உலக சினிமா சினிமா

அவன் பெயர் சாப்ளின் …

 காட்சி 1

ஸ்டார்ட் கேமரா

இங்கிலாந்தின் பிரபலமான இரவு விடுதி அது. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அன்று மேடையில் பாடுவதற்காக ஹென்னா என்கிற பெண்மணி மிகவும் சிரமப்பட்டு வாய்ப்பு வாங்கியிருந்தாள்.ஒரு காலத்தில் வசீகரப்பாடகியாகத் திகழ்ந்தவளின் வாழ்க்கை திருமணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு திருமணங்கள் நடந்து இரண்டுமே தோல்விchaplinயில் முடிந்திருந்தன. விளைவாய் இரண்டு குழந்தைகள். கிழிந்த துணிகளை தைத்துக் கொடுப்பது, சர்ச்சில் பாடுவது என்று பணம் ஈட்ட முயன்றாள் ஆனால் வாழ்க்கை நடத்த அப்பணம் போதுமாயில்லை. பழைய முதாலாளியிடம் கெஞ்சி அந்த வாய்ப்பை வாங்கிருந்தாள். இந்த மேடையில் சரியாக பாடிவிட்டால் அவள் வாழ்க்கை மாறிவிடும். மேடை ஏறினாள். ஆனால் அவளால் பாடமுடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் பாடுவதால் அவள் தொண்டை கட்டி கம்மத் தொடங்கியது. அங்கே வந்திருந்தவர்கள் எல்லாம் கத்த தொடங்கினர். “வெளியே போ” என்று கூச்சலிட்டனர். விடுதியின் உரிமையாளர் அவளை இழுத்துக் கொண்டு வெளியே போனார். கூட்டம் கூச்சல் இட்டுக்கொண்டே இருந்தது. அப்போது மேடையில் ஆறு வயது சிறுவன் ஏறினான். “யாரடா இவன் பொடியன்?” கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சிறுவன் பாட ஆரம்பித்தான். அப்படியே அவனது குட்டி குட்டி கால்களையும் கைகளையும் ஆட்டி நடனம் ஆடினான். கூட்டம் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது. சில்லறைகளை மேடையில் விட்டெரிந்தது. அவனை இன்னும் ஒரு பாட்டு பாடு என்று கத்தியது கூட்டம். ஹென்னா சத்தம் கேட்டு உள்ளே வந்தாள். அங்கே அவளது இரண்டாவது மகன் ஆடிக் கொண்டிருப்பதையும் மக்கள் அவனுக்கு மயங்கிக் கிடப்பதையும் பார்த்து பூரித்தாள்.

கட்

காட்சி 2

                                                                          ஸ்டார்ட் கேமரா

”உங்கள் அம்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது” யாரோ சொன்னதும் அந்த இரண்டு சிறுவர்களும் அனாதை விடுதியின் வாசலுக்கு வேகமாக ஓடினார்கள். அங்கே அவர்களது அன்பு மிகுந்த அம்மா, அவர்கள் பசித்திருந்த போது கொடுக்க உணவில்லாததால் கதைகள் சொல்லி பசியைப் போக்கிய அம்மா, பாடல்கள் பாடச் சொல்லிக் கொடுத்த அம்மா, எவ்வளவு வருமை வந்தாலும் அனாதை விடுதியில் சேர்க்க மாட்டேன் என்று சொன்ன அம்மா, வேறு வழியில்லாமல் மூன்று நாட்கள் தொடர் பட்டின்னிக்குப் பிறகு தனது மகன்களை அநாதை விடுதியில் சேர்த்துவிட்டு அழுது கொண்டே போன அம்மா,அவளை ஒரு கூண்டில் அடைத்து மிருகத்தைக் கொண்டு செல்வதைப் போல் கொண்டு சென்றார்கள். அந்த சிறுவர்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை.தனது தாயிடமிருந்து விவாகரத்து பெற்ற தங்களது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். பெரும் கணவானான தனது தந்தையை முதன் முதலில் பார்த்த அவர்கள் பரவசமடைந்தாலும் அவர் அருகே வெறுப்பை முகத்தில் தேக்கி வைத்திருந்த சித்தியைப் பார்த்து பயந்தனர். சித்தி ஒன்றும் கொடுரமானவள் அல்ல ஆனால் அவளுக்கும் மூத்தவனான சிட்னிக்கு எப்போதுமே ஒத்துப் போகவில்லை. அவளது கருணை மிகுந்த சில நடவடிக்கைகள் கூட சிட்னியின் பிடிவாதத்தால் நின்றது. அவள் அவர்களது தந்தை மேல் அளவில்லாத காதலில் இருந்தால் அந்த ஒரே காரணத்திற்காக அவர்களை பொறுத்துக் கொண்டாள். இங்கே அவர்கள்  வேலை செய்தாலும் அவர்களுக்கு சோறு இருக்கிறது, கல்வி இருக்கிறது . ஆனால் அன்பு மட்டும் கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு சோற்றையும் கல்வியையும் விட அன்பே தேவையாய் இருந்தது. ஒரு மாலை அவர்கள் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் கேட்டது.. ஒரு தேவதையின் குரல் போல் ஒலித்த அந்த குரலை நோக்கி அவர்கள் ஓடினார்கள். அங்கே அவர்களது தாயான ஹென்னா பூரண குணமடைந்து அவர்களது சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.அவர்கள் சித்தி எவ்வளவு சொல்லியும் ஹென்னா கேட்காமல் தனது குழந்தைகளுடன் வெளியேறினாள். தனது வாழ்வைப் பங்குகொண்டவளுடன் வாழ அவள் விரும்பவில்லை. அன்று அவர்கள் தங்க வீடு இல்லை. ரோட்டில் தான் தங்கினார்கள். ஆனாலும் அந்த சின்னஞ்சிறிய சிறுவன் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாய் இருந்தான்.

