அரசியல்

தொடரும் “சாதி ஆணவப்படுகொலைகள்” – தீர்வென்ன?

மனிதர்களுக்கு ஆசை, அன்பு,நேசம் எல்லாம் இயற்கையானது. இயற்கையாக மனித உணர்வுகளில் இருந்து தோன்றக்கூடிய காதலையும் இந்திய சமூகத்தில் வாழும் மக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்துக் கொள்ளும் நிலையில் உள்ளது. சுதந்திரம் பிறப்புரிமை என்று சட்டம் போட்டு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை ஆனால் சுதந்திரம் பிறப்புரிமை என்று சட்டம் இயற்றியும் காதலை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில்தான் இந்திய சமூக மக்களின் வாழ்நிலை இருக்கிறது தங்களது காதல் அக்கம் பக்கம் உறவினர் மற்றும் குடும்பத்தாருக்கு தெரிந்துவிட்டால் காதலும் காதலர்களும் மண்ணோடு மண்ணாகி விடக்கூடும் என்ற அச்சத்தால் பல காதல்கள் காற்றோடு கூட கரைந்து போய் விட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் வாழும் அனைத்து உயிரினங்களும் சுதந்திரமாக காதல் செய்கிறது மனிதர்களும் பல நாடுகளில் சுதந்திரமாக காதலை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் சில நாடுகளில் காதல் மட்டுமல்ல கலாச்சாரத்தை மீறிய காரணத்திற்காகவும் கொலைகள் கூட நடந்து வருகிறது.

பாகிஸ்தானில் 2013 ஜூன் 23-ம் தேதி நூர் பஸ்ரா, நூர் சேஷா என்ற இரு சகோதரிகள் தங்களது தாய் மற்றும் 5 கூலிப்படைகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் இந்த படுகொலைக்கு அவர்களது சகோதரன் குதோரோ பெரும் பின்னணியாக இருந்து செயல்பட்டிருக்கிறார் என்பதால் இந்த வழக்கில் குதோரோவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உலக நாடுகள் இப்படி இருக்க இந்தியாவில் நிலைமையோ வேறு ஒன்றாக இருக்கிறது அதாவது மரபுவழி என்ற பெயரில் சாதி பிரக்ஞையற்ற கலங்கிய மனநிலையோடு பின்பற்றப்பட்டு வருகிறது.

உலகில் பொதுவாக மனித சமூகம் வர்க்கங்களாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய சமூகத்தில் வர்க்கங்கள் சாதிகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருக்கிறது. சாதிய மரபு, வழிபாடு, சாஸ்திரம், சம்பிரதாயம், அகமணமுறை போன்றவைகள் சாதியைப் பாதுகாக்கும் பண்பாட்டு காரணிகளாக பாவிப்பதோடு அதன் மீது பற்று கொண்டு இருக்கிறார்கள். பற்று நிலையானது சாதிய பண்பாட்டுக் காரணிகள் மீது ஏதேனும் களங்கம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் நிகழ்ந்தால் வெறிகொண்டு சக மனித உயிர்களைக் கொலை செய்யும் தன்மைக்கு கொண்டு செல்கிறது.

