட்டமன்ற தேர்தலில் மட்டும் 1500 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்.

மிஸ்டுகால் உறுப்பினர் சேர்ப்பு நமக்கு கிண்டலுக்குரியதாய் இருந்தாலும் அதுவும் அவர்களுக்கு  சாதமாகி உள்ளது என்று நிறுவுகிறார் எழுத்தாளர்.

முன்னெப்பொதும் இல்லாத அளவிற்கு ஆர்எஸ்எஸின் நேரடி களப்பணி கூடுதல் பலம். இனி பாஜகவை உயர்சாதியினருக்கான கட்சி என கூற முடியாது எனவும்  பல்வேறு சமூக மக்களிடம்  அவர்களின் சித்தாந்தம் ஊடுருவிகொண்டே வருகிறது என்பதையும் எச்சரிக்கிறார். எதிர் கட்சிகளின் ஒற்றுமைதான் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியும் என்கிறார். உதாரணமாக பீகார் நிதிஷ்-லாலு-காங்கிரஸ் வெற்றியை குறிப்பிடுகிறார். ஆனால் வெறும் கட்சிகளின் ஒருங்கிணைப்பு போதாது தற்காலிகமாக பாஜகவை வீழ்த்த பயன்படுமே  தவிர அது விதைக்கும் விஷ விதைகளை பிடுங்க அது பயன்படாது. அதற்கு அதே பீகாரை நாம் உதாரணமாக சொல்லலாம் மீண்டும் நீதிஷ் பாஜக கூட்டணி அமைந்ததை வைத்து புரிந்து கொள்ளலாம். நிதிஷின் சித்தாந்த தெளிவின்மை சுய அரசியல் லாபம் இதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இந்துத்துவ சித்தாந்த  எதிர்ப்பின் அடிப்படையிலான கட்சிகளின் ஒருங்கிணைப்பே பாஜகவை நிரந்தரமாக வீழ்த்த பயன்படும் என்று நாம் சேர்த்து புரிந்துகொள்வோம்.

சரியான நேரத்தில் வெளிவந்துள்ள புத்தகம் வரும் நாடாளமன்ற தேர்தலில் எதிரியின் பலம் அறிந்து செயல்பட இப்புத்தகம் நிச்சயம்  பயன்படும்…. 270 பக்கங்களை கொண்டது

“வாசிக்கவும்”

– பிரபு விஜி.

About ஆசிரியர்குழு‍ மாற்று