கட்

 

காட்சி-3

ஸ்டார்ட் கேமரா

 

ஹென்னா வறுமையை விரட்ட தையல் வேலையே கதி என்று கிடந்தாள். மூத்தவனான சிட்னி தனது தம்பிக்காக கல்வியைத் துறந்துவிட்டு கூலி வேலைக்குச் சென்றான்.குடும்பத்தின் வறுமையை உணர்ந்த சிறுவனால் பள்ளியில் மற்ற உயர்குடிப் பையன்களோடு நெருங்கிப் பழகவும் முடியவில்லை, அம்மா அண்ணனிடம் கிழியாத உடைகள் கேட்கவும் முடியவில்லை. தனது வறுமையை திறமையை வைத்து மறைக்க முடிவுசெய்தான். அவனது பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்து அனைவரும் அவனுடன் பழக விருப்பப்பட்டனர்.இங்கிலாந்தின் சிறந்த நாடகப்பயிற்சியாளரான ஜாக்சனின் குழுவில் சேர்ந்து நடனம்,ஜிம்னாஸ்டிக்,நடிப்பு என்று எல்லாம் கற்றுத் தேர்ந்தார். மெல்ல பிரபலமடைய ஆரம்பித்த போது மீண்டும் அவனது தாய் மனம் பிறழ்ந்தவரானார். அச்சமயம் அவரது தந்தையும் இறந்து விட்டதால் அவனும் தன் அண்ணனுடன் கூலி வேலைக்குச் சென்றான். ஆனால் நடிப்பு வேட்கை அவனை விடாமல் துரத்தியது. உணவு இடைவேளையின் போது கிழிந்த உடையுடன் நாடகக் கம்பெனிகளில் எல்லாம் ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டான் அவனை எல்லோரும் கண்டவுடனேயே விரட்டினர்.ஒரே ஒரு கம்பெனி மட்டும் வாய்ப்பு தந்தது மிகச் சிறிய வேடம். நாடகம் படு தோல்வியடைந்தது. எல்லா பத்திரிக்கைகளும் நாடகத்தைக் குப்பை என்று எழுதின மறக்காமல் பேப்பர் பாயாக நடித்த பொடியன் மட்டும் பிரமாதம் என்று எழுதின. தனது திறமையால் விரைவில் நாயகனானான். இப்போது அவன் சிறுவன் அல்ல இளைஞன். அவனுக்காகவே மக்கள் அரங்கை நிறைத்தனர். அவனுடன் லாரல் , ஹார்டி என்று ஒரு குண்டனும் ஒல்லிப்பச்சானும் சேர்ந்து கலக்கினர். விரைவிலேயே அவர்களது குழு அமெரிக்காவில் நாடகம் போடும் அளவுக்கு வளர்ந்தது. “இதோ வருகிறேன் அமெரிக்காவே” என்று இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவிற்கு கப்பலில் ஏறினான்.