சாதியின் கவுரவம் குடும்ப கௌரவமாக பார்க்கப்பட்டு காதல் செய்பவர்கள் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிகமாக ஆணவ படுகொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகிறது. இதில் காப் பஞ்சாயத்து கொலைகள் மற்றும் தீராத வயிற்று வலி தற்கொலை என்று மறக்கப்பட்ட கொலைகள் உள்ளடங்காது. சாதிய ஆணவ கொலைகள் அதிகம் பாதிக்கப்படுவதில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்கிறார்கள். பிற சாதிகளில் திருமணம் செய்திடும் பட்டியல் சாதிப் பெண்கள், ஆண்கள் மற்றும் பட்டியல் சாதியில் திருமணம் செய்திடும் பெண்களே ஒப்பீட்டளவில் அதிக பாதிப்புக்குள்ளானவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய கொடுமையிலிருந்து பாதுகாக்க 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது பின்னர் 1976 பிசிஆர் சட்டம் ( குடியுரிமை பாதுகாப்பு சட்டம் ) என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது 1989 இளைய பெருமாள் தலைமையிலான கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் சில திருத்தங்களுடன் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது இது 1995 ஆம் ஆண்டு முதலே முழுமையாக நடைமுறைக்கு வந்தது 2015 ஆம் ஆண்டு மீண்டும் இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 16 சதம் வெளியே பேசி முடிக்கப்பட்டும் 75 சதம் வழக்குகள் விடுதலை மற்றும் திரும்பப் பெறுதல் என்ற அடிப்படையில் நிறைவு பெறுகிறது. இது ஒரு புறம் இருக்க சாதிய ஆணவக் கொலைகளால் எல்லா சாதியை சார்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அதற்கு எதிரான பொதுவான ஒரு தனிச் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று இடதுசாரிகள் தலித் இயக்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராடியதும் வழக்குகள் பதிவு செய்ததாலும் இந்திய சட்ட ஆணையம் சிறப்பு சட்டத்துக்கான மசோதா ஒன்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது தனிச்சிறப்பு சட்டம் கோரிய வழக்கில் 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார். எது எதற்கெல்லாமோ அவசர சட்டம் இயற்றும் மத்திய அரசு இதற்கான மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது மேலும் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைகளை பின்பற்றுவதிலும் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடுரோட்டில் பெற்ற மகளையும் மகளின் கணவரையும் கூலிப்படையை ஏவி கொலை செய்யும் திட்டத்தில் மகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினார் மகளின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களில் திருநெல்வேலியை சேர்ந்த காதலர்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்ததற்காக பெண் வீட்டார் திருமணம் செய்த பையனின் கற்பினி சகோதரியை படுகொலை செய்த சம்பவம் ஒன்று நடந்தது இந்த வழக்கு எட்டு மாதங்களில் 2017 ஜனவரி 10 அன்று வழக்கின் தீர்ப்பு எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் விதமாக குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற வழக்காகவும் அதே வேளையில் சாதி ஆணவக் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பாக இது தான் இருந்திருக்கிறது. தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கில் 2018ல் உயர் நீதிமன்றத்தால் கொலை செய்ய அருவாளை எடுத்து கொடுத்த பெண் விடுதலையும் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.

2017 டிசம்பர் மாதம் 12ஆம் தேதி உடுமலை சங்கரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய தந்தைக்கும் கூலிப்படையினருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்கில் 2020ல் உயர் நீதிமன்றத்தால் தந்தை விடுதலை, கொலை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளிலும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை பின்பற்றியே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் பரிந்துரை செய்த உயர்நீதிமன்றம் தங்களது பரிந்துரையை பின்பற்றவில்லை இதில் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமும் உள்ளடங்கி இருக்கிறது.

சாதி தரும் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாக்க கொலை செய்யும் அளவுக்கு செல்லும் மனித சமூகமும் இதனை ஆதரிக்கும் அரசு மற்றும் நீதித்துறையின் நடவடிக்கைகள் வரும் காலங்களில் மீண்டும் சதி, விதவை முடக்கம், குழந்தை திருமணம் போன்றவைகளை சமூகப் விழுமியாக மாற்றுவதற்கு உதவுவதாக போய் முடியும் ஆகவே சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் உடனடி தேவை என்றாலும், இந்திய சமூகநிலையும் எதிர்காலத்தையும் கணக்கில் கொள்ளும் போது, புறமணமுறை சமூகத்தின் எதார்த்தமாக மாற்றப்படும் நிலை நோக்கி அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவதன் முதல் கட்டம் என்றால், சாதி ஒழிந்த சமத்துவ சமூகமாக மாற்றுவதன் மூலமே இது போன்ற சாதி ஆணவப்படுகொலைகளுக்கான என்றென்றைக்குமான தீர்வாக இருக்க முடியும்.

  • முருகன் கண்ணா.

Related Posts