கட்

காட்சி 4

ஸ்டார்ட் கேமரா

அமெரிக்கா வந்ததும் காதல் வந்தது அந்த இளைஞனுக்கு. ஹெட்டி அந்த தேவதையின் பெயர்.அவளும் காதலித்தாள்.அவர்களுக்கு குறுக்கே அந்தஸ்து பணம் ஆகியவை வந்து காதலைக் கொன்றது(பின்னாளில் ஹெட்டி போன்ற பெண்ணை மணக்க வேண்டும் என்று நிறைய திருமணங்கள் செய்து அனைத்திலும் தோல்வியுற்றான்). மிகவும் மனமொடிந்து இங்கிலாந்து சென்றான்.அங்கே அண்ணனுக்குத் திருமணமாகி தனி குடும்பமாகியிருந்தான்.அம்மாவுக்கு இன்னும் பைத்தியம் தெளியவில்லை. வறுமையால் சிறுவயதில் அழுத லண்டன் நகரவீதிகளில் அன்று அநாதையாக அழுதான்.”இனி நான் இந்த வீதிகளில் நடந்தால் இந்நகரமே என்னைத் திரும்பி பார்க்கும்” என்று சபதமிட்டு அமெரிக்கா போனான். அங்கே ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் “நியூஸ் பேப்பர் ரிப்போட்டர்” இயக்குனர் மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் இயக்குனர் சொல்வது போல் எல்லாம் நடித்தான். அவன் எதிர்பார்த்தது போலவே படம் படு தோல்வி. அந்த படம் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவிலேயே எடுபிடியாக சேர்ந்து தனக்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் எல்லா நடிகர்களும் சொதப்ப அந்த ஸ்டுடியோவின் முதலாளி இவனிடம் திரும்பி :”போ.. மேக்கப் போட்டுக்கொண்டு எதாவது செய்து காட்டு “ என்றார். வேகமாக ஒப்பனை அறைக்குள் ஓடினான். இவனது அளவு பேண்ட் இல்லை தொள தொள பேண்டை அணிந்து கொண்டான்.பெல்ட் இல்லாமல் ஒரு கயிறை எடுத்துக் கட்டினான். ஒரு இருக்கமான கோட்டே இருந்தது. அதை எடுத்து அணிந்த போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.உடனே நீளமான தொப்பியும் கோணலான ஷூவும் எடுத்து அணிந்துகொண்டான்.பிய்ந்து போன பாதி மீசையை எடுத்து மூக்கின் கீழ் ஒட்டிக் கொண்டு வித்தைகள் செய்ய ஆரம்பித்தான். அப்போது அவனது நடிப்பைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்த உலகம் இன்று வரை வாயை மூடாமல் சிரித்துக் கொண்டிருக்கிறது.

கட்

காட்சி 5

ஸ்டார்ட் கேமரா

அந்த இளைஞன் தானே படங்களை இயக்க முடிவு செய்தான். தனக்கு என்ன வரும் என்று தெளிவாக அறிந்து வைத்திருந்தான். அந்த ஆண்டு மட்டும் சுமார் 45 ஒரு ரீல் படங்களை இயக்கினான்.அனைத்துமே மிகப்பெரிய வெற்றி. அவனைப் போலவே தொப்பி தொள தொள பேண்ட் என்று மக்கள் திரிய ஆரம்பித்தனர். அவனது பேர் ஒரு மந்திரச்சொல் போல் ஆனது. அவன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம். அவனது அண்ணனை அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டான். அவனது அண்ணன் எல்லா பணவிவகாரங்களைப் பார்த்துக் கொண்டான். பங்களா, கார், தோட்டம் என்று பெரும் செல்வந்தன் ஆனான் அந்த இளைஞன். ஆனால் அவனுக்குள் ஒரு வெறுமை இருந்தது. ”இவ்வளவு தானா?? இதற்கு தானா ஆசைப்பட்டோம்???”. அவன் தன்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். நிறைய குழம்பினான். கடைசியில் தெளிவடைந்தான். “இனி என் படம் மக்களின் பிரச்சனையை பேசும்”. என்றான். பிறகு அவன் எடுத்த படங்கள் எல்லாம் ஏழை மக்களுக்கான படங்களாய் இருந்தன. பணக்காரர்களின் போலி வாழ்வை பகடிசெய்பவையாய் இருந்தன.அதனால் பணக்காரர்கள் அவனுக்கு எதிரியாகினர்.இனி யாரும் அவனது படத்தை தயாரிக்கக் கூடாது என்றனர். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து புது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்ந்தான். இன்று வரை ஹாலிவுட்டை பிடித்து வைத்திருக்கும் ஸ்டுடியோ பேய்களுக்கு முதல் முறை சூடு போட்டவன் அவனே. அப்போது அவனுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி வந்தது அவனது அம்மா ஹென்னாவுக்கு மனநலமடைந்து விட்ட செய்தி அது. உடனே அம்மாவை அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டான். வந்தவளால் மகன் இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பதை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

காட்சி 6

ஸ்டார்ட் கேமரா

அவனால் வெற்றியை நின்று சுவைக்க கூட முடியவில்லை. தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவனை வீழ்த்த எதிரிகள் முயன்று கொண்டிருந்தன. ஆனால் அவன் தன் சொந்த வாழ்வில் மட்டுமே தோற்றுக் கொண்டிருந்தான்.ஹெட்டிக்கான தேடலில் பல மணங்கள் செய்து கொண்டான். ஆனால் அவனால் கடைசி வரை ஹெட்டியை கண்டு பிடிக்கவே முடியவில்லை. இதற்கிடையில் அவனது அம்மா ஹென்னாவும் மூப்படைந்து இறந்துவிட்டிருந்தாள். அதே சமயம் தான் உலகுக்கு பேசும் படங்கள் அறிமுகமாகின. “அந்த ஊமைக் கோமாளி ஒழிந்தான்” என்று எதிரிகள் மகிழ்ந்தனர். ஆனால் அவனது மெளனப் படங்களுக்கான வரவேற்பு குறையவேயில்லை. அவனது சிட்டி லைட்ஸ் என்கிற படத்தை வெளியிடுவதற்கு தியேட்டரே கிடைக்காத படி செய்தனர். கடைசியில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் வெளியாகியது. பெரும் கூட்டம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அந்த படத்தைப் பார்த்துவிட்டு கண்கலங்கினார். படம் பெரும் வெற்றி பெற்றது. இன்றும் சிறந்த பத்து படங்களில் ஒன்று என்று சொல்லப் படுகிறது. அடுத்த படங்களில் மார்க்சியத்தின் பெருமையை பேசினான். அமெரிக்காவின் தொழில்முறையை அரசாங்கத்தையும் பகடி செய்ய ஆரம்பித்தான் அவன். ஆனால் அவன் மேல் நடவடிக்கை எடுத்தால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்று அமைதி காத்தது அமெரிக்கா. “இவனால் பேசும் படங்களில் நடிக்க முடியாது” என்றனர். தன்னால் முடியும் என்பதைக் காமிக்க தனது “கிரேட் டிக்டேட்டர்” என்கிற படத்தில் கடைசி பதினைந்து நிமிடம் மட்டும் பேசினான். அந்த பேச்சில் அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்போது அந்த பேச்சைக் கேட்டாலும் நமது அழுக்குகள் எல்லாம் மறைந்து தூய்மையாகி விடுவோம். அது அன்பை போதிக்கும் படம் மட்டுமல்ல. அப்போது உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருந்த ஹிட்லர் என்கிற சர்வாதிகாரியை பெரிய கோமாளியாக சித்தரிக்கும் படம். அந்த படத்தை தனியாக இருட்டறையில் அமர்ந்து கொண்டு ஒரு பைத்தியக்காரனைப் போல் மூன்று நாட்கள் ஹிட்லர் திரும்ப திரும்ப போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தானாம். இவ்வாறு அமெரிக்காவுக்கும் ஹிட்லருக்கும் எதிரியானான் அவன். தனது படப்பிடிப்புக்காக இலண்டன் சென்ற சாப்ளினை இது தான் வாய்ப்பு இனி அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்று சொன்னது. அவன் இலண்டனிலேயே தங்கிவிட்டான்.ஆனால் அவனை தடுக்க முடியாது என்று தெரிந்து கொண்ட அமெரிக்கா அவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது கொடுத்து பிரயாசித்தம் தேடிக் கொண்டது. அப்போது அவன் 82 வயது முதியவன். அன்பு நிறைந்த கண்களோடு அவன் இந்த உலகத்தை இறந்த பிறகும் இரச்சித்துக் கொண்டே இருக்கிறான்.Charlie-charlie-chaplin-6931281-1024-768

கட்

முதல் காட்சியில் ஆடி எல்லோரையும் குஷி படுத்தியவனும்,இரண்டாவது காட்சியில் அம்மாவைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியாக ரோட்டில் படுத்தவனும்,மூன்றாவது காட்சியில் கனவுகளுடன் அமெரிக்காவிற்கு கப்பல் ஏறியவனும்,நான்காவது காட்சியில் கோமாளியாக மாறியவனும்,ஐந்தாவது காட்சியில்  ஹாலிவுட் ஸ்டுடியோ பேய்களுக்கு சூடு போட்டவனும் ,ஆறாவது காட்சியில் அன்பினால் உலகை இராச்சித்தவனும்  ஒருவனே அவன் பெயர் சாப்ளின்

Related Posts